‘’இன்னா நாற்பது’’ -/04/-உலகத்தில் கூடாதவை என்னென்ன...


‘’இன்னா நாற்பது’’ என்னும் நூல் ‘கபிலர்’ என்னும் புலவரால் இயற்றப்பட்டது. நாற்பத்தொரு பாடல்களைக் கொண்ட இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படும் சங்கம் மருவிய காலத் தமிழ் நூற்றொகுதியுள் அடங்குவது. உலகத்தில் கூடாதவை என்னென்ன என்பது பற்றிக் கூறி நீதி உரைப்பது இந்நூல். இது கி. பி. நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த நூலாகும். இந்நூல் இன்னிசை வெண்பாக்களால் ஆனது. இதில் நூற்று அறுபத்து நான்கு கூடாச் செயல்கள் கூறப்பட்டுள்ளன.

‘’இன்னா நாற்பது’’தொடர்கிறது...


வெண்பா:16

உண்ணாது வைக்கும் பெரும் பொருள் வைப்பு இன்னா;

நண்ணாப் பகைவர் புணர்ச்சி நனி இன்னா;

கண் இல் ஒருவன் வனப்பு இன்னா; ஆங்கு இன்னா,

எண் இலான் செய்யும் கணக்கு.        

விளக்கம்: உண்ணாது சேர்த்து வைக்கும் பெரும் பொருள் துன்பமாம். உளம் பொருந்தாத பகைவர்களின் சேர்க்கை துன்பமாகும். கண் இல்லாத ஒருவனின் உடல் அழகு துன்பமாகும். அவ்வாறே பயிலாதவன் இயற்றும் கணக்கு துன்பமாம்.

 

வெண்பா:17

ஆன்று அவிந்த சான்றோருள் பேதை புகல் இன்னா;

மான்று இருண்ட போழ்தின் வழங்கல் பெரிது இன்னா;

நோன்று அவிந்து வாழாதார் நோன்பு இன்னா; ஆங்கு இன்னா,

ஈன்றாளை ஓம்பா விடல்.        

விளக்கம்: கல்வி கற்ற சான்றோர் நிறைந்த சபையில் அறிவில்லாதவன் செல்லுதல் துன்பமாகும். மயங்கிய மாலைப் பொழுதில் வழியில் செல்லுதல் துன்பமாகும். துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு மனம் அடங்கி வாழாதவர்களுக்கு வாழ்க்கை துன்பமாம். அவ்வாறே தாயைக் காப்பாற்றாமல் வருதல் துன்பமாம்.

 

வெண்பா:18

உரன் உடையான் உள்ளம் மடிந்திருத்தல் இன்னா;

மறன் உடையான் ஆடையால் மார்பு ஆர்த்தல் இன்னா;

சுரம் அரிய கானம் செலவு இன்னா; இன்னா,

மன வறியாளர் தொடர்பு.       

விளக்கம்: நல்ல அறிவுடையவர்கள் மனம் ஒடிந்து இருத்தல் துன்பமாம். வீரமுள்ள ஆட்களை உடையவன் முன்பு மார்பு தட்டுதல் (வீரம் பேசுதல்) துன்பமாம். அடர்ந்த காட்டில் செல்லுதல் துன்பமாகும். மன வறுமையுடையாரது சேர்க்கை துன்பமாகும்.

 

வெண்பா:19

குலத்துப் பிறந்தவன் கல்லாமை இன்னா;

நிலத்து இட்ட நல் வித்து நாறாமை இன்னா;

நலத்தகையார் நாணாமை இன்னா; ஆங்கு இன்னா,

கலத்தல் குலம் இல் வழி.         

விளக்கம்: நற்குடியில் பிறந்து கல்வியைப் பெறாமல் இருத்தல் துன்பமாகும். பூமியில் இட்ட நல்ல விதைகள் முளைக்காமை துன்பமாகும். அழகுடைய மகளிர் வெட்கப்படாமை துன்பமாகும். அவ்வாறே ஒவ்வாத குலத்தில் திருமணம் செய்வது துன்பமாகும்.

 

வெண்பா:20

மாரி நாள் கூவும் குயலின் குரல் இன்னா;

வீரம் இலாளர் கடு மொழிக் கூற்று இன்னா;

மாரி வளம் பொய்ப்பின், ஊர்க்கு இன்னா; ஆங்கு இன்னா

மூரி எருத்தால் உழவு.    

விளக்கம்: மழைக்காலத்தில் குயிலினது குரலோசை துன்பமாகும். அன்பில்லாதவரது கடுமொழி துன்பமாகும். மழை பெய்யவில்லை என்றால் ஊருக்கும் துன்பம். அவ்வாறே எருமையால் உழவுத் தொழில் செய்தால் துன்பமாகும்.

 

‘’இன்னா நாற்பது’’ தொடரும்.... ››››››

 

தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்:

இன்னா நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு, இன்னா, துன்பமாகும், துன்பமாம், அவ்வாறே, ஆங்கு, இலக்கியங்கள், பதினெண், செல்லுதல், கீழ்க்கணக்கு, நாற்பது, உடையான், இருத்தல், இட்ட, மாரி, வீரம், மனம், நல்ல, மார்பு, கணக்கு, கல்வி, சங்க, உண்ணாது, வைக்கும், பொருள், பெரும், சேர்க்கை

0 comments:

Post a Comment