"குமிழி"-(கவிதை)

 "குமிழி"

 


"குமிழி வாழ்வில் குதூகலமாக பிறந்து

கும்மாளம் அடித்து குத்துக்கரணம் போட்டு

குடை பிடித்து பதவி உயர்ந்து

குபேரன் வாழ்வை கனவு கண்டான்!"

 

"நீர்க்கோல வாழ்வை நச்சி அவன்

நீதியற்ற வழியில் நித்தம் சென்று

நீச்சல் அடித்து செல்வம் சேர்த்து

நீங்காத வாழ்வென பொய் சொன்னான்!"

 

"பிறந்தவர் சாதல் நிச்சயம் என்றாலும்

பிணம் என்றே இறுதியில் அழைத்தாலும்

பித்தனாக உலக நீதிகளை மதிக்காமல்

பிதற்றி திரிகிறான் அதட்டி வாழ்கிறான்!"

 

"கருப்பையில் பிறந்து மண்ணோடு சேர்பவன்

கடுகு அளவும் இரக்கம் இன்றி

கண்ணியமான வாழ்வு வாழ மறுத்து

கற்ற கல்வியை வியாபாரம் செய்கிறான்!"

 

"நுட்பம் பல நிறைந்த மனிதன்

நுணுக்கம் ஆக வாழ்வை அலசாமல்

நுரைகள் பொங்கி வெடிக்கும் வரை

நுகர்ந்து அறியாமல், துள்ளி குதிக்கிறான்!"

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

0 comments:

Post a Comment