பழகத் தெரிய வேணும் – 37

தானே தன்னை அறிய

ஓயாம என்ன விஷமம்?” என்று குழந்தைகளை அதட்டியோ, அடித்தோ செய்கிறவர்கள், குழந்தைகளின் மனதைப் புரிந்துகொள்ளாதவர்கள்.

 

பெரியவர்களுக்குத் தவறு என்றுபடுவது, குழந்தைகளுக்கு எது என்று புரியாது. இன்னும் அதிகமாகச் `சோதித்து’க்கொண்டே இருப்பார்கள்.

 

சில நடிக நடிகையர் திரைப்படங்களில் தம் இயற்கையிலிருந்து மாறுபட்டு நடிக்கிறார்களே, அவர்களைக் கேளுங்கள், இத்திறமை எப்படி சாத்தியமாகிறது என்று.

 

`பிறரது சரீரத்திற்குள் புகுந்துகொள்வதால்,’ என்று பதில் வரும். நம்மை இன்னொருவராகப் பாவித்தால், அவரது எண்ண ஓட்டம் புரியும். அதாவது, அவருடைய கண்ணால் நாம் பார்க்கவேண்டும், அவருடைய காதால் கேட்கவேண்டும்.

 

தலைவர்களும், பிறரது துன்பத்தைத் துடைக்க விரும்புகிறவர்களும், எழுத்தாளர்களும் கற்க வேண்டிய தன்மை இது.

 

நாம் சந்திக்கும் பலதரப்பட்ட மனிதர்களின் உணர்ச்சிகள் மட்டுமின்றி, அனுபவங்கள், கண்ணோட்டம் எல்லாமே தெளிவாகும். அப்போதுதான் பிறரைப் பழிக்கத்தோன்றாது.

 

(எச்சரிக்கை: நீண்ட மாதங்கள் தொடர்ந்து இப்படி நடந்தால், அவர்களாகவே மாறிவிடும் அபாயமும் உண்டு. சுயநிலைக்குத் திரும்ப சிகிச்சை பெற வேண்டியிருக்கும்.

 

தொழுநோயைப்பற்றி நிறைய ஆராய்ச்சியுடன் ஒரு தொடர்கதை எழுதிக்கொண்டிருந்தபோது, நான் அவர்களுடைய உணர்ச்சிகளை என்னுடையதாக ஆக்கிக்கொள்ள, உடல்நிலை சீர்கெட்டு, மூச்சே விட முடியாது போய்விட்டது. நள்ளிரவில் மருத்துவரிடம் போக வேண்டிய நிலை ஏற்பட்டது).

 

 

கதை:

பரீட்சையில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் வாங்கிய என் மாணவன், “இன்று அப்பாவிடம் பிரம்படி வாங்கப்போகிறேன்,” என்று நடுங்கியவாறு கூறினான்.

 

வயதுக்கு மீறிய வளர்த்தியுடன் இருந்த அவனது சகா, “திருப்பி அடித்துவிட்டுப் போயேன்!” என்றான் அலட்சியமாக.

 

இந்த உரையாடலைச் செவிமடுத்தபடி இருந்த எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

 

வெகு நேரம் யோசித்தபின் ஒன்று புரிந்தது. காரணமில்லாது அவனை அடிக்கடி அடித்து நொறுக்கும் அப்பா. மனம் வெறுத்து, அவரை எப்படித் தடுப்பது என்று அப்படி யோசித்திருக்கலாம்.

 

வேறொரு சமயம், அவனை அழைத்துக் கேட்டபோது, வாரம் முழுவதும் அவன் எப்படி இருக்கிறான் என்றுகூட பாராது, சனிக்கிழமையன்று, காரணமேயின்றி பிரம்பும் கையுமாக அவனை வீட்டுக்குள் துரத்தித் துரத்தி அடிக்க வருவார் என்று ஒப்புக்கொண்டான்.

 

தான் குடும்பத் தலைவன். அதனால், பெரிய அதிகாரம் என்று காட்டிக்கொள்வதாக அப்பாவுக்கு எண்ணம்!” என்று அவன் வெறுப்புடன் கூறியபோது, என் அதிர்ச்சி அதிகரித்தது.

 

பையனுக்கு அப்பாவைப் புரிந்த அளவுக்கு அவரால் மகனைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

 

அப்பா என்றால் அடக்குவதுதானா, அன்பு செலுத்த வேண்டாமா என்று அவன் யோசித்திருக்கிறான்.

 

`நல்ல வேளை, நமக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமையவில்லையே!’ என்ற நிம்மதியும், `அவன் நிலையில் நான் இருந்தால், இதைவிட மோசமாக இருந்திருப்பேனோ, என்னவோ!’ என்ற நினைப்பும் ஒருங்கே எழுந்தன.

 

ஒருவரது நலனைப்பற்றிய உண்மையான அக்கறை இருந்தால், `நீ என்ன, இவ்வளவு கேவலமாக நடக்கிறாயே!’ என்ற எண்ணம் உதிக்காது.

 

பிறரது துன்பங்களை நம்முடையதுபோல் பாவித்து, அவர்களை அப்படியே ஏற்றால்தானே நம்முடன் நெருங்குவார்கள்?

 

அதன்பின், தம்மைப்பற்றி, வலிய வந்து சொல்லிக்கொள்வார்கள், நாம் கேளாமலேயே.

 

சிலர் அவலமான தம் கதையைப் பிறரிடம் சொல்லிக்கொள்ள விரும்பி மெல்ல ஆரம்பிப்பார்கள்.

 

`எனக்கே எத்தனையோ கஷ்டங்கள்! உங்களுடையதை வேறு கேட்கணுமா?’ என்பதுபோல் மற்றவர் அசிரத்தை காட்டினால், வாயை இறுக மூடிக்கொள்வார்கள்.

 

கதை:

 

நீங்க இன்னிக்குப் பேசப்போறதா கேள்விப்பட்டேன். ஒங்களைப் பாக்கத்தான் வந்தேன்,” என்று ஒருவர் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டார்.

 

அப்போது சிற்றுண்டி நேரம். சற்றுத் தொலைவில் இருந்த நாற்காலிகளில் அமர்ந்துகொண்டோம்.

 

மிகுந்த தயக்கத்துடன், இளமையில் தாம் `எப்படி எப்படியோ’ இருந்ததாகவும் அதனால் திருமணமே செய்துகொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.

 

ஆண்கள் தமக்கு வரும் மனைவி யோக்கியமானவளாக இருக்கவேண்டும் என்று நினைப்பதுபோல்தானே பெண்களும் விரும்புவார்கள்? அதனால், `கெட்டுப்போன’ ஒரு பெண்ணையே மணக்க உறுதி பூண்டிருக்கிறேன்!” என்று கூறினார்.

 

அப்படி ஒரு பெண்ணை எப்படித் தேடுவது?” என்று அயர்ந்தவருக்கு நாற்பது வயதுக்குமேல் இருக்கும்.

 

அவர் புண்ணியத்தால் எனக்கு ஒரு நல்ல கதை கிடைத்தது.

 

பல வருடங்களுக்குப்பின், அவரை ஒரு பெண்ணுடன் பார்த்தேன்.

 

கல்யாணம் ஆயிடுத்தா?” என்று ஆவலுடன் விசாரித்தேன்.

 

இல்லே. ஆனா, ஆயிடுச்சுன்னு எல்லார்கிட்டேயும் சொல்லிட்டிருக்கேன்,” என்ற பதில் வர, நான் புன்னகைத்தேன்.

 

நாம் பேசுவதைப் பிறர் கேட்க வேண்டும் என்ற ஆசை எல்லாருக்கும் உண்டு. அதுபோல்தானே மற்றவருக்கும் இருக்கும் என்று யோசித்தால் தானே சகிப்புத்தன்மை வளரும்.

 

தம்மைவிட வித்தியாசமானவர்களைச் சிலரால் ஏற்க முடியாது.

 

இந்தியாவில் சாதி வித்தியாசம் நிறைய பார்ப்பார்களாமே, உண்மையா?” என் சக ஆசிரியைகள் என்னைச் சூழ்ந்து உட்கார்ந்துகொண்டு கேட்டார்கள்.

 

எந்த நாட்டில் இந்தமாதிரியான குணம் கிடையாது? சொல்லுங்கள் பார்க்கலாம்!” என்று சவால் விட்டேன்.

 

என் பதில் அவர்களை யோசிக்கவைத்தது.

 

மலேசியா போன்ற நாடுகளில் இன வேறுபாடு, பிற நாடுகளில் மொழி, மதம் அல்லது நிறத்தால் உயர்வு-தாழ்வு என்கிற நிலை.

 

மொத்தத்தில், மனிதனுக்கு அன்பு செலுத்துவதைவிட வெறுப்பது எளிதாக இருக்கிறது.

 

கதை:

என் சக ஆசிரியை மலர் ஓயாது சீனர்களை `மஞ்சத்தோல்’ என்று பழிப்பாள். எல்லா மாணவர்களுக்கும் அவளைக் கண்டால் வெறுப்பு.

 

எங்கள் வகுப்பு மாணவர்கள், மலர் டீச்சரைப் படாதபாடு படுத்துவார்கள்!” என்று ஒரு மாணவி என்னிடம் கூறிச் சிரித்தபோது, நான் அலட்சியமாக, “அவள் racist! (இனவெறி பிடித்தவள்)” என்று தெரிவித்தேன். (அதே மாணவர்கள் என்னிடம் மிக மரியாதையாக நடந்துகொள்வார்கள்).

 

மலர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவள். ஆனால், இந்தியனில்லை. நெற்றியில் குங்குமத்துடன் விபூதி, தன்னை பக்தி நிறைந்தவள் என்று காட்டிக்கொள்வதுபோல். எல்லாரும் தன்னைப்போல் இருக்கவேண்டும் என்று (இயலாத) ஒரு கருத்தைக் கொண்டவள்.

 

மலரை `பக்திமான்’ என்று மகாத்மா காந்தி ஏற்றுக்கொண்டிருக்கமாட்டார். ஏனெனில், எவருக்குப் பிறர் அனுபவிக்கும் துன்பங்கள் புரிகிறதோ, அவரே ஆன்மிகவாதி!” என்ற கருத்து கொண்டவர் ஆயிற்றே!

 

துணுக்கு

 

பூவுலகில் தன் காலம் முடிந்தவுடன், நற்குணவானான ஒரு மனிதன் சொர்க்கத்திற்குப் போனான். அது காலியாக இருந்தது. வேறு பக்கத்திலிருப்பவர்கள் சிரித்தபடி மகிழ்ச்சியாக இருந்தார்கள். அங்கோ ஒரே கும்பல்.

 

என்னையும் அங்கே அனுப்பிவிடுங்கள்,” என்று இவன் கோரிக்கை விட, “நீ இருக்க வேண்டிய இடம் அதுவல்ல. அது நரகம். அங்கிருப்பவர்கள் எப்போதும் ஆத்திரம் கொண்டு, பிறரது துயரத்தால் மகிழ்ச்சியும் லாபமும் அடைந்தவர்கள்,” என்ற பதில் கிடைத்தது.

 

ஆத்திரத்திற்கு எதிர்ப்பதம் என்ன தெரியுமா?

 

அமைதி என்கிறீர்களா?

 

இல்லை. அடுத்தவரைப் புரிந்துகொள்வது. அவரை நம் இதயத்தால் தொடுவது.

 

பிறருடைய இடத்தில் நம்மை வைத்துப் பார்த்தோமானால், எவரையும் ஏற்க முடியும்.

 

தன்னைத்தானே புரிந்துகொள்ள ஒருவருக்கு இதைவிடச் சிறந்த வழி கிடையாது.

 

:நிர்மலா ராகவன்-/-எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா.

 தொடரும்.... 

👉👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக 

 

0 comments:

Post a Comment