பழகத் தெரிய வேணும் – 40

மனிதனானவன் வைரமாகலாம்

இருக்கும் நிலையிலேயே இருந்தால், அது மகிழ்வை அளிக்கிறதோ, இல்லையோ, அதனால் ஒருவித பத்திரமான உணர்வு உண்டாகிவிடுகிறது. வேறு பல சௌகரியங்களையும் விட்டுக்கொடுத்தாக வேண்டும். அதனாலேயே, `எதற்காக மாறுவது?’ என்று பலரும் பொறுத்துப்போகிறார்கள்.

 

கதை:

ஒரு முறை கப்பலில் போகும்போது அந்தத் தமிழரைச் சந்தித்தேன்.

தன் பெற்றோரால் மனைவி, ரொம்பக் கஷ்டப்படுகிறாள், எப்போதும் பயந்தே நடக்க வேண்டியிருக்கிறது, ஆனால் தனியே பிரிந்து போகவும் பயம், என்றெல்லாம் நான் கேட்காமலேயே தெரிவித்தார்.

`இப்படிப் பண்ணியிருக்கலாமேஎன்று காலம் கடந்து வருந்துவது என்ன பயனைத் தரும்?

சில வருடங்கள் கழித்து நான் அவரை மனைவியுடன் ஒரு நிகழ்ச்சியில் பார்த்தேன். நான் முகமன் கூறியபோது, “நீங்கள் என்னை யாரோ என்று நினைத்துப் பேசுகிறீர்கள். நான் உங்களைப் பார்த்ததே இல்லையே!” என்றார்!

 

தான் செய்த எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் கண்டனம் என்ற நிலையில், அவரது மனைவியின் உற்சாகம் வடிந்துபோக, தன் இயலாத்தனத்தை அவர்மேல் ஆத்திரம், சந்தேகம் என்று மாற்றியிருப்பாள் என்றுதான் நினைக்கத் தோன்றியது.

 

மாறினால் மேலும் பல துன்பங்களை அனுபவிக்க நேருமோ என்ற பயத்தால் பொறுக்க முடியாத நிலையைச் சகித்துக்கொண்டு இருக்கிறார்கள் பலரும்.

 

வளர்ச்சியால் துன்பம்தான்

எவ்வித மாற்றமானாலும், அது எளிதாகக் கிடைப்பதில்லை. பதின்ம வயதில் உடல் வளரும்போது பொறுக்க முடியாத நோவெடுக்கும், இல்லையா? நம் மனநிலையை மாற்றிக்கொள்வதும் அப்படித்தான்.

 

மேற்படிப்பு அல்லது உத்தியோக நிமித்தம் அயல்நாடு செல்பவர்கள் ஆரம்பத்தில் அதிர்ச்சிக்கு உள்ளாவது தவிர்க்க முடியாத ஒன்று. அப்போது மாறுவதைத் தவிர வேறு வழியில்லை.

 

`நீங்க ரொம்ப மாறிட்டீங்க!’ என்று ஆச்சரியத்துடனோ, வருத்தத்துடனோ கூறுபவர் ஒன்று புரிந்துகொள்வதில்லை.

 

வாழ்க்கையின் சுழலில் பல புதிய அனுபவங்கள் ஏற்படக்கூடும். அப்போது பிறரைப்பற்றி கொண்டிருந்த கருத்தில் மாற்றம் ஏற்பட்டு, வித்தியாசமானவர்களையும் ஏற்றால்தான் முன்னேறமுடியும்.

 

`ஐயே! இவர்கள் என்ன இப்படி இருக்கிறார்களே!’ என்று நினைத்தால், நம்மிலிருந்து மாறுபட்ட பிறரை, நண்பர்களாக ஏற்க முடியாது.

 

மனிதனும் வைரமும்

பட்டை தீட்டினால்தான் வைரம் ஜொலிக்கிறது. மனிதனும் பல இடர்களைக் கடந்தால்தான் வெற்றி பெற முடியும்” (சீனப் பழமொழி).

 

முதுகலைப் பட்டப்படிப்புக்காக அமெரிக்கா போன பலருள் ஒருத்தி லீலா.

 

தாய்நாட்டில் கிடைத்த சௌகரியங்களும் மதிப்பும் பிற இடங்களிலும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை விளைவித்தது. அங்குள்ள மொழி உச்சரிப்பு, உணவு, கலாசாரம் எல்லாமே புதிதாக இருக்க, கலவரம் உண்டாகியது.

 

வெளிநாட்டுக்குப்போய் திரும்புகிறவர்கள் தாங்கள் பேசும் விதத்தையும் ஆடைகளையும் மாற்றிக்கொள்வதை வளர்ச்சி என்று காட்டிக்கொள்வதைப்போல் அவளால் இருக்க முடியவில்லை. அத்தகைய மாற்றம் அர்த்தமற்றது என்று தோன்றிப்போயிற்று.

 

திரும்பிப்போவதும் நடக்காத காரியம். உபகாரச்சம்பளம் பெற்று, எத்தனை பேருடைய பொறாமைக்கு ஆளாகி, வந்திருக்கிறாள்!

 

`நேரமில்லை என்று சொல்லாதே. தூக்கத்தைக் குறை,’ என்று பல்கலைக்கழக வழிகாட்டி கூற, இரண்டு மணி நேரமாகக் குறைந்தது உறங்கும் நேரம்.

 

`எனக்கு ஏன் இத்தனை கஷ்டங்கள்?’ என்ற வருத்தம் அடிக்கடி எழ, `சுயபச்சாதாபம் கூடாது!’ என்று தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொண்டாள் லீலா.

 

அதன்பின், இசை, உபயோகமான விஷயங்களைக்கொண்ட புத்தகங்களைப் படிப்பது என்று தனக்குப் பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபடத் தொடங்கினாள்.

 

அவளைப்போல், பழகிப்போன எண்ணங்களையும், செயல்களையும் சந்தர்ப்பத்துக்குத் தகுந்தபடி மாற்றிக்கொள்பவரே வாழ்வில் வெற்றி பெற முடியும்.

 

தமது திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தும் துணிச்சல் வெகு சிலருக்குத்தான் அமைந்திருக்கிறது. அத்துணிச்சல் இல்லாதவர்களே பிறரிடம் ஆத்திரப்படுகிறார்கள்.

 

அசையாது நிற்க அஞ்சு

`நான் தவறே செய்யமாட்டேன்!’ என்று யாராவது சொன்னால் அவர்கள் கடவுள் இல்லை. புதிதாக எதையும் முயன்றிருக்கமாட்டார்கள். அவ்வாறு ஒரே இடத்தில் அசையாது நிற்கத்தான் அஞ்சவேண்டும்.

 

போகும் வழியில், நம் மனதைக் காயப்படுத்தவென்றே சிலர் இருப்பார்கள். சிறிது காலம் வலிக்கும். எல்லாரையும், எப்போதும் மகிழ்வித்துக்கொண்டே இருக்க முடியாது என்று தெளிந்து, அவர்களைக் கடக்க வேண்டியதுதான்.

 

சில சமயம், நாம் செய்தது நன்றாக இல்லை என்று ஒப்புக்கொள்வதற்கு மனோதிடம் வேண்டும். முன்னேற வேறு வழி?

 

ஒரு கதை எழுதி அனுப்பிவிட்டு, அது ஏற்றுக்கொள்ளப்படவில்லையே என்று மனம் தளர்வதால் என்ன பயன்?

 

என் கதை ஒன்று வெளிவந்ததும், அப்பத்திரிகை ஆசிரியரை ஒருவர் கேட்டிருந்தார்: “நீங்கள் பிரபலமானவர்களின் கதைகளைத்தான் பிரசுரிப்பீர்களா?”

 

அதற்கான பதில்: “பிரபலமானவர்களும் ஒரு காலத்தில் ஆரம்ப எழுத்தாளர்களாகத்தான் இருந்திருப்பார்கள். அவர்களுடைய தளராத உழைப்பால் முன்னேறி இருக்கிறார்கள்”.

 

`நான் பல வருடங்களாக எழுதிக்கொண்டிருக்கிறேன்,’ என்றாற்போல் ஒருவர் சிறந்த எழுத்தாளர் என்று ஆகிவிடுமா?

 

முன்னேறிக்கொண்டே இருக்க அவர் என்னென்ன வழிகளைக் கடைப்பிடிக்கிறார் என்பது முக்கியம்.

 

ஒரு காரியத்தைத் தொடங்கவே பயம். அல்லது, செய்துகொண்டிருக்கும்போதே, `இதை நல்லவிதமாகச் செய்து முடிப்பேனா!’ என்ற அவநம்பிக்கை. இதெல்லாம் பலவீனமானவர்களின் குணம்.

 

எது பலம்?

பலம் என்பது தேக பலம் அல்லது உரத்த குரல் என்று எண்ணிக்கொண்டிருப்பவர்களே பிறரை வதைக்கிறார்கள். உண்மையில், அவர்கள் பயந்தவர்கள். பிறர் அவர்களுக்குப் பயப்படாது எதிர்த்து நின்றால், `பலசாலிகள்பயந்துவிடுவார்கள்.

 

கதை:

எனக்குத் தைரியமே கிடையாது. என் தாயால்தான் நான் இப்படி ஆகிவிட்டேன். நான் எது செய்தாலும் குற்றம் கண்டுபிடித்துக்கொண்டே இருப்பாள்!” என்று புலம்புவாள் மார்கரெட். நன்கு படித்து, உத்தியோகத்தில் அமர்ந்துவிட்ட பின்பும், கடந்தகாலத்திலேயே நிலைத்துவிட்டவள் இவள்.

என்றோ நடந்ததையே எண்ணி, பிறர்மேல் கொண்ட ஆத்திரம் அடங்காமலேயே இருந்தால் அது அவர்களைப் பாதிப்பதில்லை, நம்மைத்தான் வருத்தும் என்பது மார்கரெட்டுக்குப் புரியவில்லை.

அதன்பின், `தாயைப்போல் அதிகாரமாக நடப்பவர்கள்என்று அவள் கருதிய யாரையும் அவளால் ஏற்க முடியவில்லை. வலுச்சண்டை பிடிப்பாள்.

 

கடந்தது கடந்ததாகவே இருக்கட்டுமே!

 

எப்போதோ கிடைத்த வெற்றியால் பெருமிதமும், தோல்வியடையும்போது அயர்ச்சியும் அடைந்து, கடந்ததைப்பற்றியே எந்நேரமும் நினைப்பவர்கள் பலர்.

 

மாறாக, `உபயோகமாக இன்னும் என்ன செய்யலாம்?’ என்று யோசிப்பவர்களே அடுத்தடுத்து வெற்றி பெறுகிறார்கள்.

 

எந்த ஒரு வாழ்விலும் இடர்களோ, துயரமோ இல்லாது இருக்காது. அவர்கள் அதிலேயே மூழ்கிவிடுகிறார்களா, இல்லை, மீண்டு எழுகிறார்களா என்பதைப் பொறுத்துத்தான் வெற்றி- தோல்வி அடங்கியிருக்கிறது.

 

கீழேயே கிடக்காது மீண்டும் எழும்போது, முன்பு இருந்ததைவிடச் சற்று மேலே சென்றிருப்போம்!

:நிர்மலா ராகவன்-/-எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா

தொடரும்.... 
👉👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக 

0 comments:

Post a Comment