"ஒரு தாயின் கண்ணீர்"

தமிழருக்கு எதிராக அரசின் பார்வை இருந்த காலம் அது. தமிழர் செய்த குற்றம், படிப்பில் கூட கவனம் செலுத்தி, தமது விகிதாசாரத்துக்கும் மிக அதிகமாக, தேர்வில் சித்திபெற்று பல்கலைக்கழகம் நுழைந்ததும், அதனால் திறமையின் அடிப்படையில் கூடுதலான அரச உத்தியோகம் பெற்றதும் தான். இதற்கு மாற்றுவழி, தமிழர் அல்லாதோரை மற்றும் கிராமப்புறங்களில் வாழும் இளைய தலைமுறையினரை ஊக்கிவிப்பதும் அவர்களுக்கு வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பதும் தான் உண்மையான சிறந்த வழியென்றாலும், அரசு தமது சமய தலைவர்களின் மற்றும் தம்மை சூழ்ந்து உள்ள அரசியல் தலைவர்களின் இனத்துவேச ஆலோசனையை கேட்டு, தரப்படுத்தல் என்ற கொடிய முறையை அறிமுகப் படுத்தியது. உண்மையில் அரசின் இந்த நடவடிக்கைதான், தமிழர்களின் அறவழி உரிமை போராட்டத்தை திசை திருப்பியது என்பது வரலாறு.

 

இந்த காலகட்டத்தில் தான் என் தம்பி, உயர் வகுப்பில் சித்தியடைந்தாலும், தமிழர்கள் திறமையின் அடிப்படையில் பல்கலைக்கழகம் புகுதலை அது தடுத்ததால், அவதிப்பட்ட மாணவர்களில் ஒருவராக இருந்தார். அம்மாவுக்கு ஒரே கவலை. அவர் கண்ணீருடன் அந்த அரசை தன் வாய்க்கு வந்தவாறு திட்டினார். முற்றத்தில் ஒரு பிடி மண்ணை எடுத்து, தன் கண்ணீரில் தோய்த்து, இவன் ஒரு நாள் அவனின் சமய தலைவர்களாலும்

ஆதரவாளர்களாலும் அழ அழ துரத்தப்படுவான் என்று சபதம் இட்டு, என் தம்பியை கூப்பிட்டு, நீ ஒன்றும் கவலைப்படாதே, அத்தியடி

விநாயகரும், நல்லூர் கந்தனும் உனக்கு வழி காட்டுவான் என்று, தனக்கு  தெரிந்த தன் நம்பிக்கையின் வழியில் ஆறுதல் கூறினார்.

 

நானும் தம்பியும் அம்மாவின் நம்பிக்கையில் பெரிதாக ஈடுபாடு இல்லை என்றாலும், அதை அவர் முன் நாம் காட்டவில்லை. அது அம்மாவுக்கு நாம் கொடுக்கும் மரியாதை! . தம்பி எப்படியோ தன் முயற்சியாலும், ஒரு சிலரின் ஆதரவாலும், கொஞ்சம் கொஞ்சமாக திறமையை வளர்த்து, பனை அபிவிருத்தி சபையில், நல்ல உத்தியோகமும் ஊருடன் எடுத்து, திருமணமும் காதலித்து செய்து விட்டார்.

 

என்றாலும் என் அம்மாவின் கண்ணீர் பெரிதாக ஓயவில்லை. அவன் இப்ப எங்கேயோ, அண்ணன்மார்கள் மாதிரி இருக்கவேண்டியவன், இப்ப ஊருடன் இந்த குண்டு வீச்சலுக்கும் ஷெல் அடிக்கும் பிள்ளைகளுடன் பயந்து பயந்து இருக்க வேண்டி உள்ளதே என , திருப்பவும் கண்ணீர் புலம்பலுடன் அதே அரசை திட்டாமல் விடவில்லை. நீ என்ன செய்கிறாய் என தான் வணக்கும் சாமிக்கும் சேர்த்து தான் அந்த புலம்பல் இருந்தது.

 

சண்டை உக்கிரம் அடைய, தம்பி தன் குடும்பத்துடன், பாதுகாப்பு நிமித்தம், கடல் வழியாக ராமேஸ்வரம் போய், அங்கு மண்டபம் அகதிமுகாமில் தஞ்சம் அடைந்தார். எனினும் அங்கு இருந்தாலும் எண்ணம் எல்லாம் பெற்றோர், சகோதரங்கள், யாழ்ப்பாணம். இலங்கையே! இரண்டு ஆண்டுகளில், பிள்ளைகள் இன்னும் சிறுவர்களாக இருக்கும் பொழுதே, ஒரு தீபாவளி நாளில் திடீரென  மாரடைப்பால் அந்த மண்டப அகதி முகாமிலேயே இறந்துவிட்டார்.

 

அம்மாவின் கண்ணீர் மற்றும் ஆத்திரம் இன்னும் கூடிவிட்டது. அவரும் யாழ்ப்பாணத்தில் இருப்பது, பாதுகாப்பு இல்லை என்பதால், எங்கள் ஆலோசனையின் படி, அக்காவுடன் கொழும்பில் தன் கடைசிகாலத்தை கண்ணீருடன் வாழ்ந்தார். எந்தநேரமும் அவருக்கு, தன் இளைய மகன், அத்தியடி, யாழ்ப்பாணம்  எண்ணங்கள்தான்!  14/08/2009 அவரும் கண்ணீருடன் வாழ்ந்து தன் புவி வாழ்வை முடித்துக்கொண்டார். அவர் மீண்டும் யாழ்ப்பாணம் போகவில்லை, தன் இளையமகனின் பிள்ளைகளையும் பார்க்கவில்லை. அம்மாவின் கண்ணீர் வறண்டு போனதுதான் மிச்சம்!

 

என்றாலும் இன்று [மே 2022] , பதின்மூன்று ஆண்டுகளுக்கு பின், அம்மாவின் சபதம், நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும் ஒன்று ஒன்றாய் நிறைவேறுவது, நான் என் கண்ணால் பார்க்கிறேன். ஆட்சிக்கு ஏற்றி, இனத்துவேச ஆலோசனைகள் வழங்கிய அரசின் ஆதரவாளர்களே, அழ  அழ அரசை துரத்துவதை காண்கிறேன். அவரின் கண்ணீர் இன்று ஒரு கதை எனக்கும் , ஏன் உங்களுக்கும் சொல்லிக்கொண்டு இருக்கிறது! அம்மாவின் ஒவ்வொரு கண்ணீர் துளியும் வறண்டுவிடவில்லை என்பதை இன்று நான் உணர்கிறேன்!! நீங்க எப்படியோ ?

 

-கந்தையா தில்லைவிநாயகலிங்கம்/அத்தியடி, யாழ்ப்பாணம்

0 comments:

Post a Comment