சொந்தப் புத்தி இருக்க..(ஓர் உண்மைக் கதை)

1985 ம் ஆண்டு. அன்று ஒரு வெள்ளிக்கிழமை. பரந்தனில் எனது அலுவலகத்திலிருந்து கடமை நேரத்தில், தூரத்திலிருந்து  காதில் இடியோசை போல் ஒலித்த குண்டுச்சத்தம், அன்றய எனது ஊர் பண்டத்தரிப்புக்கான பயணத்தினை தடை செய்துவிடுமோ என்ற சந்தேகம் நெஞ்சில் வளர ,இடை இடையே ஜன்னலூடாக கண்டி வீதியினை அவதானிக்க ஆரம்பித்தேன்.

வாகனங்களின் நடமாட்டம் மெல்ல மெல்ல குறைத்துக்கொண்டு சென்றது,  எங்கோ ஆமிக்காரன் பிரச்சனை கொடுக்கிறான் என்று எனக்குப்  புரிய ஆரம்பித்ததால் 'சரி இந்தக்கிழமை ஊருக்கு போக முடியாது' என்று தீர்மானித்துக்கொண்டு வேலை முடிந்ததும், சிற்றுண்டிசாலையில் ஒரு தேனீர் அருந்துவம்' என்ற முடிவில் அங்கே அமர்ந்திருந்தேன்.

அந்நேரத்தில் அங்கே வந்த ஒரு மூத்த நண்பர், 'என்ன மனு ஊருக்கு போகேல்லையோ?'

''இல்லையண்ணை, நிலைமை பிழைபோல இருக்கு! பஸ்ஸுகளும் ஓடேல்லை''

'ஏன் மனு.உங்கை எல்லாரும் போய்விட்டினம்தானே!  பஸ்ஸும் இடைக்கிடை ஓடுது.போகலாம்தானே'

அவர் அன்பினில் கூறினாரோ,இல்லை பொழுதுபோக்கிற்கு கூறினாரோ,நான் ஆராயும் நிலையில் அந்நேரம் இருந்திருக்கவில்லை. அவர் கொடுத்த உற்சாகத்தில், ஆவலுடன் உடன் வெளிக்கிட்டுக்  கண்டி வீதிக்கு வர ,பேருந்தும் உடன் கிடைக்க என் அதிஷ்டம் என்றே அப்பொழுது எண்ணியிருந்தேன்.

பேருந்தில் வழமைபோல் பிரயாணிகள் அதிகம் காணப்படவில்லை. இருந்தவர்களும் சாவகச்சேரியுடன் இறங்கிவிட, பேருந்தில் தனிமனிதனாக இருந்தபோதே எனக்கு பயம் கொள்ள ஆரம்பித்தது.

 

அடுத்து யாழ் நகரில் பண்டத்தரிப்புக்கான பேருந்து கிடைக்குமா என்று சாரதியை கேட்ட போது அவரும் எதுவும் தெரியாது என்று கூறிச் சங்கடப்பட்டுக் கொண்டிருந்தார்.

வழியில் வந்த லொறியினை மறித்த சாரதி, அவரிடம் தகவலை பெற கேட்டபோது ,லொறி சாரதியும், யாழ்ப்பாணம் நகரை  ஆமி சுற்றி வளைத்துள்ளது என்று மட்டுமே கூறி சென்றான்.

எமது பேருந்து பஸ் நிலையத்தினை அண்மித்தபோது இரவு ஆகிவிட்டது.

 'பேருந்து நிலையம் நிறைய ஆமி நிற்கிறாங்கள். கீழ படு தம்பி' என்ற நடத்துனரின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து நான் பஸ் இருக்கையில் படுத்துவிட்டேன்.

படுத்திருந்தாலும், ராணி தியேட்டர் பக்கமும், மறு பக்கமும் பெரும் தீச்சுவால் கொண்டு பற்றி எரிவதினை என்னால் ஜன்னலூடு காணக்கூடியதாக இருந்தது. [அன்று பல இடங்கள் யாழ்நகரில் (தியேட்டர் உட்பட) எரியூட்டப்பட்டதாக பின்னர் அறிந்துகொண்டேன்.]

நிலையத்தினுள் எமது பேருந்தினை மறித்த ஆமிக்காரர் ,  ,இங்க நிக்காத , டிப்போ  போ  என்று சத்தமிட்டனர்.

அவர்கள் பேருந்தினுள் ஏறி என்னைக் காணாதது, என்னுடைய அடுத்த அதிஷ்டமாக கருதினேன்.

 விரைவாக அப்பால் சென்ற எமது பேருந்து, நல்லூர் வீதியில் என்னை இறக்கிச் சென்றுவிட்டது. எனக்கு பயம் பிடித்த , அந்நேரத்தில் திசை எதுவும் புரியவில்லை.

அப்பொழுது ஆறுகால்மடத்தில் எங்கள் உறவினர் வீடு நினைவு வரவே ,எத்திசையில் செல்வது என்று புரியாது ,பேசும் குரல் கேட்ட, ஒரு வீட்டுப் படலையைத் தட்டினேன்.

அவ்வீடு அமைதியடைந்ததுடன் அவர்கள் வரவே இல்லை.நீண்ட நேரம் தட்டியபின் ஒரு முதியவர் வந்து படலையை திறவாமலே ..

''யாரது?''

நானும் என் நிலையினை கூறி, ஆனைக்கோட்டைக்கு போகும் வழியினை கேட்டேன்.

''ஐயோ தம்பி ,உங்கை ஆமிக்காரர் சுடுறாங்கள். கவனமாய் போ.''என்று பாதையையும்  கூறி சென்றுவிட்டார்.

நடுக்கத்துடன் நடந்து வந்த எனக்கு ஐஞ்சிலாம்படி சந்தியில், ஒரு காருடன் எரிந்துகொண்டிருக்கும் தமிழ் உறவுகளை கண்டதும், உடல் முழுவதும் உதற தொடங்கியது. அந்த உதறலுடன், எப்படி வேகமாக ஆறுகால்மடம் (ஆனைக்கோட்டை) வந்தடைந்தேன் என்பது எனக்கே தெரியாது.

அன்று மட்டும் நான்  அவர்களிடம் அகப்படிருந்தால்,  நானும் எரியும் நெருப்பினுள் வீசப்பட்டு ,காணாமல் போனவர் பட்டியலில் இன்று வாழ்ந்திருப்பேன்.

இச் சம்பவத்தின் பின், நான் யார் எது கூறினாலும் செவிமெடுப்பேன்ஆனால் நெஞ்சில், எது சரியெனப் படுகிறதோ அதையே செய்வேன். வெற்றியும் கண்டுள்ளேன்

 குறிப்பு:மீண்டும் வேலைக்கு வந்த காலத்தில்,என்னை அன்று அனுப்பியவரிடம் இதுபற்றி நான் எதுவும் பேசவில்லை. ஏனெனில் இப்படியே ஒவ்வொருவரையும் நாம் பேச ஆரம்பித்தால் எல்லாருமே வாய்மூடி நாமுண்டு, நம் குடியுண்டு என சுயநலமாக  வாழ ஆரம்பித்துவிடுவர். 

உண்மைச் சம்பவம் :செமனுவேந்தன்

0 comments:

Post a Comment