மகாவம்சத்தில் புதைந்துள்ள..... (பகுதி13)

 உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்

மகாவம்சத்தின் படி, இலங்கைக்கு வந்த விஜயனும் அவனது கூட்டாளிகளும், தமிழ் மன்னனான பாண்டியன் மகளையும் பாண்டிய மகளீர்களையும் மணந்து தங்கள் வம்சத்தைத் தொடக்கி வைக்கிறார்கள். அதில் உருவாகிய வாரிசுகளே சிங்களவர் என்று கதை கூறுகிறது. இதன் இரண்டாவது பாகம் சூழவம்சம் ஆகும். இதன் முதல் பிரிவு 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தர்மகீர்த்தி என்ற பௌத்த தேரரால் எழுதப்பட்டது. மகாவம்சத்தின் கதைநாயகன் துட்ட[ன்] கைமுனு (கி.மு. 101-77) என்றால், சூழவம்சத்தின் கதைநாயகன், தாதுசேனன் (கி.பி. 1137-1186) ஆவான என்பது குறிப்பிடத்தக்கது. மகாவம்சத்துக்கு முந்திய தீபவம்சம் ஒரு சில பாடல்களில் எழுதிய துட்ட கைமுனுவின் கதையை, மகாவம்சம் 12 அத்தியாயங்களாக, இருபத்தி யொன்றாவது அத்தியாயம் 'ஐந்து அரசர்கள் (Mahavamsa / CHAPTER XXI / THE FIVE KINGS )' என்பதில் இருந்து தொடங்கி, இருபத்தி இரண்டாவது அத்தியாயம் 'காமனி ஜனனம் (Mahavamsa /CHAPTER XXII / THE BIRTH OF PRINCE GAMINI)' ஊடாக, முப்பத்திரெண்டாவது அத்தியாயம் 'தூசித சுவர்க்கத்தை அடைதல் ( CHAPTER XXXII / THE ENTRANCE INTO THE TUSITA-HEAVEN )' வரை, மகாவம்சத்தில் கிட்டத் தட்ட 1/3 பகுதியாக துட்ட கைமுனுவை ஒரு விடுதலை வீரனாக வர்ணிக்கிறது.

 

தீபவம்சத்தில், அத்தியாயம் 09 / விஜயனின் கதையில் [Dipavamsa / IX. / Vijaya’s Story] 13 ,14 ,15 பாடலில், குழந்தைகள் எல்லோரும் புறம்பாக ஒரு கப்பலில் நக்க தீபகம் [Naggadīpa, Naggadīpa (नग्गदीप) is the name of a locality situated in Aparāntaka (western district) of ancient India or It was probably an Island in the Arabian Sea] அடைந்தது என்றும், மனைவிமார்கள் எல்லோரும் புறம்பாக வேறு ஒரு கப்பலில் மஹிள தீபகம் [Mahilāraṭṭha, ] அடைந்தது என்றும், ஆண்கள் [கணவர்கள்]  எல்லோரும் புறம்பாக வேறு ஒரு கப்பலில், முதலில் சுப்பராகா [port of Suppāra / சூர் பாரகம்] என்ற துறைமுகம் அடைந்தது என்றும், அதன் பின், அவர்களை அங்கிருந்து, அவர்களின் தீய நடவடிக்கைகளால் துரத்த, அவர்கள் இலங்கை தீபம் அடைந்தனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அதீத கற்பனை போல் தெரிகிறது. ஏனென்றால், குறிப்பாக ஆயிரத்திற்கு மேலான [ஆண்கள் 1 + 700 என்பதால்] குழந்தைகளை ஒன்றாக, ஆனால் புறம்பாக வேறு ஒரு தனிக் கப்பலில் எந்த ஒரு மடையனும் அனுப்பமாட்டான், மற்றது குழந்தைகளின் வயது கட்டாயம் தாய் பால் குடிக்கும் மழலையில் இருந்து படிப் படியாக மேலே போய் இருக்கும். குறைந்தது தாய் மார்களுடனாவது, அதாவது பெண்களுடனாவது அனுப்பி இருக்க வேண்டும். எனவே அது நம்பக் கூடியதாக இல்லை. மற்றது கி மு 6ஆம் நூறாண்டில் ஒரே கப்பலில் ஏறக்குறைய ஆயிரம் பேர்களை, அல்லது குறைந்தது எழுநூறு பேரையாவது காவிச் செல்லக்கூடிய கப்பல் ஒன்றும் கட்டாயம் இல்லை. கிழக்கு இந்தியாவின் வங்காளதேசப் பகுதியில் லாலா எனும் நாட்டில் இருந்து விஜயனும் அவனின் கூட்டாளிகளும் அவர்களின் மோசமான கெட்ட நடத்தைகளினால், அவனின் தந்தையினால் துரத்தி விடப்படுகிறான், பின் சுப்பராகா எனும் இடத்தில் கரையொதுங்கினார்கள் எனினும், அங்கேயும் அவனதும் அவனது நண்பர்களதும் தொல்லைகள் அதிகரிக்கவே அங்கிருந்தும் கடத்தப்படுகின்றனர். அப்படி என்றால் என் மனதில் எழும் கேள்வி, புத்தர் தன் தர்மத்தை, கொள்கையை போதிக்க, நிலை நாட்ட, வேறு எவரும் அவருக்கு கிடைக்காமல், இவர்களை உண்மையில் தேர்ந்து எடுத்து இருப்பாரா? என்பதே ஆகும்.


பண்டைய கால உலக சரித்திரத்தை ஒருமுறை உற்று நோக்கினால், ஒருவர் தன் போதனைகளை தான் பிறந்து வளர்ந்த நாட்டில் தான் முதல் நிலை நாட்ட முற்படுவர். அதன் பின் அது மற்ற நாடுகளுக்கு பரவலாம், பரவாது விடலாம். ஏன் என்றால் அவர்களுக்கு குறிப்பாக தம் நாடு, தம் மொழி, தம் சூழல் மற்றும் பண்பாடு தான் முக்கியமாக தெரியும். மற்றும் போக்குவரத்தும், குறிப்பாக வெளி நாடுகளுக்கு கடினமான காலம் அது. இரண்டாவது, விஜயன் வருவதற்கு முன்பே மூன்று முறை இலங்கைக்கு புத்தர் வந்ததாகவும், அங்கு முதல் வருகையில், தேவர்கள் வந்து கூடினர். தேவர்கள் கூட்டத்தில் பகவான் தமது தர்மத்தைப் போதித்தார். கோடிக் கணக்கான ஜீவன்கள் [உயிரினம்] மதம் மாறினர் என்றும் [the devas assembled, and in their assembly the Master preached them the doctrine. The conversion of many kotis of living beings took place], அதே போல, இரண்டாவது வருகையிலும் சமுத்திரத்திலும் நிலத்திலும் வசித்த எண்பது கோடி நாகர்களுக்கு உபதேசம் செய்து திரி சரணமளித்து தமது பஞ்சசீலத்தில் ஈடு படுத்தினர் என்றும் [he, the Lord, established in the (three) refuges and in the moral precepts eighty kotis of snake-spirits, dwellers in the ocean and on the mainland], மேலும் மூன்றாவது வருகையிலும் இரக்கமே உருவான பகவான் அங்கு உபதேசம் செய்த பின்பு எழுந்து அங்கிருந்து புறப்பட்டார், சுமணகூட பர்வதத்தில் [இலங்கையில் உள்ள ஒரு மலை உச்சி, பர்வதம் - மலை ] கண்ணுக்குப் புலனுகுமாறு தமது பாதச் சுவடுகளைப் பதித்துச் சென்றார் என்றும் [had preached the doctrine there, he rose, the Master, and left the traces of his footsteps plain to sight on Sumanakuta / A mountain peak in Ceylon] கூறுகிறது. அப்படி என்றால் விஜயன் வரும் பொழுதே அங்கு  புத்தரின் போதனை இருந்து இருக்க வேண்டும், ஆனால் அங்கு சிவ வழிபாடும் நாக வழிபாடும் தான் தேவநம்பிய தீஸன் காலம் வரை இருந்து உள்ளது. உதாரணமாக, பதின் மூன்றாவது அத்தியாயத்தில், இந்திரன், மிகச் சிறந்தவரான மஹிந்த தேரரிடம் வந்து இலங்கையை மதம் மாற்றி விமோசனம் அளிக்க புறப்படுங்கள். சம்புத்தராலும் இது ஏற்கனவே உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கும் என்கிறான் [The great Indra sought out the excellent thera Mahinda and said to him: `Set forth to convert Lanka; by the Sam buddha also hast thou been foretold (for this)]. பதினான்காவது அத்தியாயத்தில், தன்னுடைய அதிசய சக்தியின் மூலம் இலங்கை முழுவதும் கேட்கும் படியாக அவன் தர்மப் பிரசார நேரத்தை அறிவித்தான் என்றும் [he announced the time of (preaching the) dhamma, making it to be heard, by his miraculous power, over the whole of Lanka] இந்த அழைப்பின் காரணமாக ஏராளமான தேவர்கள் வந்து கூடினர் என்றும், தேரர் அந்தக் கூட்டத்துக்கு சமசித்த சுத்தத்தை [மனஅமைதி சூத்திரம்] உபதேசம் செய்தார் என்றும், எண்ணற்ற தேவர்கள் அவரின் கொள்கைக்கு மாற்றப்பட்டனர் என்றும், பல நாகர்களும், சுபானர்களும் திரிசரணத்தை [புத்தர் தர்மம் சங்கம் என்னும் மும்மணிகள்] மேற்கொண்டனர் என்றும் [Because of the summons there came together a great assembly of devas; and the thera preached before this gathering the Samacitta-sutta. Devas without number were converted to the doctrine and many nägas and supanas came unto the (three) refuges.] கூறுகிறது. இதில் எனக்கு இன்னும் புரியாதது, புத்தரின் இலங்கை வருகையில் நாகர்கள், தேவர்கள்  உட்பட கோடிக் கணக்கான ஜீவன்கள் மதம் மாறினார்கள் என்றால், அவர்களுக்கு என்ன நடந்தது?, எதற்காக திருப்பவும் மதம் மாற்ற மஹிந்த தேரர் [Mahinda] அனுப்பப்பட்டார் ? அல்லது புத்தர் வந்து போனபின் அந்த ஜீவன்கள் எல்லோரும், அவர் கொள்கைகளை கைவிட்டு திரும்பவும் முன்னைய கொள்கைக்கு, வழிபாட்டுக்கு போய்விட்டார்களா? அல்லது புத்தர் சரியாக போதிக்கவில்லையா ?

-கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்

பகுதி: 14 தொடரும்....அடுத்த பகுதி வாசிக்க அழுத்துக  Theebam.com: 'மகாவம்சத்தில் புதைந்துள்ள…. (பகுதி14):  

ஆரம்பத்திலிருந்து வாசிக்க, அழுத்துக Theebam.com: மகாவம்சத்தில் புதைந்துள்ள.../ பகுதி 01:

0 comments:

Post a Comment