சாப்பிடாமலே உங்கள் உடல் எடை கூடுகிறதா? ஏன் தெரியுமா?உடல் பருமன்அல்லதுஎடை குறைப்புஎன்ற வார்த்தைகளைக் கேட்கும்போது, உடனடியாக நம் மனதில் ஆரோக்கியமற்ற உணவுமுறை அல்லது ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்யும் வாழ்க்கை முறை ஆகியவையே தோன்றும்.

 

ஆனால், உடல் எடை அதிகரிக்க, அதிகம் அறியப்படாத மற்றொரு காரணியும் உள்ளது.

 

நாம் ஆரோக்கியமான உணவு உட்கொண்டு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தாலும் இக்காரணத்தால் நமது உடல் எடை அதிகரிக்கலாம்.

 

சமீபத்திய ஆண்டுகளில், சுற்றுச்சூழலில் உள்ள சில ரசாயனக் கலவைகள் மக்களில் எடையை அதிகரிப்பதில், அல்லது உடலைப் பருமனாக்குவதில் பங்காற்ற முடியும் என்று நிறுவப்பட்டுள்ளது.

 

இந்த ரசாயனக் கலவைகள் ஒபீசோஜென்கள் (obesogens) என்று அழைக்கப்படுகின்றன.

 

அஜீரணம் மூலமாகவோ, மாசுபட்டக் காற்றைச் சுவாசிப்பதாலோ, இந்த ரசாயனங்களோடு தொடர்பு ஏற்பட்டால் நமது வெள்ளைக் கொழுப்புத் திசுக்கள் (adipose tissue) அல்லது கொழுப்பு நிறையின் அளவு அதிகரிக்கிறது.

 

இன்றுவரை, சுமார் 50 இரசாயனங்கள் ஒபீசோஜென்கள் அல்லது ஒபீசோஜென்களாக இருக்கக் கூடும் என்று வரையறுக்கப்பட்டிருக்கின்றன.

 

வேதியியல் மொழியில் Bisphenol A, Polychlorinated Biphenyls, Phthalates, Polybrominated Diphenyl Ethers, Perfluoroalkylated substances, Polyfluoroalkylated substances, Parabens, Acrylamide, Alkylphenols, Dibutyltin போன்ற ரசாயனங்கள் மற்றும் கேட்மியம், ஆர்செனிக் போன்ற உலோகங்கள் ஆகிவயை, உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் ஒபீசோஜென்கள் என்று வரையறுக்கப்பட்டிருக்கின்றன.

 

அதிர்ச்சியான விஷயம் என்னவெனில், இந்த ரசாயனங்கள் அனைத்தும் டிடெர்ஜென்ட்கள், உணவுப் பொருட்கள், பிளாஸ்டிக் டப்பாக்கள், ஆடைகள், அழகுசாதனப் பொருட்கள் என நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் காணப்படுகின்றன.

இவை எப்படி உடல் எடையை அதிகரிக்கின்றன?

உண்மையில், இந்த பொருட்கள் தம்மளவில் உடல் பருமனை கூட்டுவதில்லை. ஆனால் வெவ்வேறு வழிகளில் உடல் எடையை அதிகரிக்கச் செய்கின்றன.

 

உதாரணத்திற்கு, அவை அடிபோசைட்டுகள் (Adipocytes) எனப்படும் கொழுப்பு செல்கள் பெருகுவதை ஊக்குவிக்கின்றன. வேறுவிதமாகக் கூறினால், அவை கொழுப்பு அதிகரிப்பதற்குக் காரணமான இந்த உயிரணுக்களின் எண்ணிக்கையையும் அளவையும் அதிகரிக்கின்றன.

 

வெள்ளைக் கொழுப்பு திசுக்களின் அதிகரிப்பு உடல் பருமன் அதுசார்ந்த வளர்ச்சிதை நோய்களை உருவாக்கும். இது பல்வேறு உறுப்புகளில், குறிப்பாக கல்லீரலில் குளுக்கோஸ் மற்றும் கொழுப்பு அமிலங்களின் திரட்சியை ஏற்படுத்தும்.

 

அதேபோல், இந்த ஒபீசோஜென்களோடு தொடர்பு ஏற்படுவதன்மூலம் ஹார்மோன்களின் செயல்பாட்டிலும் மாற்றம் ஏற்படுகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஹார்மோன்கள் பாலியல் ஹார்மோன்கள் அல்லது தைராய்டு ஹார்மோன்கள் வகையைச் சேர்ந்தவை. இவை உடல் எடை அதிகரிப்பு மற்றும் வளர்சிதை மாற்றத்துடன் தொடர்புடையவை.

 

இதற்கும் மேலாக, இந்த ரசாயனங்கள் குடல் நுண்ணுயிரிகளையும் பாதிக்கலாம்.

 

கொழுமியங்கள் எனப்படும் lipid-களை உறிஞ்சுவதைச் சீர்செய்யும் கோடிக்கணக்கான பாக்டீரியாக்கள் இவை. இவற்றின் எண்ணிக்கை குறைவது type 2 நீரிழிவு அல்லது உடல் பருமன் போன்ற வளர்சிதை மாற்ற நோய்களை ஏற்படுத்தும்.

 

அதிக ஆபத்து எப்படி ஏற்படுகிறது?

ஒபீசோஜென்களோடு எப்போது நமக்குத் தொடர்பு ஏற்படுகிறது என்பதைப் பொறுத்தும் அதன் விளைவுகள் மாறுபடும்.

 

மிகவும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய கட்டங்கள் வாழ்க்கையின் ஆரம்ப கட்டங்களாகும். கருவில் இருக்கும்போது அல்லது ஆரம்ப குழந்தை பருவம்அப்போது வளர்ச்சி மிக விரைவாகவும் ஒருங்கிணைந்ததாகவும் இருக்கும். அந்நிலையில் ஒபீசோஜென்களோடு தொடர்பு ஏற்பட்டால்,

 

அது ஆரோக்கியத்தில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும்.

 

ஆரம்பகால வளர்ச்சியின் போது ஒரு நபரைச் சுற்றியுள்ள சூழல் உடலியல் மாற்றங்களை ஏற்படுத்தும். இது அவர்களின் வாழ்நாள் முழுவதும் சில நோய்களால் பாதிக்கப்படும் ஆபத்தை ஏற்படுத்தும்.

 

நோயை உண்டாக்கும் காரணிகள் நேரடியாக இல்லாவிடிலும் இந்த தாக்கங்கள் தொடர்ந்து இருக்கும்.

 

உடல் பருமனிலும் இத்தகைய மாற்றங்கள் நிகழுமா?

ஆம், என்கின்றன அறிவியல் சான்றுகள்.

 

வளர்ச்சியின் முக்கியமான தருணங்களில் மேற்கூறிய நச்சுப்பொருட்களோடு தொடர்பில் வருவது மரபணுவில் மாற்றங்களை ஏற்படுத்தும். இவை epigenetic மாற்றங்கள் எனப்படும். அதாவது மரபணு வரிசையில் மாற்றம் ஏற்படுத்தாதவை.

 

இது மரபணு தனது குணாதிசயங்களை வெளிப்படுத்துவதை மாற்றலாம். இதனால் செல்களின் செயல்பாடுகளும் மாறலாம். இதன்மூலம் உடல் பருமன் மற்றும் பிற வளர்சிதை மாற்ற நோய்கள் உண்டாவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது.

 

பிரச்னை இத்துடன் நின்றுவிடவில்லை.

 

விலங்குகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், இந்த மாற்றங்கள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கடத்தப்படலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

 

அதாவது, இந்த மாற்றங்கள் பரம்பரையாக வரலாம்.

 

இதிலிருந்து எப்படிப் பாதுகாப்பாக இருப்பது?

ஒபீசோஜென்களிடமிருந்து எப்படிப் பாதுகாப்பாக இருப்பது?

 

ஏற்கனவே குறிப்பிட்டபடி, நாம் நமது அன்றாட வாழ்வில் ஒபீசோஜென்களோடு வாழ்ந்தாலும், சில நடைமுறைகள் மூலம் அவற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும்.

 

👌புகை பிடிக்காமல் இருப்பது

👌பாக்கெட் உணவுகள், குளிர்பானங்கள் உட்கொள்வதைக் குறைப்பது

👌பிளாஸ்டிக், அழகுசாதனப் பொருட்கள், லோஷன்கள் ஆகியவற்றின் பயன்பாட்டைக் குறைப்பது

👌பூச்சிக்கொல்லிகள் உள்ள உணவுகள் உட்கொள்வதைக் குறைப்பது

👌முடிந்தவரை அனைத்தையும் மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்துவது

முக்கியமாக, பொதுச் சுகாதாரத்துறை அதிகாரிகள், மக்கள் இந்தப் பொருட்களைப் பயன்படுத்துவதைக் குறைக்க கொள்கை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தில் இருக்கும் சமூக ஏற்றத்தாழ்வுகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.

 

இதனுடன், ஒபீசோஜென்களைப்பற்றித் தொடர்ந்து ஆராய்ச்சி செய்வதும் அவசியம்.


:  பிபிசி தமிழ் /ரகேல் சொலர் ப்ளாஸ்கோ மற்றும் சப்ரினா லாப்/தி கான்வர்சேஷன்


0 comments:

Post a Comment