பாதுகாக்க வேண்டிய அடிப்படை முறைகள்-
நமது
வாயில் சுமார் 700 வகையான நுண்ணுயிரிகள் உள்ளன. உணவுக்குப் பின் பற்களின் மேற்பரப்பில் பாக்டீரியாக்கள்
உணவுத் துகள்களுடன் சேர்ந்து ‘பிளேக்’
(Plaque) எனும் பிசுபிசுப்பான படலத்தை உருவாக்குகின்றன.
இதை முறையான பராமரிப்பால் அகற்றாவிட்டால்,
பற்காரை, ஈறு ரத்தக்கசிவு, பல் சொத்தை மற்றும் வாய் துர்நாற்றம் ஆகியவை ஏற்படும்.
பல் துலக்கும் சரியான முறை
- நேரமும் அளவும்: ஃப்ளூரைடு (Fluoride) கலந்த பற்பசையைப் பயன்படுத்தி,
தினமும் இருமுறை (காலையிலும், இரவு உறங்குவதற்கு முன்பும்)
தலா 2 நிமிடங்கள் பல் துலக்க வேண்டும்.
- முறையான அசைவு: மென்மையான
தூரிகையை (Soft toothbrush) ஈறு-பல் சந்திப்பில் 45 டிகிரி கோணத்தில்
வைத்து, அதிக அழுத்தம் தராமல் சிறிய வட்ட வடிவ அசைவுகளில்
துலக்க வேண்டும்.
பற்களின் வெளிப்பக்கம்,
உள்பக்கம் மற்றும் மெல்லும் பகுதிகளைச்
சுத்தம் செய்ய வேண்டும்.
- கொப்பளிப்பதைத் தவிர்க்கவும்: துலக்கிய பின் அதிகப்படியான பற்பசையை உமிழ்ந்துவிட வேண்டும்.
உடனடியாகத் தண்ணீரால்
வாயைக் கொப்பளிக்காமல் இருந்தால், ஃப்ளூரைடு பற்களில் நீண்ட நேரம் செயல்பட்டு வலிமை சேர்க்கும்.
இடைப்பல் சுத்தம் மற்றும் வாய் கொப்பளிக்கும் திரவம்
தூரிகையால் அடைய முடியாத பற்களின் இடைவெளிகளைச் சுத்தம் செய்ய தினமும் ஒருமுறை 'ஃப்ளாஸ்' (Floss) அல்லது இடைப்பல் தூரிகையைப்
(Interdental brush) பயன்படுத்த வேண்டும். வாய் கொப்பளிக்கும் திரவம் (Mouthwash) என்பது பல் துலக்குவதற்கு மாற்றாகாது; தேவைப்பட்டால் மட்டுமே மருத்துவர் ஆலோசனையுடன் பயன்படுத்த வேண்டும்.
உணவுக் கட்டுப்பாடு மற்றும் எச்சரிக்கைகள்
- தனிச் சர்க்கரை (Free Sugars): இனிப்புகள், சாக்லேட், பிரவுன் சுகர், தேன், கேக் மற்றும் பழச்சாறுகளில் உள்ள சர்க்கரையைப்
பயன்படுத்தி பாக்டீரியாக்கள் அமிலத்தை உருவாக்குகின்றன. இது எனாமலின் கனிமங்களை இழக்கச் செய்து பல் சொத்தையை உண்டாக்குகிறது.
- அமிலப் பானங்கள்: எலுமிச்சை, ஆரஞ்சு சாறு போன்ற அமிலத்தன்மை
கொண்ட பானங்களை அருந்திய உடனே பல் துலக்கக் கூடாது. எனாமல் தற்காலிகமாக
மென்மையடைந்திருக்கும் என்பதால்,
நீரால் வாயைக் கொப்பளித்து 30 நிமிடங்கள் கழித்தே துலக்க வேண்டும்.
- தவறான நம்பிக்கைகள்: கரும்பு கடிப்பதாலோ
அல்லது ஆலங்குச்சி/வேப்பங்குச்சியைப் பயன்படுத்துவதாலோ பற்கள் வலுவடையும்
என்பதற்கு அறிவியல் ஆதாரங்கள் இல்லை. தவறான முறையில் குச்சிகளைப் பயன்படுத்தினால் ஈறுகளில் காயம் ஏற்படக்கூடும்.
✹
தினமும் இருவேளை பல் துலக்குவது, சர்க்கரை மற்றும் அமில உணவுகளைக் குறைப்பது, போதுமான தண்ணீர் அருந்துவது மற்றும் வலி வரும் வரை காத்திருக்காமல்
குறிப்பிட்ட இடைவெளிகளில் பல் மருத்துவரைச் சந்தித்துப் பரிசோதனை செய்துகொள்வதே ஆரோக்கியமான புன்னகைக்கு வழிவகுக்கும்.
/ தீபம் உடல்நலம் //ஆதாரங்கள்: அமெரிக்க தேசிய மருத்துவ நூலகம் (National Library of Medicine - NLM), உலக சுகாதார நிறுவனம் (WHO - World Health Organization), மருத்துவர் சிவசங்கர் (முன்னணிப் பல் மருத்துவ நிபுணர்-ஸ்ரீ டென்டல் கிளினிக்-சென்னை )