நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? /பகுதி: 01B

[சீரழியும் தமிழ் சமுதாயம்] 
18 ஆம் நூற்றாண்டின் தொழில்துறை புரட்சி, நகர்ப்புற சமூகத்தில் மேலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. தொழில் மயமாக்கல் மேலும் மேலும் முன்னேற்றம் அடைய, அதிகமான மக்கள் தமது நிலத்தை விட்டு வெளியேறவும் தொழிற்சாலைகளில் வேலை தேடுவதற்கும் தள்ளப்பட்டார்கள். இதனால் பெண்கள் முழுமையான பொருளாதாரத்திற்கு, தொழிற்சாலையில் வேலை செய்யும் ஆண்களை மேலும் சார்ந்து இருக்க நேரிட்டது. அது மட்டும் அல்ல, தொழிற்துறை செயல்பாடுகளில் பங்கு பெறாத முதியவர்கள் [பழைய தலைமுறை /The older generations] குடும்பத்திற்கு ஒரு சுமையாகி விட்டது, இவர்களை "முதியோர் இல்லங்களுக்கு" அனுப்புதலும் அதிகரிக்கத் தொடங்கின. 20 ஆம் நூற்றாண்டில் இந்த நிலைமை மீண்டும் மாறியது. பெண்கள் வேலைக்கு போகத் தொடங்கியதும், மற்றும் நவீன முதலாளித்துவ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் [The development of modern capitalist technology] பெண்களின் சுதந்திரத்திற்கு- ஒரு உண்மையான சாத்தியத்திற்கு- வழிகோலியது. நவீன முதலாளித்துவம், குடும்பங்களை சிறிய சாத்தியமான உறவினர் அலகுகள் மட்டும் கொண்டவையாகவும் [smallest possible kinship units], உதாரணமாக ஒற்றை பெற்றோர் குடும்பங்கள் மற்றும் இரட்டை பெற்றோர் குடும்பங்கள் [single parent or both parents] போன்றவையாகவும், மற்றும் நிதி ரீதியாக சுயாதீன மானவையாகவும் மாறின. எனவே கூட்டு குடும்பம் [Joint family] இல்லாமல் அதிகமாக போய்விட்டது. எனவே அவர்கள் தமது குறைந்தபட்ச நாளாந்த மனவெழுச்சி களுக்கு ஆதரவாக [emotional support] கைத் தொலை பேசி, கணனி போன்றவைகளை அதிகமாக பாவிக்க தொடங்கினர். இப்படித்தான் சமுதாயம் வளர்ச்சி அடைந்து இன்றைய நிலையை அடைந்தது எனலாம். ஆனால் இந்த சமுதாயம் ஒரு முழுமையடைந்து உள்ளதா என்பது எம் முன் தோன்றும் முக்கிய கேள்வியாக இன்று உள்ளது.

ஒரு சமுதாயம் முழுமை பெற வேண்டும் என்றால், அந்த சமுதாயத்தின் தூண்களாக இருக்கும் மனிதர்களாகிய நாம் சில பண்புகளை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அப்படி என்றால் 'பண்பு' என்றால் என்ன ?, எந்த பண்புகளை நாம் வைத்திருக்க வேண்டும்? போன்ற கேள்விகள்  இயல்பாக எழும். பண்ணுவது ,அதாவது ஒழுங்காகச் செய்வது என்கிற  பண்படு என்ற சொல்லில் இருந்து பிறந்ததே பண்பாடு ஆகும். அதாவது உலக நடைமுறைக்கு ஏற்ப ஒத்து நடப்பதே பண்பாடு என்றும் வரையறுக்கலாம் என்று எண்ணுகிறேன். இதனால் தான் நம் முன்னோர்  'ஊரோடு ஒத்துப் போ' அல்லது 'ஊரோடு ஒத்து வாழ்' என்கிறார்கள். வேறு விதமாக சொல்வதென்றால், பிறர் நமக்கு என்ன செய்தால் நாம் மகிழ்ந்து இருப்போமோ அதையே பிறருக்குத் திரும்பச் செய்வதும் பழியின்றி வாழ்தலும் பண்பாடு எனலாம். இதை சங்க இலக்கியமான நற்றிணை மிக அழகாக, தெளிவாக சொல்கிறது.

"நயனும், நண்பும், நாணு நன்கு உடைமையும்,
பயனும், பண்பும், பாடு அறிந்து ஒழுகலும்,
நும்மினும் அறிகுவென் மன்னே,"
[நற்றிணை 160, அடிகள் 1 - 3]

யாவருக்கும் இனிமையாக நடத்தல், அன்புப் பாராட்டி நட்புடன் வாழுதல், பழியைக் கண்டும் தீமையைக் கண்டும் மனங்கூசுதல், மற்றவர்களுக்கு, அதாவது சமுதாயத்திற்கு பயன்பட வாழ்தல், பிற உயிர்கள் படும் துன்பங்களைப் போக்கி வாழுதல் ஆகிய செயல்களே பண்புகள் என 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த பாடல் எமக்கு அறிவுரை வழங்குகிறது. சுருக்கமாக அன்பு என்பது உயர்ந்த பண்பு என்றும் ,அறன் என்பது உயர்ந்த வாழ்வின் சிறந்தப் பயன் என்றும் சொல்லுகிறது. 

இந்த தனி மனிதர்களை உள்ளடக்கிய சமுதாயம் இன்றைய நிலைக்கு வளர்ச்சி அடைவதற்கு கட்டாயம் அவர்களுக்கு ஏதாவது தூண்டுகோல் இருந்திருக்கும். அவை சமூக நன்மைகளை தரும் தூண்டுகோல்களாகவோ, காரணிகளாகவோ அல்லது தீமைகளை தரும் காரணிகளாகவோ கூட இருக்கலாம். ஒரு விளக்கை சரியாக தூண்டும் போது அது பிரகாசமான ஒளியை தந்து இருளை போக்கும், அதே சமயம் அந்த விளக்கை தவறாக தூண்டினால் அந்த நெருப்பானது பெரும் அழிவை கூட ஏற்படுத்தும் வலிமை கொண்டது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. நம்மை சுற்றி நடக்கின்ற நிகழ்வுகள்தான், இப்போதெல்லாம் ஒரு தனி மனிதனை தூண்டி வழிநடத்துகிறது என்பதை மறுப்பதற்கு இல்லை. எனவே ஒரு சமுதாயத்தைத் தூண்டி சரியான வள்ர்ச்சி பாதையில் அழைத்து செல்வதில் ஊடகங்கள் பங்கு இணையற்றது. எனவே மக்களுக்கு உற்சாகம், நம்பிக்கை கொடுக்க கூடிய செய்திகளை முன்னிலைப் படுத்தி செய்தி வெளியிடுங்கள். இதனால் மக்கள் மனம் உற்சாகபடும், ஒரு நம்பிக்கை பிறக்கும் சமுதாயம் சரியான பாதையில் கண்டிப்பாக தூண்டபடும் என்பது என் நம்பிக்கையாகும். அதே வேளையில் மக்களாகிய நாமும் சற்று பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும், இன்று நம் கையிலே எண்ணற்ற தகவல்கள், வாட்ஸ் அப், டுவிட்டர், முகநூல் போன்ற ஊடகங்கள் மூலம் எதிர்மறை எண்ணங்களை தூண்டும் செய்திகளை பரப்புகிறது. ஆகவே உங்கள் மனதிற்க்கு ஒப்பாத ஓரு செய்தி அல்லது தகவலை அவற்றின் உண்மை நிலை அறியாமல் பரப்பாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். “எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கயிலே, அது.... அன்னை வளர்ப்பிலே...” என்றான் ஒரு கவிஞன். ஆகவே மனிதர்களை உள்ளடக்கிய சமுதாயமும் அப்படியே என்பதை நாம் கட்டாயம் உணரவேண்டும். அப்பத்தான் நாம் ஒரு அன்னை போல் இருந்து ஒரு வலிமையான சமுதாயத்தை கட்டமைக்க முடியும். அதன் வீழ்ச்சியில் இருந்து அல்லது சரிவில் இருந்து அதை நிமிர்த்த முடியும். அதுவே எம் முக்கிய இன்றைய கடமை என்று எண்ணுகிறேன். 


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

🚭🚭🚭🚭🚭🚭🚭🚭🚭🚭🚭🚭🚭🚭🚭🚭🚭🚭🚭



1 comments:

  1. நன்று. தொடரட்டும்

    ReplyDelete