'கடைசி' வரை யாரோ?

 "வீடு வரை உறவு, வீதி வரை மனைவி,
காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ?" - (கண்ணதாசன்)
  "காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே" - (பட்டினத்தார்)
 "இவ்வுலக செல்வங்கள் முடிந்ததும் கடைசியில் அழியாத சொர்க்கத்திற்கே வருவாய்" - (விவிலியம்)
 "வெறும் கையோடு வந்தாய், கடைசியில் வெறும் கையோடுதான் போவாய்" - (கீதை).
''என்னைத் தொழுபவர்கள் மட்டுமே கடைசியில் சொர்க்கம் வருவார்கள்; ஏனையோர் எரியும் நெருப்பில் எறியப்படுவார்கள்.'' – (குர்ஆன்,விவிலியம்)
''கர்ம விதிப்படி, இறந்ததும் தற்காலிகமாக சொர்க்க, நரக லோகங்களுக்கு செல்வீர்கள்'' -(பௌத்தம்)
 நாம் இறந்த பின்னர் 'கடைசி'யில் எங்கேயோ போகின்றோம் என்று பல ஆன்மீகவாதிகள் சொல்லிக்கொண்டே இருக்கின்றார்கள். இவர்கள் கூற்றைச் சாதாரண மக்களும் "கடைசி'யில் என்ன கொண்டோ போகப் போகிறார்?" என்று வினவுவதும் சர்வ சாதாரணமாகி விட்டது.
அப்போது சொல்லி வைத்துவிட்டார்கள், ஆகவே அது சரியாய்த்தான் இருக்கும் என்று முழு மனத்துடன் நம்பி, அதை அலசி ஆராயாதுஅவசியமே அற்ற சொர்க்கலோக வாழ்வுக் கற்பனையில் மனித இனத்தை இலகுவிலேயே மூளைச்சலவை செய்து மயக்கி வைத்திருக்கும் மாபெரும் சக்தியை எல்லா மதங்களுமே இன்னமும் தப்பவைத்துக் கொண்டுதான் இருக்கின்றன.
 இந்த விடயத்தை இரண்டு காரணங்களினால் முரண்பட்டுக் கொள்ளலாம்:.
 1. இதுவரை எந்தவிதமாகவும் நிறுவப்படாத சொர்க்கம், நரகம் என்ற இரு கடைசி இலக்குகளையே இறந்தபின்னர் எல்லோரும் சென்றடைவார்கள் என்று, பூரணமாகத் தாங்களாகவே முடிவு செய்து அறிவுரை கூற விழைவது.
 2. இவ்வுலகில் ஓடி, ஓடி உழைப்பவர்கள் தாங்கள் இறக்கும்போது கொண்டு போவதற்குத்தான் பணம் சேர்க்கின்றார்கள் என்று கூறப்படாத ஒரு கூற்றைக் கூறியதாக ஒருதலைப் பட்சமாக முடிவு செய்து அறிவுரை கூற விழைவது.
இதே ஆன்மீகவாதிகள்தான் கூறுகின்றார்கள், நாம் இங்கு செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்றவாறு 'கடைசி'யில் அங்கு எங்களுக்கு வசதிகள் எல்லாம் இலவசமாகவே செய்து கொடுக்கப்படும் என்று. அதாவது, பெரும் புண்ணியவானுக்கு 4 ஏக்கர் நிலத்தில் பெரிய மாளிகையில், ரோலஸ் ரோயஸ் காரும், 100" ரீவீ யும்; கொடுமையான பாவிக்கு ஓலை வீடு, துவிச்சக்கர வண்டி, 7" ரீவீ மட்டும்தான் கிடைக்கும் எனவாறு கூறலாம். ஒன்றுமே இங்கிருந்து கொண்டு போக அனுமதி என்பது  இல்லை என்றுதான் கூறுகிறார்கள்.
 இங்கு பணம் சேர்ப்பவர்கள் எல்லோருமே, சேர்த்தவை எல்லாவற்றையும் இங்கு அவர்கள் உயிருடன் இருக்கும்போது மட்டும்தான் அனுபவிக்க விரும்புகிறார்கள். எவராவது 'கடைசி'யில் கொண்டு போகப்போகின்றார்கள் என்று கூறியதே கிடையாது.
 இங்கு, 'அனுபவித்தல்' என்பதன் பொருள் மனிதனுக்கு மனிதன் மூன்று வகையில் மாறுபடும்:
 1.அளவுக்கு அதிகமாகச் சேர்த்துக் குவித்து வைத்துக்கொண்டு, அதை செலவு செய்யாது, கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்து வைத்து பார்ப்பதில் ஆனந்தம் அனுபவிப்பவர்கள். பணம் கரைந்து போவதை கண்டால் இவர்களுக்கு மன இறுக்கம், இதய நோய் என்பன வரக்கூடும்.
 2.சேகரிக்கும் பணத்தை மிச்சம் இல்லாது செலவு செய்துவிட்டுச் சிவனே என்று வாழ்ந்து பேரானந்தம் அனுபவிப்பவர்கள்.
 3. சோம்பலாய் இருந்துகொண்டு, மற்றயோரின் பணத்திலேயே வாழ்ந்துகொண்டு பரமானந்தம் அனுபவிப்பவர்கள்.
 மொத்தத்தில், வாழ்க்கையை தாங்கள் விரும்பியபடி அனுபவிக்கும் இவர்கள் ஒருவருமே 'கடைசி'யில் இறக்கும்போது பணத்துடனோ, வெறும் கையுடனோ போகவேண்டும் என்று எண்ணியதே இல்லை.
 சொக்கம், நரகம் என்பன நிஜமானவை என்று வாதிப்பவர்களும் இருக்கிறார்கள். அப்படியானால் எந்தக்கடவுள் சொன்னது உண்மை எனலாம்? சில மதங்கள் இவை இரண்டும் பக்கம், பக்கமாக உள்ளன என்கின்றன; வேறு மதங்கள் பெரும் இடைவெளி தூரத்தில் உள்ளன என்கின்றன. சரியான முகவரி இல்லாமல் 'கடைசி'யில் எங்கு போய் முடிவோமோ தெரியாது. நவிக்கேற்றரும் அங்கு வேலை செய்யாது!
 ஒரு சிலர், இறந்து சில நிமிடங்களில் மீழுயிர் பெற்று எழுந்து வந்து தாம் சொக்கத்தைக் கண்டு வந்ததாகக் கூறிய சம்பவங்களும் உள. இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும்; அவர்கள் விரும்பிய சொர்க்கத்தை  மட்டும் தான் கண்டிருப்பார்கள், வேண்டாத நரகத்தை அல்ல! இது வேறு ஒன்றும் இல்லை, ஒரு கற்பனையால் உருவாகிய மாயத் தோற்றங்களேதான்! மத நம்பிக்கையில் ஊறிச் சொர்க்கத்துக்குப் போகக் கனவில் மூழ்கி இருக்கும் ஒருவருக்கு ஆழ்மனத்தில் பதிந்திருக்கும் காட்சிகள்தான்  அவருக்கு அப்போது மாயத்திரையில் விழுந்திருந்தன. சொர்க்கம் தான் இவர்களுக்குப் பிடித்த இடமென்றால், எத்தனை பேர் இளமையிலேயே இறந்து வெகு விரைவாகச் சொர்க்கம் செல்ல ஆயத்தமாய் இருக்கின்றார்கள்?
 அந்தக் 'கடைசி' என்று ஒன்று இருப்பதாகத் தெரியவே இல்லை. சரி, அப்படி ஒன்று இருந்தாலும் இருந்துவிட்டுத்தான் போகட்டுமே? நாம் ஏன் அதைப்பற்றிப் பெரிதாய் அலட்டிக்கொள்ள வேண்டும்? இங்குள்ள எங்களுக்கு அந்தக் 'கடைசிஉலகம் எந்தவொரு சுகத்தையோ, பலனையோ தரப்போவதும் இல்லை. அப்படித்தான் நாம் இறந்தபின் 'எங்களுக்கு' அங்கு அது கிடைக்கும், இது கிடைக்கும் என்று ஆசை காட்டினால் ஏன்தான் நாம் அதற்கு மயங்கிப் போகவேண்டும்? ஏனென்றால் அந்த 'நாங்கள்' அங்கு 'நாங்கள்' இல்லை. அது யாரோ, எவரோ, எதுவோ, என்னவோ! அந்த யாரோ, எவரோ, எதுவோ, என்னவோ, அங்கோ, எங்கோ சொர்க்க வாழ்வில் மிதந்திருக்க வேண்டும் என்று, இங்கு நாம் ஆசைப்படும் அளவுக்கு நாம் என்ன அவ்வளவுக்கு பரோபகார உள்ளம் கொண்ட சகல பிரபஞ்ச பெரு மகான்களா? நம் மனைவி, பிள்ளைகளையே சொந்த நலம் என்று வரும்போது தூக்கி எறியக்கூடிய மனோபாவத்துடன் அல்லவா எங்களை இறைவன்  படைத்திருக்கிறான்! அப்படியான நாம், ஏன்தான் அறியாத ஒன்றைப்பற்றி வீணாக அக்கறை கொள்ளவேண்டும்?
ஆசையைத் துறக்கச் சொல்லிவிட்டு, உலகத்தில் இறைவனால்(?) எங்களுக்காகவே படைக்கப்பட்ட செல்வங்களை, அவனாலேயே(?) கிடைக்கபெற்ற ஐம்புலன்களினால் அனுபவித்துத் திருப்தியுடன் வாழாமல், ஏன்தான் இது வேண்டாம், எனக்கு சொர்க்கம் தான் வேண்டும் என்று அளவுக்கு மிஞ்சிய, ஒரு அர்த்தமற்ற பேராசையில் சிக்குண்டு பரிதவிக்கவேண்டும்?
  சொர்க்கமோ, நரகமோ அது வேறெங்கும் இல்லை; இங்கு,எமக்குள்தான் இருக்கிறது; எம்மனதில்தான் இருக்கிறது. ஒரு பணக்காரன் வீட்டில் நரகமும் இருக்கலாம், ஏழையின் வீட்டில் சொர்க்கமும் இருக்கலாம். எம்மனதால் சந்தோசம் என்று ஏற்றுக்கொள்ளப்படும் எந்த விடயமும் இருக்கும்வரை நாம் 'கடைசி' வரைக்கும் இப்பூவுலக சொர்க்கத்திலேயே இருந்து வாழ்ந்து கொண்டு இருப்போம் என்பதுதான் உண்மை!

ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்

0 comments:

Post a Comment