காட்டில் கடமான் (இலங்கை வழக்கு – மரை)

 


 கடமான் (இலங்கை வழக்கு – மரை) தெற்கு ஆசியாவில் காணப்படும் மான் இனங்களிலேயே மிகப்பெரியதும், உலகம் முழுவதும் பரவி வாழும் தன்மை கொண்டதுமாக ‘கடமான்’ திகழ்கிறது. இம்மான்களுக்கு "கடம்பை மான், இரட்டைக் கொம்பன்’’ என்ற பெயர்களும் உண்டு.

இதனை நாஞ்சில் நாட்டு வழக்கு மொழியில் ‘மிளா’ என்றும் அழைப்பார்கள். கடமான்கள், கரும்பழுப்பு நிறமாக இருக்கும். இதற்கு மிகுந்த செவித்திறனும், நுகர்வுத் தன்மையும் உண்டு. இவை கூட்டம் கூட்டமாக வாழும் தன்மை கொண்டவை அல்ல. தனியாகவோ அல்லது, அதிகபட்சமாக 6 என்ற எண்ணிக்கையில் சிறு குழுக்களாகவோ தான் இவை ஓரிடத்தில் காணப்படும். சிறு குழுக்களாக இருப்பவை, வயது முதிர்ந்த பெண் கடமானின் தலைமையில் இயங்கும். கடமான்கள், பெரும்பாலும் மரங்கள் நெருக்கமாக வளர்ந்திருக்கும் பகுதிகளையே தங்களின் வாழ்விடமாக தேர்வு செய்யும். அப்படி தேர்வு செய்யப்படும் இடமானது, முக்கியமாக நீர்நிலைகள் இருக்கின்றது என்பதை உறுதிப்படுத்தியதன் அடிப்படையிலேயே அமையும். இவை திறந்தவெளிகளுக்கு மேய்ச்சலுக்காக மட்டுமே செல்லும்.

 

 

பருவம் அடைந்த கடமானின் எடை, 225 கிலோ முதல் 320 கிலோ வரையும், உயரம் 100 முதல் 160 செ.மீ. வரையும் இருக்கும். வயது வந்த ஆண் கடமானுக்கு 30 முதல் 40 அங்குலம் நீளமுள்ள பெரிய கொம்புகள் உண்டு. இவை மிகவும் கூர்மையாகவும், கடினமானதாகவும் இருக்கும். வயது முதிர்ந்த கடமான்கள், தங்களின் உணவு தேவைக்காக ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே தங்கள் வாழ்விடத்தை அமைத்துக்கொள்ளும்.

 

ஆண்டுக்கு ஒரு முறை கடமானின் கொம்பு விழுந்து முளைக்கும். அப்படி கொம்புகள் விழுந்து முளைப்பதை பொறுத்துதான், அவற்றின் இனப்பெருக்க காலம் அமையும். இனப்பெருக்க காலத்தில் கடமான்கள், தங்களுக்கென்று ஒரு எல்லையை வகுத்துக் கொள்ளும். அந்த எல்லைக்குள் மற்ற ஆண் கடமான்களை வர அனுமதிக்காது. ஆனால் பெண் கடமான்களை அந்த எல்லையை விட்டு வெளியேறாதபடி பார்த்துக் கொள்ளும். கடமானின் கர்ப்ப காலம் 9 மாதங்கள். தாய் கடமான், பிரசவத்தில் பெரும்பாலும் ஒரு குட்டியைத்தான் ஈனும். அந்தக் குட்டி தன் தாயுடன் 2 ஆண்டுகள் வரைதான் இருக்கும். பின்னர் தனித்துச் சென்றுவிடும்.

 

கடமான் குறிப்பிட்ட தாவரங்கள் என்று இல்லாமல், கிடைக்கும் பெரும்பாலான தாவரங்களை உண்பதாகவும், சுமார் 150 வகையான தாவரங்களை அவை உண்டு வாழ்வதாகவும், ஆய்வுகள் சொல்கின்றன. புலி, சிறுத்தை, செந்நாய் ஆகியவற்றின், விருப்பமான உணவாக கடமான்கள் இருக்கின்றன. மற்ற  மான் வகைகளைப் போலன்றி பெண் கடமான் தங்கள் உயிரைக் கொடுத்தாவது வேட்டையாடும் பெரிய விலங்குகளிடமிருந்து தங்கள் குட்டி களைக் காப்பாற்றும். கடமான்களின் எண்ணிக்கையை வைத்தே, புலிகளின் இருப்பை உறுதி செய்கிறார்கள்.

காடுகளின் வளத்தை தீர்மானிப்பதிலும், கடமான்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

தொகுப்பு:செ.மனுவேந்தன் 

0 comments:

Post a Comment