"சோதிடம் பற்றி ஒரு அலசல்" / பகுதி: 04தமிழரின் பண்டைய இலக்கியத்தில், மூத்ததான தொல்காப்பியத்தில், பொருளதிகாரம்  »  களவியல் பகுதியில், “மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் துறந்த ஒழுக்கம் கிழவோற்கு இல்லை” என்ற ஒரு பாடல் வருகிறது. இதற்கு பின்னாளில் உரை எழுதிய இளம்பூரணர், ஓரைக்கு 'முகூர்த்தம்' என்றும், நச்சினார்க்கினியர் 'இராசி' என்றும் கூறி உள்ளதை வைத்து, சோதிடம் தமிழரின் வாழ்வுடன் தொல்காப்பிய காலத்திலேயே அறிமுகமாகி விட்டது என்று சிலர் இன்று வாதாடுகிறார்கள். ஆனால் அவர்கள் ஓரைக்கு விளக்கம் காண மற்ற பல சங்க பாடல்களை எனோ மறந்தோ அல்லது மறைத்தோ விட்டார்கள். உதாரணமாக, தோழியர் கூட்டத்தோடு சேர்ந்து காலை நேரத்தில் ‘ஓரை’ விளையாடுகையில் பூந்தாதுகளால் பாவை செய்து விளையாடுவர் என்ற செய்தி கூறும் குறுந்தொகை, 48: 1- 3,  அடும்பினது அழகிய மலரைக் கலந்து நெய்தலாலாகிய நெடிய மாலையை யணிந்த நீர் ஒழுகிய கூந்தலையுடைய விளையாட்டு மகளிரை அஞ்சி ஈரத்தையுடையநண்டு கடலுக்குள்ஓடும் என்ற செய்தி கூறும் குறுந்தொகை, 401 : 2 - 3, மற்றும் அதே போல நற்றிணை 143 : 2 - 3, அகநானூறு 60: 10 - 12, மற்றும் புறநானூறு 176: 1 - 2, போன்றவற்றில் ஓரை என்பது ஒரு மகளீர் விளையாட்டு என எல்லாப் பாடல்களிலும் எடுத்துக் காட்டி உள்ளார்கள். எனவே அந்த தொல்காப்பிய பாடலை மீளாய்வு செய்ய வேண்டும் என்று எண்ணுகிறேன், ஏனென்றால் உரை எழுதியது பிற்காலத்தில் என்பதாலும், அதே கால சங்க பாடல்களில், ஓரைக்கு ஒரு வகை விளையாட்டு என்று சுட்டிக் காட்டப்பட்டு இருப்பதாலும் ஆகும். உதாரணமாக கிழவன் / கிழவி - இக்காலத்தில் இதன் பொருள் வயதான ஆண் பெண்ணைக் குறித்தாலும். சங்க காலத்தில் பொதுவான ஆண் / பெண்ணைக் குறிக்கவே இச்சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவ்வாறுதான் இந்த ஓரையும் மாற்றமடைந்து இருக்கலாம்?

தொல்காப்பியத்துக்கு பிந்திய சங்க காலத்தில், எதிர்கால நிகழ்ச்சிகளை முன் கூட்டியே அறிவிக்கும் அறிகுறியாக மக்களால் தொன்று தொட்டு இன்று வரை நம்பப்பட்டு வரும் சகுனங்கள், நிமித்தங்கள் பார்த்தல், குறி சொல்லுதல் மற்றும் வேலன் வெறியாடல், கிரகங்களின் நகர்வுகளைப் பற்றி கூறுதல் [உதாரணமாக, சுக்கிரன் மழை தரும் கிரகமாக கருதி, அது தெற்குப் பக்கம் ஏகினால் மழை பெய்யாது என்பதை புறநானூறு “இலங்கு கதிர் வெள்ளி தென்புலம் படரினும் அந்தண் காவிரி வந்துசுவர் பூட்ட” என்று கூறுவது ], நல்ல நாள் [உகந்தநாள்] பார்த்தல், மற்றும் ஒப்புமை சொல்லுதல் [உதாரணமாக கற்புடைய மங்கையர்க்கு அருந்ததி நட்சத்திரத்தை ஒப்பிடுதல்]  போன்ற குறிப்புக்களை சங்க இலக்கியத்தில் காணலாம். என்றாலும் இராசிகள், நட்சத்திரங்கள், கிரகங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மக்களுடைய பல்வேறு செயற்பாடுகளுக்கான சரியான காலத்தை அறியவும், எதிர்கால நிகழ்வுகளை எடுத்துக் கூறவும், ஏற்படப் போகும் துன்பங்களில் இருந்து தப்புவதற்கான பரிகாரங்களை கண்டறியவும் உபயோகப்படும் ஒரு கணிப்பு முறையான சோதிடத்தை அங்கு காணவில்லை என்றே கூறலாம்? 

முதல் முதல் தமிழில் எழுதிய சோதிட நூல், உபேந்திர ஆசாரியர் என்னும் சமண முனிவர் எழுதிய  சினேந்திர மாலை என்னும் பத்தாம் நூற்றாண்டில் காஞ்சி பகுதியில் எழுதப்பட்ட நூலாகும். இதை தொடர்ந்து வெளியான 10 அல்லது 14 ஆம் நூற்றாண்டின் பன்னிரு பாட்டியல் என்ற நூலில்

"தோற்றிய சாதகஞ் சாற்றுங் காலைப்

பற்றிய கலியுகத் துற்ற யாண்டில்

திருத்திய  சகாத்தமும்  ஆண்டும் பொருந்திய

ஞாயிறம் பக்கமும்  மேய வாரமும்

இராசியும் மன்னுற மொழிதற் குரிய"

என்ற ஒரு பாடல் வரிகள் வருகின்றன. மகவு தோன்றிய பொழுது பன்னிரண்டு இரசிகளின் நிலைகள் குறிப்பதை இப் பாடல் சொல்லுகிறது. மேலும் சாதகம் என்ற சொல் சங்க இலக்கியத்தில் இல்லை என்றாலும், இங்கு அது இராசி பலனை கூறும் நூல் என்ற கருத்தில் வழங்கப்பட்டு இருப்பதை கவனிக்க. அதே போல சென்ற நூற்றாண்டில் (1918-19) முத்து வேங்கடசுப்பையர் என்பவரால் இயற்றப்பட்ட  பிரபந்த தீபிகை என்ற நூலும் 

"அலகுறு சகாப்த மாண்டு

தேதியுடு வோரையுந் திங்களுஞ் சாதகன்

றிசை சித்ர மபகாரமுந் 

திரமான கிரகநிலை யறிந்துசொல் சாதகம்"    

என்று கிரக நிலையை அறிந்து சொல்லுவதை விசேடமாக கூறுகிறது. கி பி 1310இல் இலங்கையை ஆண்ட தம்பதெனியா மன்னன் மூன்றாம் பராக்கிரமபாகுவின் அரசகுருவான தேனுவரைப்பெருமாள் [அந்தணர்] எழுதிய "சரசோதி மாலை" வெண்பா வடிவிலான, இலங்கையின் முதல் தமிழ் சோதிட நூல் ஆகும். இது, சிங்கள அரசன் பராக்கிரமபாகுவின் வேண்டுகோளுக்கிணங்க தமிழில் இயற்றப்பட்டு, கி.பி 1278 இல் அரச சபையில் அரசன் முன்னிலையில் வெளியிடப்பட்டது என்பது வரலாற்றுப் பதிவாகும். இம்மன்னன் எதனால் குறித்த சோதிட நூலைத் தமிழில் இயற்றுமாறு வேண்டுகோள் விடுத்தான் என்பது சிந்தனைக்குரியது, ஆய்வுக்குரியது. அக்காலத்தில் அப்பிரதேசத்தில் தமிழ் மொழி மக்களின் பயன்பாட்டுக்குரிய அறிவு மொழியாக இருந்து இருக்கலாம் என நாம் ஊகிக்கலாம். இந்த நூல் பின்னர் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டும் உள்ளது. அத்துடன் நாடாண்ட அரசனும், அரச சபையிலிருந்த மந்திரி பிரதானிகளும் தமிழ்ப் புலமை கொண்டவர்களாக இருந்தனர் என்பதற்குச் சரசோதி மாலையின் தோற்றமும், அரங்கேற்றமும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாத தக்க சான்றுகளாகும். என நாம் கருதலாம். அது மட்டும் அல்ல, பராக்கிரம பாகு சோதிடத்தில் அதீத நம்பிக்கை கொண்டிருந்தான் என்பதையும்  இதன் மூலம் உணர முடிகின்றது. இந்நூலில் சோதிட கருமப் படலம் தொடக்கம் நட்சத்திரத் திசைப்படலம் ஈறாக 12 படலங்கள் உள்ளன. ‘சரசோதி மாலை’ கொக்குவில் சோதிடப் பிரகாசயந்திர சாலையில் மூன்று முறை முறையே 1892ல் முதலாம் பதிப்பும் 1909ல் இரண்டாம் பதிப்பும், 1925ல் மூன்றாம் பதிப்பும் இடம்பெற்றுள்ளது. இதனை மறுபதிப்பாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 2014ல் பதிவு செய்துள்ளது. அதன் பின் யாழ்ப்பாண மன்னர்காலத்தில் (1380- 1414) எழுந்த மற்றொரு சோதிட நூல் செகராசசேகர மாலை ஆகும் சரசோதி மாலை திருமணப் பொருத்தம் பற்றி கூறும் பாடல்  கீழே தரப்பட்டுள்ளது.

"செப்பு நாள் கணங்கள் மாகேந்திர மொடு மங்கை தீர்க்கந்

தப்பிலா யோனி ராசி ராசியின் தலை தம்மோடு

ஒப்பிலா வசியம் நன்னூல் வரைதறு வேதை ஆக

மைபுயல் அளக மாதே மருவிய பொருத்தம் பத்தே"

இவற்றை தொடர்ந்து யாழ்பாண அராலியை சேர்ந்த இராமலிங்க முனிவரால் எழுதப்பட்ட சந்தான தீபிகை (கி.பி 1713) என்ற சோதிட நூல் இலங்கையில் வெளியானது. இது வடமொழி சந்தானதீபிகையின் தமிழ் மொழிப்பெயர்ப்பாகும். சந்தான விருத்தி தொடர்பாக சோதிட அம்சங்களை இது விளக்குகின்றது. இவ் ஆசிரியரே இலங்கையில் வாக்கிய பஞ்சங்கத்தை முதன் முதலில் கி.பி 1667ம் ஆண்டு அறிமுகம் செய்தவர் ஆகும். இதில் இருந்து நாம் அறிவது, இந்தியாவில் மட்டும் அல்ல, இலங்கையிலும் சோதிடம் மக்களின் வாழ்வில் ஒரு பிரிக்க முடியா ஒரு பகுதியாகவே, குறைந்தது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது என்பதாகும். அது இன்னும் இருக்கிறது.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி: 05 வாசிக்க அழுத்துங்கள் 

👉Theebam.com: "சோதிடம் பற்றி சிறு அலசல்" / பகுதி: 05

ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துங்கள் 

👉Theebam.com: "சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 01

0 comments:

Post a Comment