சித்தர் சிந்திய முத்துகள்.....4/36

 


சித்தர் சிவவாக்கியம் -231

சுழித்ததோர் எழுத்தை உன்னி சொல் முகத்து இருத்தியே

துன்ப இன்பமுங் கடந்து சொல்லும் நாடி யூடு போய்

அழுத்தமான வக்கரத்தின் அங்கியை எழுப்பியே

ஆறு பங்கயம் கடந்து அப்புறத்து வெளியிலே.

 

பூஜ்யமாக ஒரேழுத்தாக உள்ள பிரம்மத்தை அறிந்து அதையே உன்னிப்பாக பார்த்து குரு சொல்லித் தந்த முகத்தில் இருத்தி, துன்பத்தையும், இன்பத்தையும் அனுபவித்தது அது என உணர்ந்து சுழுமுனை நாடியில் மவுனத்திலேயே ஊன்றி தியானம் செய்யுங்கள். அறிவு, உணர்வு, மனம் ஆகியவை அமைந்திருக்கும் ஓங்காரத்தில் ஒலியை எழுப்பி ஆறுமுகமாக விளங்கும் சூட்சும உடம்பில் உள்ள ஒலியுடன் இணையுங்கள். அங்கெ வெளிக்கு உள் வெளி கடந்து அருட்பெரும்ஜோதியான ஆண்டவனைத் தரிசித்து சும்மா இருக்கும் சுகம்தனை பெறலாம்.

   

***************************************************

சித்தர் சிவவாக்கியம் -232

விழித்த கண் குவித்த போது அடைந்துபோய் எழுத்தெலாம்

விளைந்துவிட்ட இந்திரசால வீடதான வெளியிலே

அழுத்தினாலு மதிமயங்கி அனுபவிக்கும் வேளையில்

அவனுமுண்டு நானுமில்லை யாருமில்லை ஆனதே!

 

விழித்திருக்கும் அகக்கண்ணை நோக்கி எண்ணங்களை அங்கேயே குவித்தால் ஓங்காரம் பஞ்சாட்சரம் என்ற எழுத்துக்கள் எல்லாம் அங்கேயே அடைந்து போய் மெய்யான மவுனம் கிட்டும். இந்திரியங்களால் விளைந்த வீடாகிய உடலில் உள்ள ஆகாயத்தில் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய நான்கையும் அங்கேயே அழுத்தி நிறுத்தி உடலையும் உயிரையும் ஒன்றாக்கி ஆதியாகிய சந்திரனில் மயங்கி அங்கே உள்ள அமிர்தத்தை உண்டு அனுபவிக்கும் நேரத்தில் ஈசனாகிய அவனைத் தவிர நான் என்ற உடலில் உயிர் இல்லை வேறு யாரும் இல்லை என்று ஆனது.

  

****************************************************

சித்தர் சிவவாக்கியம் -233

நல்ல மஞ்சனங்கள் தேடி நாடி நாடி ஓடுறீர்

நல்ல மஞ்சனங்கள் உண்டு நாதன் உண்டு நம்முளே

எல்லை மஞ்சனங்கள் தேடி ஏக பூசை பண்ணினால்

தில்லை மேவும் சீவனும் சிவபதத்துள் ஆடுமே!

 

ஆண்டவனுக்கு அபிஷேக ஆராதனை செய்ய வேண்டும் என்று அதற்கு தேவையான அபிஷேகப் பொருள்களை நல்லதாகப் பார்த்து நாடி நாடி தேடி ஓடுகிறீர்கள், நமக்குள்ளேயே நல்ல மஞ்சனங்கள் உண்டு, நாதனான ஈசன் உண்டு என்பதை அறிவீர்களா!! நமக்குள் எல்லையாக இருக்கும் மனமாகிய வெளியில் நல்ல எண்ணங்களால் மனமுருகி அபிஷேகம் செய்து ஒரே மனதாக ஈசனை எண்ணி தியானியுங்கள். தில்லைஎனும் ஆகாயத்தலத்தில் சீவனாக விளங்கும் உயிர் சிவனின் திருவடியை சேர்ந்து இன்புறும்.

****************************************************

சித்தர் சிவவாக்கியம் - 234

உயிர் அகத்தின் நின்றிடும் உடம்பெடுத்த தற்குமுன்

உயிர் அகாரம் ஆயிடும் உடல் உகாரம் ஆயிடும்

உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது அச்சிவம்

உயிரினால் உடம்புதான் எடுப்பவாறு உரைக்கினே.

 

உடம்பு எடுப்பதற்கு முன் உயிர் அகத்தில் உள்ள ஆகாயத்தில் நின்றிருக்கும். உயிர் அகாரமான சிவனாகவும் உடம்பு உகாரமான சக்தியாகவும் இருந்திடும். உயிரையும் உடம்பையும் ஓடு சேர்ப்பது மெய்ப்பொருளாக விளங்கும் சிவம். இவ்வாறு உயிர் உடம்பெடுத்து வந்ததை உணர்ந்து யோக ஞான சாதகன்களால் சிவத்தை தியானித்து பிறப்பில்லா இறவா நிலையை அடையுங்கள்.  

  ************கே எம் தர்மா&கிருஷ்ணமூர்த்தி

0 comments:

Post a Comment