சித்தர் சிந்திய முத்துக்கள் ............4/35

சிவவாக்கியம்-221 


உயிருந்தது எவ்விடம் உடம்பெடுப்பதின் முனம்
உயிரதாவது ஏதடா உடம்பாவதாவது ஏதடா
உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது ஏதடா
உயிரினால் உடம்பெடுத்த உண்மை ஞானி சொல்லடா

இந்த உடம்பை எடுப்பதற்கு முன்னர் உயிர் எங்கு இருந்தது? உயிர் ஆவது எது? உடம்பாக ஆவது எது? உயிரையும் உடம்பையும் ஒன்றாக்குவது எது? உயிரினால் உடம்பெடுத்த ஞானியே உண்மையைக் கூற வேண்டும். உடம்பாக உருவெடுக்கும் முன்பு உயிர் நினைவு என்னும் ஆகாயத்தில் இருந்தது. உயிர் சிவனாகவும் உடம்பு சக்தியாகவும் இருக்கின்றது. உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது சிவம். அச்சிவமே ஞானம். அதுவே மெய்ப்பொருள். அதுவே அநாதியான சோதி. ஆதலின் உடல் தத்துவங்களையும், உயிர் தத்துவங்களையும் நன்கு அறிந்து கொண்டு சிவத்தைச் சேர தியானியுங்கள்.
******************************************* 

சிவவாக்கியம்-223

உருத்தரிப்பதற்கு முன் உயிர் புகுந்த நாதமும்
கருத்தரிப்பதற்கு முன் காயம் என்ன சோணிதம்
அருள்தரிப்பதற்கு முன் அறிவு மூலாதாரமாம்
குறித்தறிந்து கொள்ளுவீர் குணங்கெடும் குருக்களே.  

உடம்பாக உருவாவதற்கு உயிரானது ஆகாயத்தில் நாதமாக புகுந்திருந்தது. கருத்தரிப்பதற்கு முன்பு உடம்பு தாயின் கருவறையில் சுக்கில சுரோணித நீராய் இருந்தது. உயிரும் உடலும் சேர்ந்து வளர்வதற்கு இறையருள் அறிவான சோதியாக மூலாதாரத்தில் இருந்தது. இப்படி வெளிவந்த உடம்பில் உயிர் சூட்சுமமாக இருப்பதை குறித்தறிந்து கொண்டு அதிலே இறைவனே குருவாக உறைவதை உணர்ந்து கொள்ளுங்கள்.
******************************************* 

சிவவாக்கியம்-224

எங்கும் உள்ள ஈசனார் எம்முடல் புகுந்த பின்
பங்கு கூறு பேசுவார் பாடு சென்று அணுகிலார்
எங்கள் தெய்வம் உங்கள் தெய்வம் என்றிரண்டு பேதமோ
உங்கள் பேதம் அன்றியே உண்மை இரண்டும் இல்லையே.

எங்கும் நீக்கமற நிறைந்துள்ள ஈசன் எனது உடலில் கர்த்தாவாக புகுந்திருந்தான் என்பதை என்னிலேயே உணர்ந்து கொண்டேன். ஒன்றாய் உள்ள இறைவனுக்கு பல பெயரிட்டு பங்கு போட்டு பேசுவோர்கள் அவனை அடைவதற்குரிய உண்மையான வழியை அறிந்து மெய்பாடுபடுவதற்கு அணுகமாட்டார்கள். எங்கள் தெய்வமே பெரிதென்றும் உங்கள் தெய்வம் சிறிது எனவும் பேசி இறைவனை பேதப் படுத்துவார்கள். அது உங்களது அறியாமையால் விளைந்த பேதமேயன்றி இதுவே இறைவனில் பேதம் இல்லை. உண்மையாக உள்ள இறைவன் ஒருவனேயன்றி இரண்டு பேதங்கள் ஏதும் இல்லை. அவன் எங்கும் எப்போதும் எல்லோர்க்கும் பொதுவாக ஒன்றாகவே  விளங்குகின்றான்.  
******************************************* 

சிவவாக்கியம்-226

வெந்த நீறு மெய்க்கணிந்து வேடமும் தரிக்கிறீர்
சிந்தையுள் நினைந்துமே தினம் செபிக்கும் மந்திரம்
முந்த மந்திரத்திலோ மூல மந்திரத்திலோ
எந்த மந்திரத்திலோ ஈசன் வந்து இயங்குமே  


வேகா தலை சாகாக்கால் போகப் புனலாக இருக்கும் திருநீரை அறியாது வெந்த விபூதியை நீராக்கி உடம்பு முழுவதும் பூசி வேடம் போடுகிறீர். நீராக நின்ற மந்திரத்தில் நெருப்பாக ஈசன் இயங்குவதை அறிந்து அதையே சிந்தையுள் வைத்து சிவனை நினைந்து 'சிவயநம' என தினமும் செபித்து தியானம் செய்யுங்கள். அதுவே அனைத்துக்கும் முந்தி தோன்றிய மந்திரம். மூல மந்திரம், பஞ்சாட்சரத்தில்தான் ஈசன் இருந்து இயங்குகின்றான்.

******************************************* ..அன்புடன் கே எம் தர்மா.


0 comments:

Post a Comment