ஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்

வாசிகசாலைக் குந்தில் அமர்ந்திருந்த கனகர் சுற்றுமுற்றும் பார்த்தார். வழமையில் அவருடன் வந்திருந்து பேசும் தியாகர் அப்பொழுதுதான் வந்துகொண்டிருந்தார். வாசிகசாலையின் பத்திரிகைகள் அனைத்தும் கவனிப்பாரற்று அனாதையாகக் கிடந்தன. 
வயதுபோன நேரத்தில்,வெளிநாடு போன பிள்ளைகளால் அவர் கைவிடப்பட்ட நிலையில்,அப்பத்திரிகைகளே அவருக்கு நல்ல உறவுகளாக இருந்தன. தினசரி கனகரும் அவரோட வந்திருந்து,பத்திரிகை புதினங்களை பங்கிட்டு செல்வார். பத்திரிகைகளை ஒரு முறை நோட்டம் விட்டவர் ''இந்தப் பத்திரிகைகளும் என்னைப்போலவே'' என்றவாறே  ஒரு பெரு மூச்சு விட்டார் கனகர்.

"என்ன கனகர் பெருமூச்சு" என்ற தியாகர் கனகரின் அருகில் வந்து குந்திக்கொண்டர்."என்ன கனகர் பிள்ளயளிண்ட நினைப்பு வந்திட்டு போல." சுற்றும் முற்றும் பார்த்த தியாகர் தொடர்ந்தார்"நீ தப்பாய் நினைக்கேல்லை எண்டா நான் ஒரு ஐடியா சொல்லட்டே?" என்றவரை ஆவலுடன் நிமிர்ந்து பார்த்தார் கனகர்.   

தியாகரின் ஐடியா திறமையாக வேலை செய்தது.
கனடாவில் வசிக்கும் கனகரின் இளைய மகன் கல்யாண வயதை எட்டியிருந்தது நல்லதாய் போய்விட்டது.அவனுக்கு ஊரில் நல்லதொரு பெண்ணைப் பார்த்து பேசி மகனது சம்மதத்தையும் பெற்றுக்கொண்டார் கனகர்.திருமண நாள் குறிக்கப்பட்ட நாளில் ஊருக்கு வந்து தடல் புடலாய் திருமணத்தை முடித்துக்கொட்டான் கனகரின் மகன்.ஐயாவை இனியும் தனிய ஊரில விடமுடியாது என்று ஒரு போடு போட்டு,தன் மனுசியுடன் சேர்த்து (மனுசியின் காவலாளியாக) கனகரையும் கனடாவிற்கு அழைத்துக்கொண்டான் கனகரின் மகன்.

கனேடிய மண்ணில் பல தமிழ் முதியோர்கள் வாழுகிறார்கள்.தான் மட்டும் வாழமுடியாதா என்று கனடா வந்த கனகருக்கு மெல்ல மெல்ல ஒன்றுமட்டும் புரிந்தது.ஊரில் தனது சொல் கேட்டு வளர்ந்த பிள்ளை,இங்கு அப்பிள்ளையின் சொல் கேட்டு தான் வாழ வேண்டியுள்ளது மட்டுமல்ல அவனது மாளிகைக்கு காவற்காரனாகவும் வாழ வேண்டியுள்ளது என்பதே.
எப்படியோ,ஒரு பிள்ளையின் அருகில் வாழும் மன நிறைவில் கனடாவில் அவரும்  வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.
-செ.மனுவேந்தன்(யாவும் கற்பனையே)

0 comments:

Post a Comment