பூமி என்னும் சொர்க்கம் -02-வகை வகையான உயிரினங்கள்!

ஒருநாள் உங்கள் வீட்டுத் தோட்டத்துக்குச் சென்று நன்கு வளர்ந்த செடியைக் கவனித்துப் பாருங்கள். அந்தச் செடியின் பூவுக்குள் நுண்ணிய வண்டுகள் காணப்படும். இலைக்கு அடியில் பூச்சிகள் தென்படும். செடியின் தண்டில் எறும்புகள் ஊர்ந்து செல்லும். செடிக்கு அருகே மண்ணைத் தோண்டினால் வேறு வகையான பூச்சிகளும் வண்டுகளும் தென்படும். தோட்டத்தில் மரங்கள் இருக்குமானால் மரத்தின் பட்டைகளின் ஊடே பூச்சிகள் காணப்படும். மரத்தின் கிளைகளில் பறவைகளும் அணில் முதலான பிராணிகளும் காணப்படும். ஒரு சிறிய தோட்டத்திலேயே இப்படிப் பல வகையான உயிரினங்கள் இருக்கும்போது, பூமி மொத்தத்திலும் எவ்வளவு உயிரினங்கள் இருக்கும்?

 

நிபுணர்கள் கணக்கெடுப்பு நடத்தி 87 லட்சம் வகையான உயிரினங்கள் உள்ளதாக மதிப்பிட்டுள்ளனர். இது சற்றுக் கூடக் குறைய இருக்கலாம். இந்தப் பட்டியலில் மனித இனம் உண்டு. கடலில் வாழும் திமிங்கிலம், மீன், ஆமை உட்பட பலவகையான விலங்குகளும் அடங்கும். நிலத்தில் வாழும் யானை, சிங்கம், புலி, ஆடு, மாடு முதலியனவும் உண்டு. முயல், பூனை போன்ற பிராணிகளும் அடக்கம். பறவைகளும் இந்தப் பட்டியலில் சேரும். தாவரங்கள் அடங்கும். நுண்ணிய ஜீவராசிகளும் உண்டு.

 

பூமியில் புதிதாக உயிரினங்கள் தோன்றி வருவதாகச் சொல்ல முடியாது. ஆனால், ஏற்கெனவே அறியப்படாமல் இருந்த உயிரினங்கள் புதிதாகக் கண்டுபிடிக்கப்படுகின்றன. அதேநேரத்தில் பல உயிரினங்கள் மறைந்துவருகின்றன. இயற்கையான காரணங்கள் ஒருபுறம் இருக்க, மனிதனின் செயல்களால் அழிந்துவரும் உயிரினங்கள்தான் அதிகம்.

 

மற்ற உயிரினங்களுடன் ஒப்பிடுகையில் மனித இனத்தின் எண்ணிக்கை அதாவது உலகின் மக்கள்தொகை கடந்த சில நூற்றாண்டுகளில் வேகமாகப் பெருகியுள்ளது. கி.பி.1750-ம் ஆண்டு வாக்கில் உலகின் மக்கள்தொகை சுமார் 7 கோடியே 60 லட்சம்.1800-ம் ஆண்டு வாக்கில் இது 100 கோடியாகியது. இப்போது 700 கோடி.

 

தான் வாழ்வதற்கு இடம் வேண்டும் என்பதற்காக மனித இனம் பெரிய அளவில் காடுகளை அழித்துள்ளான். காடுகளை அழிப்பது என்பது பல உயிரினங்களை அழிப்பதற்குச் சமம். ஒரு மரத்தை வெட்டினால் அது பல பறவைகளின் வீடுகளை அழிப்பதற்குச் சமம். துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதற்குப் பிறகு மனிதர்களின் வேட்டை காரணமாக எண்ணற்ற உயிரினங்கள் மறைந்து போயின.

 

டோடோ மொரிஷியஸ் தீவுகளில் மட்டுமே வாழ்ந்துவந்த பறவை. அதற்குப் பறக்கத் தெரியாது. அதைச் சுட்டுத் தின்றால் மிக ருசியாக இருக்கிறது என்ற காரணத்தால் ஐரோப்பிய மாலுமிகள் இஷ்டத்துக்கு டோடோ பறவையைச் சுட்டுக் கொன்றனர். இதனால் டோடோ இனமே அழிந்தது. அது அழிந்தபோது கல்வாரியா மரமும் அழிந்தது. அந்த மரத்தின் பழங்களை அந்தப் பறவைகள் தின்று வாழ்ந்தன. அந்தப் பழங்களுக்குக் கெட்டியான கொட்டை உண்டு. பறவையின் வயிற்றில் நன்கு ஊறிப் பிறகு எச்சமாக வெளிவந்தபோது அந்த விதைகள் எளிதில் வளர்ந்தன. டோடோ அழிந்தபோது கல்வாரியா மரத்தின் இனமே அழிந்தது.

 

மனிதனின் வேட்டையாடும் ஆர்வத்தால் சிங்கம், புலி போன்றவற்றின் எண்ணிக்கை கடந்த சில நூற்றாண்டுகளில் கடுமையாகக் குறைந்தது. இன்றும் தந்தத்துக்காக யானைகள் கொல்லப்படுகின்றன. புலியின் எலும்புகளில் விசேஷத்தன்மை இருக்கிறது என்ற நம்பிக்கையில் புலிகள் திருட்டுத்தனமாகக் கொல்லப்படுகின்றன. காண்டாமிருகத்தின் கதையும் அது போன்றதே.

 

கடந்த காலத்தில் இயற்கையான காரணங்களால் அழிந்த உயிரினங்கள் பல உண்டு. அமெரிக்கா, ஐரோப்பா, ரஷியாவின் சைபீரியா போன்ற பிரதேசங்களில் வாழ்ந்த மம்மோத் எனப்படும் ராட்சத யானை இனம் அடியோடு அழிந்து போய்விட்டது.

 

இந்த வகை யானையானது உடலில் அடர்ந்த ரோமத்தையும் நீண்ட தந்தங்களையும் கொண்டது. சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்கூட இது சைபீரியாவில் காணப்பட்டது. சைபீரியாவில் சுமார் 39 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மம்மோத்தின் உடல் சமீபத்தில் தோண்டி எடுக்கப்பட்டது. பனிப் பிரதேசம் என்பதால் அதன் உடல் கெடாமல் அப்படியே இருந்தது. கடந்த சில நூற்றாண்டுகளில் பல்வேறு காரணங்களால் பல உயிரினங்கள் அழிந்து மறைந்தேபோயின.

 

நவீனக் காலத்தில் விவசாய நிலங்களில் பயன்படுத்துவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகள் பல உயிரினங்களுக்கு, குறிப்பாகப் பறவைகளுக்கு ஆபத்தாக முளைத்துள்ளன. சமீப காலமாக சென்னை போன்ற நகர்ப் பகுதிகளில் சிட்டுக்குருவிகள் அரிதாகி வருகின்றன.

 

அழிவிலிருந்து உயிரினங்களைப் பாதுகாக்க உலக அளவில் பல அமைப்புகள் உள்ளன. சிங்கம், புலி வாழ்வதற்கென்றே காடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன, மக்களிடையேயும் இது பற்றிய அக்கறை அதிகரித்துவருகிறது.

 

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: nramadurai@gmail.com

0 comments:

Post a Comment