சித்தர் சிந்திய முத்துகள் ..........3/47

 


சித்தர் சிவவாக்கியம் -341

பொங்கி நின்ற மோனமும் பொதிந்து நின்ற மோனமும்

தங்கி நின்ற மோனமும் தயங்கி நின்ற மோனமும்

கங்கையான மோனமும் கதித்து நின்ற மோனமும்

திங்களான மோனமும் சிவனிருந்த மோனமே.

     

ஞானம் பொங்கி நின்றது மௌனமே. உடம்பில் ஊமை எழுத்தாகி பொதிந்து நின்றது மௌனமே. உயிரில் தங்கி நின்றது மௌனமே. தயங்கி ஆடும் மனமும் மௌனமே. கங்கையான நீரானது மௌனமே. வாசி எனும் கதிக்குள் நின்றது மௌனமே. சந்திரனாகிய மதியும் மௌனமே. சிவன் இருந்த பஞ்சாட்சரமும் மௌனமே என்பதை அறிந்து மோனத்தில் தியானியுங்கள். 

 

சித்தர் சிவவாக்கியம் - 349

மாலையோடு காலையும் வடிந்து பொங்கும் மோனமே

மாலையோடு காலையான வாறறிந்த மாந்தரே

மூளையான கோணமின் முளைத்தெழுந்த செஞ்சுடர்

காலையோடு பானகன்று தங்கி நின்ற மோனமே.

   

காலையும் மாலையும் சந்தியா வந்தன காலங்களில் ஈசனையே ஒரு மனதாய் தியானிக்க தியானிக்க அனைத்து மன ஆட்டங்களும் வடிந்து மௌனம் பொங்கி மெய்ப்பொருளில் நிற்கும். காலையும் மாலையும் மாறி மாறி வருவது போல் பிறப்பும் இறப்பும் தொடர்ந்து நடந்து வருவதை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் உடம்பிலேயே முக்கோண வட்டத்தின் மூலையில் முளைத்து எழுகின்ற செஞ்சுடராக விளங்கும் சோதியைக் கண்டு இரவும் பகலும் எந்நேரமும் சூரியனில் தங்கி மௌனத்திலேயே நின்று தியானியுங்கள். 

 

சித்தர் சிவவாக்கியம் - 355

பாய்ச்சலூர் வழியிலே பரனிருந்த சுழியிலே

காய்ச்ச கொம்பினுனியிலே கனியிருந்த மலையிலே

வீச்சமான தேதடா விரிவு தங்கு மிங்குமே

மூச்சினோடு மூச்சை வாங்கு முட்டி நின்ற சோதியே. 

 

மனம் பாய்ந்து செல்லும் இடமான வழியிலேதான் பரம் பொருளான ஈசன் சுழியாகிய முனையில் இருக்கின்றான். காயமான உடம்பினுள்ளே மெய்ப் பொருள் இருக்கின்றது. அது வெட்டவெளியாக வீசிக் கொண்டிருப்பதும், ஆகாயமாக அனைத்து தத்துவங்களும் விரிவாகி தங்கி இருப்பதும், எங்கும் எல்லா உடம்பிலும் உள்ளதை உணருங்கள். அதனை அறிந்து கொண்டு வெளிச்சுவாசத்தோடு உட்சுவாசத்தை வாசிப் பயிற்சியினால் கூட்டி மேலேற்ற அது அங்கு முட்டி நின்ற தூணிலே விளங்கும் சோதியில் சேர்த்து தியானியுங்கள்.

 

-கே எம் தர்மா கிருஷ்ணமூர்த்தி 

0 comments:

Post a Comment