விஞ்ஞானம் தரும் விசித்திரங்கள்

 


காய், கனிகளின் ஆயுளை அதிகரிக்கும் பூச்சு!

சத்துக்களைத் தாங்கி வரும் காய்கறிகள் மற்றும் பழங்கள், அலமாரியில் அதிக நாட்கள் இருக்க என்ன செய்யலாம்? இது விஞ்ஞானிகளுக்கு ஒரு முக்கியமான சவால். இந்த சவாலை, 'புரோசேன்' என்ற ஒரு உயிரிப் பொருள் சமாளிக்க உதவும்.

 

பிரான்சை சேர்ந்த 'புரோடெமி' நிறுவனம், புரோசேன் என்ற 100 சதவீத இயற்கை பொருளைக் கொண்ட ஒரு பூச்சுப் பொருளை உருவாக்கியுள்ளது. இந்தப் பொருளை காய்கறிகள் மற்றும் பழங்கள் மீது போட்டு புரட்டினால், மெல்லிய புரோசேன் படலம் அவற்றின்மீது உருவாகிறது.

 

இந்தப் பூச்சு, காய்கனிகளின் இயற்கையான ஈரப்பதம், ருசி மற்றும் மணம் ஆகியவற்றை வெகுநாட்கள் பொத்திக் காக்கிறது. இதனால், விளைபொருட்கள், அங்காடி அலமாரியில் சில வாரங்கள் கூடுதலாக கெடாமல் பத்திரமாக இருக்கும்.

 

புரேசேன் படலத்தை நுகர்வோர் விரும்பினால் கழுவி அகற்றலாம். அல்லது அப்படியே சாப்பிடலாம். இதனால் எந்தவித ஒவ்வாமையும், நச்சுத் தன்மையும் உடலுக்கு ஏற்படாது என புரோடெமி நிறுவனம் தெரிவித்துஉள்ளது.புரோசேனில் அடங்கியுள்ள உயிரி பாலிமர் உட்பட எல்லா பொருட்களும் எளிதில் மட்கிவிடும் தன்மை கொண்டவை. அதுமட்டுமல்ல, புரேசேனை தயாரிக்கும் ஆலையும் சுற்றுச்சூழலுக்கு துளியும் கேடு விளைவிக்காதது என்பதுதான் ஆச்சரியம். ஆர்கானிக் காய்கறிகளுக்காக தேடி அலைபவர்களுக்கு புரேசேன் நிச்சயம் பிடிக்கும்.

சமைக்க வழிகாட்டு செயற்கை நுண்ணறிவு

ஒரு 'கேமிரா'வும், சமையலில் நிபுணத்துவம் கொண்ட ஒரு புத்திசாலி மென்பொருளும் சேர்ந்த, புதியவர்களுக்கு நளபாகத்தை கற்றுத்தருகிறது. நம்பமுடியவில்லையா? 'குக்சி' (Cooksy) என்ற ஒரு செயற்கை நுண்ணறிவு மென்பொருள், வீட்டிலேயே குடியிருக்கும் 'மாஸ்டர் செப்' போல உதவுகிறது.


சமையலறையில், அடுப்புக்கு மேலே ஒரு கேமிரா, வெப்பத்தை அளக்கும் தெர்மல் கேமிரா ஆகியவற்றை நிறுவி விடவேண்டும். அடுத்து குக்சி செயலியை ஒரு பலகைக் கணினியில் நிறுவி, அடுப்புக்கு அருகே வைக்கவேண்டும். சமையல் தெரியாதவர் ஒரு சமையல் குறிப்பை தேர்ந்தெடுத்ததும், அந்த உணவை சமைத்துக்காட்டும் வீடியோ, திரையில் தெரியும். அதைப் பார்த்தபடியே சமைக்கவேண்டும்.

 

வதக்கல், பொறித்தல், கொதித்தல் என்று எல்லாவற்றையும் மேலே உள்ள இரு புத்திசாலி கேமிராக்கள் பார்த்து, தகவலை செயலிக்கு அனுப்பும். சமைப்பவர் ஏதாவது பிழை செய்தால், உடனே குக்சி மென்பொருள் திருத்தங்களை சொல்லும். சீரகத்தை போடாவிட்டால் அது நினைவூட்டும். உப்பை அதிகம் போடப்போனால், எச்சரித்து தடுக்கும். வாணலியில் எண்ணெய் கொதித்ததும், அடுத்து செய்யவேண்டியதை குறிப்பறிந்து சொல்லும்.

 

இப்படி குக்சி செயலி, இன்றியமையாத சமையல் உதவியாளராக, வழிகாட்டும் மாஸ்டராக இருக்கும். ஏற்கனவே சமைக்கத் தெரிந்தவர்களுக்கு, அந்த திறமையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் பயிற்சியையும் குக்சி தருகிறது. குக்சி விரைவில் ஒரு தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சியில் இடம் பெற்றாலும் ஆச்சரியமில்லை.

உலகின் முதல் 16 டன் மின்சார லாரி

பயணியர் வாகனங்களில் மட்டுமல்ல, சரக்கேற்றும் வாகனங்களிலும் மின்சார இயந்திரங்கள் வந்துவிட்டன. லண்டனைச் சேர்ந்த 'புத்திளம்' நிறுவனமான 'வோல்ட்டா டிரக்ஸ்', அடுத்த மூன்று ஆண்டுகளில் நான்கு அளவுகளில் மின்சார லாரிகளை தயாரிக்க சோதனைகளை நடத்தி வருகிறது.

 

அண்மையில் முக்கிய ஐரோப்ப நகர்களில் விளக்கக் காட்சிகளை நடத்தியிருக்கிறது வோல்ட்டா. குறிப்பாக ஒரு முறை சார்ஜ் செய்தால், 200 கி.மீ வரை செல்லும் 'வோல்ட்டா ஜீரோ' என்ற வண்டி, உலகிலேயே முதல் 16 டன் தினுள்ள மின்சார லாரி என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது.

 

மணிக்கு 90 கி.மீ வேகத்தில் செல்லும் வோல்ட்டா ஜீரோ வண்டி, நகருக்குள் சரக்குகளை டெலிவரி செய்யும் பணிக்கு பொருத்தமானது. பாதுகாப்புக்காக, 360 டிகிரி கோணத்திலும் பார்க்கும் திறன்கொண்ட 'கேமரா'க்களை இதில் பொருத்தியுள்ளனர்.இலகுவான எடையும், அதிராத மோட்டார்களும் கொண்ட இந்த வண்டி, ஓட்டுநர்களுக்கு அயற்சியைத் தராதபடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

ஐரோப்பாவில், பல நாடுகளிலிருந்து ஆயிரத்திற்கு சற்று அதிகமான அளவுக்கு முன்பதிவைப் பெற்றுள்ளது வோல்ட்டா ஜீரோ.வரும் 2025 வாக்கில் மின்சார லாரிகளின் சந்தை 100 பில்லியன் டாலர்கள் அளவுக்கு பெரியதாக ஆகிவிடும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர். ஆக, மின்சார லாரிகளின் வரத்து தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.

திரைகளாக மின்னணுத் தாள்

அறிமுகமான புதிதில், 'இ-பேப்பர்' எனப்படும் மின்னணுத் தாள் திரைகள் கறுப்பு வெள்ளையில்தான் படம் காட்டின. அதில் துல்லியம் குறைவாகவே இருந்தது. இன்று பரவலாகியிருக்கும் 'கிண்டில்' போன்ற மின்னூல் வாசிப்பான்களில் இருப்பது கறுப்பு வெள்ளை மின்னணுத் தாள் தான்.

 

இந்த தொழில்நுட்பத்தில், வண்ணத்தை கொண்டுவருவதுதான் பெரிய சவாலாக இருந்தது. சுவீடனில் உள்ள சாமர்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள், கண்ணைக் கவரும் பலவித வண்ணங்களை, மின்னணுத் தாள் திரையில் மின்னச் செய்துள்ளனர்.

 

இந்தக் கண்டுபிடிப்பு, தற்போதுள்ள மின்னணுத் தாள்களைவிட குறைவான மின்சாரத்தையே பயன்படுத்துகின்றன. இந்த இரு புதுமைகளும் சாத்தியமாகக் காரணம் வேதியியல் விந்தைதான். சாமர்ஸ் விஞ்ஞானிகள், தங்கம், டிரையாக்சைடு மற்றும் பிளாட்டினம் போன்றவற்றைக்கொண்டு புதிய கலவையில் மின்னணுத் தாளை உருவாக்கியுள்ளனர்.

 

இந்தத் தாளின் தடிமனை ஒரு மைக்ரானுக்கும் குறைவாக ஆக்கினால், மேலும் குறைவான மின்சாரமே அதற்குத் தேவைப்படும். எனவே, விஞ்ஞானிகள் அந்தத் திசையில் ஆராய்ச்சிகளை முடுக்கிவிட்டுள்ளனர். விரைவில், மொபைல், பலகைக் கணினி மற்றும் மடிக்கணினி ஆகியவற்றுக்கு திரைகளாக மின்னணுத் தாள் இடம்பிடிப்பதை பார்க்க முடியும்.

காளானிலிருந்து செயற்கை தோல்!

பின்லாந்து விஞ்ஞானிகள், காளான் மூலம் செயற்கைத் தோலை உருவாக்குவதில் வெற்றிகண்டுள்ளனர். சில தாவரங்களை வைத்து தோலைப் போன்ற பொருளை தாயாரிக்கும் தொழில்நுட்பம் கடந்த சில ஆண்டுகளாக வெளிவரத் தொடங்கியுள்ளன.

 

பின்லாந்திலுள்ள வி.டி.டி., தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள், காளான் மற்றும் பூஞ்சைகளிலிருந்து தோல் போன்றே ஒரு பொருளை தயாரிக்க முடியும் என நிரூபித்துள்ளனர்.

 

காளான் தோலைத் தொட்டால் நிஜமான விலங்குத் தோலைத் தொடுவது போன்ற உணர்வைத் தருவதுடன், பலவித சாயங்களில் அதை தோய்த்து எடுத்து அசத்தவும் முடியும்.

 

பிரம்மாண்டமான உயிரிக் கலன்களில், பூஞ்சைகள் மற்றும் காளான்களை விஞ்ஞானிகள் நொதிக்க வைக்கின்றனர். இத்தகைய திரவ நொதித்தல் முறையில் காளான்களை பதப்படுத்துவதன் மூலம், பெரிய அளவில் செயற்கைத் தோல் உற்பத்தியைச் செய்ய முடியும் என்று பின்லாந்து விஞ்ஞானிகள் காட்டியுள்ளனர். இதனால், துணி போல நீண்ட தோல்களை வர்த்தக ரீதியில் உற்பத்தி செய்ய முடியும். இயற்கையான விலங்குத் தோலினை துண்டு துண்டாகவே பதப்படுத்தி தயாரிக்க முடியும். ஆனால், செயற்கையாக தயாரிக்கப்படும் தோலை விரயமாகாமல், பல பொருட்களை தயாரிக்க உதவும்.

 

மேலும், காளான் தோலை தயாரிக்க எந்த விலங்கும் கொல்லப்படுவதில்லை. தவிர, நச்சுள்ள வேதிப் பொருட்களைக் கொண்டு பதப்படுத்தும் தேவை இல்லை. இதனால், சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு இருக்காது.

தொகுப்பு:செமனுவேந்தன் 

0 comments:

Post a Comment