மனிதன் என்றும், இன்று இருப்பதனை இகழ்ந்தும் , இன்று இல்லாததை
புகழ்ந்து பேசும் பழக்கம் உடையவனாகவே பெரிதும் காணப்படுகிறான். அதிலும் தமிழர் முன்னோர்களை புகழ்வதுவும், முற்காலத்தில்
பண்பாடுகள் ஓங்கியிருந்ததாகவும் எனப் பலவாறு
பெருமை பேசும்வகைகளில் நீண்ட
வாழ்வும் ஒன்று. வாழ்வு தொடர்பாக பின்வருமாறு கூறுவது வழக்கமாகிவிட்டது.
👴"அந்தக்காலத்தில் எங்கள் ஆட்கள் எவ்வளவவோ கடின
வேலைகளையும் செய்துகொண்டு 100 வருடகாலம் உயிர் வாழ்ந்தார்கள்"
👴"எங்கள் முன்னோர்கள், தற்காலம் போல
புதுப்புது வருத்தங்கள் ஒன்றும் இல்லாது எவ்வளவு காலம் சுகதேகிகளாக
வாழ்ந்தார்கள்"
👴"அந்தக் காலத்துச் சாப்பாடுகள்தான் அவர்களை, வைத்தியர்களிடம்
செல்லாமல் தடுத்து நீண்ட காலம் வாழ வைத்தது"
இவைகள் எல்லாம்
பழம் பெருமை பேசும் சில நம்மவர்களால் அன்றாடம் உதிர்க்கப்படும் வார்த்தைகள்.
இந்தக்
கூற்றுகள் எல்லாம் எந்த அளவுக்கு உண்மை?
எல்லாமே வெறும், வெறும், வெறும் பொய்!
உண்மையை ஆராயாது வெறுமனே வீசப்படும் கற்பனைகள்!
அப்படியாயின், உண்மைகள்
என்ன?
'அந்தக் காலம்' என்றால் ஒரு 100 வருடம்
முன்னோக்கிச் செல்வோம்.
அந்த 1920 இல், மனிதனின் சராசரி
ஆயுட் காலம்(வயது):
இந்தியா:
1800 முதல் 1919 வரை - 25 (ஆம், 25!) வருடங்கள் மட்டுமே.
1920 இல் - 21 வருடங்கள். (ஸ்பானிஷ் ஜுரத்தினால் 70 இலட்சம்
பலியானதால்)
2020 இல் - 69 (அன்றில் இருந்து இன்றுவரை படிப்படியாக ஏறியது).
இலங்கை:
1920 இல் - 31வருடங்கள்.
2020 இல் - 80வருடங்கள்.
ஆபிரிக்கா:
2020 இல் - 63
ஆனால், மேலை
நாடுகளில், சராசரியாக:
1920 இல் - 50வருடங்கள்.
2020 இல் - 83வருடங்கள்.
உலகம்:
2020 இல் - 72.8
இன்று கூடிய
ஆயுளுடன் வாழும் முதல் 10 நாடுகள்:
ஜப்பான் 84.3, சுவிஸ் 83.4, தென் கொரியா 83.3, சிங்கப்பூர் 83.2, ஸ்பெயின் 83.2, சைப்ரஸ் 83.1, ஆஸ்திரேலியா 83.0, இத்தாலி 83.0, இஸ்ரேல் 82.6, நோர்வே 82.6. (தற்போது ஹொங்கோங், மக்காஓ மேலே
உள்ளன)
ஆக, 'அந்தக் காலத்தில்' இந்தியாவில்
மக்கள் 25 வருடம்
மட்டும்தான் வாழ்ந்தார்கள்.
அதாவது, அந்தக்காலத்தில்
எங்காவது ஒருவர் 100 வயது வாழ்ந்தும்
இருக்கலாம், அதே சமயம்
அந்தக்காலத்தில் பலர் பிறக்கும்போதும் ,பலர் குழந்தைப் பருவத்திலும்,
இறந்தும் விடுவார்கள் என்பதுதான் உண்மை.
உதாரணமாக ,ஒரு
குடும்பத்துப் பெண் தனது 15 ஆவது வயதில் பிள்ளை பெறத் தொடக்கி 12 வருடங்களில் 7 பிள்ளைகளை
ஈன்றெடுத்தால், அவர்களில் இரண்டு
பிறந்த உடன் மரணிக்கும். மற்றது 5 வயதில் வலி வந்து இறக்கும். இன்னொன்று 15 வயதில் பேய்
அடித்துப் போய்ச் சேரும். நாலாவது 40 வயதில் அம்மை வந்து மடியும். மிகுதி இரண்டில்
ஒன்று 55 வருடமும், இன்னொன்று 60 வருடமும் உயிர்
வாழும். ஏழாவது பிள்ளையைப் பெறும்போது தாய் மரணம் அடையும்.
மொத்தத்தில், ஏழு பிள்ளைகள்
உயிர் வாழ்ந்த காலம் மொத்தம் 175 வருடங்கள். ஆகவே,சராசரி 25 வயதுதான்.
காரணம்?
ஆயுட்காலம் என்பது, முற்றிலும்
ஆரோக்கியமான சமுதாயத்தை அடிப்படையாகக் கொண்டது. பண்டைய காலங்களில், அசுத்தமான கிராம, நகர்ப்புற சூழல், மாப்பொருள், சீனி கூடிய
ஆரோக்கியமற்ற உணவு வகைகள், (சாமி, குரக்கனை விட சோறுதான் பிரதான உணவு) மந்தமான, தரமற்ற விவசாய
உற்பத்திகள், பாதுகாப்பற்ற வாழ்க்கை
முறை, மனித, மிருகக் கழிவுகள்
குவிந்து மாசு படைந்த சுற்றுச் சூழல், உணவு மற்றும் பண்டங்களை சுகாதாரமாக பாதுகாத்து
வைக்கும் வசதி இல்லாமை, மற்றும் தகுதியற்ற வீட்டுவசதி, அழுக்கான
குடிநீர், உடல், உறுப்புகளை
பராமரிக்காமை, பொருத்தமற்ற
கல்வி, கடினமான போக்குவரத்து, எட்டாத பொது
சேவைகள், நோய்கள் பற்றிய
அறிவின்மை, மருத்துவ வசதி
இல்லாமை முதலியன ஆயுளை குறைத்ததற்கான காரணிகள் எனலாம்.
அந்தக் காலத்தில், இந்தக்
காலத்தைப்போலவே இதே நோய்கள் இருந்தன; இன்னும் கூடுதலாகவே இருந்தன. மனிதனின்
அறியாமையினால் முனி பேய்,அம்மன் என்று குறைபட்டு ,
அவை எல்லாம் அலட்சியப்படுத்தப்பட்டன.
அப்போது
ஊரெல்லாம் பேய்கள்,
பிசாசுகள் ஒரே அலைந்தபடி திரியும். ஒருவருக்கு மாரடைப்பு
வந்து இறந்தால் அது பேயடித்ததாகிவிடும். பக்க வாதம் வந்து படுத்து இறந்தால் அது
முனி அடித்தது என்று முடிவு கட்டிவிடுவார்கள். அந்த முனி வாழும் மரம் பக்கம் போவதை
விட்டுவிடுவார். அம்மை வந்தால் அம்மன் தந்தது என்று வேப்பமிலையை சுற்றிப் போட்டு
நேர்த்திக்கடன் வைப்பார்கள். தெய்வத்திற்கு நேர்த்திக்கடன் வைத்து, செய்வதாகச்
சொல்லிப் பின்னர் செய்ய மறந்த சில குற்றங்களுக்குமே பல நோய்கள் பலருக்கு
வந்திருக்கின்றது.
இப்படியாக, வேறு பல நோய்கள், அவயக்
குறைபாடுகள், பிரச்சனைகள் எது
வந்தாலும் அவற்றை நிவிர்த்தி செய்துகொள்ளக்கூடிய அறிவு அவர்களுக்கு இல்லாதபடியால், இலகுவாக இவை
எல்லாவற்றிற்கும் காரணம் அந்தக் கடவுள், இந்தப் பிசாசு, இவரின்
முற்பிறப்பு கர்ம வினை என்று முடிவு செய்து, அதற்கான பிரார்த்தனைகள், பரிகாரங்கள், பூசைகள், மந்திரங்கள்
என்று குருக்கள்மாரிடமும், மாந்திரீகர்களிடமும் சென்று பணத்தை விரயம் செய்வார்கள்.
இவற்றை விட, புற்று நோய்
காரணமாய் இரத்த வாந்தி எடுத்தால், மனோ வியாதி ஏற்பட்டு விழுந்து இறந்தால், மன அழுத்தம்
வந்து தற்கொலை செய்தால், கால், கை வழங்காது வீதியில் கிடந்து இறந்தால், எலும்புருக்கி
நோயினால் உருக்குலைந்து போய் மரணித்தால், இவற்றுக்கான உண்மையான மூல காரணங்களை அறிந்து
வைத்தியம் செய்ய இயலாது, மூட நம்பிக்கையில் மூழ்கி இருந்து, இப்படி எல்லாம்
நடப்பது தமது எதிராளிகள் தங்களுக்கு எதிராகச் செய்த செய்வினை, பில்லி, சூனியம், ஏவல், வசியம், வைப்பு
என்று சிலதான் காரணம் என்று அதற்கான
நிவாரணங்களுக்கு மாந்திரீகர்களிடம் நாடுவார்கள்.
அந்தக் காலத்தில்
ஒரு கொள்ளை நோய் வந்துவிட்டால் முழு ஊரையும் அழித்துவிடும். இப்பொழுது அப்படி
அல்ல. சுகாதாரமான சூழல், மேன்மையான மருத்துவ வசதி, சுத்தமான நீர், ஆரோக்கியமான உணவு
வகைகள். பொருத்தமான கல்வி, தேவையான பொது வசதிகள்; இவைகள் எல்லாம்
நமது ஆயுதக்காலத்தை மேலும், மேலு உயர்த்திக்கொண்டு போகின்றது.
ஆகவே, இப்பொழுதுதான் 'எங்கள் ஆட்கள்' கூடிய ஆயுளுடன்
வாழ்கின்றார்கள்! 'அந்தக் காலத்தில்' அல்ல!
இன்னும் 100 வருடங்களில், இப்பொழுது 72.8 ஆக இருக்கும்
உலக மனிதனின் ஆயுள் 83.0 க்குப் போய்விடும்.
அதற்கு மேலேயும்
போகலாம்!
மருத்துவ விஞ்ஞான வளர்ச்சியினால் முன்னர் வந்த கொள்ளை நோய்களெல்லாம் அடங்கிவிட்டன. ஆனால் மனிதன்தான் புதிது புதிதாக நோய்களை உற்பத்தி செய்யக் காரணம் ஆகிவிடுகிறான். இருந்தாலும் மனிதனின் சராசரி ஆயுட் காலம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
-ஆக்கம் :செ.சந்திரகாசன்
0 comments:
Post a Comment