சித்தர் சிந்திய முத்துகள் ...........3/46

 


சித்தர் சிவவாக்கியம் -336

ஆண்மை ஆண்மை ஆண்மை ஆண்மை கூறும் அசடரே

கான்மையான வாதி ரூபம் கால கால காலமும்

பான்மையாகி மோனமான பாசமாகி நின்றிடும்

நான்மையான நரலை வாயில் நங்குமிங்கும் அங்குமே.

     

ஆண்மை ஆண்மையென்று ஆண்மை பேசுகின்ற அசடர்களே! பெண்மை இல்லாத ஆண்மை வந்தது கிடையாது. உங்களின் உடலிலே காணும் ஆதியான வாலை ரூபம்தான் காலா காலமும் யாவருக்கும் இருந்து வருகின்றது. அதுவே பாங்கான வண்ணம் மூன்றாகி பசுபதி பாசமாகி நின்றிடும். அந்த வாலை நாறாத யோனியில் நாற்றம் இல்லாத நரலைவெளி வரும் வாசலில் தங்கி இருப்பதை இங்கும் அங்கும் எங்குமே அவளால் ஆகி நிற்பதை அறிந்து கொள்ளுங்கள்.

 

சித்தர் சிவவாக்கியம் - 339

ஞானி ஞானி என்றுரைத்த நாய்கள் கோடி கோடியே

வானிலாத மழை நாளென்று வாதி கோடி கோடியே

தானிலாத சாகரத்தின் தன்மை கானா மூடர்கள்

முனிலாமல் கோடி கோடி முன்னறிந்த தென்பரே.

   

தன்னையே ஞானி ஞானி என்று சொல்லித் திரிந்து நின்ற பேர்கள் கோடி கோடியாக நாயாகி பிறப்பார்கள். வானில் இல்லாத மழை நீரே அமுரி என்று நாள்தோறும் கூறி அதனை தேடித் தேடி அலையும் வாதிகளும் கோடி கோடியாக வருவார்கள். தன்னந்தனியாக தனக்குள் இருக்கும் தங்கத்தின் தன்மையை அறிந்து காணாத மூடர்கள் தங்கள் முன்னேயே உள்ளதை உணராமல் நாங்கள் அனைத்து இரகசியங்களையும் முன்னமே அறிந்தவைகள்தான் என்று பேசியே மாண்டவர்களே கோடி கோடியாவார்கள்.  

 

 

சித்தர் சிவவாக்கியம் - 340

சூட்சமான கொம்பிலே சுழிமுனைச் சுடரிலே

வீச்சமான வெயிலே விபுலை தாங்கும் வாயிலே

கூச்சமான கொம்பிலே குடி இருந்த கோவிலே

தீட்சையான தீவிலே சிறந்ததே சிவாயமே.    

 

உடம்பில் சூட்சமான இடத்தில் கொம்பாக உள்ள சுழி முனையில் உள்ள தீயான சுடரிலே வீசிக்கொண்டு ஆடிய உயிரில் வாலை தங்கிப் பத்தாம் வாசலில் கூச்சம் மிகுந்திருக்கும் கொம்பிலே குரு குடியிருந்த கோயிலான கோனாகிய இடத்திலே தொட்டுக் காட்டி தீட்சை வழங்கிய சோதி விளங்கிய இடத்தில் சிறந்து இருந்த அது சிவமே என்பதை அறியுங்கள்.

    

கே எம் தர்மா &கிருஷ்ணமூர்த்தி 

0 comments:

Post a Comment