எரிமலை-புதையல்&ஐதரசன்&செயற்கை இறைச்சி (அறிவியல்)எரிமலை தரும் உலோகப் புதையல்கள்!

சுரங்கத் தொழிலுக்கு உலகெங்கும் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. எனவே, வருங்காலத்தில் தங்கம், தாமிரம், லித்தியம் போன்ற உலோக தேவைகளுக்கு என்ன செய்வது? ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய உத்தியை முன்வைத்துள்ளனர். உலகெங்கும் அவ்வப்போது குமுறும் எரிமலைகளின் அடிப்பகுதியில் ஏராளமான எரிமலைக் குழம்புகள் ஆறி பாறைகளாக மாறிக்கிடக்கின்றன.

 

அவற்றை, புதுவிதமான சுரங்கத் தொழில்நுட்பங்களை உருவாக்கி எடுக்க முடியும் என்று ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.தற்போது பூமிக்கடியிலிருந்து தோண்டி எடுக்கப்படும் உலோகங்களும், பண்டைக்கால எரிமலைக் குழம்புகள்தான். ஆனால், கடந்த சில நுாற்றாண்டுகளாக எரிமலைப் பகுதிகளில் உள்ள பாறைகளை யாரும் கண்டுகொள்ளவில்லை.

 

எனவே, எரிமலைகளின் மேலிருந்து 2 கி.மீ., கீழே உள்ள குழம்புகள் மற்றும் பாறைகளை குடைந்து எடுத்தால் பல விலை உயர்ந்த உலோகங்களை பிரித்தெடுக்க முடியும். அதே நேரம், பூமியின் வெப்பத்தை வைத்து மின்சாரத்தையும் உற்பத்தி செய்ய முடியும் என ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதற்கான புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கவும் அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

சூரிய ஒளியிலிருந்து ஹைட்ரஜன்!

மாற்று எரிபொருளான ஹைட்ரஜன், துளியும் புகை கக்காது. அதை சூரிய ஒளி தொழில்நுட்பத்தால் தயாரித்தால், அதைவிடப் பசுமை எரிபொருள் எதுவும் கிடையாது. எனவே, ஆஸ்திரியாவிலுள்ள புரோநியஸ் என்ற நிறுவனம் அதற்கு முக்கியத்துவம் தருகிறது.

 

அண்மையில், அது ஹெர்சோஜென்பர்க்கில், 'சோல் ஹப்' என்ற நிலையத்தை நிறுவியுள்ளது. ஹைட்ரஜன் 'பங்க்' போல செயல்படும் இந்நிலையம், தினமும் நுாறு கிலோ துாய ஹைட்ரஜனை தயாரித்து விற்பனை செய்யும். தவிர, எஸ்.ஏ.என்., குழுமத்துடன் கூட்டு முயற்சியாக, ஹைட்ரஜனில் ஓடும் வாகன சேவையையும் புரோநியஸ் நிறுவனம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

 

சோல் ஹப் ஹைட்ரஜன் 'பங்க்'கிற்கென, 2.3 ஏக்கர் பரப்பளவுக்கு, சூரிய ஒளிப் பலகைகளை நிறுவவேண்டும். அப்போது தான் தினமும் 100 கிலோ ஹைட்ரஜனைத் தயாரிக்கத் தேவையான 1.5 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.

 

தற்போதைக்கு, நகர எல்லை, ஊர் எல்லைகளில் சோல் ஹப்களை நிறுவ முடியும் என புரோநியஸ் திட்டமிட்டு வருகிறது. ஒரு சோல் ஹப் 16 ஹைட்ரஜன் கார்களுக்கு எரிபொருளை வழங்கும் திறன் கொண்டது. புரட்சிகள் இப்படித் தான் மெல்ல, ஆரவாரமின்றி துவங்குகின்றன.

உலகின் முதல் 'ஆய்வக இறைச்சி' தொழிற்சாலை

கோழி, மீன் போன்ற பிராணிகளின் செல்களை, ஒரு கிண்ணியில் வளர்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் நிரூபித்து பல ஆண்டுகள் ஆகின்றன. தற்போது, பிரபல உணவகங்களே ஆய்வுக்கூடத்தில் வளர்த்தெடுக்கப்பட்ட இறைச்சியை ஏற்க துவங்கியுள்ளன.

 

இஸ்ரேல் சும்மா இருக்குமா? 'கல்ச்சர்டு மீட்' எனப்படும் ஆய்வக இறைச்சி ஆராய்ச்சியில் முன்னணியில் இருக்கும் இஸ்ரேல், தற்போது உலகின் முதல் ஆய்வுக்கூட இறைச்சியை, பெருமளவில் தயாரிக்கும் தொழிற்சாலையை துவங்கியுள்ளது.

 

'பியூச்சர் மீட் டெக்னாலஜீஸ்' உருவாக்கியுள்ள இந்த தொழிற்சாலையில், ராட்சத இயந்திரங்களுக்கு பதில், ஏணி தேவைப்படுமளவுக்கு உயரமான உயிரி கலன்கள் நிறுவப்பட்டுள்ளன.

 

இக்கலன்களில் பன்றி, மாடு போன்றவற்றின் செல்கள், பல்கி பெருகி, நேரடி யாக இறைச்சியாகவே வளர்கின்றன. பண்ணை முறையில் வளர்ப்பதைவிட 10 மடங்கு கூடுதல் இறைச்சி இதில் கிடைப்பதாக பியூச்சர் மீட் டெக்னாலஜீசின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

பண்ணை முறையில் தேவைப்படுவதைவிட, 96 சதவீதம் குறைவான நீரும், 99 சதவீதம் குறைவான நிலமும் தான் ஆய்வக இறைச்சிக்கு தேவை.இதனால் தான், இதை 'செல் வேளாண்மை' என்று சிலர் அழைக்கின்றனர். எல்லாவற்றையும்விட, இஸ்ரேலிய ஆலையில், எந்த விலங்கும் கொல்லப்படாமலேயே, தினமும் 5 ஆயிரம் 'பர்கர்'களுக்கு தேவையான இறைச்சி தயாராகிறது. இனி விரைவில், கோழி முதல் இறால் வரை எல்லா வகை அசைவ உணவுகளும் இதே செல் வேளாண்மை முறையில் கிடைக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.

அறிவியல் தொகுப்பு:செ.மனுவேந்தன்

0 comments:

Post a Comment