எழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:06

மிக ஆதி காலத்தில் சிறு சிறு படங்களை /ஓவியங்களை சொற்களாகப் பாவித்து எழுத்து முறைமை ஆரம்பிக்கப் பட்டதாக நம்பப் படுகிறது. இங்கு ஓவியம் போன்றே எழுத்துகளும் எழுதப் பெறுவதால், இந்த மிகப் பழைய வகை எழுத்தை ஓவிய எழுத்துக்கள் (pictographical) எனக் குறிப்பிட்டனர்
 உதாரணமாக, இந்த எழுத்து முறையில் மலையைக் குறிப்பிட, படத்தில் காட்டிய வாறு எழுதப் பட்டது. எனினும் இப்படியான எழுத்து முறை ஒரு எல்லைக்கு உட்பட்டது [limited]. சில பருப் பொருள்களை [physical objects] வரைவது கடினம். மேலும் கண்ணுக்குத் தெரியாத மனத்தால் உணரத்தக்க நுண் பொருள்களாகத் திகழும் அன்பு, அச்சம், ஆசை முதலியவற்றைக் குறிக்கும் சொற்களையும் ஓவிய எழுத்துகளில் எழுத வேண்டும். இதுவும் சிக்கலானது. உதாரணமாக நன்மை என்ற பண்பைக் குறிப்பிட, ஒரு பெண்ணைக் குறிக்கப் பயன்படுத்தும் ஓவிய எழுத்தையும் குழந்தையைக் குறிக்கப் பயன்படுத்தும் ஓவிய எழுத்தையும் சேர்த்து எழுத வேண்டும். மேலும், எழுத்து எந்த வித வெளி செல்வாக்கும் இல்லாமல், தன்னிச்சையாக ஆரம்பித்தது என்றால், அது கட்டாயம் ஒரு ஓவிய எழுத்து மூலமே [pictograms] தொடங்கப் பட்டு இருக்கும். அண்மைய தொல் பொருள் ஆய்வுகள் எமக்கு எடுத்துக் காட்டுவது என்னவென்றால், எழுத்தின் தோற்றுவாயும் பரவலும், நாம் முன்பு சிந்தித்ததை விட சிக்கல் நிறைந்ததாக உள்ளது என்பதே. சிரியா விலும் துருக்கி யிலும் முதனிலை ஆப்பெழுத்து [ proto-cuneiform writing/ முதனிலை முக் கோண வடிவம் கொண்ட கூனிபோம் எழுத்துக்கள்] கிமு 4ஆம் ஆயிரமாண்டு நடுப் பகுதிக்கு முன்பே, களி மண் பலகையிலும் மரப் பலகையிலும் அநேகமாக எழுதப் பட்டு
இருந்திருக்கலாம். இதை அகழ்வு ஆராச்சிகள் மெய்ப்பித்தால், உருக் [Uruk] நகரத்தில் கண்டு பிடிக்கப்பட்ட, கி மு 3100 ஆண்டை சேர்ந்த உருக் III காலத்திய, களி மண் பலகை எழுத்து [படம் 1], ஆரம்பகால எழுத்தின் வளர்ச்சியின் ஒற்றை கட்டமாக மாத்திரம் [ஒரு முனை வளர்ச்சியாக மாத்திரம்/ only a single phase of the early development of writing] கருதலாம். 4ஆம் ஆயிரமாண்டு இறுதியில், உருக் நகரம் மிகவும் வளர்ச்சி அடைகையில், அங்கு ஒரு நிரந்தர கணக்கு நடைமுறைகள் தேவை பட்டதை உருக் நகர களி மண் பலகை எழுத்து ஆவணக் காப்பகம் [ Uruk archives ] சுட்டிக் காட்டுகிறது. களி மண் [clay] தாராளமாக அங்கு கிடைப்பதாலும் ,மலிவானதாகவும் நீடித்த பாவனை உடையதாகவும் இருப்பதால், இது தேர்ந்து எடுக்கப் பட்டு, அந்த ஈரமான களி மண் பலகையில், நாணலால் அல்லது குச்சி [a reed or stick] யால் ஓவிய எழுத்தும் அருவச் குறியீடும் [pictographs and abstract signs] எழுதப் பட்டன. சில முன்னைய ஓவிய எழுத்துக்கள் இலகுவாக அடையாளம் கண்டு அதன் பொருள் காணக் கூடியதாக இருந்தன. ஆனால், பல அருவ தன்மையாக, மறைபொருளாக அல்லது பண்பியலான தாக [abstract nature] இருந்ததால், தெரிந்த எந்த பொருளுடனும் அடையாளம் காண முடியவில்லை. காலப் போக்கில், சித்திர எழுத்துக்களை ஆப்பெழுத்துக்க ளால் [wedge shaped letters] மாற்றிடு செய்தார்கள். ஈரக்களி மண்ணில் ஒரு சிறு குச்சியால் முனையை சாய்த்து அழுத்தினால் ஒரு பக்கம் கொஞ்சம் பிதுங்கியது போல் வரும், அந்த களி மண் அம்பு போல் இருக்கும். இதற்குத் தான் ஆப்பெழுத்து க்கள் அல்லது  அம்பு வடிவ எழுத்துக்கள் என்று பெயர் ஆகும்.

பொதுவாக, கணக்கு வைத்துக் கொள்ளவேண்டிய தேவை காரணமாகவே "எழுத்து" தோன்றியது எனப்படுகிறது. கிமு நான்காம் நூற்றாண்டளவில் மெசொப்பொத்தேமியாவில் வணிகத்தினதும், நிர்வாகத்தினதும் சிக்கல் தன்மை, நினைவாற்றலின் வலுவையும் தாண்டி வளர்ந்த போது எழுத்து, வணிகப் பரிவர்த்தனைகளைப் பதிவு செய்வதற்கான நம்பத் தகுந்த ஒரு நிரந்தர வடிவமாக உருவானது. பண்டைய எகிப்திலும், மெசொப்பொத்தே மியாவிலும், காலத்தைப் பதிவு செய்வதற்காகவும், வரலாற்று மற்றும் சூழலியல் நிகழ்வுகளைப் பதிவு செய்வதற்கான அரசியல் தேவைகளுக் காகவுமே எழுத்து தோற்றம் பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மேலும்  அரசனுடைய அல்லது மத குருவுடைய ஆணைகள் அவர்களது கண்களால் காணமுடியாததும் காதுகளால் கேட்க முடியாததுமான பெருந் தொலைவு செல்வது சாத்தியமாகியதுடன், அவர்களது வாழ் நாளைக் கடந்து நிலை பெறக் கூடியதாகவும் இருந்தது.

சுமேரியன் முதலில்  பட எழுத்துகளுடன் எழுத ஆரம்பித்தான்.அங்கு ஒவ்வொரு  உருவடிவமும் ஒரு முழு சொல்லை குறித்தது. உதாரணமாக, டு [du] என்ற சொல், பாதத்தின் படம்  மூலம் குறிக்கப்பட்டது. ஆனால் பாதத்தின் படம் மேலும்  நில்,போ,வா,கொண்டு வா, போன்றவற்றையும் குறிக்கலாம்? ஒரு வினைச் சொல்லை தெரிவிக்க, இரண்டோ அல்லது அதற்கு மேற்பட்ட சின்னம்/ குறியீடு ஒன்றாக வரையப் பட்டன. உதாரணமாக, ஒரு தலை கிண்ணத்திற்கு பக்கத்தில் இருந்தால் அது தின் / சாப்பிடு என்பதை குறிக்கும்.

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருக் நகரில் கண்டு பிடிக்கப் பட்ட ,படத்தில் காட்டப்  பட்ட முத்திரை ஒன்று [படம் 2], உலகின் பழமையான  ஒரு ஊதியச் சீட்டு என அடையாளப் படுத்தப் பட்டுள்ளது. இங்கு ஒரு மனித தலை கிண்ணத்தில் இருந்து சாப்பிடுவதை  குறிக்கிறது. அதன் அருகில் உள்ள புனல்  வடிவமான பாத்திரம், பியர் மதுவையும் [Beer] ,ஒவ்வொன்றின் மீதும் உள்ள கீறல்கள் வேலையாட்களுக்கு கொடுத்த சம்பளத்தையும் குறிப்பதாக கருது கிறார்கள். இந்த சம்பளம் மதுவாக அவர்களுக்கு வழங்கப் பட்டு உள்ளது. இதனாலயே  உருக் குடிமக்கள் மகிழ்ச்சியாக ஒன்றாக நீண்ட காலம் வாழ்ந்தார்களாம். இந்த மகிழ்ச்சியை கொடுத்த மதுவின் செய் முறைப் பற்றி கி மு 1800 ஆம் ஆண்டை அல்லது அதற்கும் முற்பட்ட சுமேரியன் துதி பாடல் [Sumerian Hymn to Ninkasi ] ஒன்றும் கூறுகிறது. அந்த உலகின் முதல் மது செய்முறை குறிப்பு பாடல் தமிழில் மொழி பெயர்த்து இங்கு தரப் பட்டுள்ளது. 

"நின்காசி, நியே மாவை[dough] ஒரு பெரிய வாரி[shovel] மூலம்
குழியில் கலாவுகிறாய்-பார்லி ரொட்டியையும்[bappir] தேனையும்

நின்காசி, நியே பார்லி ரொட்டியை பெரிய சூளையில் வேக வைக் கிறாய்-
உமி தானியங்ககளை [hulled grains] ஒரு ஒழுங்காக குவித்து

நியே பார்லி முளைதானியத்திற்கு [malt] தண்ணீர் விடுகிறாய்-
பெரும் அதிகாரம் உள்ளவர்களையும் உன் மேன்மை பொருந்திய நாய் காத்து தள்ளி விடுகிறது

நின்காசி, நியே பார்லி முளை தானியத்தை சாடியில் ஊற வைக்கிறாய்- 
அலைகள் ஏறுகின்றன, அலைகள் இறங்கு கின்றன

நின்காசி, நியே சமைத்த கூழாகிய களியை[cooked mash] நாணல் பாயில் பரப்புகிறாய்-
சூடு தணிகிறது, குளிர்ச்சி வெற்றி கொள்கிறது

நியே உனது இரு கையாளும் சாராயத்துக்கான இனிக்கும் மாவூறலை[great sweet wort] வைத்து இருக்கிறாய் -
அதை தேனுடனும் திராட்சை ரசத்துடனும் வடிக்கிறாய்

நின்காசி, வடி கட்டும் பெரும் மரத்தொட்டி ஒரு இன்பமான ஒலியை தருகிறது-
நீ சேகரிக்கும் பெரும் மரத்தொட்டியில்[ large collector vat] சரியாக வைக்கிறாய்"

[இந்த தேன் பேரீச்சம் பழம் சாறாக இருக்கலாம்? வாசனை சுவை கொடுப்பதற்கு இங்கு பேரீச்சம் பழம் சேர்க்கப்படுகிறது? வடித்தலின் போது "பப்பிர் /பார்லி ரொட்டி" ஒன்றுக்கு மேற்பட்ட நோக்கங்களை நிறைவேற்றுகிறது. ஒன்று சர்க்கரை உற்பத்திக்கான மாப்பொருளை தருகிறது.மற்றது அரைத்தலுக்கான புரதங்களையும் சுவைகளையும் தருகிறது. இந்த அசைவு -அலைகள் ஏறுகின்றன,அலைகள் இறங்கு கின்றன- மறை முகமாக அரைத்தலை குறிக்கலாம் ?அப்பொழுது முளை தானியமும் பப்பிரும் மேல் அதிக பார்லி உடன் சேர்க்கப் படுகிறது? அத்துடன் இந்த மசியல் அதிகமாக சூடாகி இருக்கலாம்? நாணல் பாயில் பரப்புவது இரண்டு நோக்கங்களை நிறைவேற்றி இருக்கலாம். ஒன்று பாவித்த தானியத்தின் உமியை அகற்றவும் மற்றது திரவம் வடியவும் இது உதவி இருக்கலாம்? அது மட்டும் அல்ல, சாராயத்துக்கான மாவூறல் நன்கு குளிர்ச்சியாக இருந்தால், நொதித்தல் அல்லது புளித்தல் திறமையாக நடை பெரும். மரத்தொட்டி தரும் இந்த இன்பமான ஒலி அதிகமாக, சொட்டு சொட்டாக மரத் தொட்டிக்குள் வடியும் பீர்/ பியர் மது பானத்தின் சத்தமாக இருக்கலாம்?]

சில முன்னைய குறியீடுகள் பொதுவாக களி மண் வில்லைகளில் பொறிக்கப் பட்ட, கணக்கிடப்பட வேண்டிய  தானியங்கள், மீன், பலதரப்பட்ட விலங்குகள் போன்றவற்றை குறிப்பனவாக இருந்தன. இந்த ஓவிய குறியீடுகள் [pictographs] இலகுவாக விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருந்தன. மேலும் இவை அதிகமாக சர்வ தேச போக்குவரத்து அடையாளம் போல் எவராலும் வாசிக்கக் கூடியதாகவும் இருந்தன. தனிப்பட்ட நபரின் பெயர்கள், அதிகாரிகளின்  தலைப்புகள், வாய்மொழி கூறுகள் [verbal elements] மற்றும் அருவச் சிந்தனைகள் [abstract ideas] போன்றவை சித்திர எழுத்தில் அல்லது அருவக் குறியீட்டில் [pictorial or abstract signs] எழுதியிருந்தால், அவையின் உட்பொருளை வெளிப் படுத்துவது கடினமாகும். எனினும் குறியீடு ஒன்று அதன் உத்தேசித்துள்ள கருத்துக்கள் மட்டும் இன்றி, ஒரு ஒலியயையோ அல்லது ஒலிகள் குழுவையோ குறித்துக்காட்டும் பொழுது ஒரு முக்கிய முன்னேற்றம் எழுத்து முறையில் எற்பட்டது. உதாரணமாக, கண் ஒன்றின் படம் ,கண்ணையோ அல்லது ஆங்கிலத்தில் “I” [நான் ] என்ற சுட்டுப்பெயர் சொல் ஒன்றையோ குறிக்கும். ஒரு தகரக் குவளையின்,டின்னின்[tin] படம் தகரக் குவளையையோ [can /பொருள் /object ஒன்றையோ]
அல்லது முடியும் [can /கருத்து/concept ஒன்றையோ] என்ற  வினைச் சொல் ஒன்றையோ குறிக்கும். அதே போல,நாணல் [reed] ஒன்றின் படம், நாணல் என்ற செடியையோ அல்லது வாசி [read] என்ற வினைச் சொல் ஒன்றையோ குறிக்கும். இப்படியே, “I can read” /என்னால் வாசிக்க முடியும் என்ற கூற்றும் எழுத முடியும். இந்த எழுத்து முறையில் ஒவ்வொரு படமும் ஒரு ஒலியையோ அல்லது மற்றும் ஒரு சொல், ஆனால் அந்த பொருளில் இருந்து மாறு பட்ட , ஆனால் அதே அல்லது அதே மாதிரியான ஒலியை கொண்ட ஒன்றையோ குறிக்கும். இதை ஓவிய ஒலியெழுத்துப் புதிர் [rebus]  என அழைப்பார்கள். பெரும்பாலான பழமையான வரி வடிவங்கள் ஓவிய ஒலியெழுத்து புதிர் [rebus] போன்றது. இங்கு வார்த்தைகள் படங்களாக விளக்கப்பட்டிருக்கும். மேலும் ஒரு எடுத்துகாட்டுக்காக  'பிலீஃப்' [belief] என்ற வார்த்தையை நீங்கள் படமாக காட்டமுடியுமா? நீங்கள் தேனீயின் [bee] படத்தை தொடர்ந்து இலையின் [leaf] படத்தை காட்டலாம். அதை உச்சரித்தால் 'பிலீஃப்' [belief] என்ற ஒலி கிடைக்குமல்லவா? இப்படித்தான்  இந்த ரேபஸ் [rebus] முறை இருக்கும் .

ஆப்பு எழுத்தின் ஆரம்ப கட்டங்க ளான  கி மு 3200 ~ 3000 ஆண்டுகளில் ,அதன் பாவணையைப் பற்றிய சில உதாரணங்களே கிடைத்துள்ளன, என்னினும் தொடர்ந்த இதன் பாவணையைப் பற்றிய விபரங்கள் கி மு 2600  இல் இருந்தே கிடைக்கின்றன. இங்கு உண்மையான எழுத்தின் பரிணாமத்தை காண்கிறோம். அங்கு உயிர் எழுத்துக்கள் மற்றும் அசைகள் [vowels and syllables] சொற்களுக்கான குறியீடுகளும் ஒலியமை வடிவ த்திற்கான குறியீடுகளும் [word-signs and phonograms—signs] கலந்து காணப்படுகின்றன. இதனால் எழுத்தாளர்கள் யோசனைகளை முழுமையாக விவரிக்க முடிகிறது. அப்பொழுது,அதாவது கி மு 3000 ஆண்டின் நடுப்பகுதியில் ,ஆப்பெழுத்துக்கள் முதன்மையாக களி மண் வில்லைகளில் எழுதப் பட்டு, அவை வர்த்தகம், மதம், அரசியல், இலக்கியம் மற்றும் அறிஞர் ஆவணங்கள் [scholarly documents] பதிய முக்கியமாக பாவிக்கப் பட்டன. 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி:07  தொடரும்..

1 comments:

  1. எழுத்தின் தோற்றவாய் பரம்பலில் சிக்கல்களில் அலசல் அருமை. ஓவியமே எழுத்தின் தொடக்கமாக அமைந்துள்ளது. தற்போது கூட எழுத்துக்களில் ஓவியத்தின் நிழல் இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். யப்பானியர்களின் எழுத்து இதற்கு பொருத்தமானதாக கொண்டால் மிகையாகாது. உடுக் நகரில் கண்டு பிடிக்கப்பட்ட, ஆப்பு எழுத்து இவற்றுடன் மது தயாரிப்பில் தன்மையில் பயன்படுத்திய குறிப்பு முறைகள் பாடல் மொழிபெயர்ப்பு மிகவும் அருமையான பொருள் பொதிந்த கட்டுரை. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி.

    ReplyDelete