எழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:07

தொல்காப்பியத்தில் எழுத்து என்ற சொல்லே ஆளப்பட்டுள்ளது.இது எழுது என்ற சொல்லின் அடியாகப் பிறந்ததாக கூறுவர். ஆனால் எழுது என்ற சொல்லே எழு என்ற வேர்ச் சொல்லை கொண்டுள்ளது. எனவே எழுப்பப்படும் காரணம் பற்றியும், எழுதப்படும் காரணம் பற்றியும் வைத்த பெயர் ‘எழுத்து’ என்பதாகும். இதனை,

"எழுப்பப் படுதலின் எழுத்தே 
எழுதப் படுதலின் எழுத்தா கும்மே"

எனவரும் அடிகள் அறிவிக்கின்றன. எழுத்தின் வேறு பெயர்கள் இரேகை, வரி, பொறி என்பனவாம். எழுத்து என்பது இயற்பெயராய் நின்று எழுத்துகளைக் (ஒலி வடிவ, வரி வடிவ எழுத்துகள்) குறிக்கும்; சுருங்கச் சொன்னால், எழுத்து என்பது நாதத்தின் - ஓசையின் - காரியமாக இருப்பதும்; சொல்லுக்குக் காரணமாக இருப்பதும் எனலாம்.

உணர்ந்தோ உணராமலோ இன்று பலர் எழுத்தின் முக்கியத்தை அறிந்துள்ளார்கள்.நாம் மக்களை படித்தவர்கள் படிக்காதவர்கள் என வேறுபடுத்து கிறோம். மேலும் மற்றவரின் வாழ்வை விட மேம்பட வேண்டுமாயின், முதற்கண் நாம் செய்வது அவர்களுக்கு எழுத வாசிக்க கற்றுக் கொடுப்ப தாகும். எமது மூதாதையரும் இதன் பெருமையை அறிந்திருந்தார்கள்.அது மட்டும் அல்ல,இது [எழுத்து ] எப்படி தோன்றியது அல்லது கண்டு பிடிக்கப் பட்டதற்கான பழங்கதை அல்லது தொன்மம் [myth] பல இனக் குழுக்கள் வைத்திருக்கின்றனர். 
உதாரணமாக,எகிப்தில் சந்திரக் கடவுள் தாத் [god Thoth] என்பவரே பழங்கால எகிப்தியரின் சித்திர வடிவ எழுத்துக்களை [ஹீரோகிளிப்ஸ் / hieroglyphics] தோற்றுவித்தவர் என்றும் மற்றும் மொழி, தந்திரம் [மந்திர வித்தை],மருந்து தந்தவர் என்றும் நம்புகிறார்கள். அதே போல மெசொப்பொத்தேமி யரும் பெண் தெய்வம் நிசபா [the goddess of granaries,nisaba] எழுத்தை தந்தவர் என்கின்றனர். இவர் தனது ஆலயத்திற்கு வரும் பொருட்களை கணக்கு வைத்திருக்க எழுத்தை தோற்று வித்தார் என்கின்றனர் . 

இந்த நவீன உலகில் இவைகள் எல்லா வற்றையும் விட மிகவும் சுவாரசியமானது 'மோசே [Moses] தேவனிடம் இருந்து  சீனாய் மலையில் பத்துக் கட்டளைகளுடன் எழுதுவதற்கான பரிசை பெற்றார்' என்பதாகும் [யாத்திராகமம் 31 :18 :சீனாய்மலையில் அவர் மோசேயோடே பேசி முடிந்தபின், தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை அவனிடத்தில் கொடுத்தார், உபாகமம் 5:22:இந்த வார்த்தைகளைக் கர்த்தர் மலையிலே அக்கினியிலும் மேகத்திலும் காரிருளிலும் இருந்து உங்கள் சபையார் எல்லாரோடும் மகா சத்தத்துடனே சொன்னார்; அவைகளோடு ஒன்றும் கூட்டாமல், அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதி, என்னிடத்தில் கொடுத்தார்]. இவர் இன்று கிறிஸ்தவ, இஸ்லாம், யூத, மற்றும் பஹாய் சயங்களில் ஒரு முக்கிய தீர்க்கதரிசியாகக் கொள்ளப்படுகிறார். மேலும் இந்த
பத்துக் கட்டளைகள் தேவனின் கை விரலால் நேரடியாக கற்பலகைகள் இரண்டின் மீது எழுதப் பட்டதாக வேதாகமம் கூறுகிறது. பழங்காலத்தில், இஸ்ரேலிய அறிஞர்கள் இதை பின்னர் நியாயப்படுத்த ,மோசேக்கு எழுத தெரியாது என்றும் அதுவரை எபிரேயர் களுக்கு [Hebrews] படிப்பறிவு இல்லை என்றும் விளக்கம் கூறினர். எனவே இந்த பாரம்பரியத்தில், பத்துக் கட்டளைகள் [Ten Commandments] அறநெறி மற்றும் எழுத்தறிவு போன்றவற்றை போதித்ததாக கருதலாம். இந்த விளக்கம் புதுமையான, வழக்கமல்லாத ஒன்றாக இருந்தாலும், இது, எழுத்து பண்டைய  இஸ்ரேலியர்களுக்கு -கடவுளிடம் இருந்து பரிசு பெற்ற இவர்களுக்கு- எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

தெய்வம் இருப்பது எங்கே...என்ற சரஸ்வதி சபதம் பாட்டில், "எண்ணும் எழுத்தும் நிறைந்தவர் நெஞ்சம் இறைவன் திகழும் வீடு" என்ற ஒரு வரி வருகிறது .அதே போல திருநாவுக்கரசு நாயனார் இறைவனை ஒரு  கணக்காளராகவே ,தனது தேவாரத்தில்  "பொழுது போக்கிப் புறக்கணிப்பாரையும் எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே! " அதாவது ,யார்யார் என்னென்ன குற்றம் செய்கின்றனர் என்ற கணக்கை குற்றக்கணக்காக ஈசன் எழுதி வைப்பார் என்கிறார்.

எழுத்து மனிதனின் சாதனையே என முதல் முதலில், கி பி 1755 இல் கூறிய மேலை நாட்டு அறிஞர் பிரெஞ்சு தேசத்தை சேர்ந்த  டிடேரோ [Diderot] ஆவார்.இவர் வில்லியம் வார்பர்டனின் [William Warburton] முன்னைய ஆலோசனையை  அடிப்படையாக வைத்து இதை முன்மொழிந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. இவர் சித்திர வடிவத்தில் இருந்து படிப்பு படியாக எழுத்து பிறந்ததாக வாதாடினார். விலங்குகள் தமது குட்டிகளுக்கு இரை தேடவும், வேட்டையாடவும் கற்றுக்கொடுக்கின்றன. ஆனால், அதை முதன் முதல் சித்திர வடிவில் கற்பிக்கும் முறையைக் கண்டு பிடித்தது மனிதன் தான். பல குகைகளில் ‘மம்மத்’ யானையைக் கொல்ல பல மனிதர்கள் கையாண்ட உத்திகள் படமாக வரையப்பட்டிருக்கின்றன.  வேட்டையாடு வதைப் பற்றி மட்டுமல்லாது, தரையில் குடிசைகள் அமைப்பதைப் பற்றியும் குகைச் சுவர்களிலும் பாறைகளிலும் விளக்கப் படங்கள் வரையப்பட்டி ருக்கின்றன. நான்கு குச்சிகளை நட்டு, அவற்றின் மேல் முனைகளில் விலங்குகளின் தோல்களையும் இலைகளையும் மாட்டி கூரைகளும் சுவர்களும் அமைக்கப்படுவது சித்திரமாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது. அது அடுத்த தலைமுறையினருக்கு வழிகாட்டிக் கையேடு போல உதவியது. சிறு கிராமங்கள் படிப்படியாக நகரங்களாக வளர்ச்சிபெற்றன. மக்கள் அதிக அளவில் பரஸ்பரம் தகவல்களைப் பரி மாறிக் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. அது பேச்சு மொழியிலும் எழுத்து வடிவத்திலும் பெரும் முன்னேற்றம் ஏற்படக் காரணமாயிற்று எனலாம். டெனிஸ்  ஸ்சமாண்டட் -பெஸ்ஸர்ட் [Denise Schmandt-Besserat (1996)] என்ற பெண்மணி- டோக்கனில் பாவிக்கப் பட்ட வடிவமைப்புகளும், பின்னர் நடை முறைக்கு வந்த ஆப்பு வடிவ கூனிபோம் எழுத்துக் களின் வடிவமைப்புகளும், பல ஒத்து  காணப் பட்டதை கண்டு- அதன் அடிப்படையில், தனது டோக்கன் [theory of tokens] கோட் பாட்டை முன்வைக்கும் வரை- முன்னைய சித்திர வடிவ கோட்பாடே- எழுத்து உருவாக்களுக்கு அடிப் படையாக எடுத்து இயம்பப் பட்டது. 

கிமு 8000 ன் முற்பகுதியில், கணக்கிடும் கருவிகளாக டோக்கன் அறிமுகப் படுத்தப் படும் பொழுது, பெரும் பான்மையான மக்கள் வேட்டையாடி உணவு திரட்டுபவர் களாக இருந்தனர். இவர்கள் நாடோடிகளாக தொடர்ந்து இடத்துக்கு இடம் அசைந்தவாறு இருந்தனர். அவர்களிடம் எண்ணு வதற்கு என்று பெரிதாக ஒன்றும் இருக்கவில்லை. எனவே நாகரிகத்தின் இடிபாடுகளில் பல் வேறு பட்ட டோக்கன் [அடையாள வில்லை] கண்டு பிடிக்கப் பட்டது ஆச்சரிய மாக உள்ளது. அவர்கள் எதை கணக்கிட்டார்கள்? மறுதலையாக, ஒரு இடத்தில் நிரந்தரமாக குடியேறிய சமூக த்தில் , அங்கு தானியங்கள், கால் நடைகள் மற்றும் பொருட்கள் சேகரித்து வைத்திருப்பதால், கணக்கியல் அமைப்பு ஒன்று உருவாக்க சந்தர்ப்பம் நிறைய உண்டு. புதிய கற்காலத்தில், வேளாண்மை, மட்பாண்டங்களின் வளர்ச்சி, கட்டல் ஹூயுக் (Çatal Hüyük ), ஜெரிக்கோ போன்ற பெரிய குடியிருப்பு க்களின் தோற்றம் என்பன முக்கியமான சிறப்பியல்புகளாக இருந்தன என்பதை தொல்பொருள் ஆய்வாளர்கள் இன்று மெய்ப்பித்துள்ளார்கள். இது நகர்ப்புற வாழ்க்கையை மேலும் பின்னோக்கி கி மு 6000 ஆண்டுகளுக்கும் முன்பு நகர்த்தி உள்ளது. இது சுமேரிய நாகரிக எழுச்சிக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வளர்ச்சி அடைந்ததை காட்டுகிறது. இது எமக்கு அறிவுறுத்துவது என்னவென்றால், நகரமயமாக்கல் ,விவசாயத்தின் தொடக்கத்திலேயே தொடங்கியது ஆகும். இது சில இடங்களில் கி மு 8000 ஆண்டு அளவிலேயே மேம்பட்டது எனலாம். டோக்கனை கொண்டு கணக்கிடும் முறைகள் இன்னும், இன்றும் சில சில இடங்களில் காணப்படுகின்றன. உதாரணமாக, ஈராக்கில், இடையர்கள் கூலாங்கற்கள் [pebbles] கொண்டு, செம் மறியாடுகளை [sheep] கணக்கிடுகிறார்கள்.கூலாங்கற்களை நாம் வேறுபடுத்தி பார்க்கமுடியாது. எனவே இது எதை பிரதி படுத்துகிறது என அறிவது தெளிவற்ற தாக உள்ளது. அதாவது கணக்கிடும் முறை ,ஒரே உருமாதிரி எண்ணிகளை [counter] பாவித்தால் , பல்வேறுபட்ட பொருட்களிற்கு அல்லது கால் நடைகளிற்கு மத்தியில் வேறுபாடு காண முடியாது. தொல் பொருள் சான்றுகள், இதற்கான தீர்வை சுட்டிக் காட்டுகிறது. அதாவது அங்கு பலவித, பல உருவ எண்ணிகள் அல்லது டோக்கன்கள் கண்டு எடுக்கப் பட்டது, அங்கு டோக்கன் எப்படி பவிக்கப் பட்டன என்பதை விளக்குவதாக ஸ்சமாண்டட் -பெஸ்ஸர்ட்  வாதாடுகிறார். உதாரணமாக, நீ ஒரு பழங்குடி தலைவர் என வைத்துக் கொள்வோம். நீ ஒரு விருந்து வைக்க விரும்புகிறாய். அதற்காக ஒரு இளம் ஓடுபவரை தேர்ந்து எடுத்து அவனிடம் கைநிறைய எண்ணிகளை அல்லது டோக்கன்களை ஒரு கொள்வனவு பட்டியல் மாதிரி கொடுத்து அனுப்புகிறாய். அதே மாதிரியான அதே அளவான டோக்கன்களை நீயும்  ஒரு நினைவூட்டு குறிப்பாக வைத்திருக்கிறாய் என்று வைப்போம். ஒரு வேளை நீ  மனம் மாறி, இன்னும் ஒரு ஓட்டுபவர் மூலம் மேலும் சில டோக்கன்களை, ஒரு மாற்றியமைத்த பட்டியல் மாதிரி கொடுத்து அனுப்பலாம். இங்கு இந்த டோக்கன்கள் எல்லாம் ஒரு  எழுத்து அமைப்பு மாதிரி தொழிற் படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி:08  தொடரும்

0 comments:

Post a Comment