"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 02தமிழர் சமுதாயத்தில் மட்டுமல்ல உலகின் எல்லாச் சமுதாயங்களிலும் பாரம்பரியங்கள் மாற்றம் அடைவதும் சில அழிந்து போவதுமான நிலைப் பாடுகள் இடம்பெற்று வந்துள்ளன. “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல” என்பதன் உண்மைக் கருத்தை, அதன் வெளிப் பாட்டை நாம் மனித வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும் போது காண்கிறோம்.
உதாரணமாக, தமிழர்களது பொற்காலம் எனப் போற்றப்படும் சங்ககாலத்தில் முதலில் நிலவிய களவொழுக்கத்தில் மணம் செய்யும் முறைமை, பின்னர் ஆண் - பெண் உறவில் நம்பிக்கை மோசடிகளை -  கர்ப்பமாக்கப்பட பெண்ணை,  உறவின் பின்னர் கைகழுவி விடும் போக்கை -

"யாரும் இல்லை, தானே கள்வன்,
தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ?
தினைத்தாள் அன்ன சிறு பசுங்கால
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே"

என்ற குறுந்தொகை 25 பாடல் காட்சி போல் பல கண்டு, அதனை போக்க, சமூகத் தலைவர்கள் இணைந்து கற்பு
மணம் எனும் முறையை உருவாக்கினர் எனலாம். “பொய்யும் வழுவும் முற்றிய பின்னர் அய்யர் வகுத்தது கரணம் என்பர்” தொல்காப்பியர். இதில் ஐயர் என்றால், தலைவர் என்று பொருள்- பார்ப்பன‌ர் அல்லர் என்பது குறிப்பிடத் தக்கது. இதுவே கிரியை முறை திருமணம் வர காரணமாக இருந்தது. அவர்களின் திருமணத்தை உறுதிப் படுத்த அன்று தாலம் பனை என்ற பனை ஓலையில் இன்னாருக்கும் இன்னாருக்கும் இந்த நாளில் அல்லது இன்று அல்லது இந்த காலத்தில் திருமணம் என எழுதி அவர்களின் கழுத்தில் மக்கள் மத்தியில் கட்டுவார்கள். பின் காலப் போக்கில், மனித சிந்தனை, நாகரிகம் போன்றன வளர்ச்ச்சி அடைய பனையோலை, உலோகமாக, மஞ்சள் கயிறாக மாறி பின் இன்றைய பவுனாக அல்லது தங்கமாக மாறியது எனலாம். தாலி என்ற சொல் தாலிகம் என்ற,பனை மரத்தை குறிக்கும் சொல்லின் அடியாகவோ அல்லது வேலால் ஆனது வேலி என்பது போலத் தாலால் ஆனது தாலியாகவோ பிறந்தது எனலாம். இப்படித்தான் கால ஓட்டத்தில் மாற்றம் அடைகின்றன. எனவே, பல மரபுகளை, பாரம்பரியங்களை நாம் உடைத் தெறிந்து கொண்டுதான் வந்துள்ளோம். இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் தலை தாழத்தி கைகூப்பி வணக்கம் செலுத்துவது மரபு என்றாலும், இன்று பல வேளை நாம் கைகுலுக்கி வரவேற்கிறோம், எனவே எமது மரபுகள் மங்கிச் செல்கின்றன, மாற்ற மடைகின்றன என்பதுதான் முற்றிலும் உண்மை. இன்றைய சூழ்நிலையில், எல்லா இடமும், எல்லா நேரமும், எமது பாரம்பரிய உடைகளான வேட்டி, சால்வை,
சேலை இவற்றைத் தினமும் அணிய முடியுமா? தமிழர்களிடம் இருந்து வந்த விளையாட்டு முறைகள் என்பன இன்று அழிந்தொழிந்து வருவதனையும் காண்கின்றோம். தொன்மையான பல தமிழரின் விளையாட்டுகள் இன்று இலக்கியங்களில் காணமுடிகின்றதே யொழிய இந்த மரபு விளையாட்டுக்கள் வழக்கொழிந்து போயுள்ளன என்பது வெளிப்படை ஆகும். என்றாலும் சில விளையாட்டுக்கள் அன்று போல் இன்றும்
தொடர்கின்றன, அவற்றில் ஒன்று ஊஞ்சல் ஆட்டம் ஆகும். நற்றிணை 90, வரி 3 - 7,  மிக அழகாக கஞ்சியிட்டு உலர்த்திய சிறிய பூத்தொழிலையுடைய ஆடையுடனே பொன்னரி மாலையும் அசைந்தாட ஓடிச்சென்று, பனை நாரில் திரித்த கயிற்றில் தொங்கவிடப்பட்ட ஊஞ்சலில் ஏறி ஆடாமல் அப்பெண் அழுதபடி நின்றாள் என

"..... எல்லித் தோய்த்த   
புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொடு
வாடா மாலை துயல்வர ஓடிப்
பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல் 
பூங்கண் ஆயம் ஊக்க வூங்காள்"

என்று பாடுகிறது. இதில் நாம் இன்னும் ஒரு தமிழரின் பழம் பழக்கத்தையும் அது இன்னும் கிராமப் புறங்களில் அப்படியே இருப்பதையும் காண்கிறோம். தமிழர்கள் சங்க காலம்
தொட்டே ஆடைகளை கஞ்சியிட்டு உலர்த்தி அணிந்தனர் என்பதே அந்த செய்தியாகும். இந்த பாடலில் வரும் சொல் "
புகாப் புகர்' என்பது உணவுக் கஞ்சியாகும். (புகா-உணவு; புகர்-கஞ்சி). அதே போல, பொழுதுபோக்குக் கலைகளாகவும், கருத்துக்களை முன்வைக்கும் கலை நிகழ்வுகளாகவும் கூத்து, பாட்டு என்பன  தமிழர்களிடையே தொன்றுதொட்டு நிழ்ந்து வந்துள்ளது. ஆனால் அதுவும் இன்று பல காரணங்களால் படிப்படியாக மறைந்து போகின்றன. இது தான் இன்றைய உண்மையான நிலை ஆகும்.

இந்தப் பாரம்பரியம் எந்தவித மாற்றங்களும் இன்றி ஒரு தலை முறையிடமிருந்து அடுத்த தலை முறையினருக்கு கொடுக்கப்படுகிறது என்றும் கூறுகிறோம். இதை நாமும் அவ்வாறே அடுத்த சந்ததியினருக்குக் கொடுப்போம் என்றும் நினைக்கிறோம். ஆனால், இந்தப் பாரம்பரியம், மரபு இவற்றை ஆராய்ந்து பார்க்கும் போது இந்த மரபுகளின் உள்ளடக்கங்கள் சில சமயங்களில் ஓரளவுக்கும் சில சமயங்களில் மிக அதிகமாகவும் மாறிக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. கடந்த காலத்தில் வழக்கத்தில் இருந்ததாக நாம் கருதிய விடயங்களும், நம்முடைய தற்போதைய குறிக்கோள்களும் மற்றும் எமது இன்றைய அறிவு வளர்ச்சியும் ஒன்றன்மீது ஒன்று தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதைப்பற்றி நாம் ஆழ்ந்து ஆராயும் போது, நிகழ்காலத் தேவைகளுக்கு ஏற்ப, அந்த குறிப்பிட்ட பாரம்பரியம் பற்றி நமக்கு, ஒரு பொதுக் கருத்து உருவாகி, அதற்கு ஏற்றவாறு அவை மாற்றம் அடைகின்றன. மேலும் சில சடங்குகளும் மரபுகளும் மிகப் பழமையானவை போல தோன்றினாலும், அவையை ஆராய்ந்து பார்க்கையில் அவை மிக அண்மைக் காலத்தில் உருவாக்கப்பட்டவை என்றே தெரிகிறது. பண்பாட்டை உருவாக்குவதாகக் கருதப்படும் பாரம்பரியம் எல்லாக் காலங்களிலும் மாறாது நிலைத்து நிற்பதல்ல. நம் முன்னோர் காலந் தொட்டு பழக்கத்தில் இருந்ததென்று நாம் கூறிக் கொள்வது சில விடயங்களுக்கு நியாயம் கற்பிப்பதற்கான முயற்சியாகும். தொல் பண்பாட்டின் பல அம்சங்களில் பூர்வீகத்தை முழுமையாக அறிந்துகொள்வது மிக அவசியம். இதைச் சரியாகத் தெரிந்து கொள்ளாவிட்டால், எமது  பாரம்பரியத்தின் சரியான நோக்கம் எமக்கு தெரியாமல் போய்விடும் .

இதுகாறும் எமக்கு தெரிந்த விடயங்களைக் கொண்டு நோக்கும் போது இயற்கை வழி வாழ்வியலை முன்னிறுத்தும் அடிப்படைகளைக் கொண்டதாக எமது தமிழ் மரபு இருப்பதாக எமக்கு புரிகின்றது. கால மாற்றத்தால் ஏற்பட்ட  மாற்றங்கள் அல்லது உள்வாங்கிக் கொண்ட பல சடங்குகள் இந்த இயற்கை வாழ்வியலை பின் தள்ளி தற்சமயம் அது தமிழர் மரபு போல எம் மரபிற்குள் ஊடுறுவி நிற்கின்றது. எனவே  அந்த ஆரம்ப கால இயற்கை வாழ்வியல் முறைகளை தெரிந்து எடுத்து பட்டியலிட்டு, கால ஓட்டத்தில் இணைந்து கொண்ட,  உண்மைக்கு புறம்பான அறிவியலுடன் ஒவ்வாத, சடங்குகளும் புராணங்களும் இம்மரபின் மேல் ஏற்றி வைத்திருக்கும் விடயங்களை ஒதுக்கி, அதனை மீள் அறிமுகம் செய்வது நல்லது என நாம் நினைக்கிறோம்.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
ஈமெயில்:kandiahthillai@yahoo.co.uk ]


0 comments:

Post a Comment