"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 01


ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு இனமும், உலகில் பல்வேறு வகையான பாரம்பரிய பெருமைகளை கொண்டுள்ளன. இந்த பாரம்பரிய பெருமைகள் அல்லது பழம் வழக்கம், நமக்கு முன்னோர்களிடமிருந்து கிடைத்த சொத்து அல்லது தலைமுறை தலைமுறையாக வந்த சிறப்பு அல்லது வழிவழியாகச் சந்ததிகளிடம் தொடரும் ஒன்று என்று சுருக்கமாக கூறலாம். அதேவேளை மரபு என்ற சொல்லும் பலரால் பாவிக்கப் படுகின்றன, அறிவுடையோர் எந்தப் பொருளை அல்லது அவர்கள் மேற்கொண்ட செயல்களை எந்தச் சொல்லால் எந்த முறைப்படி குறிப்பிட்டார்களோ அதே முறைப்படி வழங்குதல் அல்லது பின்பற்றுதல் மரபாகும். அதாவது, பண்பாட்டின் எல்லா நிலைகளிலும் மக்களால் பின்பற்றப்பட்டு ஏற்றுக் கொள்ளப் பட்ட நியதியே மரபு என்கிறது தமிழ் அகராதி. எனவே, வழக்காறு அல்லது மரபு என்பது பெருந்தொகையான மக்களால் செய்யப்படும் ஏதாவது ஒரு நடைமுறைச் செயற்பாடுகளைக் குறிப்பதாக அமைகின்றது. மரபு, பாரம்பரியம் இரண்டும் ஒத்த கருத்துள்ள சொல்லாக பல சந்தர்ப்பங்களில் பாவிக்கப் பட்டாலும் ,அவை இரண்டும் ஒன்றல்ல, இன்றைய வழக்காறு அல்லது மரபு [custom] நாளைய பாரம்பரியம் [tradition] ஆகும்.

ஒரு மரபு அல்லது பாரம்பரியம் என்பது ஒரு சட்டம் அல்லது உரிமை அல்லது வழக்கமான வழி என்றும் கூறலாம் [a law or right or usual way], இது எழுதப் படாத ஆனால் நீண்ட காலமாக பலரிடம், பொதுவாக ஒரே நாட்டில், ஒரே பண்பாட்டில் அல்லது ஒரே மதத்தில் [the same country, culture, or religion] இருப்பவர்களிடம் நடைமுறையில் உள்ள ஒன்றாகும். உதாரணமாக ஏதாவது ஒன்று பொதுவாக, வழக்கமாக ஒரே வழியில் அல்லது அதே வழியில் கடைபிடித்தால் அதை நாம் "வழக்கமான வழி" ["customary way"] என்று பொதுவாக கூறுவது உண்டு. மேலும்  நாம் விபரமாக மரபு அல்லது பாரம்பரியம் பற்றி அலச முன்பு, இன்னும் ஒரு விடயத்தையும் கூற வேண்டிய அவசியம் உண்டு. அதாவது பண்பாடு என்றால் என்ன என்பதேயாகும். இதன் பொருள் மரபின் பொருளுடன் ஒத்து காணப்பட்டாலும், மரபு என்பது பொதுவாக ஒரு நடைமுறையை அல்லது செயல்பாட்டை  குறிக்கிறது, ஆனால் பண்பாடு என்பது, வாழ்க்கை முறை (way of life) என்பதாகும். ஒவ்வொரு மனித சமுதாயத்திற்கும் ஒரு பண்பாடு உண்டு. ஒரு சமுதாயத்தில் வாழுகின்ற பெரும்பான்மை மக்களின் ஒருமித்த நடத்தைகளையும் எண்ணங்களையும் அது வெளிப்படுத்தும். ஒரு சமுதாயத்தில் அமைந்துள்ள கலை, நம்பிக்கை, பழக்கவழக்கங்கள், மொழி, இலக்கியம், விழுமியங்கள் (Values) முதலியன அந்தச் சமுதாயத்தின் பண்பாட்டுக் கூறுகள் ஆகும் .

பொதுவாக நாம் பின்பற்றும் நடைமுறைகள், மரபுகள், பாரம்பரியங்கள் அல்லது சடங்குகள் [practices, customs and traditions or rituals], ஏதாவது அடிப்படையை [basis] அல்லது காரணத்தை கொண்டுள்ளதுடன், அவற்றில் சில உண்மையான அறிவியலாகவும், விஞ்ஞான பூர்வமானவையாகவும் [truly scientific] உள்ளன. எனினும் ஆரம்பத்தில் ஒரு காரணத்தால் ஏற்பட்ட வழக்கம், பின் நாளடைவில், அந்த அடிப்படை காரணம் மறக்கப்பட்டு, அவை ஒரு குழுவின் பொதுவான நடைமுறைகளாக இணைக்கப்பட்டதும் அல்லது மாறிவிட்டதும் அல்லாமல், அவை சூழ்நிலை வசதிகளுக்கு ஏற்ப தொடர்ந்து மாற்றமும் அடைந்து வளர்கின்றன. உதாரணமாக, ஒரு முறை ஆங்கில பத்திரிகை ஒன்றில் ஒரு உண்மையான கட்டுரை ஒன்று வெளியானது, அதில் நாலாவது தலைமுறையில் வாழும் குடும்பப் பெண், தாம் ஏன் வான்கோழியை ஈஸ்டர் [Easter] அன்று மூன்று துண்டுகளாக அறுத்து சமைக்கிறோம், ஆனால் மற்ற எல்லா வீடுகளிலும் பொதுவாக வான்கோழியை [turkey]  முழுமையாக சமைக்கிறார்கள் என அறிய முற்பட்டார் எனவும். அதனால் தன் தாயிடம் அதை பற்றி கேட்டார் என்றும் அதற்கு தாய் இப்படித்தான் எம் குடும்பத்தில் எப்பொழுதும் சமைப்பதாகவும், அதை தன் தாயிடம் இருந்து கற்றதாகவும் கூறினார் என்றும், அதனால் அந்த பெண் தனது பாட்டியிடம் சென்றார் என்றும், அவரும் அப்படியே விடை கூறியதால், அந்த ஆர்வமிக்க பெண் தனது பூட்டியிடம் சென்றாராம். அங்கு அந்த காலத்தில், தனது வீட்டில் நிலவிய சூழ்நிலையில் அல்லது வசதியில், தம்மிடம் இருந்த சமையல் பாத்திரத்தில் வான்கோழியை முழுமையாக சமைக்க முடியவில்லை என்றும்,
அதனால் அதை மூன்றாக அறுத்து சமைத்ததாகவும் கூறினார். என்றாலும் அந்த நடைமுறையை பார்த்த அவர்களின் குடும்பம் அதன் பின் அப்படியே மூன்றாக அறுத்து சமைக்க தொடங்கியதாம், அது பின்நாளில் அவர்களின் குடும்ப நடைமுறை ஆகிவிட்டது என்று அந்த கட்டுரை முடிக்கிறது. இப்படித்தான், பெரும்பாலான நடைமுறைகள், மரபுகள், பாரம்பரியங்கள் அல்லது சடங்குகள் சில அடிப்படைகளை கொண்டு உள்ளன எனலாம்.

உதாரணமாக, கிருமிநாசினி [disinfectant] என்று ஒன்று இல்லாத அந்த காலத்தில், பசுவின் சிறுநீர் பாவித்து உள்ளார்கள், அதே போல மாட்டுச் சாணத்தை வீடு மெழுகுவதற்கு பாவித்து உள்ளார்கள், வெள்ளி குவளையில் நீர், சூடான பானங்கள் கொடுத்து விருந்தினர் கௌரவிக்கப் பட்டார்கள். வெள்ளி ஒரு தொற்றுயிர்க்கொல்லி [germicidal], எனவே அது விருந்தினர் சில வேளை சுமந்து வரும் எந்த தொற்றுநோயையும் தடுக்க உதவியது. இப்படியே பல மதங்கள் அல்லது குழுக்கள் மாதவிடாய் தொடர்பான மரபுகளை கொண்டுள்ளன. மாதவிடாய் காலத்தில் உடல் சோர்வடைவது என்பது வாடிக்கையான ஒன்று, எனவே அந்த சமயத்தில் ஓய்வு என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்று, மேலும் அந்த கால சூழ்நிலை வசதிக்கு ஏற்ப, பெண்களின் ஆரோக்கியத்தை மனதில் கொண்டும் சில மாதவிடாய் மரபுகள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. இவைகளுக்கு பின்னால் சில அடிப்படைகள் இருப்பதை காண்கிறோம், எனினும் அவை இன்றும் பொருந்துமா என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். மேலும் நாம் இப்போது தற்கால சூழ்நிலைகளை அறிந்து, அதற்கேற்ப எங்கள் செயல்களை, நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். பழைமையைப் பேணுவதும் முன்னோர் வழியைப் பொன்னே போல் போற்றுவதும் மரபின் முக்கியக் கூறுகளாக இருப்பினும், வழக்காறுகள் அல்லது மரபுகள் பொதுவாக மாற்றம் பெறுகின்றன. புதிய அல்லது வேறு மரபுகள் வந்து சேருகின்றன. அதாவது, நடைமுறையில் இருந்து வந்த அல்லது பின்பற்றப்பட்ட மரபுகள் கால மாற்றத்திற்கு ஏற்ப விலகிப்போவதனை காணலாம். அப்படியானவற்றை நாம் கட்டி இழுத்து பற்றி நிற்க முடியாது என்பது நடைமுறை உண்மை ஆகும். எனவே, பண்டைய  நடைமுறைகளை அப்படியே வைத்திருக்க முடியுமா என்பது இன்று எம்முன் எழுகின்ற முக்கிய கேள்வியாகும். பண்டைய பாரம்பரியங்களை நாம் அப்படியே இறுகப்பிடித்துக்கொண்டிருந்தால் மனித சமூகம் முன்னேற்றம் கண்டிருக்க முடியாது. எனவே சமூகவளர்ச்சியின் காரணமாக சில தேவைகள் கருதி சில இல்லாதொழிந்து போவதும் உண்டு.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ஈமெயில்:kandiahthillai@yahoo.co.uk ]
பகுதி: 02 தொடரும்
ஆரம்பத்திலிருந்து வாசிக்க பின்வரும் தலைப்பினை click செய்யுங்கள்.
"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" [ஒரு ஆரம்பம்.......] 

1 comments:

  1. பழக்க வழக்கங்கள் காலத்துக்கு காலம் மாறிய போதிலும் பெண்கள் விடயத்தில் பெரியோர்கள் ஒரு அழுங்குப்பிடியாகவே இருந்து வந்திருக்கிறார்கள். அதனாலேயே ஓய்வுக்காக இருத்தப்படட பெண் கடடாய இருப்புக்குள் தள்ளப்பட்ட்தும், வேட்டிகள் பல மாற்றங்களை கண்டபோதும் சேலை நிரந்தரமானதும்.நல்ல தொரு தொடர் .தொடரட்டும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete