மனித வாழ்வு இறைவன் விதி?

மனிதனின் இந்த உலக வாழ்வானது ஏற்கனவே இறைவனால் நிர்ணயிக்கப்பட்ட விதியின்படி நடக்கின்றது என்பது எவ்வளவுக்கு உண்மை?

 

ஒவ்வொரு மனிதனும், வெவ்வேறு மனிதரின் வாழ்க்கையுடன் ஒப்புநோக்கும்போது, அவனின் வாழ்க்கைத்தரம் பல்வேறு விதமாக மாறுபட்டதாகவே காணப்படும். ஒருவன் அளவுக்கு மீறிய செல்வச் செழிப்புடன், சுகதேகியாக, மிகவும் ஆடம்பர வாழ்வு வாழ்ந்துகொண்டிருக்க, இன்னொருவன் அன்றாட உணவுக்கே வழியின்றி, கை, கால். கண்களை இழந்து, பெரும் நோய் கொண்டவனாய் வீதியில்  நொடிந்து கிடந்திருப்பான்.

 

உலகிற்கு நாலு நல்லது செய்தால் நல்லாய் வாழ்வார்கள்; கெட்டது செய்தால் துன்பப் படுவார்கள் என்று சான்றோர்கள் கூறியபடி அப்படி ஒன்றும் இந்த உலகில் நடப்பதாகத் தெரியவில்லையே!  பலரைக் கொலை செய்து, ஏமாற்றி பெரும் பணம் சம்பாதித்தவர்கள் சுக, போக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்க, நல்லவர்களாய்  இருந்தவர்கள், குடும்ப அங்கத்தினர் பலரையும் இழந்து, சுகம் குன்றி  அல்லல்பட்டுக் கொண்டிருப்பது ஏன்?

 

இந்த முரண்பாட்டு விளைவுகளுக்கு சரியான விடை காண முடியாத நம் முன்னோர்கள், மிகவும் இலகுவான விடை ஒன்றைக் காரணியாக முன்வைத்து, முடிவும் செய்தனர். அதுதான் 'கடவுள் விதி' கோட்பாடு.

 

இந்தப் பிரபஞ்ச உருவாக்கம், அவற்றின் இயக்கம், உயிர்கள் மற்றும் இயற்கை வளங்கள் படைப்பு, பராமரிப்பு, அழிப்பு, அத்தோடு மின்னல்,மழை வெயில், பகல், இரவு என்பன எல்லாம் எப்படி உண்டாகின்றன?  தெரியவும் முடியவில்லை; பகுத்தறியவும் முடியவில்லை. ஆகவே எல்லாம் கடவுள்தான் செய்துகொண்டு இருக்கிறார் என்று முடிவு செய்தார்கள்.

 

மனித வாழ்க்கையிலும் எல்லாமே இறைவன் சித்தப்படி, அவன் ஏற்கனவே விதித்தபடிதான் நடக்கும்; அதை மனிதனால் எப்படி முயன்றாலும் மாற்றவே முடியாது என்று முடிவு செய்தார்கள். இந்தக் கொள்கைக்கு எந்த மதமும் விதி விலக்கல்ல!

 

இறைவன் ஏற்கனவே நிச்சயம் செய்துள்ள வாழ்வுமுறைகளை ஒரு மனிதனுக்கு கிடைக்கச் செய்வதற்காக, அம்மனிதனின் சிந்தனைகளை அந்த அந்த இலக்குகளை அடையுமாறு வரத்தக்கதாய், இறைவன் அவன் மனதுக்குள் சென்று  செயல் படுத்திக் கொண்டு இருப்பார் என்று முடிவு செய்தார்கள்.

 

மனிதனுக்கு அன்றாடம் நிகழும், ஆசைகள், அபிலாசைகள். குடும்ப சூழ்நிலை, சமுதாய எதிர்பார்ப்பு, சுய முயற்சி, உற்பத்தித் திறன், தரம், மேலாண்மை, ஒழுங்கு, தீர்மானம், திருப்பு முனை, சாமர்த்தியம், செல்வாக்கு,  ஏற்புடைமை, சகிப்புடமை என்பதெல்லாம் அவனால் ஏற்பட்டதல்ல; எல்லாமே இறைவனது அந்த இலக்கு நோக்கிய இறைவனின் நகர்த்தல்களேயாகும் என்று சொல்கிறார்கள்.

 

அதாவது, நம்மை இயக்குவது அவனே! நாம் வெறும் இயந்திரங்களேதானாம்..

 

இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால், இங்கு ஒரு மனிதனின் நிகழ் கால வாழ்வு நடப்புகளை கணக்கில் கொள்ளாமல், அவனால் எவ்வளவு நல்லவை, எவ்வளவு கெட்டவை செய்யப்படலாம் என்று பகுத்துப் பார்க்காமல், அவனை ஒரு நடைப்பிணமாக, பிறக்கும் முன்னரேயே அவன் இப்படித்தான் பிறப்பான், வாழ்வான், இறப்பான் என்று முடிவு செய்து, கடவுள் தனது கணினியில் மாற்றமுடியாதவாறு போட்டு வைத்து விடுவார் என்பதே!

 

ஆபிரகாமிய மதங்களின் கடவுள்மார்கள், மற்றும் அவர்களுடன் நேரடியாகக் கதைத்த தீர்க்கதரிசிகள், உலகில் எப்போது, எங்கு, யாருக்கு என்ன நடக்கும் என்று சொல்லி வைத்துள்ளனர் என்று எழுதப்பட்டு இருக்கிறது. உதாரணமாக, ஜேசு பிறப்பதற்கு 700 வருடங்களுக்கு முன்னரேயே, இறை தூதர் ஒருவர் காட்டிக்கொடுக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டு, சவுக்கால் அடிக்கப்பட்டு, எச்சில் துப்பப்பட்டு,கைகள் கால்கள் துளைக்கப்பட்டு கொல்லப்படுவார் என்று சொல்லிவைத்துள்ளார்களாம்.. ஜேசுகூடி தான் எப்படி கொல்லப்படுவேன்  என்று மூன்று முறைகள் கூறியிருக்கிறார் என்று சொல்லப்படுகின்றது.

 

இஸ்லாமிய சமயத்திலும் மனித வாழ்வு என்பது இறைவனால் முன்னறிவிக்கப்பட்ட இறைகட்டளை; மாற்றவே கூடாதது. இங்கு பிறந்தால், கடவுள்கள் நிர்ணயித்த முறைப்படி வாழ்வு தானாகவே அமையும் என்பதுதான். இறைவன் படைத்த ஒன்றையும் மாற்றும் உரிமை மனிதனுக்கு இல்லை. மீறினால் தண்டிக்கப்படுவார்கள் என்று அவர்கள் நூல்களில் கூறப்பட்டிருக்கின்றது. 

 

அதனால்தான், கடவுளுக்களின் மைந்தர்களையோ, தூதுவர்களையோ, கடவுள் அவதாரங்கள் என்று தங்களைப் பிரகடனப் படுத்திக்கொண்டவர்களையோ, அந்தந்தக் கடவுள்மார்களை எப்படி வேண்டியும் அவர்களை சிலுவையிலிருந்தும், நஞ்சிலிருந்தும், சிறை வாசங்கள், நோய் நொடிகளிலிருந்தும், உத்தரித்த மரணங்களில் இருந்தும் காப்பாற்றமுடியவில்லை!

 

 

இந்து, பௌத்த சமயங்கள்  மனிதனால் ஏற்றுக்கொள்ள முடியாத கர்மா கொள்கையை நம்புகின்றன.. ஒருவரது விதி அவர் பிறக்கும்பொழுதே  அவரவர் முற்பிறப்பில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிடுகின்றது என்று சமய சாஸ்திரங்கள் பகர்கின்றன.

 

நாம் இப்பொழுது அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் எல்லாமே நாம் முற்பிறப்பில் செய்த நல்ல, கெட்ட காரியங்களின் விளைவுகளின் அடிப்படையில் மாத்திரமே நடை பெறும் என்றும், அதாவது எதுவும் நமது கர்ம விதிப்பயன்படி மாத்திரமே நடத்தப்படும் என்று காலம் காலமாக எடுத்துரைக்கப்பட்ட அறிவூட்டலாகும்.

 

முன் பிறப்பிலோ, வரும் பிறப்பிலோ நான் யார், என்ன, எது, எங்கு என்று ஒன்றுமே தெரியாத போது, அந்த என்னவோக்கள் அல்லது இல்லாததுகள் செய்த/செய்யாத நல்லது, கெட்டதுகள் எல்லாம் ஏன்தான் என்னைப் பாதிக்கவேண்டும் என்று ஒரு கணம் யோசித்தீர்களேயானால் உந்த கர்ம விதிகள் எல்லாம் ஓர் அர்த்தமற்ற பிதற்றுதல் என்றுதான் புரியவரும்.

 

அது வேறு ஒன்றும் இல்லை, எனது ஆன்மாதான் வேறு உடலில் இருந்தது/இருக்கும் என்று சொல்வார்கள். இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டுமே, எனக்கென்ன கவலை? அது யாரோ, என்னவோதானே? எனக்கென்ன லாபம்/நட்டம்?

 

தெரியாமல்தான் கேட்கிறேன்; ஒருவர் ஒரு குற்றம் செய்தால் அவரின் பெற்றோருக்கோ, பிள்ளைகளுக்கோ மாறித் தண்டனை கொடுப்பதில்லை. அவருக்கும் 100 வீதம் சந்தேகம் இல்லாது குற்றம் நிரூபிக்கப் பட்டால்தான் தண்டனை வழங்கப்படும். ஆனால் கர்மா?

 

ஒருவர் நாளுக்கு ஒரு வண்டிவீதம் எடுத்து சாலையில் ஓட்டும்போது, ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு மனிதன் மீது மோதி விபத்து உண்டாக்கியிருந்தால், தண்டனை எல்லா வண்டிகளுக்குமா அல்லது அவற்றை ஒட்டிய மனிதனுக்கா? அவற்றை இயக்கிய மனிதனுக்கல்லவா? ஒவ்வொரு வண்டிக்கு இல்லையே! அப்படி என்றால் கர்மா விதியின்படி ஆன்மாவைத் தண்டிக்காமல் ஒவ்வொரு பிறப்பிலும் உடல்களுக்குத் தண்டனை கொடுப்பது எந்த விதத்தில் நியாயம்?

 

ஆகவே எல்லா சமயங்களும் 'விதி' என்று ஒரு பொய்யான போதனையை முன்வைத்து, மக்களின் முளைகளை சிந்திக்க விடாது மழுப்பிக்கொண்டு இருக்கின்றன.

 

விதிப்படிதான் எதுவும் நடக்கும் என்று நினைத்திருப்பது ஒரு அர்த்தமற்ற நம்பிக்கை என்றே கூறலாம்.  விதி உண்மை என்றால்  எல்லோரும் பேசாமல் வீட்டிக்குள்ளேயே இருந்து இரவும் பகலும் படுத்துக்கொண்டே இருந்துவிடலாமே!  நமக்கு வேண்டிய வீடு, வசதி, வருமானம் எல்லாம் விதியே பார்த்துக்கொள்ளுமே! (மறந்துவிட்டேன், விதிப்படி படுக்க விதி இல்லை).

 

ஆனால், அறிவோடு சித்திக்கும் எவரும் இப்படியான, அர்த்தமற்ற கூற்றை ஏற்றுக்கொள்ள மறுப்பர். அப்படி நிறுவமுடியாத ஒன்றை பிடித்து வைத்துக்கொண்டு, நடப்பது வெறுமனே விதியின்படிதான் என்று கூறுவது, ஆராய விரும்பாதவர்களின் ஒரு சோம்பேறித்தனமான ஒரு வீழ்ச்சி என்றுதான் கூறவேண்டும். தெரியாது என்பதைத் 'தெரியாது' என்று சொல்லாது அதற்கு எதோ ஒரு சொல்லை வைத்து அழைப்பது சுத்த அறிவீனமாக இல்லை?

 

ஆகவே விதி என கூறுவது  உங்கள் மதியை மயக்கும் ஒரு சதியே ஒழிய வேறு  ஒன்றுமே இல்லை; உங்கள் 'விதி' உங்கள் கையில்தான் உள்ளது; வேறு... ஒரு புறக்காரணிகளில் இல்லை!

எண்ணம்:செ.சந்திரகாசன் 

0 comments:

Post a Comment