திருக்குறள்../20/.. பயனில சொல்லாமை

முகவுரை-19-கோயில்களும்நினைவிடங்களும்

குறளும் அதன் ஆசிரியரும் வழிவழியாக மக்களால் போற்றப்பட்டு வருகின்றனர். பதினாறாம் நூற்றாண்டின் துவக்கத்தில் சைவ சமூகத்தினர் மயிலாப்பூரில் உள்ள ஏகாம்பரேசுவரர்காமாட்சி ஆலய வளாகத்தில் திருவள்ளுவருக்குக் கோயில் ஒன்றை நிறுவினர். இங்குள்ள ஒரு இலுப்பை மரத்தடியில் தான் வள்ளுவர் பிறந்தார் எனவும் அதே இடத்தில் தான் வள்ளுவரது சீடரான ஏலேலசிங்கன் முதன்முதலில் அவருக்கு ஒரு வழிபாட்டுத் தலத்தை கட்டியதாகவும் நம்பப்படுகிறது. இம்மரத்திற்கடியில் குறளின் ஓலைச்சுவடியினை கையில் ஏந்திவாறு யோக நிலையில் வீற்றிருக்கும் வள்ளுவரது சிலை உள்ளது. அவ்விலுப்பை மரத்தையே ஸ்தல விருட்சமாகக் கொண்ட இக்கோயிலின் சன்னிதியில் வள்ளுவரின் சிலையோடு இந்துக் கடவுளான காமாட்சியம்மனின் உருவோடு ஒத்த வடிவில் அமைக்கப்பட்ட அவரது மனைவி வாசுகியின் சிலையும் உள்ளது. பண்டைய புராண நிகழ்வுகளோடு அக்கால வாழ்க்கை முறைகளையும் சித்தரிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள கோயிலின் கோபுரத்தில் வள்ளுவர் வாசுகிக்கு திருக்குறளை ஓதும் காட்சியும் செதுக்கப்பட்டுள்ளது. இக்கோயில் 1970-களில் பெரிய அளவில் புனரமைக்கப்பட்டது.

வள்ளுவருக்கு மேலும் பல கோயில்கள் தென்னிந்தியாவில் பரவலாகக் காணப்படுகின்றன. இவற்றில் முக்கியமானவை தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருச்சுழி, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பெரிய கலையம்புத்தூர், இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள தொண்டி, திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வில்வாரணி ஆகிய ஊர்களும், கேரள மாநிலத்தில் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள கஞ்சூர் தட்டன்பாடி, இடுக்கி மாவட்டத்திலுள்ள சேனாபதி ஆகிய ஊர்களும் ஆகும். இவற்றில் மயிலாப்பூர், திருச்சுழி உள்ளிட்ட இடங்களில் வள்ளுவர் சைவ மதத்தினரால் 64-வது நாயன்மாராகப் போற்றப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

1976-ம் ஆண்டு சென்னையில் குறளையும் அதன் ஆசிரியரையும் நினைவு கூறும் விதமாக வள்ளுவர் கோட்டம் கட்டப்பட்டது. இந்நினைவிடத்தின் முக்கிய அம்சமாக திருவாரூர் தேரின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள 39 மீட்டர் (128 அடி) உயரத் தேர் விளங்குகிறது. இதனுள் ஆளுயர வள்ளுவர் சிலை ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. இத்தேரைச் சுற்றிலும் பளிங்குக் கற்களில் குறட்பாக்கள் பதிப்பிக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளன.

இந்நினைவிடத்தின் பிரதான வளாகத்தில் 1,330 குறட்பாக்களும் கல்வெட்டுகளாகச் செதுக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

 

வள்ளுவரின் சிலைகள் உலக அளவில் பரவலாகக் காணப்படுகிறது. இவற்றில் முக்கியமானவை கன்னியாகுமரி, சென்னை, பெங்களூரு, புதுச்சேரி, விசாகப்பட்டினம், ஹரித்வார், புத்தளம், சிங்கப்பூர், இலண்டன், தாய்வான் ஆகிய இடங்களிலுள்ள சிலைகளாகும். இவற்றுள் மிக உயரமான சிலை கன்னியாக்குமரியில் வங்கக் கடல், அரபிக் கடல், இந்தியப் பெருங்கடல் ஆகிய மூன்றும் சங்கமிக்கும் இடமான இந்திய தீபகற்பத்தின் தென்முனையில் 2000-ம் ஆண்டு நிறுவப்பட்ட 41 மீட்டர் (133 அடி) உயரக் கற்சிலையாகும். இச்சிலை தற்போது இந்தியாவின் 25-வது பெரிய சிலையாகும். 1968-ம் ஆண்டு ஜனவரி 2 அன்று தமிழக அரசு சென்னையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நிறுவிய பல ஆளுயரச் சிலைகளில் வள்ளுவரின் முழு உருவச் சிலையும் ஒன்றாகும்.

[திருக்குறள் முகவுரை20,  அடுத்தவாரம் தொடரும்]

திருக்குறள் தொடர்கிறது


20. பயனில சொல்லாமை

👉குறள் 191:

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்

எல்லாரும் எள்ளப் படும்.

மு. உரை:

கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்.

சாலமன் பாப்பையா உரை:

பலரும் கேட்டு வெறுக்கப், பயனற்ற சொற்களைச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான்.

கலைஞர் உரை:

பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லோரும் இகழ்ந்துரைப்பார்கள்.

 

👉குறள் 192:

பயனில பல்லார்முன் சொல்லல் நயனில

நட்டார்கட் செய்தலிற் றீது.

மு. உரை:

பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

ஒருவன் பலருக்கும் முன்னே பயனற்ற சொற்களைச் சொல்வது, நண்பர்களுக்குத் தீமை செய்வதைக் காட்டிலும் கொடியது.

கலைஞர் உரை:

பலர்முன் பயனில்லாத சொற்களைக் கூறுவது, நட்புக்கு மாறாகச் செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும்.

 

👉குறள் 193:

நயனில னென்பது சொல்லும் பயனில

பாரித் துரைக்கும் உரை

மு. உரை:

ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.

சாலமன் பாப்பையா உரை:

பயனற்ற சொற்களை விரித்துப் பேசும் ஒருவன் பேச்சு அவன் நீதியற்றவன் என்பதைக் காட்டிவிடும்.

கலைஞர் உரை:

பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்.

 

👉குறள் 194:

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்

பண்பில்சொல் பல்லா ரகத்து

மு. உரை:

பயனோடு பொருந்தாத பண்பு இல்லாத சொற்களைப் பலரிடத்தும் சொல்லுதல், அறத்தோடு பொருந்தாமல் நன்மையிலிருந்து நீங்கச் செய்யும்.

சாலமன் பாப்பையா உரை:

பயனற்ற, பண்பும் இல்லாத சொற்களை ஒருவன் பலரிடமும் சொன்னால் அச் சொற்களே அவனை நீதியுடன் சேராமல் நற்குணங்களிலிருந்து நீக்கிவிடும்.

கலைஞர் உரை:

பயனற்றதும், பண்பற்றதுமான சொற்களைப் பலர்முன் பகர்தல் மகிழ்ச்சியைக் குலைத்து, நன்மையை மாய்க்கும்.


👉குறள் 195:

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில

நீர்மை யுடையார் சொலின்.

மு. உரை:

பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவனுடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.

சாலமன் பாப்பையா உரை:

இனிய குணத்தவர் பயனற்ற சொற்களைச் சொன்னால், அவர் பெருமையும், புகழும் அப்பொழுதே நீங்கிவிடும்.

கலைஞர் உரை:

நல்ல பண்புடையவர் பயனில்லாத சொற்களைக் கூறுவாரானால் அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கி விடும்.

 

👉குறள் 196:

பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்

மக்கட் பதடி யெனல்.

மு. உரை:

பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

பயனற்ற சொற்களையே பலகாலமும் சொல்பவனை மனிதன் என வேண்டா; மனிதருள் பதர் என்றே சொல்லுங்கள்.

கலைஞர் உரை:

பயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்.

 

👉குறள் 197:

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்

பயனில சொல்லாமை நன்று.

மு. உரை:

அறம் இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், சான்றோர் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாமல் இருத்தல் நன்மையாகும்.

சாலமன் பாப்பையா உரை:

நீதியற்ற சொற்களைச் சொன்னாலும் பயனற்ற சொற்களைச் சொல்லாமல் இருப்பது சான்றோர்க்கு நல்லது.

கலைஞர் உரை:

பண்பாளர்கள், இனிமையல்லாத சொற்களைக்கூடச் சொல்லி விடலாம்; ஆனால் பயனில்லாத சொற்களைச் சொல்லாமல் இருப்பதே நல்லது.

 

👉குறள் 198:

அரும்பய னாயும் அறிவினார் சொல்லார்

பெரும்பய னில்லாத சொல்.

மு. உரை:

அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்.

சாலமன் பாப்பையா உரை:

அரிய பயன்களை ஆராயும் அறிவுடையோர், பெரும்பயன் இல்லாத சொற்களைச் சொல்லார்.

கலைஞர் உரை:

அரும்பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய ஆற்றல் படைத்தவர், பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்த மாட்டார்.

 

👉குறள் 199:

பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர்.

மு. உரை:

மயக்கத்திலிருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர், பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்லமாட்டார்.

சாலமன் பாப்பையா உரை:

மயக்கமற்ற தூய அறிவினை உடையவர், பொருளற்ற சொற்களை மறந்தும் சொல்லார்.

கலைஞர் உரை:

மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற சொற்களைச் சொல்ல மாட்டார்.

 

👉குறள் 200:

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க

சொல்லிற் பயனிலாச் சொல்.

மு. உரை:

சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது.

சாலமன் பாப்பையா உரை:

சொற்களில் அறம், பொருள், இன்பம் ஆகிய பயன்தரும் சொற்களையே சொல்லுக; பயனற்ற சொற்களைச் சொல்லவேண்டா.

கலைஞர் உரை:

பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்.

திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்....

 

 

0 comments:

Post a Comment