சிரிக்க..சில நிமிடம்

நகைச்சுவை=ஜோக்ஸ் 

⇔⇔⇔⇔⇔⇔

😆நலம் கெட்ட பயணம்😆

ரெயிலில் பயணம் செய்து இறங்கிய நண்பனை பார்த்து...

 

 ஒருவன்: "ஏன் ஒரு மாதிரியா இருக்கிறாய்? உடல்நலம் சரி  இல்லையா"

 

நண்பன்: நான் எப்பொழுதும் ரெயில் செல்லும் திசையில் பார்த்தபடி அமர்வேன். நன்றாக இருக்கும். இன்று எதிர்பக்கத்தில் அமர்ந்து வந்தேன். அதனால் உடல்நலம் கெட்டுவிட்டது."

 

ஒருவன்: "எதிரில் இருப்பவரிடம் உன் நிலைமையைச் சொல்லி இடம் மாறி  அமர்ந்திருக்கலாமே!''

 

நண்பன்: நானும் அப்படித்தான் நினைத்தேன் ஆனால் எதிரில் யாரும் அமர்ந்திருக்கவில்லையே!  நான் என்ன செய்வேன்?


😆எப்படி அழைப்பது?😆

மனோ தத்துவ டாக்டர் இடம் வந்த நோயாளி:டாக்டர், எப்பவும் நான் பரபரப்பாக இருக்கிறேன். உள்ளத்தில் அமைதி இல்லை.

 

 அவனை நன்கு பரிசோதித்த டாக்டர்:கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு ஒரு நோயும் இல்லை. உங்களுக்கு யார் யார் எரிச்சல் உண்டாக்குகிறார்கள், அவர்களை விட்டு சிறிது காலம் விலகி இருங்கள்.  எல்லாம் சரியாகிவிடும். வாரத்துக்கு ஒரு முறை என்னை வந்து பாருங்கள்.”

 

 இரண்டு வாரம் கழித்து அவன் வந்து டாக்டரைப் பார்க்கவில்லை. என்ன ஆயிற்று என்று கவலையில், அவனுக்குப் போன் செய்தார் டாக்டர்.

 அவன்:”நீங்கதானே டாக்டர், -எரிச்சல் ஏற்படுத்துறவங்களைக் கொஞ்ச காலம் பார்க்க வேண்டாம்- என்று சொன்னீர்கள். உங்களைவிட யாரும் எனக்கு அதிக எரிச்சல் தருவதாகத் தெரியவில்லை. அதனால் தான் பார்க்க வரவில்லை”

 என்று பதில் கூறினான்.


😆பக்கத்தில் இருக்கும் போதே😆

புதிதாக லொறி  வாங்கி ஒருவர், டிரைவர் பக்கத்தில் அமர்ந்து கொண்டு, வண்டியை ஓட்ட டிரைவரிடம் சொன்னார். வண்டி ஓட தொடங்கியதும், கடமுட என்று சத்தம் கேட்டது.

 

 உடனே அவர் "என்ன சத்தம் கேட்குது" என்று டிரைவரை கேட்டார்.

 

 "நான் கியரை மாற்றினேன். அதனால்தான் அந்த சத்தம்" என்றான் டிரைவர்.

 

"நான் பக்கத்தில் இருக்கும் போதே நீ கியரை மாற்றினால், நான் இல்லாத போது நீ என்னவெல்லாம் செய்ய மாட்டாய்? என் வண்டியை விட்டு இறங்கு" என்று கோபத்துடன் கத்தினர்,அவர்.

 

😆புதுமையான கண்டிஷன்😆

துணி கடைக்குள் நுழைந்த அந்தப் பெண்மணி,பல மணி நேரத்தின்பின்  ஒரு புடவையை எடுத்தாள். கடைக்காரரை பார்த்து, "நான் சொல்லுகிற கண்டிஷனுக்கு நீங்கள் ஒப்புக் கொண்டால், இதை விலைக்கு வாங்கிக் கொள்ளுகிறேன்." என்றாள்.

 

 கடைக்காரர் "என்ன கண்டிஷன்" என்று கேட்டார்.

 

"என் கணவருக்கு இந்த சேலை பிடிக்காவிட்டால் , எக்காரணத்தை முன்னிட்டும் விற்ற பொருளைத் திரும்ப எடுக்கமாடடோம் என்று நீங்கள் எனக்கு உறுதி தரவேண்டும் ," என்றாள்.

 

😆இரவல் தரமாட்டேன்😆

 புது படம் வெளியாகி இருந்தது. திரையரங்கம் முழுமையும் நிரம்பி இருந்தது. நாகரிகமான பெண்மணியின் பக்கத்தில் அழுக்கு உடை அணிந்த சிறுவன் ஒருவன் அமர்ந்து இருந்தான். அந்தப் பையன் ஓயாமல் இருமிக் கொண்டும் அருவருக்கத் தக்க முறையில் சளியை சுற்றுப்புறமும்  சிந்திக் கொண்டும்   இருந்ததால் பொறுத்துப் பொறுத்து பொறுமை இழந்த அப் பெண்மணி அவனைப் பார்த்து,

" நீ கைக்குட்டை வைத்திருக்கிறாயா" என்று கேட்டாள்.

 "வைத்திருக்கிறேன். ஆனால் முன் பின் அறிமுகம் இல்லாத யாருக்கும் நான் அதை இரவல் தருவது இல்லை." என்றான்  அவன்.

தொகுப்பு மனுவேந்தன் செல்லத்துரை


0 comments:

Post a Comment