நம்மை நோக்கி வரும் புதுமைகள்

 அறிவியல்=விஞ்ஞானம்

கண்களைப் பாதிக்கும் வெப்பம்...


புவி வெப்பமடைதல் ஆதலால் வரும் பெரும்பாலான பிரச்சனைகள் வெளிப்படையானவை தற்போது உயர்ந்த வெப்ப நிலையில் முதியவர்களுக்கு கண் நோய்கள் அதிகரிக்கின்றன என்று ஆய்வுகளில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

 கனடாவில் உள்ள டொரண்டோ பல்கலை மேற்கொண்ட ஆய்வில் அமெரிக்காவை சேர்ந்த 65 வயதுக்கு மேற்பட்ட 17 லட்சம் முதியவர்களின் மருத்துவ அறிக்கைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. ஆய்வில் சராசரி வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் உள்ள பகுதிகளில் வாழும் முதியவர்களை விட 15 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை உள்ள பகுதிகளில் வாழும் முதியோருக்கு கண் நோய், 44% அதிகமாக ஏற்பட்டுள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

 அதிலும் பெண்களை விட ஆண்களுக்கு பாதிப்பு அதிகமாக உள்ளது.

 

 அதிக வெப்பநிலை உள்ள பகுதிகளில் புற ஊதா கதிர் தாக்கத்தால் பார்வை குறைபாடு ஏற்படுவதாக ஒரு பகுதி ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மற்றொரு சாரார் அதிக வெப்ப நிலையில் மனித உடலில் உள்ள போலிக் அமிலம் பாதிக்கப்படுவதால் கண் நோய்கள் வருவதாக கருதுகின்றனர்.

 👀👀👀

 

பாதரசத்தில் இருந்து தீர்வு!...


இரும்பு, தாமிரம், துத்தநாகம், மாங்கணீஸ்   முதலிய சில உலோக தாதுக்கள் மனித உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமானவை. ஆனால் பாதரசம் போன்ற கன உலோகங்கள் ஆபத்தானவை. இயற்கையாக நம்மைச் சுற்றி பல வடிவங்களில் இருக்கும் பாதரசம் உணவின் வாயிலாகவோ, முகப்பூச்சுக்களின் வாயிலாகவோ  உடலில் நுழைகிறது. மீன் உணவுகளில் வாயிலாக பாதரசம் மனித உடலில் புக, மிக அதிகமான வாய்ப்பு உள்ளது.

 

 இது  மெதில்மெர்க்குரி வடிவத்தில் இருக்கும்போது, நம்முடைய உடலால் சுலபமாக உறிஞ்சப்படுகிறது. இவ்வாறு உறிஞ்சப்பட்டு நரம்பு மண்டலத்தை தாக்கி மூளையின் செயற்பாட்டை முடக்குகிறது. கரு உருவாகவதிலும் குழந்தையின் நரம்பு மண்டல வளர்ச்சியிலும் இது மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது.

 

 பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், மெதில்மெர்க்குரியை குடலால் உறிஞ்சப்படாத வடிவமாக மாற்றும், ஆர்கனோமெர்குரியல் எனும் நொதியைச்  சுரக்கும் பேசிலஸ் மெகாடேரியம் எனும் பாக்டீரியாவைக்  கண்டுபிடித்துள்ளனர்.

 

 இந்த நொதியைச் சுரக்கும் மரபணுவை மனித குடலில் வாழும், 'லாக்டிகேசெய்பேசிலஸ்'

பாக்டீரியாவுக்கு வெற்றிகரமாக செலுத்தியுள்ளனர்.

 

 இதனைத் தொடர்ந்து ஆய்வாளர்கள் இந்த பாக்டீரியாவை ஏலிகள், மனிதர்கள் மீது சோதித்துப் பார்க்க உள்ளனர். சோதனை முடிவில் இதன் பயன் தெரியவரும்.

  👀👀👀

 

அழற்சி நோய் மருந்து

'அல்சரேட்டிவ்' பெருங்குடல் அழற்சி என்பது பெருங்குடலையும், மலக்குடலையும் பாதிக்கும் ஓர் அழற்சி நோய். பெரிய குடலின் ஒரு பகுதி மற்றும் மலக்குடலை பாதிக்கும் ஒரு அழற்சி நிலை. வீக்கம் பொதுவாக பெருங்குடல் மற்றும் மலக்குடலின் உள்புறத்தில் காணப்படுகிறது

 

 'மிரிகிஜுமாப்' எனும் மருந்து, இந்நோயை குணப்படுத்துவதாக மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்நோயால் பாதிக்கப்பட்ட 1,281 நபர்களைத் தேர்ந்தெடுத்து, 52 வாரங்கள் இந்த மருந்தைச் செலுத்தி ஆய்வு  நடத்தினர். சிலருக்கு 12 வாரங்களிலேயே பலன் கிடைக்கத் துவங்கியது.

 👀👀👀

 

கொசுக்களுக்குச் சாவு மணி


டெங்கு காய்ச்சல், மலேரியா, ஜப்பானிய மூளைக்காய்ச்சல், ஜிகாவைரஸ் தொற்று முதலிய கொடிய நோய்களைப்  பரப்புவதற்குக்  கொசுக்கள் காரணமாக அமைந்துள்ளன. இன்றைய நிலையில் கால நிலை மற்றும் நகரமயமாக்கல் கொசுக்களின் வாழ்விடத்தை விரிவு படுத்தி உள்ளன. இது ஏராளமான மக்களுக்கு நோயைப் பரப்ப வழி செய்துள்ளது.

 

 வழக்கமாக பூச்சிக்கொல்லிகளைப்  பயன்படுத்திக்  கொசுக்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இவை மனிதர்களுக்கும் உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தும். இப்போது ஆராய்ச்சியாளர்கள் பூச்சிக்கொல்லிகளைப்   பயன்படுத்தாமல் கொசுக்களை அழிப்பதற்கான ஒரு வழியை உருவாக்கி உள்ளனர்.

 

 'சர்பாக்டன்ட்கள்' என்பவை மேற்பரப்பு அழுத்தத்தை குறைக்கும் நீர் எதிர்ப்பு தண்ணீரை ஈர்க்கும் பகுதிகளை கொண்ட மூலக்கூறுகள். சோப்புகள் அழகு சாதனப்  பொருட்களில் இவை பரவலாகப்  பயன்படுத்தப்படுகின்றன.

 

 மனிதர்களுக்கு பாதுகாப்பானவையாக கருதப்படும் 'சர்பாக்டன்ட்கள்' அவைகளை கொசுக்கள் மீது பரிசோதிக்கத் தொடங்கினர்.

 

'ஸ்பைராக்கிள்ஸ்' எனப்படும் சிறிய துளைகள் வாயிலாக கொசுக்கள் சுவாசிக்கின்றன.

 

மிகக் குறைந்த மேற்பரப்பு அழுத்தம் கொண்ட 'சர்பாக்டன்ட்' கரைசல்களைத் தெளித்தபோது கொசுக்கள், அவற்றின் சுவாசக்குழாய்கள் அடைபட்டு, மூச்சு விடமுடியாமல் கீழே விழுந்து இறந்தன.

 

தெளிப்பான்கள் வாயிலாக, சர்பாக்டன்ட்'களைக் கொசுக்கள் மீது தெளிப்பதே சிறந்த வழி என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

தொகுப்பு மனுவேந்தன் செல்லத்துரை

0 comments:

Post a Comment