விஞ்ஞானம்

`தூக்கத்தில் நடக்கும் வியாதிக்குக் காரணம் என்ன? விஞ்ஞானிகள் விளக்கம்.!
ஒரு விந்தையான வியாதி- `சோம்னாம்புலிஸம் எனப்படும் தூக்கத்தில் நடக்கும் நோய். `குரோமோசோம் குறைபாடே இந்நோய்க்குக் காரணம் என்று விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்திருக்கிறார்கள். சிலரை தூக்கத்தில் நடக்க வைக்கும் `மரபணு சங்கேதக் குறியீட்டை அவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.
அந்த சர்வதேச ஆய்வுக் குழு, தூக்கத்தின்போது ஒருவரின் இதுபோன்ற நடத்தைக்கு குரோமோசோமில் ஏற்பட்டிருக்கும் பிழையே காரணம் என்று உறுதியாகக் கூறு கிறது. ஒரே குடும்பத்தின் நான்கு தலைமுறையினரை அவர்கள் ஆய்வு செய்திருக்கின்றனர். அப்போது குரோமோசோமின் ஒரு பகுதியில் ஏற்பட்டிருக்கும் குறைபாட்டை அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
அந்தக் குறைபாடான டி.என்.ஏ.யின் ஒரு பகுதி அடுத்த தலைமுறைக்குப் போனால் போதும். அது தூக்கத்தில் நடக்கும் வியாதியை ஏற்படுத்திவிடும். தற்போது, அந்த மரபணு சங்கேதக் குறியீட்டுப் பகுதியை விஞ்ஞானிகள் தனிமைப்படுத்தியிருக் கிறார்கள். அதன்மூலம், தூக்கத்தில் நடக்கும் வியாதிக்குத் தீர்வு காண முடியும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.
வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி ஆய் வாளர்கள், கிறிஸ்டினா கர்னட் என்பவர் தலைமையில் இதுதொடர்பான ஆய்வில் ஈடுபட்டார்கள். அவர்கள், பரம்பரையாக தூக்கத்தில் நடக்கும் வியாதி பாதிப்பு இருந்தவர்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டனர். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமி ஹன்னாவுக்குக் கூட குறிப்பிட்ட வியாதிப் பாதிப்பு இருந்தது. அவள் தூக்கத்திலேயே நடந்து வீட்டை விட்டு வெளியேறிவிடுவதை வழக்கமாக (!) கொண்டிருந்தாள்.
அந்தக் குடும்பத்தினரின் உமிழ்நீர் மாதிரிகளை ஆராய்ந்ததில், `குரோமோசோம் 20-ன் சங்கேதக் குறியீட்டுப் பிழைதான் தூக்கத்தில் நடக்கும் வியாதிக்குக் காரணம் என்று கண்டு பிடிக்கப்பட்டது. அது, தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு வந்திருக்கிறது. பெற்றோருக்கு இந்த `ஜீன்’ இருந்தால் அவர்களின் குழந்தைகளுக்கும் அது செல்லும் வாய்ப்பு 50 சதவீதம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தங்களின் கண்டுபிடிப்பு, தூக்கத்தில் நடக்கும் வியாதியைக் குணப்படுத்தும் முயற்சியில் ஒரு முக்கியமான முன்னேற்றம் என்றும் அந்த விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்கள்.

0 comments:

Post a Comment