ஆவதும் பெண்ணாலே,அழிவதும்...

கனடாவிலிருந்து ஒரு கடிதம்

                                                                                                                       27-09-2017
அன்புள்ள அப்புவுக்கு,
நான் நலமுடையேன். அதுபோல் உங்கள் சுகமும் ஆகுக என வாழ்த்துகிறேன்.
அப்பு, நான் கொடுத்த பழமொழிக்கு பின்வருமாறு நீங்கள் கொடுத்த விளக்கம் சரியானதாகத் தோன்றினாலும் தற்காலத்து நிகழ்வுகளை வைத்தே அப்படிக் கூறினேன்.
அதாவது இப் பழமொழிக்கு உங்கள் விளக்கம் 
ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்து. புகுந்த வீட்டிற்கு அனுப்பும் பொழுது மணமகன் வீட்டார்க்கு எச்சரிக்கையாக சொல்லப்பட்ட பழமொழி இது, அதாவது இரு வீட்டாருடைய அடுத்த தலைமுறையைக் கருவாக்கி உருகொடுப்பதும். கருவை சிதைத்து உருகலைப்பதும் இரண்டும் இந்த பெண்ணாலேயே நிகழ்கிறது, ஆகவே தங்கள் தலைமுறை தழைக்க வேண்டுமென்றால் மனநிறைவோடு பெண்ணை வைத்துக் கொள்ள வேண்டும், அப்படி வைத்துக் கொண்டால் தான் சுகமான பிரசவத்தை அவள் அனுபவித்து அவர்களின் நல்லதொரு வாரிசை ப்பெற்றெடுப்பாள்.

அப்பு,நான் ஏன்  அப்படி எழுதியதாக விளக்கம் கேட்டிருந்தீர்கள். 
எங்கள் உறவுக்காரன் பரமு முன்னர் எப்படி இங்கு இருந்தான் என்பது  இந்த நாடறிந்த விசயம். ஆனால் நான் அதுபற்றி எதுவும் உங்களுக்கு எழுதியதில்லை. அவன் குடிவகைகளோடு தான் கூடி  வாழ்ந்தவன். எத்தனை நாட்கள் மதுபோதையில் றோட்டில்  வீழ்ந்து கிடந்த அவனை  போலீஸ் கண்டு அவனை ஏற்றியிருப்பர். அவ்வேளையில் அவன் திருந்தவில்லை.  அப்படி இருந்தவன் இன்று திருமணத்தின் பின் எப்பிடி  மாறினான் என்று புரியவில்லை. அவனை இப்போது காணும் நேரமெல்லாம் அவனா இவன் என்று ஆச்சரியமாக நிமிர்ந்து பார்க்கவேண்டியுள்ளது. எவ்வளவு நல்ல வனாக மாறிவிட் டான் . அவன் என்னிடம் இந்த மாற்றத்திற்கு காரணம் தன்  மனைவிதான் என்று என்னிடம் கூறும்போது என் நெஞ்சம் நெகிழ்கிறது. நான் அந்த பெண்ணுக்கு மனதார நன்றிகள் கூறிக்கொள்வேன் . அந்த கருத்திலேயே அப்பழமொழியினை உங்களுக்கு தெரிவித்துக் கொண்டேன்.

அப்பு, இங்கு சில நாட்டுக்காரங்கள் மனைவிமாரை கொடுமைப்படுத்துறாங்கள் என்றே இங்கு பெண்களுக்கான பாதுகாப்பு சட் டங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த நாட்டுக்கு புதிதாக வந்த எம்மவர்களின் பெண்கள் அவற்றினை சரியாகப்  புரிந்து கொள்ளாது அவற்றினை ஆயுதமாகப் பயன்படுத்தி சிறு பிரச்சனைகளையும் அங்கு எடுத்துச் செல்வதால் நம்மோர் மத்தியிலும் குடும்ப பிரிவுகள் அதிகரிக்க அச்செயல்பாடுகள் காரணமாக அமைந்து விடுகின்றன.
மனிதர்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள்.அவர்களின் உணர்வுகள்,விருப்பு வெறுப்புக்கள் வித்தியாசமானவை.குடும்பம் என்று இருவர் இணையும்போது இவற்றை எல்லாம் சந்திக்கவும் விட்டுக் கொடுக்கவும் இருவருமே தயாராக இருக்கவேண்டும். இல்லாவிடில் உலகத்தில் எவருமே ஒரு குடும்பமாக வாழ முடியாது என அப்பு  நீங்கள் அடிக்கடி கூறுவதனை நான் மறக்கவில்லை.

அப்பு, ஒரு குடும்பத்தில் ஒரு பிரச்சனை நடந்துவிடால் அதற்கு காது,மூக்கு வைத்து கதையினை அதுவும் பெண்ணைப் பற்றி தப்புத் தப்பாகக் கதை பரப்புவதில் பெண்கள்தானே மும்முரமாக இருக்கிறார்கள். அதாவது பெண்களே பெண்களுக்கு எதிரிகளாக இருக்கின்றனர். இந்த நிலைமைகள் என்று மாறும்? அன்றுதான் அனைவரும் சுதந்திரக் காற்றினை அனுபவிக்கமுடியும்.

அப்பு,வேறு விடையமில்லை. உங்கள் தேவைகளையும், சுகத்தினையும் அறியத்தாருங்கள்.

இப்படிக்கு 
அன்பின் மகன் 
செ .ம. வேந்தன் 

0 comments:

Post a Comment