எழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:02

எழுத்து முறைமை (writing system), என்பது ஒரு தகவலை வாசித்து அறியக் கூடிய  வகையில் குறியீடுகள் மூலம் பதிவு செய்வது எனலாம். இதை கண்டு பிடித்தது தான் மனிதனின் மிகப் பெரிய சாதனை ஆகும், ஏனென்றால்,மொழியினை போற்றி பாது காத்து அடுத்த அடுத்த தலை முறைக்கு இட்டுச் செல்லக் கூடியது எழுத்து மட்டுமே ஆகும். அதாவது, எழுத்து எமது குரல் கேட்கக் கூடிய தூரத்திற்கு அப்பாலும் சென்று, எமது எண்ணங்களை எல்லா இடமும் எல்லா காலமும் வெளிப்படுத்து கிறது. இந்த திறனில் தான் மனிதனின் எல்லா விதமான தேடலும், வரலாறு உட்பட தங்கி உள்ளது. உதாரணமாக, எழுத்து, பதிவு பேணல் [record-keeping] ஒன்றை செய்ய துணை புரிகிறது. இதனால் நாம் இன்று தீர்க்கதரிசிகளின் அறிவுரைகளை, கல்லறையில் செதுக்கப் பட்டவையை மற்றும் வரிகள் சேகரிப்புகளைப் பற்றி படிக்கக் கூடியதாக உள்ளது. மேலும் எழுத்து எமது எண்ணங்களை ஆராய்ந்து, திருத்தி, தொகுத்து வழங்க இடம் அளிக்கிறது. ஆகவே இது எமது எண்ணங்களை யோசனைகளை திருத்தம் செய்து புதுப்பிக்க வழி வகுக்கிறது. எனவே எழுத்து, எந்த ஒரு நாகரிகத்தினதும் உச்சம் என நாம் பொதுவாக கருதலாம். என்றாலும் இன்று மதங்களுக்கு இடையே யான மோதலையும் சிலவேளை உள்- மத உட்பூசல்களையும் ஏற்படு த்தவும் இதுவே தூண்டு கோலாகவும் அமைந்தது, 

உதாரணமாக, மேல் பழைய கற்காலப் பகுதியில் [Upper Palaeolithic Revolution] தோன்றிய
முதலாவது சமய அமைப்பு ஒரு வாய்வழியாக ஒவ்வொரு இனக் குழு உறுப்பினர்களிடமும் அவர்களின் புதிய தலைமுறைக்கும் பரப்பபட்டன. அதன் பின் பல காலங்கள் கடந்து, எழுத்து முறை கண்டு பிடிக்கப்ப ட்டதும் அவை முதலில் எழுத்துருவில் பதியப்பட்டன. இதனால் அவை கால, சூழ்நிலை மாற்றத்திற்கு ஏற்ப மாற்றம் அடையக் கூடிய நெகிழ்வு தன்மையை இழந்தன. பொதுவாக வாய்வழி மரபுகள் காலப்போக்கில்- அவர்களின் அறிவு அனுபவத்திற்கு ஏற்ப- விட்டுக்கொடுப்பு களுடன் விரிவுபடுத்தக் கூடியவை, ஆனால் எழுத்துருவில் பதியப்பட்டவை அப்படியல்ல. இது ஒரு துரதிருஷ்டவசமே. ஏனென்றால், வெவேறு இடங்களில் அந்த அந்த கால, சூழ்நிலைக்கு ஏற்ப, அவர் அவர்களின் ஒரு ஊகத்தின் அடிப்படையில் ஏற்பட்ட வெவேறு சமயங்கள் தனித்துவமாக விட்டுக் கொடுப்பு செய்ய முடியாத நிலையில் அவை வெவ் வேறாகவே இருக்கவேன்டியதாயிற்று. அவைகளின் போதனைகள், சிந்தனைகள் மாறுபட்ட வையாக இருந்தன. அது மட்டும் அல்ல, தமது மத அறிவுறுத்தல்கள், சடங்குகள், நம்பிக்கைகள் தமது ஆண்டவனே தமக்கு நேரடியாக தந்தவை என திடமாக நம்பினர். ஆகவே வெவ்வேறு மதங்களுக்கிடையான சமரசம் அல்லது இணக்கம் அடைவது கடினமாகவும் அதிகமாக முடியாத ஒன்றாகவும் இருந்ததுவே இதற்கு காரணமாகும்.

உலகில் ஒரு சில சந்தர்ப்பங்களில் தான் எழுத்தை முழுக்க முழுக்க தாமே கண்டு பிடித்தார்கள். மற்றவர்கள் எல்லோரும் அதிகமாக கடன் வாங்கியோ அல்லது அதை தழுவியோ அல்லது அதனால் ஏற்பட்ட  உத்வேகத் தாலோ தங்களுக்கான எழுத்தை, அவர்களுக்கு முன்பே இருந்த எழுத்து முறையில் இருந்து, விருத்தி செய்து அமைத்தார்கள். மனித வரலாற்றில் ஆக ஐந்து சுயாதீன எழுத்து முறைமைகளே  உண்டாக்கப் பட்டுள்ளன என பொதுவாக நம்பப் படுகிறது. அவை சுமேரியன்,எகிப்தியன், ஹரப்பன் [சிந்து வெளி] , மாயன் ,சீனம் ஆகும். இந்த ஐந்து மொழிகளில் மூன்றுடன் பல தொடர்புகளை திராவிட மக்களும்,அவர்களின் மொழியும், பண்பாடும் கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. 

இதில் சுமேரிய மொழியே, இன்றைய மனிதர்கள் அறிந்த எழுத்து மொழிகளுக்குள்
மிகவும் பண்டைய மொழியாகும். இது மெசொப்பொத்தே மியாவில் ஐயாயிரம், ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பேசப்பட்ட, எழுதப்பட்ட மொழியாகும். கிமு 2000 அளவில் இந்த, சுமேரிய மொழியானது அக்காத் மொழியால் மாற்றீடு செய்யப்பட்டு, கி.பி. முதலாம் ஆண்டுக்கு பிறகு அது முற்றிலும் பாவனையில் இருந்து நீங்கி விட்டது. அதன் பிறகு இந்த நூற்றாண்டில்  தான், சுமேரிய எழுத்தின் பொருள் சரியாக கண்டு பிடிக்கப் பட்டு, அது அடையாளம் அறியப் பட்டன [deciphered]. இதனால் கணிசமான சுமேரிய இலக்கியம் இன்று மொழி பெயர்க்கப் பட்டுள்ளன.  

அதே போல, முறையான ஹரப்பா பண்பாடும் கி.மு 2600 இலிருந்து 1900 வரை நிலவி பின் கி.மு 1700  அளவில் முற்றாக அழிந்து போயிற்று. இது மத்திய ஆசிய நாடுகளுடனும் மெசொப்பொத்தேமியா வுடனும் வர்த்தக உறவு வைத்திருந்தது. மேலும் தொல்பொருள் சான்றுகளும் மொழியியல் சான்றுகளும், திராவிட மக்களே சிந்து வெளி அல்லது  ஹரப்பா நாகரிகத்தின் நிறுவனர்கள் என்று சுட்டிக் காட்டுகிறது. 

மாயன் ,கணிதத்தில் வல்லுனராகவும் அமெரிக்க பகுதியில் சுயாதீன எழுத்து மொழியை வைத்திருந்த பண்டைய நாகரிகமாகவும் உள்ளது. ஹைரோகிளிப்ஸ் [hieroglyphics/ஹியரோக்ளிஃப்ஸ்/ பழங்கால எகிப்தியரின் சித்திர வடிவ எழுத்துக்கள் ] என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பட எழுத்து முறையை மாயன்கள் பயன்படுத்தினர். கல்வெட்டுக்கள் சிற்பங்கள் போன்றவற்றில் எழுதியது மட்டுமில்லாமல், ஒருவகையான புத்தகம் தயாரிக்கும் முறையையும் அவர்கள் பயன்படுத்தி வந்தனர். இவ்வாறு பல புத்தகங்களை அவர்கள் எழுதியிருக்கலாம் எனக் கருதப் படுகிறது. ஸ்பானிய ஏகாதிபத்தியத்துடன் வந்த அடிப்படைவாத கிரிஸ்துவர்கள் பல மாயன் நூல்களை அழித்துவிட்டார்கள். இதில் தப்பியவை நான்கே நான்கு நூல்கள் மட்டுமே. கி. மு. 2600 – கி. பி. 900 வரையான காலம் மாயன் நாகரிக காலம் என்று பொதுவாக  வரையறைக்கப்படுகிறது. அதன் பின்  கி. பி. 1517  அளவில் மறைந்து போயிற்று. இவர்களின் மறைவிற்கு முக்கிய காரணம் ஸ்பெயின் நாடு ஆகும். 

'ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் மொழியை அழிக்க வேண்டும்' என்பார்கள். அது போல, 'ஒரு மொழியை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் நூல்களை அழிக்க வேண்டும்' என்பார்கள். வரலாற்றில் இது பல இடங்களில் நடைபெற்றிருக்கிறது. 1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் சிங்கள இன வன்முறைக் குழுவொன்றால் யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டது. இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது!. இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்கா சியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது. அப்படியான மனித சரித்திரத்தில், மனிதாபிமானத்திற்கு எதிரான செயலையே,மாயாக்களுக்கு உதவி செய்யும் அழிவு முதலியவற்றினின்று மீட்பவர் [இரட்சகர் ] போல வந்து சேர்ந்த ஸ்பானிய கிருஸ்தவ மதகுரு டியாகோ டி லாண்டாவும் (Diego de Landa) செய்தார்! இல்லாவிட்டால் இன்று எமக்கு பல அறிய தகவல்களை தரக் கூடிய பல எழுத்து நூல்கள் எமக்கு கிடைத்திருக்கும். ஒரு வேளை எழுத்தின் வரலாறே கிடைத் திருக்கலாம்?  

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி:03  தொடரும்

0 comments:

Post a Comment