எழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:14

இந்தியாவில் எழுத்தின் வரலாறு அல்லது தொன்மை, எண்ணூறு ஆண்டுகள், கி மு 2500  இல் இருந்து 1700 வரை, நிலைத்த சிந்து சம வெளி நாகரிகத்தில் இருந்து தொடங்குகிறது. அதன் பின் குறைந்தது ஆயிரத்தி இருநூறு ஆண்டுகளுக்கு பின், அசோகா கல்வெட்டுக்கள் கிரேக்கம், அரமேயம், கரோஷ்டி மற்றும் பிராமி [Greek, Aramaic, Kharosthi and Brahmi ] எழுத்துக்களில் காண்கிறோம். இதில் பிராமியே அசோகனால் பொதுவாக பாவிக்கப் பட்டன. இவன் கி மு 269  இல் இருந்து 232 வரை ஆட்சி செய்தான். இப்படியான பிராமி கல்வெட்டுகள் இலங்கையிலும் காணப் பட்டன. இதில் இலங்கையில் காணப்பட்ட கல்வெட்டும், அசோகனின் கல்வெட்டும் பிராகிருதம் [Prakrit] ஆகும். பிராகிருதம் என்பது பழங்காலத்தில் வட இந்தியாவில் பேசப்பட்டு வந்த மொழிகளையும், அதன் வழக்குகளையும் குறிக்கின்றது. எனவே பிராகிருதம் என்பது ஒரு மொழி அல்ல. ஒரு
மொழிக்குடும்பத்தை குறிக்கின்றது. சமற்கிருத மொழிகளையும் (Sanskrit), பிராகிருத மொழிகளையும், வடமொழி என்ற பொதுப்பெயரிலும் அழைப்பர். புத்தர் கூட ஒரு பிராகிருத மொழியிலேயே தனது போதனைகளை செய்தார். பாளி மொழியும் ஒரு பிராகிருத மொழியே. பிராமி எழுத்துக்களை கொண்ட கல்வெட்டுகள் தமிழ் நாட்டிலும் காணப் படுகின்றன. இவை தமிழ் மொழியில் பிராகிருதமும் கலந்து காணப் படுகின்றன. உதாரணமாக, தமிழ் நாடு, கரூரில் உள்ள  அமராவதி ஆற்றுப்படுகையில் கண்டு எடுக்கப் பட்ட, தனிப்பட்ட நபரின் பெயரை தமிழியில் [Tamil-Brahmi] பதித்த கி மு 100 ஆண்டை சேர்ந்த வெள்ளி மோதிரம் இணைக்கப் பட்டு உள்ளது . இதில் அந்த தனி நபரின் பெயர் பெருவழுதி என குறிக்கப் பட்டு உள்ளது. பெருவழுதி ஒரு சங்க கால பாண்டிய மன்னன் ஆவான்.

இது வரை கண்டு பிடிக்கப் பட்ட  தொடக்ககாலத் தமிழ்க் கல்வெட்டுக்களில் காணப்படும் எழுத்துக்கள் அநேகமாக அசோக பிராமியை ஒத்த எழுத்துக்கள் போல இருப்பதாகவும், இதனால் அவ்வற்றை  தமிழ்ப் பிராமி அல்லது தமிழி எனவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதில் எழுதப் பட்ட தமிழ், வித்தியாசமான, ஒரு வகையான தமிழாக, சங்க இலக்கிய தமிழில் இருந்து வேறுபாடாகவும் காணப்படுகிறது. இன்றைய தமிழ் எழுத்தும் வட்டெழுத்தும் இதில் இருந்தே படிவளர்ச்சியு ற்றதாக கருது கிறார்கள். இதற்கும் முன்னைய எந்த தமிழ் எழுத்தும் இது வரை கண்டு பிடிக்க வில்லை. எப்படியாயினும், இன்று, சிரோண்மனி மற்றும் ஐராவதம் மகாதேவன் போன்ற தொல்லியல் அறிஞர்கள், தமிழ் பிராமியிலிருந்தே அசோகன் பிராமி தோன்றியிருக்கலாம் என்ற கருத்தை ஆதாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர். இது தமிழ் எழுத்தின் தொன்மையை மேலும் பின் நோக்கி நகரத்து கிறது. இந்தியாவில் இது வரை கண்டு எடுக்கப் பட்ட கல்வெட்டுகளில் [Inscriptions], தமிழ் கல்வெட்டே கூடுதலாக காணப் படுகின்றன. உதாரணமாக,20,000 தமிழ் கல்வெட்டும், அதை தொடர்ந்து திராவிட மொழியான கன்னடம் 10,600 மும் ,அதன் பின் சமஸ்கிருதம் 7,500 உம்,மீண்டும் திராவிட மொழியான தெலுங்கு 4,500 உம், ஆக காணப் படுவது குறிப்பிடத் தக்கது. தமிழ் கல்வெட்டுகள் ஆக குறைந்தது கி மு 300 ஆண்டுகளில் இருந்து கிடைக்கப் பெறுகின்றன.

அசோகனின் பிராமி எழுத்து முறை யில் இருந்தே எல்லா இன்றைய இந்தியா எழுத்துக்களும் தோன்றின என்பது ஒரு சிலரின் வாதமாக இருந்தாலும், அதை எல்லோரும் ஏற்கக் கூடியதாக இல்லை. ஒன்றில் அசோக பிராமி இந்தியாவிலேயே வளர்ந்த எழுத்தாகவோ அல்லது வெளி நாட்டில் இருந்து கடன் பெற்ற எழுத்தாகவோ இருக்கவேண்டும். இது உள்நாட்டில் வளர்ந்ததாக இருந்தால், கட்டாயம் சிந்து வெளியில் இருந்தே வளர்ந்து இருக்க வேண்டும். எப்ப அசோக பிராமி என்ற எழுத்து பிறந்தது? என்பது இதற்கு விடை தரலாம். கிரேக்கப் பயணியும், புவியியலாளருமான  மெகஸ்தெனஸ் (Megasthenes) (கிமு 350 - கிமு 290), மௌரியனின் அரசவைக்கு கி மு 300 ஆண்டளவில் சென்ற பொழுது, அங்கு எந்த எழுதப் பட்ட நூலையும் காணவில்லை என்று குறிப்பிட்டு உள்ளார். இது அவர்கள் எந்த எழுத்து முறையையும் பாவிக்க வில்லை என்பதை காட்டுகிறது. அது மட்டும் அல்ல, அசோகனுக்கு முன்னைய கால தொல் பொருள் அகழ்வுகள் பிராமி எழுத்தின் எந்த முன்னைய வடிவத்தையும் காட்ட வில்லை, ஆனால் திடீரென அசோக பிராமி, நேர்த்தியாக வடிவமைக்கப் பட்ட  ஒரு எழுத்து முறையாக பாவனைக்கு வருகிறது. ஆகவே, இந்த எழுத்து முறை கட்டாயம் அசோகனின் காலத்திற்கு முன்பே தோன்றி இருக்க வேண்டும் என இலகுவாக நம்பலாம். அப்படி என்றால் ,பிராமியை கண்டு பிடித்தவர், எங்கிருந்து இவ்வளவு வெவ்வேறு குறிகளை பெற்றிருப்பார் என கேட்க்கத் தோன்றுகிறது?


ஒன்று மட்டும் உண்மை,அசோக பிராமியும் தமிழ் பிராமியும் ,தனித்த தனியாக ,ஒருவரை ஒருவர் அறியாமல்,ஆனால்  கிட்ட தட்ட ஒரேமாதிரியான குறியை ஒரேமாதிரியான ஒலிக்கு தீர்மானித்து இருக்க முடியாது. ஒன்றில்,யாரோ ஒருவர் மற்றவர் மேல் நேரடியாக  செல்வாக்கு செலுத்தி இருக்க வேண்டும், அல்லது, ஒரு பொது மூலம் ஒன்றில் இருந்து கடன் பெற்றிருக்க வேண்டும். மேலும் பொதுவாக ஏற்றுக் கொள்ளப் பட்ட உண்மை என்ன வென்றால், அசோகனின் செல்வாக்கு இலங்கை, இந்தியா முழுவதும் பரவி இருந்தாலும், அது தமிழ் நாடு, கேரளம் பகுதிகளை தாக்க வில்லை என்பதே. அப்படி என்றால்,தமிழ் எழுத்து அசோகன் காலத்திற்கு முன்பு இருந்து இருக்க முடியாது, ஆனால்,அசோகன் காலத்தில் அல்லது அதற்குப் சற்று பின் முதல் முதல் , அசோகா பிராமியை சற்று திருத்தம் செய்து எழுத தொடங்கி இருக்கலாம். ஆனால், மகாவம்சம் என்ற, இலங்கையின்  புத்த வரலாறு நூல், கி மு 500 ஆண்டு, இலங்கை அரசன் விஜயனைப் பற்றி கூறுகையில், அவன் இலங்கையின் அரசனாக முடிசூடிக் கொண்டதும் தனது பட்டத்தரசியும் அரசகுலப் பெண்ணாக இருக்க வேண்டுமென விரும்பிய விஜயன், மதுரை (தமிழ்நாடு) பாண்டிய அரசனுக்கு தூதனுப்பி அவனது மகளை தனது அரசியாக மண முடித்துத் தருமாறு கேட்டுக் கொண்டதுக்கு இணங்கிய பாண்டியன் தனது மகளை விஜயனுக்கு மனைவியாகவும், அவனது 700 நண்பர்களுக்கு மனைவியராக தமிழ்ப்பெண்களையும், அத்துடன் அவர்களுக்கு உதவியாக வேலையாட்கள், கட்டிடக்கலை வல்லுனர்கள், நாட்டியக்காரர்கள், பூசாரிகள் உட்பட பலரை அனுப்பியதாகவும், கூறுவதுடன்,பாண்டிய அரசன் ஒரு கடிதத்தையும் விஜயனுக்கு கொடுத்து அனுப்பினான் என்று கூறுகிறது. இது கிருஸ்துக்கு பல நூற்றாண்டுகளுக்கும் முன்பே, அசோகனிற்கும் முன்பே தமிழ் நாட்டில் எழுத்து இருந்தமையை எடுத்து காட்டு கிறது.

ஆரம்பம் முதல் தனக்கென ஒரு சொந்த எழுத்து வடிவத்தைக் கொண்ட மொழியாகவும், மிக நீண்ட கால வரலாறு உடைய மொழியாகவும் தமிழ் மொழி இருக்கிறது. பண்டைய தமிழ் எழுத்தின் பெயர் தமிழி ஆகும். கி.மு. முதல் நூற்றாண்டில் பாளி மொழியில் எழுதப்பட்ட ‘சமவயங்க சுத்த’ என்னும் சமண நூலில் [Jain work Samavayanka Sutta] 18 வகை எழுத்துகள் சொல்லப்பட்டுள்ளன. அதில் ‘தம்ளி’ என்ற எழுத்தும் குறிக்கப்பட்டுள்ளது. தமிழ் என்பதை அக்காலச் சமணர் தம்ளி என்றே ஒலித்துள்ளனர் போலும்.அதன் காரணமாகவே பண்டைய தமிழ் எழுத்தின் பெயர் தமிழி என ஆகியது எனலாம்?

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி:15  தொடரும்

0 comments:

Post a Comment