எழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:15

தெற்கு ஆசியாவில், சிந்து நதி பள்ளத்தாக்கில் , எழுத்து முதல் முதலாக, கி மு 3 வது ஆயிரம் ஆண்டு [கி மு 3 வது புத்தாயிரம் /3rd millenium BCE] காலத்தில் தோன்றி பின் கி மு 1700 ஆண்டிற்குப் பின் அது மறைந்து விட்டது. அதன் பிறகு கி மு 500 ஆண்டுகள் வரை எந்த ஆதாரமும் பொதுவாக கிடைக்க வில்லை. மேலும் கி மு 300 ஆண்டளவில் பிராமி கல்வெட்டுக்கள்,பழங்கால இந்தியாவில் பரப்பளவில் விரிவானதும், அரசியல், படைத் துறை தொடர்பில் மிகவும் வலுவானது மான  மௌரியப் பேரரசு [Maurya dynasty] முழுவதும் தோன்றின என பொதுவாக நம்பப் பட்டது. மேலும் முதலாவது இந்திய எழுத்து கி மு 2600 ஆண்டளவில் சிந்து சம வெளியில் மலர்ச்சியுற்றது என்றாலும், இவ் வரிவடிவம் இன்னும் முழுமையாக பொருள் கண்டு பிடிக்கப்படவில்லை. இதற்கு முக்கிய காரணம்

[1]இவ் வரி வடிவங்களைப் பயன் படுத்திய மொழியைப்பற்றி சரியாக இன்னும் தெரியாதது.

[2]கிடைத்த முத்திரைகளில் எழுதப்பட்டு இருப்பவை பெரும்பாலும் "5" அல்லது "6" குறியீடுகளைக் கொண்டவையாகவே உள்ளன.நீளமான விவரணங்கள் எதுவும் அங்கு இல்லாதது.

[3]அறியப்பட்ட வேறு வரிவடிவங்களைக் கொண்ட இருமொழிக் குறிப்பு [bilingual texts like a Rosetta Stone] எதுவும் கிடைக்காதது ஆகும்.

அதனால் எம்மிடம் வாசித்து அறியக்கூடிய அவர்க ளின் நம்பிக்கை, சரித்திரம், ஆட்சியாளர் அல்லது இலக்கியம் பற்றிய குறிப்புகள் ஒன்றும் இன்னும் சரியாக இல்லை. இது 200 அடிப்படை குறியீடுகளை கொண்டிருந்தாலும், அங்கு சுமார் 400 வெவ்வே றான குறியீடுகள் அல்லது அடையாளம் மொத்த மாக காணப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

மேலும் ஹரப்பான் இலக்கங்கள்/ எண்குறிகள் செங்குத்தான கோடுகளால் குறிக்கப்பட்டன. ஆனால் அது 7 வரை மட்டுமே போகிறது. மேலும் 4 குறியீடுகளை இந்த கட்டமைப்புக்குள் எண் குறிகளாக பகுப்பாய்வு வெளிப்படுத்து கிறது. ஆகவே அவை "7" க்கு மேற்பட்ட இலக்கங்களை அதிகமாக குறிக்கலாம் என கருதலாம்."8" என்ற இலக் கத்தை குறிக்க செங்குத்தான கோடுகள் இல்லாததால், ஹரப்பான் இலக்கங்கள் எட்டை[8] அடிப்படையாக கொண்ட இலக்கங்களாக[Octal] இருக்கலாம் என தொல் பொருள் ஆய்வாளார் வால்டர் ஃபேர் சர்விஸ் [Walter Fairservice] மற்றும் பலரும் நம்புகிறார்கள். உதாரணமாக நாம் இன்று பாவிக்கும் அராபிக் இலக்கங்கள் [Arabic numerals or Indo-Arabic numerals] அல்லது இந்தோ-அராபிக் இலக்கங்கள் தசம இலக்கங்கள். இது உண்மையில் இந்தியாவில் கி பி 500 ஆண்டளவில் அறிமுகப்படு த்தப்பட்டு இந்து இலக்கம் ["Hindu numerals"] என அழைக்கப் பட்டது. எனினும் இதை பின் இந்தியா வுடனான வர்த்தகம் மூலம் கற்றுக் கொண்ட அரபு வர்த்தகர்கள்,இந்த தசம இலக்க முறையை ஐரோப்பியாவிற்கு அறிமுகப்படுத்தியதால் அராபிக் இலக்கம் என பின் ஐரோப்பியர்களால் வழங்கப்பட்டு அது நிரந்தரமாக நிலைத்து விட்டது. இது 0 தொடக்கம் 9 வரையான குறியீடுகளை கொண்டுள்ளது. பத்து[10] என்பதை எழுத நாம் ஒன்றையும்[1] பூச்சியத்தையும்[0] ஒருங்கிணைக்க வேண்டும். அது அராபிக் இலக்கங்கள் பத்தை[10] அடிப்படையாக கொண்டவை என அடையாளம் காட்டுகிறது. எட்டை அடிப்படையாக கொண்ட எண்கள் உலகில் மிகவும் அரிது. என்றாலும் முன்னைய திராவிடர்கள் எட்டை அடிப்படையாக பாவித்து பின் பத்தை அடிப்படையாக இந்தோ ஐரோப்பியன் செல்வாக்கால் மாற்றினார்கள். உதாரணமாக எட்டை அடியாக கொண்ட இலக்கத்தில், பத்தை அடியாக கொண்ட 75 ஐ எழுதுவது என்றால் அதை நாம் "113" என எழுத வேண்டி வரும்.அதாவது 8X8,1X8, 3 [எட்டு எட்டு,ஒன்று எட்டு,அலகு 3] ஆகும்.

எது எப்படியாயினும், ஐராவதம் மகாதேவன் அவர்கள்,ஒரு வசதிக்காக,பண்டைய தமிழர் பாவனையில் இருந்த வெவ்வேறு  எழுத்து முறையை ,தமிழ்பிராமி-1, தமிழ்பிராமி-2, தமிழ்பிராமி-3 என பகுத்துள்ளார். தமிழ்பிராமி-1 எழுத்து முறை, காலத்தால் முந்தியதும், தமிழ்பிராமி-2 எழுத்து முறை, காலத்தால் பிந்தியதும், தமிழ்பிராமி-3 தொல்காப்பியரின் எழுத்து சீர்திருத்தத்தால் ஏற்பட்டதும் ஆகும் [தமிழ் புள்ளி முறை]. அசோகர் பிராமி எழுத்து, தமிழ்பிராமி-2 வகையைச் சேர்ந்தது என்றும், அசோகர் பிராமியில் இருந்து தமிழ் பிராமி வந்திருக்க வேண்டுமானால், நேரடியாக தமிழ்பிராமி-2 வகை எழுத்துத்தான் தமிழகத்தில் புழக்கத் திற்கு வந்திருக்க வேண்டும் என்றும், சிக்கலான வரிவடிவத்தைக் கொண்ட தமிழ் பிராமி-1 ஏன் தமிழத்தில் புழக்கத்தில் இருக்க வேண்டும் என்றும் அறிஞர்கள் வினவுகிறார்கள். பல தமிழ் பிராமி-2 வகை கண்டுபிடிப்புகள் அசோகர் பிராமிக்கு முந்தியனவாகவும்  உள்ளன. மேலும், தமிழகத்தைத் தவிர்த்து இந்தியாவில் கிடைக்கும் அனைத்து பிராமிக் கல்வெட்டுகளும் மன்னரின் ஆணையின் பேரில்  உருவாக்கப் பட்டவையாகவும், சமூகத்தின் பிற படிநிலைகளில் வாழும் சாதாரண மக்கள் அதனை பயன்படுத்தியதற்கான சான்றுகள் எதுவும் இல்லாமலும் இருக்கின்றன. ஆனால் தமிழகத்தில், கல்வெட்டு களில் மட்டுமில்லாது பரவலாகக் காலத்தால் அழியாத பிற பொருட்களான நாணயங்களிலும், ஆபரணங்களிலும், பானை ஓடுகளிலும் இவை பொறிக்கப்பட்டுள்ளன. பொறிக்கப்பட்ட கல் வெட்டுகளில் கூடப் பெரும்பாலானவை மன்னர்களால் உருவாக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. தமிழகத்தில் மிகச்சாதாரண மக்கள் கூட இந்த தமிழ் பிராமி எழுத்துக்களை மிக அதிக அளவில் பயன்படுத்தினர் என்பதற்கு இவை உதாரணம் ஆகும். அசோகர் பிராமி- தமிழ் பிராமிகளின் ஒற்றுமை வேற்றுமைகளை ஒப்பீடு செய்தலை "The origin of the Tamil script ,Tamil Studies, Vol.2, No. 1, January 1982, 8-23 ,Editor, N.Subrahmanian, International Institute of Tamil Historical Studies, Madurai  என்ற ஆய்வு கட்டுரையில் விவரமாக பார்க்கலாம்.

பண்டைய கொங்கு நாட்டில் இன்றைய ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்தில் நொய்யல் ஆற்றின் வடகரையில் கொடுமணல் என்ற பிரதேசம் அமைந்துள்ளது.அங்கு இருபத்திற்கும் மேற்பட்ட, தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த, பானை-ஓடுகளை தோண்டி எடுத்துள்ளார்கள்.

 “கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம் பந்தர் பயந்த பலர் புகழ் முத்தம்”

என்னும் பதிற்றுப்பத்து (74:5-6) சங்க இலக்கியக் குறிப்புகளிலிருந்தும் இப்பகுதி
சங்ககாலத்தில் பல்வேறு வெளிநாட்டினர் வந்து சென்ற சிறப்புப் பெற்ற பன்னாட்டு வணிகத் தலமாக (பந்தர்) இருந்தது என்பதையும்  அறிய முடிகிறது. சங்ககாலத்தில் கொடுமணம் என்று அழைக்கப்பட்ட இவ்வூர் இன்று கொடுமணல் என வழங்கி வருகிறது. இந்த கொடுமணல் அகழாய்வின் படி, சில அறிஞர்கள் தமிழ் பிராமியின் காலத்தை அசோகர் பிராமியின் காலமான கி மு 300 என பரிந்துரைத்தனர். ஆனால்,இன்று எமக்கு கிடைத்து உள்ள பழனிக்கு அருகில் உள்ள பொருந்தல் அகழாய்வில் கிடைத்த தமிழி எழுத்துப் பொறிப்பின் காலம் கி.மு.  5ம் நூற்றாண்டு என கணிக்கப் பட்டுள்ளது. மேலும்  பொருந்தல் அகழாய்வில் கிடைத்த நெல் மாதிரி ஒன்று, அமெரிக்காவில் உள்ள பீட்டா ஆய்வு நிலையத்தில், அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு (Accelerator Mass Spectrometry by the Beta Analytic Lab , USA ), அதன் காலம் கி.மு. 450 என கணிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன் இன்னொரு நெல் மாதிரி ஒன்று அதே ஆய்வு நிலையத்தில் காலக்கணிப்புக்கு உட்படுத்தப்பட்டு, அதன் காலம் கி.மு. 490 என கணித்தறியப்பட்டுள்ளது. இந்த இரண்டு நெல் மாதிரிகளுமே, பொருந்தல் அகழாய்வில் கிடைத்த, இரு வெவ்வேறு மட்பாண்டங்களிலிருந்து எடுக்கப்பட்டவைகளாகும். இதன் அகழாய்வு இயக்குநர் பாண்டிசேரி பல்கலைக்கழக பேராசிரியர், முனைவர் கா.ராஜன் அவர்கள் ஆவார். அவர் இந்தக்காலக் கணிப்புகளின்படி, தமிழ் பிராமியின் காலம் கி.மு. 5ம் நூற்றாண்டு என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுவிட்டது என்கிறார். மேலும் இந்தக் கண்டு படிப்பின் மூலம், தமிழ்பிராமி எழுத்து அசோகர் பிராமிக்கு இரு நூற்றாண்டுகள் முற்பட்டது (அசோகர் பிராமியின் காலம் கி.மு. 3ம் நூற்றாண்டு ஆகும்) என்பதோடு, அசோகர் பிராமியில் இருந்து தமிழ் பிராமி உருவாகவில்லை என்பதும் நிரூபிக்கப்படுகிறது என்கிறார் முனைவர் ராஜன் அவர்கள். 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி:16  தொடரும்

0 comments:

Post a Comment