"ஆரத்தியெடுத்து தினம் வணக்கும் தெய்வமானதோ?"


  

"உள்ளங்கள் அறிந்து மகிழ்ச்சி கொண்டு
உரிமைகள் பகிர்ந்து தன்னலம் துறந்து
உயிரோடு கலந்து உடலோடு உறவாடி
உண்மையாய் வாழ்ந்து உற்சாகம் தந்தவளே"

"சொத்தாய் நல்ல குழந்தைகள் பெற்று
சொந்தமாய் ஆதரவான உறவுகள் பெற்று
சொக்கி போகும் பேரழகு பெற்று
சொல்லாமல் கொள்ளாமல் போனது எனோ ?"

"ஒட்டிஉரசி கூட இருந்து விட்டு
ஒழுங்கை எங்கும் நிலைநாட்டி விட்டு
ஒன்றும் சொல்லாமல் எம்மை விட்டு
ஒதுங்கி நீமட்டும் சென்றது சரியோ ?"

"அன்பாக எம்மை அணைத்து ஆரத்தழுவி
அறிவுரை கூறி வாழ்த்தி முத்தமிட்டு
அலங்காரம் செய்து கண்டு களித்து
அக்கினிக்கு இரையாக போனது ஏனோ?"

"கண்மணியே எம் குடும்ப தலைவியே
கருத்துக்கள் கலந்து ஞானமாய் பேசுபவளே
கடுகளவும் பாசம் குன்றாத குலமகளே
கண்களில் இரத்தக்கண்ணீர் தந்தது எனோ?"

"கள்ளம்கபடம் இல்லாமல் சிரித்துப் பேசி
கண்டவரையும் மயக்கும் வசீகர விழியாளே
கடைசிவரை குடும்பம் தழைக்க வாழ்ந்தவளே
கண்காணாத உலகம் சென்றது நீதியோ?"

"அவனியிலே குழந்தைகள் வாழ்வதை ரசிக்காமல்
அவர்களின் திருமணங்களை முன்னின்று நடத்தாமல்
அன்புடன் பேரப் பிள்ளைகளை அணைக்காமல்
அவர்கள் முத்தம் சுவைக்காமல் மறைந்ததுஎனோ?"

"ஆட்டம் முடிந்ததுவென்று யாருக்கும் சொல்லாமல்
ஆரவாரம் செய்யாமல் அமைதியாக பறந்தாயோ
ஆடிஅசைந்து அழகுபொழிந்து வரும் உன்னுருவம்
ஆரத்தியெடுத்து தினம் வணங்கும்  தெய்வமானதோ?"

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

0 comments:

Post a Comment