அன்று கமல்-ரஜனிக்கு போட்டியாக ராமராஜன்


நடிகர் ராமராஜன் தமிழ்நாடு-மதுரையில் 18 ஒக்டோபர் 1960 ஆம் ஆண்டு  ராமையாவுக்கும்  வெள்ளையம்மாளுக்கும் மகனானவர்.
தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த நாயகன் ராமராஜன். தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும் நபராக இருந்து பின்னர் தியேட்டரில் ரசிகர்களால் விசில் அடித்து காது கிழியும் வரை கொண்டாடப்பட்டவர்.

முதலில் தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும் வேலையை பார்த்த ராமராஜன் பிறகு பல இயக்குனர்களிடம் கிட்டத்தட்ட 30 படங்களுக்கு மேல் அசிஸ்டன்ட் டைரக்டராக வேலைசெய்து சினிமாவை தெள்ளத் தெளிவாக கற்றுக் கொண்டார்.

பின்னர் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி சில வெற்றிப் படங்களை கொடுத்த பின்னர் 1986ம் ஆண்டு வெளியான நம்ம ஊரு நல்ல ஊரு படத்தின் மூலம் ஹீரோவாக அடியெடுத்து வைத்தார் நம்ம ராமராஜன்.

அதன் பிறகு கரகாட்டக்காரன் படம் பெரிய அளவில் வெற்றி பெற்று, அன்றய முன்னணி நட்சத்திரங்களான கமல்,ரஜனி நடிகர்களுக்கு இணையாக வருடம் 10ற்கு மேற்பட்ட  படங்களில் நடித்தது, வெற்றிப்படங்களைக் கொடுத்து  ராமராஜனை ரசிகர்கள் மத்தியில் கொண்டாட வைத்தது. பின்னர் நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
நன்றாக வாழ்ந்து வந்த இருவருக்கும் கடந்த 2000ம் ஆண்டு விவாகரத்து நடைபெற்றது. இருந்தாலும் அதையெல்லாம் மறந்து விட்டு தன்னுடைய பிள்ளைகளுக்கு தன் செலவில் திருமணம் செய்து வைத்தார்.

சினிமாவில் ஓரங்கட்டப்பட்ட பின்னர் தீவிர அரசியல்வாதியாக மாறி, அதிமுக-வின் தலைமை கழக பேச்சாளராக பொறுப்பு வகித்தார். இவர் 1998ல் திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். இவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதன் பிறகு பல குணச்சித்திர வாய்ப்புகள் கிடைத்தும், நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம்பிடித்து சுத்தமாக மக்களால் மறக்கப்பட்ட நாயகனாக மாறிவிட்டார்.

விட்டதை பிடித்து விடலாம் என்கிற நினைப்பில் 2012 ஆம் ஆண்டு மேதை எனும் படத்தில் நடித்தார். அந்தப்படமும் கைவிட தற்போது  அ.தி.மு.க  கட்சியின் நட்சத்திர பேச்சாளராக வலம் வந்து கொண்டிருந்தார்.

எந்த ஒரு விஷயத்திலும் அவ்வளவு எளிதில் ஒத்துப் போக மாட்டாராம் ராமராஜன். இதுவே பின்னாளில் அவருக்கு சினிமா நண்பர்கள் குறைய காரணம் எனவும் சொல்கின்றனர். இருந்தாலும் வெள்ளிவிழா கொண்டாடிய நாயகனை எளிதில் மறந்து விட்டது தமிழ் சினிமா.
📂தொகுப்பு:செ.மனுவேந்தன்
குறிப்பு:கொரோனா முடக்கத்தினால் ,திரைப்படம் தொடர்பான புதிய திரைச் செய்திகளுக்கு சாத்தியம் இல்லை என அறியத்தருகின்றோம். 

0 comments:

Post a Comment