திருக்குறள் /09/விருந்தோம்பல்

 முகவுரை -09-நூலின் சாரம்

திருவள்ளூரில் உள்ள ஒரு விலங்குகள் சரணாலயத்தில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை. குறளின் பிரதான போதனைகளான அகிம்சையும் கொல்லாமையும் அவற்றின் நீட்சியான நனிசைவத்தின் வரையறையும் சிலையின் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன.

குறள் ஒரு நடைமுறை அறவழி வாழ்வுக்கான படைப்பாகும்.  அஃது ஒரு மனிதனுக்கு இந்த உலகோடும் அதில் வாழும் பல்லுயிரோடும் உள்ள அறவழித் தொடர்பினைக் கூறும் நோக்குடன் எழுதப்பட்ட ஒரு நூல்.  ஆகச்சிறந்த ஒரு அறநூலாக இருந்தாலும், கவிநயம் மிக்க ஒரு படைப்பாக இது இயற்றப்படவில்லை.  ஒரு சிறந்த செய்யுள் நூலாகவோ படைப்பிலக்கியமாகவோ திகழும் நோக்கோடு இந்நூல் எழுதப்படவில்லை என்றும் இந்நூலில் கவிரசம் ததும்பும் இடங்கள் ஏதேனும் உண்டென்றால் அவற்றைக் காமத்துப்பாலில் மட்டுமே பார்க்கமுடியும் என்றும் சுவெலபில் கூறுகிறார்.  இவ்வாறு நூலின் அழகையோ பாநயத்தையோ விடுத்து அறங்களை மட்டுமே அடிக்கோடிட்டுக் காட்டும் வழக்கிலிருந்தே வள்ளுவரின் நோக்கம் ஒரு சிறந்த அறநூலினைப் படைப்பது தானேயன்றிச் சிறந்த இலக்கியப் படைப்பினை நல்குவதன்று என்பது புலப்படுகிறது.

 

தமிழ் மரபிற்கிணங்க கடவுள் வாழ்த்தைக் கொண்டு நூலினைத் தொடங்கும் வள்ளுவர், அதன் பின்னர் அனைத்துயிருக்கும் அமிழ்தமாய்த் திகழும் மழையின் பெருமையையும் சான்றாண்மையும் அறமும் பிறழாத சான்றோரது பெருமையையும் கூறிவிட்டு, அதன் பின் நூலின் மையக் கருத்தான அறத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பின்னரே தனிமனித அறங்களை ஒன்றன்பின் ஒன்றாகப் போதிக்கத் தொடங்குகிறார். அறமானது வாழ்வின் அனைத்து நிலைகளிலும் வலியுறுத்தப்பட்டு அதோடு ஊழ்வினை என்பதும் விளக்கப்படுகிறது.  மானிட சமூகத்தின் மிக அடிப்படைத் தொழிலாக உழவினைப் பொருட்பாலில் வலியுறுத்தும் வள்ளுவர், இதன் காரணமாகவே உழவிற்கு அச்சாணியாகத் திகழும் மழையினைக் கடவுளுக்கு அடுத்தபடியாக வைத்துத் தொழுவது இங்கு நோக்கத்தக்க ஒன்றாகும்.

 

முழுவதும் அறத்தை மையமாக வைத்தே இயற்றப்பட்டதால்  திருக்குறள் "அறம்" என்ற பெயராலும் வழங்கப்படுகிறது. தனது காலத்தில் காணப்பட்ட மற்ற நூல்கள் இன்னவர்க்கு இன்ன அறம் என்று அறத்தைப் பிரித்துக் கூற முற்படுகையில், வள்ளுவர் மட்டும் "அறம் அனைவருக்கும் பொது" என்று மாறுபாடின்றிக் கூறுகிறார். அவரைப் பொறுத்தவரை பல்லக்கினைச் சுமப்பவனாயினும் அதில் அமர்ந்து பயணிப்பவனாயினும் இருவருக்கும் அறம் ஒன்றே என்கிறார் விஷ்வேஷ்வரன். பலனுக்காக அன்றி அறம் செய்யும் நோக்குடன் மட்டுமே அறம் செய்தல் வேண்டும் என்று தனது நூல் முழுவதும் வள்ளுவர் வலியுறுத்துவதாகச் சுவைட்சர் கூறுகிறார்.  இந்த நோக்குடனேயே குறளானது அடிப்படை அறங்களை முதற்பாலிலும், சமூக அரசியல் அறங்களை இரண்டாம் பாலிலும், அக உணர்வுகளைக் கவிதைகளாக மூன்றாம் பாலிலும் கொண்டு திகழ்கிறது.  அளவில் முதற்பாலைவிட இரு மடங்காகவும், மூன்றாமதை விட மும்மடங்காகவும் இயற்றப்பட்டுள்ள இந்நூலின் இரண்டாம் பாலானது இராஜதந்திரங்களை உரைக்கும் இடங்களில் கூட சற்றும் அறம் பிறழாது அவற்றை உரைப்பது அறத்திற்கு இந்நூலாசிரியர் தரும் முக்கியத்துவத்தைப் பறைசாற்றுவதாக உள்ளது. வள்ளுவரது காலத்திற்கு முன்பு வரை இயற்றப்பட்ட சங்க இலக்கியங்கள் யாவும் புலால் உண்ணுதல், கள் அருந்துதல், பலதார மணம், மற்றும் பரத்தையரோடு கூடுதல் என்னும் நான்கு ஒழுக்கக்கேடுகளையும் குற்றங்களாகக் கருதாது அவற்றை ஏற்றும் போற்றியும் பாடி வந்தன. தமிழரிடையே காணப்பட்ட இக்குற்றங்களை வள்ளுவர் தனது நூலின் வாயிலாக முற்றிலுமாக எதிர்த்து மக்களுக்கு நல்வழி புகட்டினார். அதுமட்டுமல்ல, தமிழக வரலாற்றில் பண்பாட்டுக்கு முரண்பட்ட இம்மறச் செயல்களை முதன்முறையாக மறுத்த நூல் திருக்குறள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

குறளானது அகிம்சை என்னும் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டதாகும். "குறள் கொல்லாமையையும் இன்னா செய்யாமையையும் கட்டளையிட்டு அறிவுறுத்துகிறது" என்று சுவைட்சர் தனது நூலில் குறிப்பிடுகிறார். அதன்படியே வள்ளுவர் இல்லறத்தானை அருட்குணத்தோடு திகழவேண்டும் என்று வலியுறுத்தி ஒவ்வொரு தனிமனிதனையும் புலால் மறுக்கச் சொல்லிக் கட்டளையிடுகிறார்.  குறள் கூறும் தனிநபர் அடிப்படை அறங்களில் மிக முக்கியமானவையாக கொல்லாமையும் வாய்மையும் திகழ்கின்றன. விவிலியமும் மற்ற ஆபிரகாமிய நூல்களும் மனித உயிரைப் பறிப்பதை மட்டுமே கண்டிக்கையில், குறள் மனிதன், விலங்கு என்று வேறுபாடின்றி "எவ்வுயிரையும் கொல்லாமை வேண்டும்" என்று வலியுறுத்துகிறது. வள்ளுவர் வன்மையாக எதிர்க்கும் ஒழுக்கக்கேடுகளில் செய்ந்நன்றி மறத்தலும் புலால் உண்ணுதலும் முதன்மையானவை ஆகும்.  பி. எஸ். சுந்தரம் தனது நூலின் அறிமுகப் பகுதியில் "மற்ற மறங்களிலிருந்து தப்பித்தாலும் 'நன்றி மறத்தல்' என்ற மறத்திலிருந்து யாரும் தப்பிவிட முடியாது" என்றும், "'பிற விலங்கின் ஊனை உண்டு தனது ஊனை வளர்க்க ஒரு மனிதனுக்கு எப்படி மனம் வரும்?' என்பதே வள்ளுவரது வினா" என்றும் விளக்குகிறார்.  தலைவன்–தலைவிக்கு இடையே காணப்படும் அகப்பொருளைக் கூறும் காமத்துப்பாலில் கூட வள்ளுவரது அறம் இழைந்தோடுவது மிகவும் தெய்வீகத் தன்மை வாய்ந்தது என்றும் இதுபோன்ற தன்மையே குறளை மற்ற அறநூல்களிலிருந்து வேறுபடுத்துகிறது என்றும் நல்லசாமி பிள்ளை கருதுகிறார்.  அறத்துப்பாலில் "பிறன்மனை நோக்காமை" என்ற அறத்தையுரைத்த வள்ளுவர் காமத்துப்பாலில் ஆசை நாயகிகள் எவரையும் நாடாது "ஒருவனுக்கு ஒருத்தி" என்ற மரபின் வழி நின்று தலைவியை மட்டும் நாடும் ஒரு தலைவனைச் சித்திரிப்பதன் வாயிலாகக் "காமத்துப்பாலைப் போன்ற கவிச்சுதந்திரம் மிக்க இடங்களில் கூட வள்ளுவரது அறம் சற்றும் தொய்வடையாமல் ஒலிப்பதே அவரது அறச்சிந்தனைக்கு ஒரு சான்று" என்று கோபாலகிருஷ்ண காந்தி நிறுவுகிறார். புறவாழ்வின் ஒழுக்கங்களைக் கூறும் பொருட்பாலில் போர்க்களத்து வெற்றியையும் வீரத்தின் பெருமையையும் போற்றும் நூலாசிரியர் அறத்தையும் நீதியையும் நிலைநாட்டும் பொருட்டு மட்டுமே மரணதண்டனையை விதிக்கும் உரிமையினை ஆட்சியாளனுக்கு வழங்குகிறார்.

 

குறள் வெறும் இரகசியம் மிகுந்த தத்துவங்களைப் போதிக்கும் நூலன்று என்றும் அஃது உலகியல் சார்ந்த நடைமுறைக் கோட்பாடுகளை நிறுவும் மெய்யியல் நூல் என்றும் கெளசிக் இராய் உரைக்கிறார். வள்ளுவர் தனது அரசியல் கோட்பாட்டினைப் படை, குடிமக்கள் (குடி), கையிருப்புப் பொருளாதாரம் (கூழ்), அமைச்சர்கள், நட்புவட்டம், அரண் ஆகிய ஆறு கருக்களைக் கொண்டு நிறுவுகிறார்.  பாதுகாப்பு அரண்களின் முக்கியத்துவத்தில் தொடங்கி எதிரியின் அரணைப் பற்றத் தேவையான முன்னேற்பாடுகள் வரை வள்ளுவரது பரிந்துரைகள் நீள்கின்றன. நாடாளும் ஒருவன் தனது படைகளோடு எப்பொழுதும் போருக்கு ஆயத்த நிலையில் இருக்கவேண்டுமென்பதையும் இடம், காலம், சூழல் ஆகியற்றை ஆராய்ந்து அறம் தாழ்ந்த எதிரி நாட்டை வீழ்த்தவேண்டுமென்பதையும் உரைக்கும் குறள், அறம் தவறாத நாடாயின் அஃது அரண் கொண்டு பாதுகாக்கப்பட வேண்டியது என்பதையும் வலியுறுத்துகிறது. படையின் சிறப்பினைக் கூறும் அதிகாரங்கள் அச்சம் தவிர்த்து அறத்தைக் காக்கும் பொருட்டு உயிர்த்துறக்கவும் முற்படும் படைவீரர்களைக் கொண்ட ஒழுங்குடன் நிறுவப்பட்ட படையே சிறந்த படை என்ற இந்துதர்மப் போராயத்த முறையினைப் பிரதிபலிப்பதாக உள்ளன.

 

தனிமனிதருக்கு ஒழுக்கங்களைப் போதிக்கும் குறளானது மக்களாட்சியை வலியுறுத்தவில்லை. மாறாக ஆட்சியாளர் ஒருவர் தம் அமைச்சர்களோடு கலந்தாய்ந்து அறவழியில் நீதியினை நிலைநிறுத்தும் வகையில் நாடாள்வதன் மூலக்கூறுகளைக் குறள் உரைக்கிறது. நாடாள்பவர் ஒருவருக்குச் சட்டங்களை இயற்றல், செல்வங்களை ஈட்டல், மக்களையும் வளங்களையும் காத்தல், பொருளாதாரத்தை முறையாகப் பங்கீடு செய்தல் ஆகியவையே பிரதானத் தொழில்கள் எனக் குறள் கூறுகிறது.  நீதி தவறாத ஆட்சி, நடுநிலை தவறாத நிலைப்பாடு, குடிகளைக் காக்கும் திறன், நீதியும் தண்டனையையும் தவறாது வழங்கும் மாண்பு முதலியன நாடாள்வோரின் கடமைகளாகும் என்கிறது வள்ளுவம். இதன் காரணமாகவே அறத்துப்பாலில் ஒவ்வொரு தனிமனிதனும் இடையறாது கடைபிடிக்க வேண்டிய அடிப்படை அறமாகக் கொல்லாமையை முதலில் வலியுறுத்திய பின்னரே பொருட்பாலில் மரணதண்டனை வழங்கும் அதிகாரத்தை நீதியினை நிலைநாட்டும் பொருட்டு மட்டும் அரசனுக்கு அளிக்கிறார் என்பது சிந்திக்கத்தக்கது. கூடவே கொடுங்கோண்மை, வெருவந்த செய்தல், அற்றாரைத் தேறுதல் போன்ற தீய செயல்களை நாடாள்வோர் தவிர்க்காவிடில் அவை அனைவருக்கும் துன்பத்தைத் தந்து செல்வத்தைக் கரைத்து அரசையே கலைத்துவிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கிறார்.

 

நூல் முழுவதும் அறங்களைக் குறிப்பாகக் கூறாது பொதுப்படையாகவே கூறுவதை வள்ளுவர் வழக்கமாகக் கொண்டுள்ளார். ஒவ்வொரு மனிதனுக்கும் அறங்களின் அடிப்படையினை அறியவைப்பதன் வாயிலாகக் குறிப்பிட்ட சூழ்நிலை ஒவ்வொன்றிற்கும் குறிப்பிட்ட தீர்வை நல்காது அனைத்து சூழ்நிலைகளையும் அந்நபரால் கையாள இயலுமாறு பொதுப்படையாகவே போதிக்கிறார். வள்ளுவரது இந்த நிலைப்பாட்டினைக் குறள் முழுவதிலும் காணலாம். எடுத்துக்காட்டாகக் கடவுளை வழிபடுமாறு கூறும் வள்ளுவர், வழிபாட்டு முறையைப் பற்றிக் கூறுவதில்லை; கடவுளை "வாலறிவன்", "அந்தணன்", "ஆதிபகவன்", "எண்குணத்தான்", "தனக்குவமை இல்லாதான்", "பொறிவாயில் ஐந்தவித்தான்", "வேண்டுதல் வேண்டாமை இலான்", "மலர்மிசை ஏகினான்" என்றெல்லாம் அழைக்கும் ஆசிரியர், கடவுளின் பெயரை எங்கும் குறிப்பிடுவதில்லை; அறநூல்களையும் மறைநூல்களையும் குறிப்பிடும் வள்ளுவர், அவற்றை அவற்றின் பெயர் கொண்டு அழைப்பதில்லை; ஈகை வேண்டும் என்று வலியுறுத்தும் அவர், எவற்றையெல்லாம் தானமாகக் கொடுக்கவேண்டும் என்று உரைப்பதில்லை; கற்றல் வேண்டும் என்று கூறும் அவர், எவற்றைக் கற்க வேண்டும் என்று பட்டியலிடுவதில்லை; வரிகளைப் பரிந்துரைக்கும் அவர், மன்னன் மக்களிடமிருந்து எவ்வளவு தொகையை வரிப்பணமாகப் பெறவேண்டும் என்று குறிப்பிடுவதில்லை; அரசன், நிலம், நாடு எனக் குறிக்கும் அவர், எந்த ஒரு அரசனின் பெயரையோ நாட்டின் பெயரையோ குறிப்பதி்ல்லை.  குறள் "உலகப் பொதுமறை" என்றும் வள்ளுவர் "பொதுப்புலவர்" என்றும் அழைக்கப்படுவதற்கு இவையே காரணங்களாக அமைகின்றன.

[திருக்குறள் - முகவுரை-10 அடுத்தவாரம் தொடரும்]

 

திருக்குறள் தொடர்கிறது….

 


9. விருந்தோம்பல்

 

👉குறள் 81:

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு.

 

மு.வ உரை:

வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும்

சாலமன் பாப்பையா உரை:

வீட்டில் இருந்து, பொருள்களைச் சேர்த்தும் காத்தும் வாழ்வது எல்லாம், வந்த விருந்தினரைப் பேணி அவர்களுக்கு உதவுவதற்கே ஆம்.

கலைஞர் உரை:

இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே.

 

👉குறள் 82:

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா

மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

 

மு.வ உரை:

விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று

சாலமன் பாப்பையா உரை:

விருந்தினர் வீட்டிற்கு வெளியே இருக்கத் தான் மட்டும் தனித்து உண்பது, சாவைத் தடுக்கும் மருந்தே என்றாலும், விரும்பத் தக்கது அன்று

கலைஞர் உரை:

விருந்தினராக வந்தவரை வெளியே விட்டுவிட்டுச் சாகாத மருந்தாக இருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்பது விரும்பத் தக்க பண்பாடல்ல.

 

👉குறள் 83:

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை

பருவந்து பாழ்படுதல் இன்று.

 

மு.வ உரை:

தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.

சாலமன் பாப்பையா உரை:

நாளும் வரும் விருந்தினரைப் பேணுபவனின் வாழ்க்கை வறுமைப்பட்டுக் கெட்டுப் போவது இல்லை.

கலைஞர் உரை:

விருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை, அதன் காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதில்லை.

 

👉குறள் 84:

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து

நல்விருந் தோம்புவான் இல்.

 

மு.வ உரை:

நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.

சாலமன் பாப்பையா உரை:

இனிய முகத்தோடு தக்க விருந்தினரைப் பேணுபவரின் வீட்டில் திருமகள் மனம் மகிழ்ந்து குடி இருப்பாள்.

கலைஞர் உரை:

மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள்.

 

👉குறள் 85:

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி

மிச்சில் மிசைவான் புலம்.

 

மு.வ உரை:

விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?

சாலமன் பாப்பையா உரை:

விருந்தினர் முதலில் உண்ண, மிஞ்சியவற்றையே உண்பவனின் நிலத்தில் விதைக்கவும் வேண்டுமா?

கலைஞர் உரை:

விருந்தினர்க்கு முதலில் உணவளித்து மிஞ்சியதை உண்டு வாழும் பண்பாளன், தன் நிலத்திற்குரிய விதையைக்கூட விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தாமல் இருப்பானா?

 

👉குறள் 86:

செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்விருந்து வானத் தவர்க்கு.

 

மு.வ உரை:

வந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர் பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்

சாலமன் பாப்பையா உரை:

வந்த விருந்தினரைப் பேணி, வரும் விருந்தை எதிர்பார்த்து இருப்பவன் மறுமையில் வானத்தவர்க்கு நல்ல விருந்தினன் ஆவான்.

கலைஞர் உரை:

வந்த விருந்தினரை உபசரித்து அவர்களை வழியனுப்பி வைக்கும்போதே, மேலும் வரக்கூடிய விருந்தினரை ஆவலுடன் எதிர்நோக்கி நிற்பவனை, புகழ்வானில் இருப்போர் நல்ல விருந்தினன் என்று வரவேற்றுப் போற்றுவர்.

 

👉குறள் 87:

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்

துணைத்துணை வேள்விப் பயன்.

 

மு.வ உரை:

விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்தி கூறத்தக்கது அன்று, விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்

சாலமன் பாப்பையா உரை:

விருந்தினரைப் பேணுவதும் ஒரு யாகமே. அதைச் செய்வதால் வரும் நன்மை இவ்வளவு என்று அளவிட முடியாது; வரும் விருந்தினரின் தகுதி அளவுதான் நன்மையின் அளவாகும்.

கலைஞர் உரை:

விருந்தினராக வந்தவரின் சிறப்பை எண்ணிப் பார்த்து விருந்தோம்பலை ஒரு வேள்வியாகவே கருதலாம்.

 

👉குறள் 88:

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி

வேள்வி தலைப்படா தார்.

 

மு.வ உரை:

விருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர் பொருள்களை வருந்திக்காத்துப் (பின்பு இழந்து) பற்றுக்கொடு இழந்தோமே என்று இரங்குவர்

சாலமன் பாப்பையா உரை:

விருந்தினரைப் பேணி, அந்த யாகத்தின் பயனைப் பெறும் பேறு அற்றவர். செல்வத்தைச் சிரமப்பட்டுக் காத்தும் அதனை இழக்கும் போது, இப்போது எந்தத் துணையும் இல்லாதவராய்ப் போனோமே என்று வருந்துவர்.

கலைஞர் உரை:

செல்வத்தைச் சேர்த்துவைத்து அதனை இழக்கும்போது, விருந்தோம்பல் எனும் வேள்விக்கு அது பயன்படுத்தப்படாமற் போயிற்றே என வருந்துவார்கள்.

 

👉குறள் 89:

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா

மடமை மடவார்கண் உண்டு.

 

மு.வ உரை:

செல்வநிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்: அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

செல்வம் இருந்தும் வறுமையாய் வாழ்வது விருந்தினரைப் பேணாமல் வாழும் மடமையே. இது மூடரிடம் மட்டுமே இருக்கும்.

கலைஞர் உரை:

விருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள் எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் தரித்திரம் பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள்.

 

👉குறள் 90:

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து.

 

மு.வ உரை:

அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்: அதுபோல் முகம் மலராமல் வேறு பட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பார்.

சாலமன் பாப்பையா உரை:

தொட்டு மோந்து பார்த்த அளவில் அனிச்சப்பூ வாடும்; நம் முகம் வேறுபட்டுப் பார்த்த அளவில் விருந்து வாடும்.

கலைஞர் உரை:

அனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடி விடக் கூடியது அதுபோல் சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர்.

 

👉 திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்....

0 comments:

Post a Comment