தசைச் சிதைவு நோய்- சைக்கிள் ஓட… படி ஏற முடியவில்லை

கேள்வி:- சா... கொழும்பு

எனது வயது 52 (பெண்). எனது பிரச்சினை 38 வயதுவரை நான் சராசரி மனிதரைப் போல எனக்கும் நடப்பதற்கும், சைக்கிள் ஓடுவதற்கும், படியில் இறங்கி ஏறுவதற்கும் பிரச்சினை இல்லாமல் இருந்தேன். இதற்கு பிறகு மேற்கூறப்பட்ட செயற்பாடுகளில் பிரச்சினை. இதற்கு பிறகு மேற்கூறப்பட்ட செயற்பாடுகளில் பிரச்சினை தோன்ற ஆரம்பித்து நடக்க, சைக்கிள் ஓட, சிறு கற்கள் தட்டினால் கீழே விழுந்தால் எழமுடியவில்லை. குனிந்து நிமிர கடினம்இ பாரங்கள் தூக்க முடியாது. இதன் பின்னர் சத்திர சிகிச்சை நிபுணர் காட்டிய பொழுது எனக்கு (Myopathy (Deschene`s muscular dystrophy)எனக் கூறினார்கள். அறிகுறிகள் கொண்டு நோய் நிர்ணயம் செய்தார்கள். எந்த மருத்துவ பரிசோதனைகள் செய்யவில்லை. மருத்துவப் பரிசோதனை செய்து நோய் நிர்ணயம் செய்தாலும், இதற்கு மருந்தில்லை என்று கூறியதினால் நான் விரும்பவில்லை. கைகளில் பிரச்சினை இல்லை. வலது காலை சுயமாக ஓரளவு உயர்த்த முடியும். இடது காலை உயர்த்துவது கடினம்.

 

(திருமாணமானவர் குழந்தைகள் இல்லை. என்னுடைய பரம்பரையில் இந்த நோய் இல்லை) இப்பொழு மோட்டர் சைக்கிளிலேயே வேலைக்கு செல்கின்றேன். வைத்திய நிபுணரிடம் காட்டிய பொழுது இந்த நோய்  (Slowly progessive) தாக்கம் குறைவாக உள்ளது எனக் கூறினார்.

இந்நோயிற்கு (physiotherapy) பயிற்சிகள்) மூலம் ஓரளவு நோயின் வேகத்தை குறைக்கலாம் எனக் கேள்விப்பட்டேன். எப்படியான பயிற்சிகளை நான் மேற்கொள்ள முடியும் என்பதை தெளிவாக விளக்குவீர்களா?

 

படத்தில் சிகப்பு நிறத்தில் காட்டப்பட்ட பகுதிகளே இந் நோயில் பாதிக்கப்படும்

 


பதில்:- உங்கள் நோய் பற்றி நீங்கள் ஓரளவு விபரமாக அறிந்துள்ளதாகத் தெரிகிறது. Myopathy  என்பது தசைச் சிதைவு என்பதைக் குறிக்கும். பல்வேறு தசைச் சிதைவு நோய்கள் உள்ளன.

 

Deschene`s muscular dystrophy அவ்வாறான தசைச் சிதைவு நோய்களில் ஒன்று இது மரபணுக்கள் மூலம் கடத்தப்படும் ஒரு பரம்பரை நோயாகும். தசைகளின் செயற்பாட்டிற்குத் தேவையான dystrophin எனும் புரத உற்பத்தியை இந்த மரபணு குறைபாடு பாதிக்கிறது.

 

பொதுவாக ஆண்களையே தாக்கும். நோய்க்கான அறிகுறிகளற்ற மரபணு காவிகளாகவே பெண்கள் இருப்பார்கள். அத்தகையவர்கள் தங்கள் மகன்களுக்கு நோயைக் கடத்துவதற்கான சாத்தியம் 50 சதவிகிதமாகும்.

பெண்கள் மிக அரிதாகவே இந் நோய்க்கு ஆளாவர்;. அத்தகைய ஒருவராக நீங்கள் இருக்கிறீர்கள்.

 

ஆயினும் உங்களுக்கு இந்த நோயின் தாக்கம் மிகவும் குறைந்த அளவிலேயே இருக்கிறது. 52 வயதானபோதும் உங்களது இரு கால்களும் ஓரளவு இயங்குகின்றமையும் மோட்டார் சைக்கிலில் சென்று வேலை செய்ய முடிகின்றமையும் அதை உறுதிப்படுத்துகிறது. எனவே கவலைப்படாது உங்கள் நாளாந்தப் பணிகளை குறையவிடாது தொடருங்கள். அதுவே உங்கள் ஆரோக்கியம் கெடாதிருக்க உதவும்.

 

உடற் பயிற்சிகள் பற்றிக் கேட்டீர்கள். பிரச்சனை உள்ள தசைநார்த் தொகுதிகளின் பலத்தைப் பேணுதல். அது வளைந்து மடிந்து நீண்டு செயற்படுவதை உறுதிப்படுத்தல் மற்றும் செயற்திறன் குறைந்துவிடாது பாதுகாத்தல் ஆகியனவே அதன் நோக்கமாகும். எனவே செயற்பாடு குறைந்தது என நீங்கள் கருதும் தசை நார்களுக்குபோதிய பயிற்சிகள்  கொடுக்க வேண்டும்.

 

இடது காலை உயர்த்துவது கடினம் என்றீர்கள். அதை அப்படியே விட்டுவிட வேண்டாம். படுத்திருந்தபடி உங்களால் இயன்ற அளவு அந்தக் காலை உயர்த்துங்கள். முடியாது போனால் உங்கள் கைகளால் பற்றி உயர்த்த முயலுங்கள். அதுவும் முடியாதவர்கள் ஏணை போல துணியைக் கட்டி அதில் காலை வைத்து அதை மேல் நோக்கி உயர்த்துவதன் மூலம் பயிற்சி சொடுக்கலாம். இதேபோல வேறு தசைநார்த் தொகுதிகள் பாதிப்புற்றிருந்தால் அதன் வீச்சு எல்லை குறையாதவாறு பொருத்தமான பயிற்சிகள் கொடுக்க வேண்டும்.

 

இருந்தபோதும் ஒரு Physiotherapist ன் ஆலோசனையை பெற்று அதன்படி பயிற்சிகளைச் செய்வதே பொருத்தமாக இருக்கும்.

 

முடியாது என்று சோர்ந்து படுத்திருக்காது இயன்றவரை இயங்குவதே நல்ல பயிற்சிதான். முடிந்தவரை நடவுங்கள். நடக்கும்போது காலில் காயங்கள் ஏற்படாதிருக்க பொருத்தமான காலணிகள் அணிவது அவசியம்

 

காலை உயர்த்தும்போது அல்லது நடக்கும்போது கால் தளர்கிறது எனில். அந்தக் தசைத் தொகுதிக்கு; பயிற்சி அளிப்பது அவசியம். முழங்கால் அல்லது கணுக்கால் சரியான படி இயங்க முடியாது தளர்கிறது எனில் அந்த மூட்டுக்களை தளர விடாது சிம்பு (splint)  உபயோகிக்கலாம். splint என்பது பலகை அல்லது இரும்பினால் அது வளையாது இருப்பதற்கு வைத்துக் கட்டும் அணை எனலாம்.

 

உங்களால் நீந்த முடியுமானால் அதுவும் நல்ல பயிற்சியாக அமையும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்/குடும்ப மருத்துவர்

0 comments:

Post a Comment