திருக்குறள் -/12/-நடுவு நிலைமை

 முகவுரை -11-உரைகளும் மொழிபெயர்ப்புகளும்

11B: மொழிபெயர்ப்புகள்

தமிழ் இலக்கியங்களில் மிக அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட நூலாகவும் உலகின் மிக அதிக மொழிபெயர்ப்புகளைக் கண்ட நூல்களில் ஒன்றாகவும் திருக்குறள் திகழ்கிறது. 1975-ம் ஆண்டின் முடிவில் குறள் 20 மொழிகளுக்குக் குறையாமல் மொழிபெயர்க்கப்பட்டிருந்ததாக சுவெலபில் தனது நூலில் குறிப்பிட்டிருந்தார். வடமொழி, இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி, மராத்தி, குஜராத்தி, உருது ஆகிய இந்திய மொழிகளிலும், பர்மீயம், மலாய், சீனம், ஃபிஜியன், இலத்தீன், பிரெஞ்சு, ஜெர்மானியம், ரஷ்யன், போலிஷ், ஸ்வீடிஷ், தாய், ஆங்கிலம் ஆகிய அயல் மொழிகளிலும் அதுவரை குறளானது மொழிமாற்றம் செய்யப்பட்டிருந்தது.

 

இடைக்காலங்களில் குறளுக்கு உரைகள் எழுந்த காலகட்டத்தில் திருக்குறள் சக இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கக் கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆயினும் இக்கூற்றினை நிரூபிக்கும் விதமான மொழிபெயர்ப்பு ஓலைச்சுவடிகள் இதுவரை மிக அரிதாகவே கிடைக்கப்பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சென்னைப் பல்கலைக்கழக நூலகராக இருந்த எஸ். ஆர். ரங்கநாதன் என்பவர் குறளின் மலையாள மொழிபெயர்ப்பு ஓலைச்சுவடி ஒன்றைக் கண்டெடுத்தார். மலையாள நாட்காட்டி ஆண்டு 777 என்று குறிக்கப்பட்டிருந்த அந்த ஓலைச்சுவடியின் இயற்றப்பட்ட ஆண்டினை சுவெலபில் 1595 என்று அறுதியிடுகிறார்.

 

ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் குறள் பல ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. குறிப்பாகக் கிறித்தவ மதபோதகர்கள் தங்களது மதப் பிரசார செயல்களின் ஒரு பகுதியாக குறள் உள்ளிட்ட இந்திய இலக்கியங்களை மொழிமாற்றம் செய்யத் துவங்கினர். இதன் விளைவாக குறளின் ஐரோப்பிய மொழிபெயர்ப்பு எண்ணிக்கை மேலும் கூடியது. குறளின் முதல் ஐரோப்பிய மொழிபெயர்ப்பு 1730-ல் 'வீரமாமுனிவர்' என்றழைக்கப்படும் கான்ஸ்டான்ஷியஸ் ஜோசஃப் பெச்கி என்பவரால் இலத்தீன் மொழியில் செய்யப்பட்டது. ஆனால் அவர் குறளின் முதல் இரண்டு பால்களை மட்டுமே மொழிபெயர்த்தார். காமத்துப்பாலை படிப்பதென்பதும் மொழிபெயர்ப்பதென்பதும் ஒரு கிறித்தவ மதபோதகருக்கு உகந்ததல்ல என்று அவர் கருதியதால் அதை மொழிமாற்றம் செய்யாமல் விட்டுவிட்டார். குறளின் முதல் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு 1767-ம் ஆண்டு பெயர் தெரியாத ஒரு அறிஞரால் செய்யப்பட்டது. எனினும் இது விரைவில் வழக்கின்றி உலகறிது போய்விட்டது. வழக்கிலுள்ள முதல் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு 1848-ம் ஆண்டு இ. எஸ். ஏரியல் என்பவரால் செய்யப்பட்டது. அவரும் குறளை முழுவதுமாக மொழிமாற்றம் செய்யாது சில பகுதிகளை மட்டுமே மொழிபெயர்த்தார். குறளின் முதல் ஜெர்மன் மொழிபெயர்ப்பு கார்ல் கிரவுல் என்பவரால் செய்யப்பட்டு 1856-ம் ஆண்டு இலண்டன், லைப்சிக் ஆகிய இரு நகரங்களிலும் பதிப்பிக்கப்பட்டது. கூடுதலாக 1856-ம் ஆண்டு கிரவுல் குறளை இலத்தினிலும் மொழிபெயர்த்தார்.

 

ஆங்கிலத்தில் குறள் முதன்முறையாக 1794-ம் ஆண்டு ஆங்கிலேயக் கிழக்கிந்திய நிறுவன அதிகாரியான என். இ. கின்டர்ஸ்லி என்பவராலும் 1812-ம் ஆண்டு ஆங்கிலேய அரசு அதிகாரியான எல்லீசன் என்பவராலும் மொழிபெயர்க்கப்பட்டது. இவை இரண்டுமே பகுதி மொழிபெயர்ப்புகள் மட்டுமே. கின்டர்ஸ்லி குறளின் ஒரு பகுதியை மட்டும் மொழிபெயர்க்கையில் எல்லீசன் 69 குறட்பாக்களை செய்யுள் நடையிலும் 51 குறட்பாக்களை உரைநடையிலும் என மொத்தம் 120 குறட்பாக்களை மொழிபெயர்த்தார். எட்வார்டு ஜெவிட் ராபின்சன் என்ற மதபோதகர் 1873-ம் ஆண்டில் பதிப்பித்த தி டமில் விஸ்டம் என்ற நூலிலும் அதன் பின்னர் 1885-ம் ஆண்டில் விரிவாக்கிப் பதிப்பித்த தி டேல்ஸ் அன்ட் போயம்ஸ் ஆஃப் செளத் இன்டியா என்ற நூலிலும் குறளின் அறத்துப்பாலையும் பொருட்பாலையும் மட்டும் மொழிபெயர்த்திருந்தார். மற்றுமொரு மதபோதகரான வில்லியம் ஹென்றி ட்ரூ 1840-ல் அறத்துப்பாலையும் 1852-ல் பொருட்பாலின் ஒரு பகுதியையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். நூலில் தனது உரைநடை மொழிபெயர்ப்புடன் சேர்த்து குறளின் மூலத்தையும் பரிமேலழகரின் உரையையும் இராமானுஜ கவிராயரின் விளக்கவுரையையும் பதிப்பித்தார். ஆனால் பொருட்பாலில் காணப்படும் குறளின் 63-வது அதிகாரம் வரை மட்டுமே ட்ரூ மொழிபெயர்த்திருந்தார். பெச்கியைப் போலவே ட்ரூவும் இன்பத்துப்பாலை மொழிபெயர்க்காது இருந்துவிட்டார். இவற்றை 1885-ம் ஆண்டு ஜான் லாசரஸ் என்ற மதபோதகர் மெருகேற்றி கூடவே ட்ரூ மொழிபெயர்க்காது விட்டிருந்த பொருட்பாலின் மீதமிருந்த அதிகாரங்களையும் இன்பத்துப்பால் முழுவதையும் மொழிபெயர்த்து வெளியிட்டார். இதுவே குறள் முழுவதற்குமான முதல் ஆங்கில மொழிபெயர்ப்பாக உருவானது. 1886-ம் ஆண்டு ஜார்ஜ் யுக்ளோ போப் என்ற மதபோதகர் செய்த செய்யுள் நடை மொழிபெயர்ப்பு குறள் முழுவதற்கும் ஒரே நபரால் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பாக மாறியது. இதுவே குறளை மேற்கத்திய நாடுகளுக்கு அறிமுகப்படுத்திய நூலாகவும் அமைந்தது.

 

இருபதாம் நூற்றாண்டில் குறள் பல தெற்காசிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. இவற்றில் சில அதுவரை வெளிவந்த குறளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளைத் தழுவியே செய்யப்பட்டவை ஆகும். இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் குறளுக்குச் சுமார் 24 ஆங்கில மொழிபெயர்ப்புகள் வெளிவந்திருந்தன. இவற்றில் சில ஆங்கிலேய அறிஞர்களாலும் மற்றவை இந்திய அறிஞர்களாலும் செய்யப்பட்டவையாகும். குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த இந்திய அறிஞர்களில் வ. வே. சு. ஐயர், கே. எம். பாலசுப்பிரமணியம், சுத்தானந்த பாரதியார், ஆ. சக்கிரவர்த்தி, மு. சி. பூரணலிங்கம் பிள்ளை, சி. இராஜகோபாலசாரி, பி. எஸ். சுந்தரம், வி. ஆர். இராமச்சந்திர தீட்சிதர், ஜி. வான்மீகநாதன், கஸ்தூரி சீனிவாசன், எஸ். என். ஸ்ரீராமதேசிகன், கே. ஆர். சீனிவாச ஐயங்கார் ஆகியோர் முக்கியமானவர்களாவர். கிட்டு சிரோமனி என்பவரால் குறள் நரிக்குறவர்களின் மொழியான வாக்ரி போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டு முடிய குறள் 43 உலக மொழிகளுக்குக் குறையாமல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் மட்டும் வெளிவந்த மொழிபெயர்ப்புகளின் எண்ணிக்கை இதுவரை 100-ஐத் தாண்டியுள்ளது. 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை தரமணியில் இயங்கிவரும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் திருக்குறளை 102 மொழிகளில் மொழிபெயர்க்கத் துவங்கிவிட்டதாக அறிவித்தது. மிகச் சமீபமாக பப்புவா நியூ கினியின் தோக் பிசின் மொழியில் குறள் மொழிபெயர்கப்பட்டு 22 மே 2023 அன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோதியாலும் பப்புவா நியூ கினியின் பிரதமர் ஜேம்ஸ் மராப்பேவாலும் இணைந்து வெளியிடப்பட்டது.

[திருக்குறள் - முகவுரை-13 அடுத்தவாரம் தொடரும்]

 

திருக்குறள் தொடர்கிறது….

 


12. நடுவு நிலைமை

👉குறள் 111:

தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்

பாற்பட் டொழுகப் பெறின்.

 

மு.வ உரை:

அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்.

சாலமன் பாப்பையா உரை:

பகைவர், நண்பர், அயலார் என்னும் பிரிவினர் தோறும் நீதி தவறாது பின்பற்றப்படுமானால் நடுவுநிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறம் மட்டுமே வாழ்க்கைக்குப் போதும்.

கலைஞர் உரை:

பகைவர், அயலோர், நண்பர் எனப்பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக்கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும்.

 

👉குறள் 112:

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி

எச்சத்திற் கேமாப் புடைத்து.

 

மு.வ உரை:

நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

நீதியை உடையவனின் செல்வம் அழியாமல் அவன் வழியினர்க்குப் பாதுகாப்பாக இருக்கும்

கலைஞர் உரை:

நடுவுநிலையாளனின் செல்வத்திற்கு அழிவில்லை; அது, வழிவழித் தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும்.

 

👉குறள் 113:

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை

அன்றே யொழிய விடல்.

 

மு.வ உரை:

தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு நி‌லைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

நன்மையே தருவதாக இருந்தாலும் நீதியை விட்டு விலகுவதால் வரும் லாபத்தை, அப்பொழுதே விட்டு விடுக.

கலைஞர் உரை:

நடுவுநிலை தவறுவதால் ஏற்படக்கூடிய பயன் நன்மையையே தரக் கூடியதாக இருந்தாலும், அந்தப் பயனைக் கைவிட்டு நடுவுநிலையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும்.

 

👉குறள் 114:

தக்கார் தகவிலர் என்ப தவரவர்

எச்சத்தாற் காணப் படும்.

 

மு.வ உரை:

நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலை‌மை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.

சாலமன் பாப்பையா உரை:

இவர் நீதியாளர், இவர் நீதியற்றவர் என்ற வேறுபாட்டை அவரவர் தம் செல்வம், புகழ், பிள்ளைகளின் ஒழுக்கம் ஆகியவற்றால் அறிந்து கொள்ளலாம்.

கலைஞர் உரை:

ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும்.

 

👉குறள் 115:

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்

கோடாமை சான்றோர்க் கணி.

 

மு.வ உரை:

கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.

சாலமன் பாப்பையா உரை:

தீமையும் நன்மையும் எல்லார்க்கும் முன்பே குறிக்கப்பட்டு விட்டன; இதை அறிந்து நெஞ்சத்தால் நீதி தவறாது இருப்பது சான்றோர்க்கு அழகாகும்.

கலைஞர் உரை:

ஒருவர்க்கு வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை; அந்த இரு நிலைமையிலும் நடுவுநிலையாக இருந்து உறுதி காட்டுவதே பெரியோர்க்கு அழகாகும்.

 

👉குறள் 116:

கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம்

நடுவொரீஇ அல்ல செயின்.

 

மு.வ உரை:

தன் நெஞ்சம் நடுவுநிலை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன் என்று ஒருவன் அறிய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

தன் நெஞ்சம் நீதியை விட்டுவிட்டு அநீதி செய்ய எண்ணி னால், அதுவே தான் கெடப் போவதற்கு உரிய அறிகுறி.

கலைஞர் உரை:

நடுவுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு வந்து விடுமானால் அவன் கெட்டொழியப் போகிறான் என்று அவனுக்கே தெரியவேண்டும்.

 

👉 குறள் 117:

கெடுவாக வையா துலகம் நடுவாக

நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.

 

மு.வ உரை:

நடுவுநிலைமை நின்று அறநெறியில் நிலைத்து வாழகின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என கொள்ளாது உலகு.

சாலமன் பாப்பையா உரை:

நீதி என்னும் அறவாழ்வு வாழ்ந்தும் ஒருவன் வறுமைப்பட்டுப் போவான் என்றால், அதை வறுமை என்று உயர்ந்தோர் எண்ணவேமாட்டார்.

கலைஞர் உரை:

நடுவுநிலைமை தவறாமல் அறவழியில் வாழ்கிற ஒருவருக்கு அதன் காரணமாகச் செல்வம் குவியாமல் வறுமை நிலை ஏற்படுமேயானால் அவரை உலகம் போற்றுமே தவிரத் தாழ்வாகக் கருதாது.

 

👉 குறள் 118:

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்

கோடாமை சான்றோர்க் கணி.

 

மு.வ உரை:

முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநி‌லைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.

சாலமன் பாப்பையா உரை:

முதலில் சமமாக நின்று பிறகு தன்மீது வைக்கப்பட்ட பாரத்தை நிறுத்துக் காட்டும் தராசு போல, நீதிக்குரிய இலக்கணங்களால் அமைந்து ஓரம் சார்ந்து விடாமல் இருப்பது சான்றோராகிய நீதிபதிகளுக்கு அழகாம்.

கலைஞர் உரை:

ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தாரசு முள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை என்பதற்கு அழகாகும்.

 

👉 குறள் 119:

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா

உட்கோட்டம் இன்மை பெறின்.

 

மு.வ உரை:

உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல் இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாம்.

சாலமன் பாப்பையா உரை:

மனம் ஓரஞ் சாராமல் சமமாக நிற்குமானால் சொல்லிலும் அநீதி பிறக்காது; அதுவே நீதி.

கலைஞர் உரை:

நேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருவர்க்கு இருந்தால் அவரது சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும் அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை.

 

👉 குறள் 120:

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

பிறவும் தமபோல் செயின்.

 

மு.வ உரை:

பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரி‌ய நல்ல வாணிக முறையாகும்.

சாலமன் பாப்பையா உரை:

பிறர் பொருளையும் தம் பொருள் போலக் காத்து, வியாபாரம் செய்தால் வியாபாரிகளுக்கு நல்ல வியாபார முறை ஆகும்.

கலைஞர் உரை:

பிறர் பொருளாக இருப்பினும் அதனைத் தன் பொருளைப் போலவே கருதி நேர்மையுடன் வாணிகம் செய்தலே வணிக நெறியெனப்படும்.

👉 திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்....

0 comments:

Post a Comment