திரிகடுகம் -வாழ்க்கை செம்மை பெற..../05/

 [திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரி-மூன்று, கடுகம்-காரமுள்ள பொருள். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள மூன்று நீதிகள் மனிதனின் அறியாமையாகிய நோயைப் போக்கி, வாழ்க்கை செம்மை பெற உதவுமென்ற கருத்தமைந்தமையால் இந்நூல் திரிகடுகம் எனப்படுகிறது. 101 வெண்பாக்களைக் கொண்டது இந்நூல். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ,கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது.]

 


திரிகடுகம் தொடர்கிறது.....

 

வெண்பா: 21

வருவாயுள் கால் வழங்கி வாழ்தல், செரு வாய்ப்பச்

செய்தவை நாடாச் சிறப்புடைமை, எய்தப்

பல நாடி நல்லவை கற்றல், - இம் மூன்றும்

நல மாட்சி நல்லவர் கோள்.       

 

விளக்கம்: தனக்கு வரும் வருவாய்க்கு ஏற்றபடி அறம் செய்தலும், போரில் வெற்றி அடைதலும், நல்லவைகளைப் படித்தலும் நல்லவருடைய கொள்கைகள் ஆகும்.

 

வெண்பா: 22

பற்று என்னும் பாசத் தளையும், பல வழியும்

பற்று அறாது ஓடும் அவாத் தேரும், தெற்றெனப்

பொய்த்துரை என்னும் புகை இருளும், - இம் மூன்றும்

வித்து; அற, வீடும் பிறப்பு.         

 

விளக்கம்: பாசப் பற்றையும், பற்று விடாத விருப்பத்தையும், பொய்மையை என்றும் அறியாமை, ஆகிய இம்மூன்றையும் நீக்கினால் வீடு பேறு அடையலாம்.

 

வெண்பா: 23

தானம் கொடுக்கும் தகைமையும், மானத்தால்

குற்றம் கடிந்த ஒழுக்கமும், தெற்றெனப்

பல் பொருள் நீங்கிய சிந்தையும், - இம் மூன்றும்

நல் வினை ஆர்க்கும் கயிறு.       

 

 விளக்கம்:  தானம் கொடுத்தலும், பழிக்கு நாணும் நல்லொழுக்கமும், பல பொருள்களில் இருந்து நீங்கிய நல்ல சிந்தனையும், ஆகிய இம்மூன்றும் அறத்தின் பயனைத் தரும்.

 

வெண்பா: 24

காண் தகு மென் தோள் கணிகை வாய் இன் சொல்லும்,

தூண்டிலினுள் உட்பொதிந்த தேரையும், மாண்ட சீர்,

காழ்ந்த பகைவர் வணக்கமும், - இம் மூன்றும்

ஆழ்ச்சிப் படுக்கும், அளறு.       

 

விளக்கம்: மென்மையான தோள்களையுடைய கணிகையரின் மென்மையான மொழியும், தூண்டிலில் மீனுக்கு இரையாக வைக்கப்பட்ட தவளையும், பகைவர்களுடைய வணக்கமும், ஆகிய இம்மூன்றும் நரகம் போன்றதாகும்.

 

வெண்பா: 25

செருக்கினால் வாழும் சிறியவனும், பைத்து அகன்ற

அல்குல் விலை பகரும் ஆய்தொடியும், நல்லவர்க்கு

வைத்த அறப்புறம் கொண்டானும், - இம் மூவர்

கைத்து உண்ணார், கற்றறிந்தார்.        

 

விளக்கம்: பெரியோரை மதிக்காத அறிவில்லாதவனும், உடலை விற்கும் விலைமகளும், நல்லவர்க்கு வைத்த அறச்சாலையை அழித்தவனும், ஆகிய இம்மூவரிடத்தும் அறிஞர்கள் உணவு உண்ணமாட்டார்.

 

திரிகடுகம் தொடரும்.... ››››››

 

பதிவேற்றம்:செ.மனுவேந்தன்

 

தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்:

திரிகடுகம் - பதினெண் கீழ்க்கணக்கு, ஆகிய, இலக்கியங்கள், மூன்றும், பற்று, பதினெண், கீழ்க்கணக்கு, திரிகடுகம், வணக்கமும், மென்மையான, நல்லவர்க்கு, இம்மூன்றும், வைத்த, தெற்றெனப், சங்க, என்னும், தானம், நீங்கிய

"தாத்தாவும் பேரனும்"



குழந்தைகள், சிறுவர்கள் எப்படியாவது தமது பாட்டனை கூப்பிட்டாலும், உதாரணமாக தாத்தா, அப்பப்பா, அம்மப்பா ஏதுவாகியினும், அவர்கள்  என்றும் தம் பாட்டனை விரும்புகிறார்கள் என்பது நாம் கண்ட  உண்மை. அது மட்டும் அல்ல, பாட்டன், பாட்டி அவர்களுக்கு ஒரு மகிழ்வான சிறப்பு உறவும் ஆகும். அவர்களுடன் எந்தநேரமும் விளையாட, அவர்களை அணைத்து கதைகள் சொல்ல, துயில வைக்க ... இப்படி அனைத்துக்கும் ஒருவராக இருப்பதுடன் பாட்டன் பாட்டி தான் குடும்பத்தின் கலாச்சார பாரம்பரியத்தில் மற்றும் தாய் மொழியில் அவர்களுக்கு ஒரு தொடர்பை ஏற்படுத்துபவர்களாகவும் உள்ளனர். ஏன் என்றால் இந்த அவசர கால உலகில் தாய் தந்தை மற்றும் இளைய உறவினர்கள் எல்லோரும் வீடு, வேலை, கடை , உடற்பயிற்சி கூடம் ... இப்படி ஒரே ஓய்வில்லாது இருக்கிறார்கள். ஆக பாட்டன் பாட்டி தான் பொதுவாக அவர்களுடன் பொழுது போக்கக் கூடியவர்களாக இருப்பதே ஆகும். இப்படியான சூழ்நிலையில் தான், நான் ஓய்வு பெற்றதும், என் மகள் என்னை தங்களுடன் வந்து இருக்கும்படி அழைப்புவிட்டார்.

 

என் மகளின் வீடு லண்டனுக்கு வெளியே உள்ள, ஹெர்ட்ஃபோர்ட்ஷைர் [Hertfordshire] என்ற ஊரில் உள்ள வெலின் கார்டன் சிட்டி [welwyn garden city] என்ற ஒரு சிறு கிராமம் ஒன்றில் இருந்தது. அங்கு தொண்ணுற்று ஐந்து வீதத்துக்கும் மேற்பட்டோர்கள் பிரித்தானியா வெள்ளை இனத்தவர்கள் ஆவார்கள். ஆகவே எனக்கு தொடக்கத்தில் நண்பர்கள் என ஒருவரும் சேரவில்லை. எனக்கு நண்பர்கள் என்றால் என் இரு பேரன்கள் மட்டுமே!

 

ஒரு சனிக்கிழமை, சின்ன பேரன், அவருக்கு வயது சில மாதங்களே, தாயுடன் இருக்க, பெரிய பேரனுடன், பக்கத்தில் இருக்கும் பூங்காவிற்கு நடந்து போய்,  அதன் அருகில் உள்ள ஒரு குளத்திற்கு வந்தோம். அந்த குளத்தில் பல சிறுவர்கள் தொலைமுறைக் கட்டுப்பாட்டு மூலம் படகுககளை [remote-controlled boats] இயக்கி மகிழ்ந்து கொண்டு இருந்தார்கள். என் பேரனும் நாமும் அவர்கள் விளையாடுவதை உன்னிப்பாக கவனித்துக் கொண்டு, அங்கு இருந்த வாங்கு ஒன்றில் நாம் இருவரும் அமர்ந்தோம்.

 

 

கொஞ்சநேரம் போக, பேரன் என்னிடம் தாத்தா வீட்டுக்கு போய் எமது விளையாட்டு படகை எடுத்து வருவமோ என்று கேட்டார். இனி நாம் வீடு போய் திரும்பி வர நேரம் போகும் என்பதாலும், நான் என்னுடன், பேரனுடன் பொழுது போக்க காகிதம், கத்தரிக்கோல் & வண்ண எழுதுகோல்கள் எடுத்துக்கொண்டு வந்ததால், ஒரு காகித படகு செய்து அதற்கு வண்ணம் பூசி, குளத்தில் விட்டு அவருக்கு ஒரு புது உற்சாகம் ஊட்ட எண்ணினேன்.   

 

முதலில் அதை மறுத்து, இது உங்க ஊருக்குத்தான் சரி என்று பேரன் அடம்பிடித்தாலும், நான் கொஞ்சம் கொஞ்சமாக செய்ய, அதில் அவருக்கு ஒரு ஆர்வமே வந்துவிட்டது.

 

நான் அந்த காகித ஓடத்தை மேலும் நன்கு அழகுபடுத்த அங்கு மரங்களில் இருந்து விழுந்த ஓர் இரு சுள்ளிகளையும் சில புல்லுகளையும் ஓர் இரு பூக்களையும் பொறுக்கி வரும்படி பேரனிடம் கூறினேன். அவனும் மிக மகிழ்வாக துள்ளி ஓடி எடுக்க தொடங்கினார். நானும் மு.கருணா நிதியின் 'மறக்க முடியுமா ?' பாடலை எனக்குள் முணுமுணுக்க தொடங்கினேன்

 

 

'காகித ஓடம் கடல் அலை மீது

போவது போலே மூவரும் போவோம்

ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம்

அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம்'

 

 

அப்படி எம் படகு ஒருக்காவும்  கவுழாது, அவன் என் பேரன், கட்டாயம் வெற்றி வீரனாக இருப்பான் என்று எண்ணிக் கொண்டு இருக்கும் தருவாயில், திடீரென ஒரே ஆரவாரத்தைக் கேட்டு திரும்பி பார்த்தேன், என் பேரனுடன், அங்கு விளையாடிக் கொண்டு இருந்த மற்ற வெள்ளை சிறுவர்களும் நான் செய்வதை பார்க்க கூட்டமாக தங்கள் மூத்தோர்களுடன் சுற்றி நின்றார்கள். எல்லோருக்கும் இது அதிசயமாகவும் உற்சாகமாகவும் இருந்தததை உணர்ந்தேன்

 

நான் அவர்களுக்கு எப்படி செய்வது, அழகு படுத்துவது என்று விளங்கப் படுத்திக் கொண்டு, பேரன் கொண்டு வந்தவற்றை  இணைத்து ஒரு செயல் விளக்கமே [demonstration] செய்து காட்டினேன். எல்லோரும் கை தட்ட, பேரன் அந்த தொலை முறைக் கட்டுப் பாட்டு மூலம் இயங்கும் படகுகளுடன் ஓரளவு போட்டி போல் தண்ணீரில் விட்டார்.

 

முதலில் எம் காகித படகு கொஞ்சம் தத்தளித்தாலும், அங்கு வீசிய இளம் காற்று துணை சேர அது ஆடி ஆடி அழகாக குளத்தில் பயணிக்க தொடங்கியது.

 

மேலும் கொஞ்ச நேரம் போக, மற்றவர்களின் மின்கலம் [battery], தம் தம் வலுவை இழக்க அவர்களின் விளையாட்டு படகுகள் ஓய்வுக்கு வந்துவிட்டன. ஆமாம்

 

'கொண்டாட்டம் போட்டு கொடிகளும் ஏற்றி

படகை ஓட்டி மகிழ வைத்தது

காலமும் போக நேரமும் வர

வலு இழந்து சோகம் செய்தான்'

         

என்றாகி விட்டது! சங்ககாலத்தில் பலவகையான படகு விளையாட்டுகளை விளையாடியிருக்கின்றனர். பின்படகு (rowing),  முன்படகு (canoeing]   பாய்மர படகு (wind-surfing) என்பன முதன்மையான படகு விளையாட்டுகளாக இருந்ததாக அறிகிறோம். படகை அன்று புணை என்றும் அழைத்தனர். எம் காகித படைக்கும் காற்றால் இயங்கும் ஒரு பாய்மர படகு என்று சொல்லலாம். அது இயற்கை சக்தியில் இயங்குவதே.  ஆகவே பேரனின் காகித படகு மட்டும் நிமிர்ந்து நின்று இன்னும் ஓடிக் கொண்டு இருந்தது!. இப்ப எல்லா சிறுவர்களின் கவனமும் பேரனின் படகில் மட்டுமே. பேரன் இப்ப பெரிய வீரன் போல [hero] புன்முறுவலுடன் அவர்களின் மத்தியில் நின்று துள்ளிக் கொண்டு நின்றான்!!

 

'கதைப்பதைக்  கேட்க ஆட்களும் இல்லை

நட்பு  வழங்க யாருமே இல்லை'

 

என்று இருந்த எனக்கு, அன்று முதல் பல நண்பர்களும் வளர தொடங்கின!! 

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,/அத்தியடி, யாழ்ப்பாணம்]

ஒளிமயமான எதிர்காலம் -1:


செயற்கை நுண்ணறிவு மனிதன்:

 


மனிதனின் விஞ்ஞான அறிவு நாளாந்தம் அசுர வேகத்தில் வளர்ந்துகொண்டே இருக்கிறது. தற்போது தன்னைப்போலவே உருவம் கொண்ட, ஆனால் பலமடங்கு ஆற்றல் கொண்ட செயற்கையான நுண்ணறிவு மனித இயந்திரங்களை உருவாக்கத்  தொடங்கிவிட்டான். இவை வெகு விரைவில் மனிதன் செய்யும் பணிகள் அத்தனையையும் தாங்களே, ஆனால் வெகு துல்லியமாகவும், புத்திக் கூர்மையுடனும் செய்யத் தொடங்கி விடும்.

 

செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள், உலகில் அறியக்கூடிய பலவிதமான கலைகளையும், நுட்பங்களையும்  கற்று, மிகவும் திறமையுடன் செயல்படக்கூடியன. அவை, தரவுகளிலிருந்து கற்றுக்கொள்வதை அடிப்படையாகக் கொண்டு முடிவுகளை எடுத்து, எதிர்கால விளைவுகளைக் கணித்து கச்சிதமாக, மிகவும் விரைவாக கொடுக்கப்பட்டிருக்கும் பணிகளைச்  செய்து முடிக்க வல்லன.

 

இவ்வியந்திரங்கள் செய்யக்கூடிய சில அலுவல்களாவன :

 

* தானியங்கும் தரை / ஆகாய வாகனப் போக்கு வரத்து.

* கல்வி வசதி சாதனங்கள் / கல்வி போதனை.

* தொழிற்சாலை நிர்வாகம் / இயக்கம் / விற்பனை.

* வீதி, வீடு நிர்மாணம் / பராமரிப்புகள்.

* சுற்றாடல் சுத்தமாக்கல் / குப்பை அகற்றுதல்.

* கனிம ஆராய்ச்சி / சுரங்கத் தொழில்கள்

* அன்றாட வீடு மற்றும் அலுவலக வேலைகள் / மேலாண்மைகள்.

* வைத்திய உபகரணங்கள் / சத்திர சிகிச்சைகள்.

* விண் வெளி ஆராய்ச்சி / பயணம்.

* சுற்றாடல் மாசு அகற்றுதல் / பேணுதல்.

* விவசாய நடவடிக்கைகள் / ஆய்வுகள் / இயந்திரங்கள்/ வேளாண்மை.

* பொழுது போக்கு உள் / வெளி மற்றும் போட்டி விளையாட்டுகள் .

* சமூக வலை தகவல் /அறிவியல் பரிமாற்றங்கள் .

* பொருள் சந்தைப்படுத்தல் / விநியோகம்..

* பொருளாதார திட்டமிடல் / வழிநடத்தல்.

* மனித வள மேம்பாடு பரிந்துரைகள் / செய்முறைகள் .

* சமூக / இணைய வழிக் குற்றத் தடுப்பு .

* முக அடையாள சேமிப்பு / தனி நபர் பாதுகாப்பு.

* இன்னும் பல, பல!

 

உலகளாவிய ரீதியில் சீனா கூடிய அளவிலான தானியங்கி நுண்ணறிவு இயந்திரங்களை செயல்பாட்டில் விட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் பெருமளவில் தங்கள் அலுவல்களை இவ்வியந்திரங்களிடம் விட்டுள்ளன.

 

வெகு விரைவில் இவ்வியந்திரங்கள் மனிதனின் நண்பனாகவும், அறிவுரை கூறி வழி நடந்ததும் ஆசிரியனாகவும், சகல பணிகளையும் செய்து முடிக்கும் சேவகனாகவும், வீடு கட்டித் தந்து, உடுத்து, உணவளித்து, தூங்கவைக்கும் பெற்றோர்களாகவும், நோய் நொடி ஒன்றும் வராது பாதுகாத்துக்கொள்ளும் வைத்தியனாகவும் நம் கூடவே வாழ்ந்துகொண்டிருக்கும்.

 

இவை நவீன வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் புரட்சியை ஏற்படுத்தப் போகிறது. இவை மனித வரலாற்றில் மிகப்பெரிய தொழில் நுட்பப்  பாய்ச்சலாக இருக்கும்

 

இன்னும் சில வருடங்களில் மனிதன் வேலை செய்துதான் பிழைக்க வேண்டும் என்ற தேவையே இருக்கமாட்டாது, எல்லாம் நம்மிலும் பார்க்க அறிவு கூடிய, அசுர சக்தி வாய்ந்த, மிகவும் விரைவாய் செயல் படக்கூடிய தானியங்கும் மனிதன் செய்து முடித்து நம் முன் கை கட்டிக்கொண்டு நிற்பான்.

 

இனி வரும் அக்காலத்தில் வெளியில் நாம் சென்றால், வீதியில் கண்டு சுகம் விசாரித்து, வாழ்த்துச் சொல்லுவது பெரும்பாலும் ஓர் இயந்திரத்துக்காகத்தான் இருக்கும்!

 

ஒளிமயமான எதிர்காலம்! நாம் அதுவரை இருப்போமா?

 [அடுத்த பகுதியினை வாசிக்க ,அழுத்துக  Theebam.com: ஒளிமயமான எதிர்காலம் 2:: ]

ஆக்கம்:செ.சந்திரகாசன்