"இயற்கையும் மனிதனும்" & "அழிவற்ற அன்பின் ஆனந்தம் ஆகாதோ?"



"இயற்கையும் மனிதனும்"

இயற்கை ஈன்ற மானிடனே!

இவ்வுலகம் உனதன்று,

இயற்கையின் மடியில் பிறந்தாய்; 

அதுவே உனது சொந்தம்!

நிலமெனவும் நாடெனவும் 

நெஞ்சினிலே பகை வளர்த்து,

நிலைகெட்டு மடிவதுவோ

நகைப்பன்றோ மானிடனே!

மண்ணில் பிறந்து 

மண்ணில் கலக்கும் மானிடனே,

மண்ணுக்குச் சொந்தமென்று

மாறிமாறிப் போரிடுவாய்!

எல்லையிட்டுக் கோடுகீறி 

எத்தனை உயிர் கொல்வாய்?

எல்லையற்ற இயற்கையினை 

எவர்தான் சொந்தம் கொள்வார்?

மலையும் கடலும் காடும் 

வானும் பொதுவன்றோ?

மனிதர் வகுத்த எல்லையெல்லாம் 

இயற்கை அறியுமோ?

பிறந்தபோது கொண்டுவந்தாய் 

என்ன சொல்வாய் மானிடனே?

போகும்போது கொண்டுசெல்வாய்

எதுவுமில்லை உணர்ந்திடுவாய்!

உலகம் உனக்குச் சொந்தமில்லை —

நீயே உலகின் சொந்தம்!

உயிர்கள் யாவும் உறவென்று

உணர்ந்தால் போதுமன்றோ?

பகையை விடுத்து அன்பு வளர்த்து,

அமைதியுடன் வாழ்ந்திடுவோம்;

பகிர்ந்து வாழும் பண்பினாலே

பார் முழுதும் சிறந்திடுமே!

-செ.மனுவேந்தன்

 

"அழிவற்ற அன்பின் ஆனந்தம் ஆகாதோ?"

பெண் நிலவு உன்னைப் பார்த்து

வெண் நிலவும் பொறாமை கொள்ளுதோ

கண்ணழகி உன்னைப் பார்த்த நானும்   

வண்ண ஒளி கந்தனை மறந்தேனோ?

 

அலைகடலென திரண்ட அடியார் கூட்டத்தில்

அலைமோதுதே என்மனம் உன் விழிகளில்

அறியாத உணர்வுகளின் வரிகள்  எல்லாம்

அழகாக உன்னுதட்டினில் புதைத்து எனோ?

 

வாழ்க்கை ஓடத்தில் நீயும் நானும்

வாடாத மலராய் இருக்க மாட்டோமா  

வாலிபம் தந்த காதல் மோகம்

வாசனை வீசி எம்மை அணைக்காதா?  

 

மொழியும் உணர்வும் பின்னிய பந்தம்

விழியில் பேசிய அன்புச் சொந்தம்

வழியொன்றில் மலர்ந்த காதல் சந்தம்  

அழிவற்ற அன்பின் ஆனந்தம் ஆகாதோ?

 

-[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

0 comments:

Post a Comment