விஞ்ஞானம் வழங்கும் விந்தைகள்

அறிவியல்=விஞ்ஞானம்

😛நிறத்துக்கு நிறம் ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியம்!


உருளைக் கிழங்கு என்றால் யாருக்குத் தான் பிடிக்காது? அதிலும் எண்ணெயில் பொரித்தெடுக்கும் மொறுமொறுப்பான உருளை சிப்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமானது. விதவிதமான மசாலா, சுவையூட்டிகளுடன் உலகம் முழுதும் விற்கப்படும் சிப்ஸ்களை நம்பி பெரும் விவசாய, உணவுத் தயாரிப்பு சார்ந்த பொருளாதாரமே இருக்கிறது. இப்படியாக அடைத்து வைத்து விற்கப்படும் உருளை சிப்ஸ்களால் ஏற்படும் தீமைகள் குறித்துப் பல்வேறு ஆய்வுகள் வந்துள்ளன.

சிப்ஸ்களுக்காகவே உற்பத்தி செய்யப்படும் உருளைக் கிழங்குகள் நீண்ட காலம் கெடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மிகக் குறைந்த வெப்பநிலையில்- குளிர் நிலையில் சேமிக்கப்படுகின்றன. இந்தக் குளிர் நிலையில் கிழங்கில் உள்ள ஸ்டார்ச், சர்க்கரையாக மாறுகிறது.

இப்படியான கிழங்குகளைப் பொரிக்கும்போது அடர் நிறத்தை அடைகின்றன. இதை நுகர்வோர் விரும்புவதில்லை. அத்துடன் அடர் நிறக் கிழங்குகளைப் பொரிக்கும்போது அவற்றில் உள்ள சர்க்கரையிலிருந்து, 'அக்ரைலமைட்' என்ற வேதிப் பொருள் உருவாகிறது. இது புற்றுநோயை ஏற்படுத்தும் இயல்பை உடையது.

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலப் பல்கலை விஞ்ஞானிகள் இந்த வேதிப் பொருளின் உற்பத்திக்குக் காரணம் கிழங்கில் உள்ளவாக்குவோலார் இன்வெர்டேஸ்’ மரபணு தான் என்பதைக் கண்டறிந்துள்ளனர். இந்த மரபணுவை மட்டுப்படுத்தி வளர்க்கப்பட்ட கிழங்கை சிப்ஸ் செய்யப் பயன்படுத்தலாம் என்று கூறுகின்றனர்.

இந்தக் கிழங்கைக் குளிர் நிலையில் சேமித்து வைத்தாலும் ஆபத்தான அக்ரைலமைட் உற்பத்தி ஆகாது. அத்துடன் இதில் செய்யப்படும் சிப்ஸ் அடர் நிறத்தில் இல்லாமல் பொன் நிறத்தில் இருக்கும், மக்களும் விரும்பி வாங்குவர். இவ்வாறான மரபணு மாற்றம் வாயிலாக உருளைக் கிழங்கு சிப்ஸை அதிக ஆபத்து இல்லாத உணவாக மாற்ற முடியும்.


😸இனி விலங்குகளின் பார்வையில் பார்க்கலாம்!

விலங்குகளின் உலகங்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், அவை தங்களுடைய சுற்றுப்புறத்தை எவ்வாறு பார்க்கின்றன என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். மனிதர்களாகிய நாம் நமது கண்களுக்குத் தெரிவது மட்டுமே உலகம் என்று நினைத்துக் கொண்டுள்ளோம்.

ஆனால், மனிதக் கண்களால் பார்க்க முடியாத அகச்சிவப்புக் கதிர்களையும், புற ஊதா கதிர்களையும் சில விலங்கு, பறவை, பூச்சி இனங்களால் பார்க்க முடியும் என்பதால் அவை உலகத்தைப் பார்க்கும் விதமே வித்தியாசமாக தான் இருக்கும்.

இங்கிலாந்தைச் சேர்ந்த சூசக்ஸ் பல்கலையும், அமெரிக்காவின் ஜார்ஜ் மேசன் பல்கலையும் சேர்ந்து விலங்குகளின் கண்களுக்குத் தெரிவது போலவே படம் எடுக்கும் ஹார்டுவேர்களையும் சாப்ட்வேர்களையும் உருவாக்கி இருக்கின்றனர். சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள், வனவிலங்கு புகைப்பட ஆர்வலர்கள் ஆகியோர் இவற்றைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

வௌவ்வால், கொசுக்களுக்கு அகச்சிவப்புக் கதிர்கள் தெரியும். சில பறவைகள், பட்டாம்பூச்சிகள் ஆகியவற்றால் புற ஊதா கதிர்களை காண முடியும். இந்தப் பார்வை சக்தியின் உதவியால் தான் அவற்றால் தங்கள் இரையைக் கண்டுபிடிக்கவும், பயணம் செய்யவும், இணைகளைத் தேடி அறியவும் முடிகிறது.

இதை மனத்தில் வைத்து கேமராவும் மென்பொருளும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த கேமரா நீலம், பச்சை, சிவப்பு, புற ஊதா கதிர்கள் ஆகிய அனைத்து ஒளிகளிலும் படம் எடுக்கும். படம் எடுத்த பின்னர் ஒவ்வொரு விலங்கிற்கும் எப்படித் தெரியும் என்பதற்கு ஏற்ப மென்பொருள் கொண்டு படங்கள், காணொலிகள் உருவாக்கப்படும்.

இதைப் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு உட்படுத்திப் பார்த்தனர். அதில் ஒன்றாக, மயிலின் தோகையை எடுத்து அது மனிதர்கள், நாய், தேனி, பெண் மயில் ஆகியவற்றுக்கு எவ்வாறு தெரிகிறது என்பதைப் படம் எடுத்தனர்.

இது 95 சதவீத துல்லியத்துடன் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வும் பி.எல்..எஸ்., பயாலஜி என்கின்ற அறிவியல் இதழில் வெளிவந்துள்ளது.


🧠மனித மூளை திசு

அமெரிக்காவைச் சேர்ந்த விஸ்கொன்சின் மேடிசன் பல்கலை விஞ்ஞானிகள், உலக அறிவியல் வரலாற்றின் முதன்முறையாக 3டி பிரின்டிங் முறையில் மனித மூளை திசுக்களை உருவாக்கிச் சாதனை படைத்துள்ளனர். இந்த ஆராய்ச்சி மூளை சார்ந்த நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும், மனித மூளையின் செயல்பாடுகளை விரிவாக அறிந்துகொள்ளவும் உதவும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


🚼குறை பிரசவத்திற்கு இதுவும் காரணமா?

நெகிழி(பிளாஸ்டிக்)களில் பயன்படும் 'தாலேட்'கள் என்ற ஒருவகை ரசாயனத்துக்கும், குறை பிரசவத்திற்கும் தொடர்புள்ளதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. இந்த ரசாயனத்தால் குழந்தைகளுக்குப் புற்றுநோய் ஏற்படுகிறது என்றும் இதற்கு முன்பு செய்யப்பட்ட ஆய்வுகள் கூறுகின்றன.

தாயின் கருவில் முழு வளர்ச்சி அடையாமல், குறைவான மாதங்களில் குழந்தை பிறந்தால் அதைக் குறை பிரசவம் என்று கூறுவோம். இவ்வாறு ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. அமெரிக்காவில் உள்ள நியூயார்க் க்ராஸ்மேன் மருத்துவ பல்கலை,  ஒரு குறை பிரசவம், வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களில் சேர்க்கப்படும் 'தாலேட்'களால் தான் ஏற்படுவதாகக் கண்டறிந்துள்ளது.

இந்த ஆய்வில் 5,000 கர்ப்பிணியர் உட்படுத்தப்பட்டனர். அவர்கள் உடலில் இருந்த பல்வேறு 'தாலேட்'கள் அடையாளம் காணப்பட்டன. அவற்றுள் ஒன்று டீஹெபி (DEHP : di-2-ethylhexyl phthalate). மிகவும் ஆபத்தான இந்த ரசாயனம் எந்தக் கர்ப்பிணியருக்கு அதிகம் இருந்ததோ அவர்களுக்கு, ரசாயனம் குறைவாக உள்ள பெண்களைக் காட்டிலும் குறை பிரசவம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 50 சதவீதம் அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டது.

இந்த ரசாயனம் பெரும்பாலும் உணவுப் பொருட்கள் அடைத்து விற்கப்படும் பிளாஸ்டிக் கவர்களில் தான் பயன்படுத்தப்படுகின்றன. உணவின் வாயிலாக மனித உடலுக்குள் செல்கிறது.

ஆகவே இதற்கு மாற்றாக ஆபத்து இல்லாத ரசாயனங்களை பிளாஸ்டிக் பொருட்களில் பயன்படுத்த வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


🌊சனியின் நிலவில் நீர்

நம் சூரிய குடும்பத்தின் இரண்டாவது பெரிய கோள், சனி. இதற்கு ஏராளமான துணைக்கோள்கள் உள்ளன. அவற்றுள் சில பெரியவை, பல சிறியவை. அப்படியான சிறிய துணைக்கோள்களுள் ஒன்று 'மிமாஸ்.' இதில் தண்ணீர் இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் 'நாசா' அனுப்பிய விண்கலம் காசினி (Cassini). 1997 அக்டோபரில் சனிக் கோளையும், அதன் வளையங்களையும், துணைக்கோள்களையும் ஆய்வதற்காக ஏவப்பட்டது இது.

சனி கோளுக்கு அருகே, 13 ஆண்டுகள் தங்கி இருந்து நமக்குத் தேவையான புகைப்படங்கள், தகவல்களை இது அனுப்பி விட்டு 2017ஆம் ஆண்டு செயல் இழந்தது.

இந்த விண்கலம் 'மிமாஸ்' குறித்த நிறைய தகவல்கள் அனுப்பியது. இந்தத் தகவல்களை ஆராய்ந்த குயின்மேரி லண்டன் பல்கலை விஞ்ஞானிகள் இந்தத் துணைக்கோளின் பரப்பின் கீழ் பெருங்கடல்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். கடல் உருவாகி 50 முதல் 150 லட்சம் ஆண்டுகள் மட்டுமே ஆகியுள்ளதாகக் கூறுகின்றனர்.

நம் சூரியக் குடும்பத்தில் உள்ள துணைக்கோள்களான எல்செலாடஸ், யூரோபா ஆகியவற்றில் தண்ணீர் இருப்பது ஏற்கனவே கண்டறியப்பட்டு விட்டது.

400 கி.மீ. விட்டம் மட்டுமே கொண்ட மிகச் சிறிய துணைக்கோள் 'மிமாஸ்' இதனுடைய பரப்பு, குழிகள், பள்ளங்கள் நிறைந்து காணப்படுகின்றன. தற்போது இங்கு கடல் நீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் உள்ளன.

எனவே அடுத்த கட்டமாக இங்கு உயிர்கள் உள்ளனவா என்ற தேடலில் விஞ்ஞானிகள் இறங்கி உள்ளனர்.


😱பருக்களை அழிக்கும் பாக்டீரியா

பருவ வயதில் பருக்கள் தோன்றுவது இயற்கை தான். ஆனால், அவை தொடர்ந்து தோன்றினால் தொல்லை தான். சருமத்தின் அழகைக் கெடுத்துவிடும். இவை தோன்றாமல் கட்டுப்படுத்த சில பாக்டீரியாவைப் பயன்படுத்த முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

சருமத்தின் முடி வளரும் துளைகள், எண்ணெய், இறந்த தோல் செல்கள் ஆகியவற்றால் மூடப்படும்போது வீக்கம் ஏற்பட்டு பருக்கள் உருவாகின்றன. இவ்வாறு பருக்கள் தோன்றாமல் இருக்க எண்ணெய் உற்பத்தி செய்யும் செல்களை அழித்தல் உள்ளிட்ட பல வழிகள் உள்ளன.

பருக்கள் தோன்றக் காரணமாக இருப்பது 'சீபம்' என்னும் ஒரு வகை எண்ணெய் தான். பருக்களுக்கான மருந்துகளில் இந்த எண்ணெயை உற்பத்தி செய்யும் செல்களை அழிக்கின்ற 'ஐசோட்ரீடினாயின்' என்ற ரசாயனம் இருக்கும்.

இயற்கையாகத் தோலில் இருக்கும் 'ஐசோட்ரீடினாயினின்' உற்பத்தியை அதிகப்படுத்த என்.ஜி..எல். (NGAL) என்ற ஒருவகைப் புரதம் உதவும். இந்தப் புரதத்தை உற்பத்தி செய்யும் வகையில் நம் சருமத்தின் தோலில் வாழ்கின்ற 'க்யூடிபாக்டீரியம் ஆக்னஸ்' எனும் பாக்டீரியாவை மரபணு மாற்றம் செய்துள்ளனர் ஸ்பெய்ன் நாட்டைச் சேர்ந்த யுபிஎஃப் (UPF) பல்கலை விஞ்ஞானிகள்.

இந்த பாக்டீரியாவைச் ஆய்வுக்கூடத்தில் செயற்கையாக வளர்க்கப்பட்ட மனிதத் தோல் செல்கள் மீது பரிசோதித்துப் பார்த்ததில் வெற்றி கிடைத்தது. இந்தச் சிகிச்சை முறை, பக்கவிளைவு ஏற்படுத்தும் செயற்கையான ரசாயனங்களுக்கு மாற்றாக அமையும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


🌇அதிகமான சூரிய ஒளியை மின்சாரமாக்க…

சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றும் தகடுகள் பெரும்பாலும் தட்டையாகவே வடிவமைக்கப்படுகின்றன. இதனால், சில நேரங்களில் தகடுகளின் சில பகுதிகளில் சூரிய ஒளி விழுவதில்லை. துருக்கி நாட்டைச் சேர்ந்த அப்துல்லா குல் பல்கலை விஞ்ஞானிகள் தகடுகளை அரைக்கோள வடிவில் வடிவமைத்தால் அதிகமான சூரிய ஒளியை மின்சாரமாக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.


🧥குளிரூட்டும் வைர உடை

உடலைக் குளிர்ச்சியாக வைக்க உதவும் உடைகள் பல ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் புதிதாகச் சேர்ந்துள்ளது வைர உடை. வைரத்தில் உடையா, அது எப்படிச் சாத்தியம்?

எல்லா தனிமங்களில் இருந்தும் அவற்றின் நானோ வடிவங்களை உருவாக்க முடியும். அவற்றை உருவாக்குவது அதிக செலவு பிடிக்கும் செயல். ஆனால், வைரங்களின் நானோ வடிவங்கள் அந்தளவுக்குச் செலவு பிடிப்பவை அல்ல.

நானோ வைரங்கள், பெரிய வைரங்களைப் போலவே வெப்பம் கடத்தும் தன்மை கொண்டவை. ஆஸ்திரேலியாவில் உள்ள ஆர்.எம்..டி. பல்கலை விஞ்ஞானிகள் இவற்றைக் கொண்டு உடை வடிவமைத்து உள்ளனர்.

நானோ வைரத் துகள்களை பாலியூரிதேன் முதலிய பொருட்களுடன் சேர்த்து திரவமாக்கி சாதாரண பருத்தி ஆடைகளில் பூச்சு போல் பூசினார்கள். சிறிது காய்ந்ததும், பருத்தி நார்களுடன் நானோ துகள்கள் நன்றாகப் பிணைந்து இருந்தன.

பூச்சு செய்யப்பட்ட துணியை, 100 டிகிரி வெப்ப நிலைக்குச் சூடாக்கப்பட்ட தட்டின் மீது 10 நிமிடங்கள் வைத்தனர். கூடவே பூச்சு செய்யப்படாத துணியும் வைக்கப்பட்டது. பிறகு 10 நிமிடங்கள் ஆற வைத்தனர்.

பூசப்படாத துணியை விடப் பூசப்பட்ட துணி 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிக வெப்பத்தை இழந்திருந்தது. அதாவது, பூசப்பட்ட உடை அணிபவர் உடலில் இருந்து வெப்பத்தைக் கடத்தி வெளியேற்றும். புற ஊதாக் கதிர்களிலிருந்தும் அணிபவர் உடலைப் பாதுகாக்கும் தன்மையும் இந்த உடைக்கு உள்ளது.

கட்டடங்கள் வெப்பமடைவதைத் தடுக்க இந்த நானோ வைரங்கள் உதவுமா என்று அறிவதற்கான ஒரு முன்னோட்டம் தான் இந்த ஆய்வு. ஒருவேளை அப்படி உதவினால் குளிரூட்டிகளின் பயன்பாட்டைக் குறைக்கலாம். இது சுற்றுச்சூழலுக்கு நன்மை செய்யும்.


🍫ஓட்ஸ் சாக்லேட்

இன்று கடைகளில் கிடைக்கும் சாக்லேட்களில் அதன் மொத்த எடையில் 50 சதவீதம் சர்க்கரை மட்டும் தான் உள்ளது. சர்க்கரையின் அளவைக் குறைத்தால் சுவையுடன், சாக்லேட்டின் வழுவழுப்புத் தன்மையும் குறைந்துவிடும். அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலப் பல்கலை, சர்க்கரைக்குப் பதிலாக குறிப்பிட்ட அளவு ஓட்ஸ் மாவைச் சேர்க்க பரிந்துரைத்தது. அதன்படி ஓட்ஸ் மாவு சேர்க்கப்பட்ட சாக்லேட்டின் சுவையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. அதேபோல் சாக்லேட்டின் வழுவழுப்புத் தன்மையும் அப்படியே இருந்தது.


🖤இதயநோய்களை உருவாக்கும் புரதச்சத்து

புரதச்சத்து நமக்கு மிகவும் அவசியமான ஒன்று தான். ஆனால், நாம் எடுத்துக் கொள்ளும் தினசரி கலோரிகளில் 22 சதவீதத்திற்கு மேல் புரதமாக இருந்தால் அது தமனிகளில் அடைப்பு ஏற்படுத்தி இதயநோய்களை உருவாக்கும் என, அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

தொகுப்பு செல்லத்துரை மனுவேந்தன்


0 comments:

Post a Comment