உங்கள் சிறுநீர் எந்த நிறத்தில் இருப்பது ஆபத்தின் அறிகுறி?

உடல்நலம் சிறுநீரகம் உடலின் ஒரு முக்கியமான உறுப்பு. சிறுநீரகம் மூலம் தான் நம் உடலில் திரவ கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டு சுத்தமான ரத்தம் தொடர்ந்து பரவுகிறது. மேலும், உடலில் உள்ள அதிகப்படியான நீர், சிறுநீரகம் மூலம் வடிகட்டப்பட்டு அது சிறுநீர் வாயிலாக வெளியேற்றப்படுகிறது.

 

இந்தியாவில் தீவிர நோய்களால் இறப்பதற்கான முதல் பத்து காரணங்களில், பல்வேறு சிறுநீரக நோய்கள் ஒன்பதாவது இடத்தில் இருக்கின்றன.

 

இந்தியா: தேசத்தின் ஆரோக்கியம்”-2017 எனும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கையின்படி, இந்தியாவில் ஏற்படும் இறப்புகளுக்கு நாள்பட்ட சிறுநீரக நோய் ஒன்பதாவது முக்கிய காரணமாகும். இந்நோய் அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்கள், கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் வயது ஆகியவையாகும்.

 

நேச்சர்இதழின் (Nature) பகுப்பாய்வின்படி, உலகில் 6.97 கோடி பேர் கடுமையான சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 1.15 கோடி பேர் இந்தியாவில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

2010-13-இல், சிறுநீரக செயலிழப்பு 15-69 வயதுடையவர்களிடையே 2.9 சதவீத இறப்புகளுக்கு காரணமாகும். இது 2001-03- விட 50 சதவீதம் அதிகரித்துள்ளது. சிறுநீரக செயலிழப்பு இறப்புகளுக்கு நீரிழிவு நோய் மிக முக்கிய காரணமாக உள்ளது.

 

இந்தியாவில் நாள்பட்ட சிறுநீரக நோயால் (CKD-Chronic kidney disease) 8-17 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நாள்பட்ட சிறுநீரக நோய் உள்ளவர்களுள் சுமார் 10-20 சதவீதம் பேருக்கு சிறுநீரக செயலிழப்பு உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

சிறுநீரகத்திற்கும் சிறுநீருக்கும் என்ன தொடர்பு?

இந்த நோய்க்கான காரணங்களை ஆழமாகப் புரிந்துகொள்ள சிறுநீரக மருத்துவர் சித்தார்த் ஜெயினிடம் பேசினோம்.

 

சிறுநீருக்கும் சிறுநீரகத்துக்கும் உள்ள தொடர்பை அவர் விளக்குகிறார்.

 

"உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் வளர்சிதை மாற்ற பொருட்களை சிறுநீர் வாயிலாக சிறுநீரகம் நீக்குகிறது. சிறுநீரகத்தின் செயல்பாடு உடலில் இருந்து அதிகப்படியான வளர்சிதை மாற்ற கழிவுகளை அகற்றுவதாகும். சிறுநீரின் உதவியுடன் இதைச் செய்கிறது" என்றார்.

 

சிறுநீரகம் நமது உடலின் ஒரு வடிகட்டி அமைப்பு. சிறுநீரகங்கள் ரத்தத்தில் உள்ள கழிவுகளை அகற்றி சிறுநீரை உற்பத்தி செய்கின்றன.

 

"சிறுநீரகத்தின் செயல்பாடு சிறுநீரின் உதவியுடன் உடலில் இருந்து அதிகப்படியான வளர்சிதை மாற்றக் கழிவுகளை அகற்றுவதாகும். உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் வளர்சிதை மாற்ற பொருட்களை சிறுநீரகம் நீக்குகிறது" என்று அவர் விளக்குகிறார்.

 

புரோட்டினூரியா என்றால் என்ன?

புரோட்டினூரியா (சிறுநீரில் புரதத்தின் குறிப்பிடத்தக்க இருப்பு) பற்றி மருத்துவர் சித்தார்த் ஜெயின் விரிவாக விளக்குகிறார். “ஒவ்வொரு ஆரோக்கியமான மனித உடலும் சிறுநீரின் மூலம் சில அளவு புரதத்தை வெளியேற்றுகிறது. ஆனால், இந்த புரதம் உடலில் இருந்து அசாதாரண அளவில் வெளியேற்றப்படும்போது, ​​​​அது ஆபத்தானது மற்றும் இந்த கசிவு புரோட்டினூரியா என்று அழைக்கப்படுகிறது" என்கிறார்.

 

"புரோட்டீனூரியா உற்பத்திக்கு மிகவும் பொதுவான காரணம் நீரிழிவு நோய். ஒருவருக்கு கட்டுப்பாடற்ற நீரிழிவு இருந்தால், அதிகப்படியான புரதம் சிறுநீரில் கசிகிறது" என்றார், மருத்துவர் சித்தார்த்.

 

"இதனால் கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயின் முதல் அறிகுறி புரோட்டினூரியா ஆகும்" என்றார்.

 

புரோட்டினூரியாவின் பிற காரணங்கள் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிற நோய்கள்.

 

புரோட்டினூரியாவின் அறிகுறிகளைப் பற்றி பேசுகையில், "சிறுநீர் நுரையுடன் இருப்பதாக உணர்ந்தால், அது புரோட்டினூரியாவின் அறிகுறியாகும்."

 

புரோட்டினூரியாவின் மேம்பட்ட நிலைகளில், நோயாளிகள் கைகள் மற்றும் கால்களில் வீக்கம், சோர்வு, வயிற்று வலி அல்லது வயிற்று தொற்று ஆகியவற்றை அனுபவிக்கலாம். இந்த நோய்க்கான பிற காரணங்கள் ரத்த அழுத்தம் மற்றும் பிற சிறுநீரகம் தொடர்பான நோய்கள் ஆகும்.

 

சிறுநீரின் நிறத்தை வைத்தே சிறுநீரகத்தில் உள்ள பிரச்னையை தெரிந்து கொள்வது எப்படி?

சிறுநீரில் நீர், யூரியா மற்றும் உப்புகள் உள்ளன. அதிகப்படியான அமினோ அமிலங்கள் உடைக்கப்படும்போது யூரியா கல்லீரலில் உற்பத்தியாகிறது. சிறுநீரின் மூலம் வெளியேற்றப்படும் முக்கிய கழிவுப்பொருள் யூரியாவாகும். ஏனெனில், அது சிறுநீரகத்தால் மீண்டும் உறிஞ்சப்படாது.

 

உங்கள் ரத்தத்தில் இருந்து வடிகட்டிய அதிகப்படியான நீர் மற்றும் கழிவுகள்தான் சிறுநீர் என, ’ஹார்வர்ட் ஹெல்த்கூறுகிறது. அதன் நிறம் பொதுவாக வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்து அடர் பழுப்பு வரை இருக்கும். அதன் செறிவு, நீரில் உள்ள கழிவுகளின் அளவைப் பொறுத்தது. இது, நீங்கள் எவ்வளவு திரவத்தை உட்கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது.

 

ஒரு நபர் தனது சிறுநீர் சிவப்பு, கருப்பு அல்லது பழுப்பு அல்லது வேறு ஏதேனும் நிறத்தில் இருப்பதாக உணர்ந்தால், அவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மருத்துவர் சித்தார்த் மேலும் கூறுகிறார்.

 

மேலும், சிறுநீரின் அளவு, இயல்பை விட மிகக் குறைவாகவோ அல்லது இயல்பை விட அதிகமாகவோ, அல்லது ஒருவர் அடிக்கடி சிறுநீர் கழிக்கச் செல்ல வேண்டியிருந்தாலோ அல்லது சிறுநீர் கழிக்கும்போது அதிக அழுத்தத்தை உணர்ந்தாலோ, கட்டுப்படுத்த முடியாமல் போனாலோ, சிறுநீரகப் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.

 

சிறுநீரகத்தின் செயல்பாடு என்ன?

சிறுநீரகம் உடலின் இன்றியமையாத உறுப்பு. அதன் செயல்பாடுகள்:

 

உங்கள் உடலில் உள்ள கால்சியம், சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளின் சமநிலையை பராமரிக்க உதவுகிறது.

ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

உங்கள் ரத்தத்தில் பி.ஹெச். எனும் அமிலத்தன்மையை சமநிலையுடன் பராமரித்தல்.

உங்கள் உடலில் இருந்து நீரில் கரையும் கழிவுகளை நீக்குகிறது.

சிறுநீரின் வாயிலாக அதிகப்படியான நீர், உப்புகள் மற்றும் யூரியாவை நீக்குகிறது.

 

சிறுநீரக தமனி மூலம் ரத்தம் சிறுநீரகங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ரத்தம் உயர் அழுத்தத்தில் வடிகட்டப்படுகிறது மற்றும் சிறுநீரகமானது குளுக்கோஸ், உப்பு அயனிகள் மற்றும் நீர் போன்ற பயனுள்ள பொருட்களைத் தேர்ந்தெடுத்து மீண்டும் உறிஞ்சுகிறது. சுத்திகரிக்கப்பட்ட பிறகு, ரத்தம் சிறுநீரக நரம்பு வழியாக ரத்த ஓட்ட அமைப்புக்குத் திரும்புகிறது.

 

சிறுநீரகங்கள் சிறுநீரை உற்பத்தி செய்து, நீர் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. சிறுநீர்ப்பை சிறுநீரை உடலில் இருந்து வெளியேறும் வரை சேமிக்கிறது.

 

நீரிழிவு நோயின் விளைவாக ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது மற்றும் உலகளவில் 41.5 மில்லியன் மக்களை இது பாதிக்கிறது. சிறுநீரக செயலிழப்புக்கு நீரிழிவு நோய் முக்கிய காரணமாக உள்ளது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 40 சதவீதம் பேருக்கு இறுதியில் சிறுநீரக நோய் ஏற்படுகிறது.

 

தீவிர சிறுநீரக நோய்கள் என்ன?

நாட்பட்ட சிறுநீரக நோய் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் ஆகும்.

 

ஒவ்வொரு சிறுநீரகமும் நெஃப்ரான்கள் எனப்படும் சுமார் ஒரு மில்லியன் சிறிய வடிகட்டி அலகுகளைக் கொண்டுள்ளது. நெஃப்ரான்களை காயப்படுத்தும் அல்லது பாதிக்கும் எந்த நோயும் சிறுநீரக நோயை ஏற்படுத்தும். நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் இரண்டும் நெஃப்ரானை பாதிக்கும்.

 

உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகங்கள், இதயம் மற்றும் மூளையில் உள்ள ரத்த நாளங்களையும் பாதிக்கும். சிறுநீரகங்கள் அதிக ரத்த நாளங்களை கொண்டவை. எனவே, ரத்த நாள நோய்கள் பொதுவாக உங்கள் சிறுநீரகங்களுக்கு ஆபத்தானவை.

 

நாள்பட்ட சிறுநீரக நோய், நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இது சிறுநீரகம் செயல்பாட்டை படிப்படியாக இழப்பதாகும். சிறுநீரகங்கள் ரத்தத்திலிருந்து கழிவுகள் மற்றும் அதிகப்படியான திரவத்தை வடிகட்டுகின்றன. பின்னர் அவை சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றன. நாள்பட்ட சிறுநீரக நோய் ஒரு மேம்பட்ட நிலையை அடையும் போது, ​​திரவம், எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் கழிவுகள் ஆகியவை ஆபத்தான அளவுக்கு உடலில் சேரும்.

 

நாள்பட்ட சிறுநீரக நோயின் அறிகுறிகள் காலப்போக்கில் உருவாகின்றன. சிறுநீரக பாதிப்பு படிப்படியாக நிகழ்கிறது. குமட்டல், வாந்தி, பசியின்மை, சோர்வு மற்றும் பலவீனம், தூக்க பிரச்னைகள், சிறுநீரில் ஏற்படும் மாற்றங்கள், மனக் கூர்மை குறைதல், தசைப்பிடிப்பு மற்றும் கைகளின் வீக்கம் ஆகியவையும் அறிகுறிகளாகும். பாதங்கள் மற்றும் கணுக்கால் சுளுக்கு மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவையும் இந்நோயுடன் சம்பந்தப்பட்டிருக்கலாம்.

 

நாள்பட்ட சிறுநீரக நோய் முற்றிலும் மீளமுடியாத நோயாகும். இது காலப்போக்கில் தீவிரமடையும். இதனால், சிறுநீரகம் அதன் செயல்பாடுகளை செய்ய முடியாத நிலை ஏற்படும்.

நன்றி :பிபிசி தமிழ்

0 comments:

Post a Comment