பழகத் தெரிய வேணும் – 9

(வேண்டாத) விருந்தினராகப் போவது

அதிதிகளைக் கவனிப்பது தேவர்களுக்கே தொண்டு செய்வதுபோல்,’ என்று எக்காலத்திலோ சொல்லி வைத்திருக்கிறார்கள். இதை இன்றும் நம்புகிறவர்கள் அரிது.

 

இது புரிந்து, ஒரு தாய் மகனுக்குக் கூறிய அறிவுரை: ‘மாமியார் வீட்டுக்கு விருந்தாளியாகப் போகிறாயா? சோற்றில் உன் முகம் தெரியும்போது, புறப்பட்டுவிடு’.

 

அவளுக்கு உலகின் போக்கு தெரிந்திருந்தது. முதல்நாள், மருமகனுக்குத் தடபுடலான உபசாரம் நடக்கும். இரண்டாம் நாள் சற்றுக் குறைந்துவிடும். மூன்றாம் நாளோ, மாமியார் பழைய சோற்றில் நீரை விட்டுக்கொடுப்பாளாம்.

 

விருந்தும் மருந்தும் மூன்று நாட்களுக்கு,’ என்று இதற்காகத்தான் சொல்லிவைத்திருக்கிறார்கள்.

 

மரியாதையாகக் கவனிப்பது

 

உறவினரோ, நண்பரோ, நம் வீட்டுக்கு வரும் விருந்தினர் அவரைக் கவனிப்பது நாம் அவரை எவ்வளவு மதிக்கிறோம் என்பதைக் குறிக்கிறது.

 

கதை

ஒரு கூட்டுக்குடும்பத்தில் மாமியார் சமையலைக் கவனித்துக்கொண்டாள். கறிகாய் நறுக்குவதிலிருந்து, அரைப்பது, கரைப்பது என்று எல்லா வேலையையும் தானே செய்தாள்.

 

மகன் வீட்டில் தங்கி இருக்கிறோமே! தன்னைப் பாரம் என்று மருமகள் கருதிவிட்டால்?’ என்று அவள் எண்ணியிருக்கக்கூடும்.

 

தங்களைப்போலவே பிறரும் இருக்கவேண்டும் என்று  எதிர்பார்ப்பதும் கோளாறுதான்.

 

அவர்கள் வீட்டில் சில தினங்கள் தங்க, மாமியாரின் உறவுக்காரப் பெண்மணி வந்தாள்.

 

மருமகளிடம், “நீயும் கொஞ்சம் ஒத்தாசை செய்யக்கூடாதா? ஒருத்தியே திண்டாடுகிறாளே!’ என்று கூறினாள். எழுபது பிராயத்தை எட்டிவிட்ட மாமியாருக்கு எப்போதும் உடல்வலி என்று தெரிந்துதான் அப்படிக் கூறினாள்.

 

இருப்பினும், ‘நல்லதற்குத்தானே சொல்கிறேன்!’ என்று பிறரது குடும்ப விவகாரங்களில் அநாவசியமாகத் தலையிட்டால், மனத்தாங்கல்தான் வரும்.

 

மாமியார்தான் ஏதோ சொல்லிக் கொடுத்திருப்பார்கள் என்று மருமகள் நினைக்க வாய்ப்பிருக்கிறதே! அப்போது அவர்கள் உறவில் விரிசல் ஏற்படாதா?

 

நான் அந்த வீட்டுக்குப் போனபோது, ‘உன் காலம் முடிந்ததும், யார் இப்படி எல்லாருக்கும் சமைத்துப் போடுவார்கள்?’ என்று முதியவளை கேட்கத்தான் தோன்றியது.

 

சில சமயம், நமக்குத் தோன்றுவதை எல்லாம் வெளிப்படையாகச் சொல்லாதிருப்பதுதான் நன்மை. அதனால் அடக்கிக்கொண்டேன். ‘அவரவர் பாடு, நமக்கென்ன!’ என்று ஒதுங்க வேண்டியதுதான்.

 

ஒவ்வொரு காயை ஒவ்வொரு விதமாக நறுக்கவேண்டும். அதனால்தான் நான் பிறரிடம் அந்த வேலையை விடுவதில்லை,’ என்று, எல்லா வேலைகளையும் தானே செய்வதாகச் சொல்கிறார்கள் சிலர். அதிகாரம் தன் கையை விட்டுப் போய்விடுமே என்ற பயமோ?

 

மாதிரிக்கு, ஒரு துண்டை நறுக்கி, ‘இதைப்போல் செய்,’ என்றால் புரியாதா?

 

பன்னிரண்டு வயதுக்கு மேல், குழந்தைகளையே இப்படிப் பழக்கலாம். பெரியவர்கள் தமக்குப் பிடித்த வேறு வேலையில் ஈடுபடலாம், மகிழ்ச்சியுடன்.

 

புத்தி புகட்ட வேண்டாமே!

பிறர் எதை, எப்படிச் செய்யவேண்டும் என்று நச்சரித்துக்கொண்டே இருப்பார்கள் விருந்தினராக வரும் சிலர்.

 

நான் உன்னைவிட கல்வியில், செல்வச்செழிப்பில், திறமையில் உயர்ந்திருக்கிறேன்,’ என்ற அகங்காரம் இப்படி ஆட்டுவிக்கலாம். இத்தகைய போக்கு மற்றவர்களை இவர்கள் மதிக்காததைத்தான் காட்டுகிறது.

 

மற்ற எந்த தகுதியைவிடவும் முக்கியமானது பணிவும் மரியாதையும். தாமே தம் மரியாதையைக் கெடுத்துக்கொண்டு, பிறரைப் பழிப்பானேன்!

 

கல்யாண வீடுகளில் விருந்தினர்

தங்கள் வீட்டில் இருக்கும் சௌகரியங்களைப் போகும் இடங்களில் எல்லாம் எதிர்பார்க்க முடியுமா?

 

ஒரு கல்யாணத்துக்குப் போகிறீர்கள். வருகை புரிந்த உறவினவர்கள் எல்லாரையும் ஒரே இடத்தில் தங்க வைத்திருக்கிறார்கள்.

 

தரை ஈரம்!’

 

பாத்ரூமுக்கு பத்துப் படிகள் ஏற வேண்டுமா!’

 

அது என்ன, பெரிய ஹாலில் நாலே நாலு கட்டில்? எல்லாவற்றையும் வயதானவர்கள் பிடித்துக்கொண்டுவிட்டார்கள்! நானும், கைக்குழந்தையும் எங்கே தூங்குவது?’

 

இம்மாதிரியான புகார்களை நிறைய கேட்கமுடியும்.

 

வசதி இருந்தால், ஹோட்டலில் தங்கலாம். இல்லாவிட்டால், வாயை மூடிக்கொண்டிருப்பதுதான் சரி. பெண் வீட்டுக்காரர்கள் எவ்வளவோ செலவழித்திருப்பார்கள். விருந்தினர்வேறு கஷ்டம் கொடுக்கவேண்டுமா?

 

குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டியது

பிறர் வீட்டுக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது, எதையும் அறிய ஆர்வமுடைய வயதில், எல்லாவற்றையும் கையில் எடுத்துப் பார்ப்பார்கள்.

 

வீட்டுக்காரர்கள், ‘சாமான்கள் உடைந்துவிடப்போகிறதே!’ என்ற கவலையுடன், வெளிப்படையாகச் சொல்லவும் முடியாமல் திணறுவார்கள்.

 

உடைந்துவிட்டாலோ, குழந்தைகளின் பெற்றோர் மன்னிப்பு கேட்கவேண்டிய நிலை.

 

போகிற இடத்தில் எதையும் தொட்டு விஷமம் பண்ணக்கூடாது,’ என்று முதலிலேயே கண்டித்தால், இரு தரப்பினருக்கும் இந்த தர்மசங்கடமான நிலைமை ஏற்படாதே!

 

விருந்துண்ணும்போது

குழந்தைகளுடன் பிறர் வீட்டில் சாப்பிட நேருகிறதா? அப்படியானால், முதலிலேயே அளிக்கவேண்டிய எச்சரிக்கை:

 

அவர்கள் கொடுப்பதைச் சாப்பிடுங்கள். நன்றாக இருக்கிறது, இல்லை, என்ற நேரடி வர்ணனை எல்லாம் வேண்டாம்!’

 

விருந்தினரை நன்கு கவனிப்பதாக நினைத்துக்கொண்டு, அவர்கள், `போதும், போதும்’ என்று கதற, உணவுப்பண்டங்களை அவர் தட்டில் பரிமாறிக்கொண்டே இருப்பது நாகரீகம்தானா?

 

அழையா விருந்தாளி

கை நிறையப் பணம் கிடைக்குமென்ற ஆசையுடன், செல்வம் வெளிநாட்டில் வேலை தேடிக்கொண்டார். சில ஆண்டுகள் அங்கு தங்க வேண்டியிருந்தது.

 

தனிமை வாட்டுமே!

 

புதிய நாட்டில் ஏற்படும் குழப்பங்களை எப்படிச் எதிர்கொள்வது?

 

இந்த பிரச்னைகளைச் சமாளிக்க, தன் நாட்டிலிருந்து வந்திருந்த ஒருவரைப்பற்றி அவரது உறவினரிடமிருந்து அறிந்து, அவரைத் தொடர்பு கொண்டார்.

 

மரியாதை கருதி, அவரைப் பண்புடன் நடத்தினார்கள் அக்குடும்பத்தினர்.

 

செல்வத்திற்கு அவர்கள் நல்ல குணம், மரியாதை, புரியவில்லை. ‘பிறர் வீட்டில் சாப்பிட்டால், நம் செலவு குறையும், நிறைய சேமிக்கலாமே!’ என்று குறுக்கு வழியில் யோசனை போயிற்று.

 

ஒவ்வொரு விடுமுறையின்போதும், ‘நான் வருகிறேன்,’ என்று அறிவித்துவிட்டு, காலையிலேயே வந்துவிடுவார். காலை, மத்தியான, சாயங்கால உணவு எல்லாம் அவர்கள் வீட்டில்தான். அவர்களுக்குத் தன் சுயநலமான போக்கினால் அசௌகரியம் ஏற்படக்கூடும் என்பதை நினைத்தும் பார்க்கவில்லை.

 

அவர்களுக்குச் சொல்லவும் தயக்கமாக இருந்தது.

 

உரிய காலம் வந்ததும், ‘நான் திரும்பிப் போக வேண்டும். இங்கேயே வேறு வேலை பார்த்துக் கொடுக்கிறீர்களா?’ என்று கேட்டார் செல்வம்.

 

ஓய்வுநாள் வந்தால் யார் வீட்டுக்குச் சாப்பிடப் போவது என்று அலைகிறீர்கள். உங்கள் குழந்தைகள் நினைவாகவே இருக்கிறீர்கள். பேசாமல், உங்கள் ஊரைப் பார்க்கப் போய்சேருங்கள்!’ என்று கறாராகச் சொன்னார்கள்.

 

செல்வம் தப்பாக எடுத்துக்கொள்ளவில்லை. ‘ஆமாம்,’ என்றார் வருத்தமாக. அவ்வப்போது தாய்நாடு திரும்பி, மனைவி, குழந்தைகளைப் பார்த்துவிட்டு, எங்கோ தனியாக இருப்பது பொறுக்க முடியாததாக இருந்தது.

 

அதற்காக, பிறரைத் தொல்லைப்படுத்தலாமா? இவரது தப்பாத வருகையால், அவர்களுக்கு வெளியில் எங்கும் போக முடியவில்லை. ஓய்வு நாட்களிலும் ஓய்வாக இருக்க முடியவில்லை.

 

அரைமனதுடன் சொந்த நாட்டிற்குப் போனார் செல்வம்.

 

இரண்டு வீடுகள் வாங்கிவிட்டான்!’ என்று பிரமித்தார்கள் நண்பர்கள். அவர்களுக்குத் தெரியவில்லை, எப்படி ‘பக்கித்தனமாக’ பணம் சேர்த்தார் என்று.

 

பிறரது வாழ்க்கைப் பிரச்னைகளில் உண்மையான அக்கறை காட்டாது, ஒருவர் தன் நலனையே யோசித்துக்கொண்டிருந்தால் மரியாதை குறைந்துவிடும்.

 

செல்வத்தைப் போன்றவர்கள் எல்லாரிடமும் ஒரே விதமாகப் பழகமாட்டார்கள். ‘இவருடன் பழகினால் தனக்கு என்ன நன்மை கிடைக்கும்?’ என்று கணக்குப்போட்டு, அதன்படி நடப்பார்கள்.


இவர்களுக்கு உண்மையான நண்பர்கள் எப்படிக் கிடைப்பார்கள்?

நிர்மலா ராகவன்/-எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா.  

தொடரும்.... 
👉அடுத்த பகுதியை வாசிக்க...அழுத்துக
👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக 

0 comments:

Post a Comment