பழகத் தெரிய வேணும் – 06

குழந்தைகளைக் கையாள்வது எப்படி?(பழகத் தெரிய வேணும் – 6)

வீட்டோடு வேலைக்கு ஆள் வைத்திருந்தால், நமக்கு வேலை மிச்சம். ஆனாலும், வளரும் குழந்தைகளிடம் பொறுப்புணர்ச்சி வராது.

 

இரண்டு வயதுக் குழந்தைகள் தாயைப் பின்தொடரும்போது, சிறு வேலைகளை ஏவலாம்.

தம்பிப்பாப்பா குளிச்சதும், துண்டு எடுத்துக் குடுக்கறியா? சமத்து!”

அருகிலேயே இருக்கும் பொருளை பெருமையாக எடுத்துக் கொடுப்பாள் குழந்தை. இன்னொரு பாராட்டு அவசியம்.

 

ஆட்டா மாவில் பாம்பு

சப்பாத்தி இடுவது குழந்தைகளுக்குப் பிடித்த வேலை. எவ்வளவு பிடிக்கும் என்றால், உருண்டையான மாவு பெரிதாகிக்கொண்டே போகும் அதிசயம் அவர்களுக்கு உவகை ஊட்ட, நாம் `போதும், போதும்’ என்று அலற, குழவியில் தேய்த்துக்கொண்டே இருப்பார்கள்! ஒட்டிய மாவை பிய்த்து எடுப்பது வேண்டாத வேலை.

 

இதைத் தவிர்க்க, நான் முதலிலேயே மகளிடம் ஒரு சிறு ஆட்டா உருண்டையைக் கொடுத்து, “பாம்பு பண்ணு,” என்பேன்.

 

களிமண்ணைப்போல் தரையில் தேய்த்து, ஏதேதோ பண்ணி திருப்தி அடைந்தபின், மாவை வீணடித்துவிட்டோமோ என்ற குற்ற உணர்ச்சியுடன், அழுக்கினால் நிறமே மாறிவிட்ட பொருளை, இதிலே சப்பாத்தி பண்ணும்மா,” என்று கொடுப்பாள்! 

வேண்டாம். நீயே வெச்சுக்கோ,” என்று அலற வேண்டியிருக்கும்.

ஏதாவது வேலை கொடுத்தால், அதை எப்படிச் செய்வது என்று முதலில் நாம் செய்து காட்டவேண்டும். அதேபோல் அவர்கள் செய்வார்கள் என்பதில்லை. வயது, அனுபவம் இதெல்லாம் பெரியவர்களைப்போல் இருக்குமா?

 

அவர்கள் முனைந்து செய்யும்போதே நச்சரித்தாலோ, கேலி செய்தாலோ அல்லது இரைந்தாலோ, அடுத்தமுறை ஏன் வருவார்கள்! வயதுக்கேற்ற வேலை கொடுத்தால் இப்படி ஆகாது. விளைவு எப்படி இருந்தாலும், முயற்சி செய்ததற்காகப் பாராட்டவேண்டாமா! அப்போதுதான் அடுத்தமுறை பெருமையுடன் உதவ வருவார்கள்.

 

வேலையை நன்றாகச் செய்து முடி, சாக்லேட் குடுக்கறேன்!” என்று ஆசை காட்டுவது லஞ்சம் வாங்கப் பழக்குவதுபோல். எப்போதாவது கொடுக்கலாம். ஆனால் ஒவ்வொரு முறையுமா!

 

மரியாதை ஏனில்லை?

குழந்தை! அவனுக்கு என்ன தெரியும்!’ என்று எதையும் பெரிதுபடுத்தாத பெற்றோர் (அல்லது தாத்தா-பாட்டி) முக்கிய காரணம்.

 

பெற்றோருக்குப் போதிய அவகாசம் இல்லாததால், குழந்தைகள் ஒரு நாளில் பெரும்பகுதியை பணிப்பெண்ணுடன் கழிக்க நேரிடுகிறது.

 

சம்பளத்துக்கு வேலை செய்பவளைப் பெற்றோர் கண்டிக்கும்போது, அவள்மீது வைத்த மரியாதை அறவே அற்றுப்போய்விடுகிறது. அதன்பின், தம் அதிகாரத்தால் பெருமை ஓங்க, எல்லாரிடமும் மரியாதையில்லாது நடந்து கொள்கிறார்கள், பெற்றோர் உள்பட.

 

ஆசிரியர்களின் பாடும் திண்டாட்டம்தான்.

தான் கற்ற தற்காப்புக் கலையை சிறுவர்களுக்குப் போதிக்கும் இளைஞன் ஒருவன், இப்போதெல்லாம் சிறுவர்களுக்கு டிஸிப்ளினே கிடையாது! எது சொன்னாலும் கேட்பதில்லை. நாங்கள் இப்படி இருக்கவில்லையே!” என்று அயர்ந்தான்.

 

உடனிருந்த ஒருவன், அவர்களுக்கு வீட்டில் யாரும் மரியாதை கற்றுக் கொடுத்திருக்க மாட்டார்கள்!” என்றான். தான் முன்னுக்கு வர பிறர் எடுத்த முயற்சிகள் அவனுக்கு விளங்க, அவர்கள்மீது நன்றி பெருகியது.

 

வீட்டில் நல்லொழுக்கத்தைப் போதிக்காமல் போய்விடும்போது, வேறு சூழ்நிலைகளில் எவர் முயன்றாலும், அது அவ்வளவாகப் பயனளிப்பதில்லை.

 

திரைப்படங்களால் பாதிப்பு

குழந்தைகளுக்கு முரட்டுத்தனம் கற்றுக்கொடுக்க நம் தமிழ்த்திரைப்படங்கள் ஆவன செய்கின்றன.

 

ஆறுவயதுச் சிறுவன் அழுகைக்குரலில் உரக்கச் சொன்னான்: “நான் விமலா ஆன்ட்டியை உதைக்கப்போறேன்!”

 

அதிர்ந்து, தம் உடல் மொழியாலேயே அவனைத் தடுத்தார்கள் பெற்றோர்.

 

பின்னே என்ன! நான் கீழே ஒக்காந்து விளையாடினா, எழுந்திருக்கச் சொல்றா!”

 

வீட்டு பணிப்பெண்ணை உறவுமுறை வைத்து அழைக்கக் கற்றிருந்தான். ஆனால், அவள் வீட்டைக் கூட்டிப்பெருக்கும்போது, தன்னை ஏன் விலகச் சொல்கிறாள் என்று அவனுக்குப் புரியவில்லை.

 

அதை விளக்கி, வயதில் மூத்தவர்களை மரியாதை இல்லாமல் பேசக்கூடாது என்று எடுத்துச்சொன்னார்கள்.

 

இப்படிச் செய்யாது, குழந்தைகளை மரியாதையின்றி நடக்கப் பழக்கும் வேறு சிலரை என்னவென்று சொல்வது!

 

கதை

தன் காரில் பன்னிரண்டு வயதுக்குட்பட்ட இரு சிறுவர்களுடன் ஒருவர் பயணித்துக்கொண்டிருந்தார். தன் பக்கத்தில் வரும் எல்லா காரோட்டிகளையும்பற்றி, முட்டாள்! எப்படி ஓட்டுகிறான்! பெண் டிரைவராக இருக்கவேண்டும்! இல்லை, அம்மாவிடமிருந்து கற்றவனாக இருக்கவேண்டும்!’ என்று பலவாறாக விமரிசித்துக்கொண்டே இருப்பது அவர் வழக்கம்.

 

அப்படிச் செய்தால், தன் திறன் எவ்வளவு சிறப்பானது என்று குழந்தைகள் புரிந்துகொள்வார்கள் என்று நினைத்திருப்பார். அவர்களைச் சிரிக்கவைக்கும் முயற்சியாகக்கூட இருக்கலாம்.

 

தன் போக்கு அவர்களையும் பார்ப்பவர்களை எல்லாம் மட்டமாக எடைபோடச் செய்யும் என்பதை அவர் உணரவில்லை. சற்று வயதானதும், அந்த தந்தையைப்பற்றியே அவதூறாகப் பேசிச் சிரிப்பார்கள் அக்குழந்தைகள்.

 

பிறரிடம் என்னென்ன குறைகள் இருக்கின்றன என்று ஆராயக் கற்றுக்கொடுப்பதைவிட, அவர்களிடம் இருக்கும் சில நற்குணங்களைப் பாராட்டலாமே!

 

மூன்றே வயதான குழந்தைகூட காலணிகளை அடுக்கி வைக்கும். முதலில் அன்பான வார்த்தை, பிறகு ஒரு பாராட்டு போதும்.

 

குடும்பத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் இவ்வாறு வயதுக்கேற்ற வேலைகளைப் பகிர்ந்து கொடுத்தால், சகோதர சகோதரிகளுக்குள் போட்டி ஏன் வருகிறது!

 

வரவழைத்துக்கொள்ளும் மறதி

வேலையிலிருந்து தப்பிக்க குழந்தைகள் என்னென்னவோ யுக்திகளைக் கடைப்பிடிப்பார்கள்.

 

தாங்கள் சாப்பிட்ட தட்டைக் கழுவி வைக்கவேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும். மறந்துவிட்டதுபோல், போட்டுவிட்டுப் போவார்கள். தண்டனையாக, SINK -ல் இருக்கும் எல்லாப் பாத்திரங்களையும் சுத்தப்படுத்துவது அவர்கள் வேலை என்று ஒரு விதி கொண்டுவாருங்கள். பின் ஏன் மறக்கிறார்கள்!

 

மறதி பெரியவர்களுக்கும்தான்.

மகளுக்கு மறுநாள் பரீட்சை என்பதை மறந்து, வேலை ஏவுகிறீர்களா?

உங்கள் தவற்றுக்காக `ஸாரி’ என்றுவிடுங்கள்.

 

பள்ளிப்பரீட்சை சமயங்களிலோ, நோய்வாய்ப்பட்டிருந்தாலோ வேலையிலிருந்து விலக்கு. நம் நியாயம் புரிந்து, அவர்களும் ஒத்துழைப்பார்கள்.

 

கர்வம் எழாதிருக்க

நான் புத்திசாலி. மிக உயர்வானவன்!’ என்ற எண்ணம் சிறுவயதிலேயே ஏன் படிந்துவிடுகிறது?

 

பெற்றோர் ஓயாது அவனெதிரிலேயே அவனைப் பிறரிடம் புகழ்ந்து பேசுவது. சற்று பெரியவன் ஆனதும், தான் பெற்றோரைவிட மேலானவன் என்ற கர்வம் வந்துவிடும். பின் ஏன் அவர்களை மதிக்கிறான்!

 

ஆறு வயதிலேயே கீழ்க்கண்டவாறு புத்தி புகட்டி வளர்ப்பது நல்ல பலனளிக்கும்;

 

உன் பின்னல் நீளமாக, அழகாக இருக்கிறது. (இது பெண்களுக்கு). நீ புத்திசாலியாக, விரைவுடன் செயல்படுபவனாக — இப்படிப் பல வழிகளில் சிறந்தவனாக இருக்கலாம். அதையெல்லாம் எண்ணி கர்வப்பட்டால் அத்தன்மைகள் உன்னை விட்டுப் போய்விடும். பிறர் உன்னைப் புகழும்போது நன்றி சொல்லிவிட்டு, போய்க்கொண்டே இரு”.

 

சிறு வயதில் மனதில் படிந்தது என்றும் மறக்காது. எந்த உயரத்தை எட்டினாலும், கர்வமின்றி, பிறர் பழக விரும்புகிறவர்களாக வளர்வார்கள்.

நிர்மலா ராகவன் / எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா.

தொடரும்.... 

👉அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக 
👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக 

0 comments:

Post a Comment