காசி ஆனந்தனைப் பகடைக்காயாய் பாவித்து இராசதுரையை கூட்டணி இலிருந்து துரத்திய தமிழரசியல்.

கருணாவின் பிளவு பற்றி பேசுபவர்களில் சிலர் மட்டக்களப்பார் காலம் காலமாக துரோகம் செய்து வந்திருக்கிறார்கள். இராதுரை, கனகரத்தினம,; வரிசையில் இப்போது கருணாவும் துரோகம் செய்து விட்டார் என சிலர் பேசியதை நான் கேட்டிருக்கிறேன்.

கருணா தமிழீழ விடுதலைப்புலிகளிலிருந்து வெளியேற்றம், இராசதுரை தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து வெளியேற்றம், இந்த இரண்டு காலப்பகுதியிலும் இந்த விடயங்களை நேரடியாக அவதானித்தவன் என்ற வகையில் இந்த இரண்டு பிளவுகளுக்கும் நிறைய வித்தியாசத்தை நான் காண்கிறேன்.
இராசதுரை தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து பிரிந்து சென்றதற்கான காரணம் என்ன என்பதை அறியாமல் இருப்பதும் கருணாவையும் இராசதுரையையும் ஒன்றாக இணைத்து பேசுவதற்கு காரணம் என்று நினைக்கிறேன்.
சொல்லின் செல்வன் செல்லையா இராசதுரை என்று மட்டக்களப்பில் பெரும்பாலானவர்களால் அழைக்கப்படும் இராசதுரை 1956ஆம் ஆண்டு தமிழரசுக்கட்சியில் போட்டியிட்டு மட்டக்களப்பு தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட போதிலும் அதற்கு முதல் 1950ஆம் ஆண்டுகளில் தமிழரசுக்கட்சியில் இணைந்து மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வராக தெரிவு செய்யப்பட்டதன் மூலம் அரசியலுக்கு பிரவேசித்திருந்தார்.
1956ஆம் ஆண்டிலிருந்து 1979ஆம் ஆண்டுவரை 23ஆண்டுகள் தமிழரசுக்கட்சியிலும் அதன் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியிலும் இருந்த இராசதுரை பிரிந்து சென்றதற்கு உடனடியாக சில காரணங்கள் கூறப்பட்டிருந்தாலும் தந்தை செல்வநாயகம் அவர்களின் மறைவிற்கு பிறகு தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமையோடு இருந்த முரண்பாடுகளின் தொடர்ச்சியே அவர் பிரிந்து செல்வதற்கு காரணமாக அமைந்திருந்தது.
தந்தை செல்வநாயகத்தின் பின் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர்நாயகமாக தெரிவு செய்யப்பட்டவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம், இராசதுரையும் அமிர்தலிங்கமும் 1956ஆம் ஆண்டில் சமகாலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட போதிலும் அமிர்தலிங்கம் 1970ஆம் ஆண்டு தேர்தலில் வட்டுக்கோட்டை தொகுதியில் தோல்வியடைந்திருந்தார்.
இராசமாணிக்கத்திற்கு பின்னர் கிழக்கில் தமிழரசுக்கட்சியிலும், அதன் பின் தமிழர் விடுதலைக் கூட்டணியிலும் இராசதுரையே மூத்தவராக இருந்தார். தந்தை செல்வநாயகத்தின் பின் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப்பதவி தனக்கே கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த இராசதுரைக்கு அமிர்தலிங்கம் அப்பதவியை பெற்றுக்கொண்டது முதல் கசப்புணர்வு வளர ஆரம்பித்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியில் தலைவர், அல்லது செயலாளர் பதவிகளில் ஒன்று கிழக்கை சேர்ந்தவர் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களால் நிராகரிக்கப்பட்டது கசப்புணர்வுகள் வளர ஆரம்பித்தது.
அமிர்தலிங்கம் தன்னை ஓரங்கட்டுகிறார் என்ற உணர்வு இராசதுரைக்கு ஏற்பட்டிருந்தது. இராதுரைக்கு இணையாக மட்டக்களப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமை பதவிக்கு காசி ஆனந்தனை வளர்த்தெடுப்பதிலும், அமிர்தலிங்கம் ஈடுபட்டிருக்கிறார் என இராசதுரையின் ஆதரவாளர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்ட விடயம்.
இதன் உச்சக்கட்ட வெளிப்பாடு  1977ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெளிப்பட்டது. ஒரு தொகுதியில் ஒரே கட்சியை சேர்ந்த இருவர் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிட்ட வரலாறும் மட்டக்களப்பில் தான் நடைபெற்றது. அந்த வரலாற்று சாதனையை செய்து முடித்ததில் பெரும் பங்கு அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமாக இருந்த அமிர்தலிங்கத்தையே சாரும்.
அந்த தேர்தலின் மூலம் காசி ஆனந்தனை மட்டக்களப்பு தொகுதியில் போட்டியிட வைத்து இராசதுரையை தோற்கடிக்க வேண்டும் என அமிர்தலிங்கம் திட்டமிட்டார்.
தொகுதிவாரியான தேர்தலில் ஒரு தொகுதியில் ஒரு கட்சியை சேர்ந்த ஒருவர் மட்டுமே போட்டியிட முடியும். மட்டக்களப்பு தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கு இராசதுரைக்கே சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என மட்டக்களப்பில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி கிளைகளும், பொது அமைப்புக்களும் வலியுறுத்தி வந்தன. இதனை நிராகரிக்க முடியாத தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமை இராசதுரைக்கு மட்டக்களப்பு தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கிய அதேவேளை அவரை தோற்கடிப்பதற்கும் அமிர்தலிங்கம் திட்டம் தீட்டினார்.  அதேதொகுதியில் செயலிழந்து போய் இருந்த தமிழரசுக்கட்சியில் காசி ஆனந்தனை மட்டக்களப்பு தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
ஒரே கட்சியை சேர்ந்த இருவரையும் ஒரு தொகுதியில் போட்டியிட வைத்து விட்டு தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர்நாயகம் அமிர்தலிங்கம் சொன்ன காரணம். மட்டக்களப்பு தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதி. எனவே இருவரும் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது என சொல்லியிருந்தார்.
இரண்டை அங்கத்தவர் தொகுதி என்றால் என்ன?
இலங்கையில் வாழும் சிறுபான்மை இனத்தவர்களுக்கான காப்பீட்டு ஏற்பாடுகளுள் ஒன்றாக 1947ம் ஆண்டில் சோல்பரி அரசியலமைப்பின் கீழ் இரட்டை அங்கத்தவர் அல்லது பல அங்கத்தவர் தேர்தல் தொகுதி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
1959ல் அரசியலமைப்பின் புதுச்சேர்க்கை விதிகளுக்கமைய இலங்கையில் தேர்தல் தொகுதி நிர்ணயத்தின்போது பல அங்கத்துவ அல்லது இரட்டை அங்கத்துவ தொகுதிகள் ஏற்படுத்தப்பட்டன.
விசேடமாக ஒரு தொகுதியில் அண்ணளவாக சிறுபான்மையினரும், பெரும்பான்மையினரும் அல்லது இரண்டு சிறுபான்மை இனத்தவர்கள் சமனாக வசிப்பார்களாயின் இவர்களுக்கு தத்தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இதன் முலம் வழங்கப்பட்டது.
இதன்படி இலங்கையில் 6 தொகுதிகள் இரட்டை அங்கத்தவர் தொகுதிகளாக வகுக்கப்பட்டிருந்தது. பேருவளை, 2பேர் ( சிங்களவர் , முஸ்லீம்) மட்டக்களப்பு, 2பேர் (தமிழர், முஸ்லீம்) பொத்துவில் 2பேர் (தமிழர் முஸ்லீம்) ஹரிஸ்பத்துவ 2பேர் ( சிங்கள, முஸ்லீம்) கொழும்பு மத்தி 3பேர் ( சிங்கள, தமிழ், முஸ்லீம்) நுவரெலிய மஸ்கெலியா 3பேர் ( சிங்களவர், தமிழர், முஸ்லீம்) என்ற எண்ணிக்கையில் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படும் வகையில் இரட்டை அங்கத்தவர் அல்லது பல அங்கத்தவர் தொகுதி அமைக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த இரட்டை அங்கத்தவர் முறை அறிமுகப்படுத்தப்பட்ட நோக்கத்திற்கு விதி விலக்காக 1970ஆம் ஆண்டு மட்டக்களப்பு தொகுதியில் நடைபெற்ற தேர்தல் அமைந்திருந்தது. தமிழரசுக்கட்சி சார்பில் போட்டியிட்ட இராசதுரை முதலாவது பாராளுமன்ற உறுப்பினராகவும், சுயேச்சையாக போட்டியிட்ட ராசன் செல்வநாயகம் இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். தெரிவு செய்யப்பட்ட இருவருமே தமிழர்கள்.
1970ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லீம்கள் எவரும் தெரிவு செய்யப்படவில்லை. மட்டக்களப்பு தொகுதியில் இராசதுரை, ( தமிழரசுக்கட்சி) ராசன் செல்வநாயகம் (சுயேச்சை) ஆகியோரும், கல்குடா தொகுதியில் தேவநாயகமும், (ஐ.தே.க) பட்டிருப்பு தொகுதியில் தம்பிராசாவும் (ஐ.தே.க) தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
1970ஆம் ஆண்டு தேர்தலில் மட்டக்களப்பு முஸ்லீம் மக்கள் தங்களுக்கு கிடைத்த படிப்பினையை கருத்தில் கொண்டு அதன் பின்னர் நடந்த அனைத்து தேர்தல்களிலும் தங்களின் பிரதிநிதித்துவத்தை காப்பாற்றிக் கொள்ளும் வகையில் மிக சாதுர்யமாகவும், புத்திசாலித்தனமாகவும் நடந்து வருகின்றனர். ஆனால் தமிழர்கள் கடந்த கால படிப்பினைகளிலிருந்து அனுபவங்களை பெற்று செயற்பட்டதாக தெரியவில்லை.
அமிர்தலிங்கம் கூறியது போல அப்போது மட்டக்களப்பு தொகுதியில் இருவரும் தமிழர்கள் தெரிவு செய்யப்பட்டால் அது இன்னொரு இனத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமையை பறித்தெடுப்பதற்கு சமனானதாகும். இந்த விடயங்கள் அமிர்தலிங்கத்திற்கு சுட்டிக்காட்டிய போதிலும் இராசதுரையை தோற்கடிக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
தேர்தல் பிரசாரங்களில் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்கள் தமிழரசுக்கட்சியில் போட்டியிட்ட காசி ஆனந்தனுக்காகவே பிரசாரம் செய்தனர். தமிழரசுக்கட்சியில் போட்டியிட்ட காசி ஆனந்தனும், அவர்களது குழுவினரும் தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிட்ட இராசதுரைக்கு எதிராகவே பிரசாரங்களை மேற்கொண்டனர்.
வழமையாக தங்களை எதிர்த்து போட்டியிடும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக்கட்சிக்கு எதிராக பிரசாரங்களை மேற்கொள்ளும் மட்டக்களப்பு தொகுதியில் இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியினர் இராசதுரை, காசி ஆனந்தன் என பிரிந்து நின்று ஒருவருடன் ஒருவர் மோதிக்கொண்டனர். ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி வீசினர்.
அக்காலத்தில் நான் க.பொ.த உயர்தர பரீட்சை எழுதிவிட்டு தமிழ் இளைஞர் பேரவை, தமிழர் விடுதலைக் கூட்டணி என திரிந்த காலம். மட்டக்களப்பில் இந்த தேர்தல் திருவிழாவையும், ஒருவர் மீது ஒருவர் சேறு பூசி வெளியிடும் துண்டுப்பிரசுரங்களையும் நேரில் பார்;க்க முடிந்தது.
ஒரு கட்டத்தில் இராசதுரை தனது மேடையில் வெளிப்படையாக யாழ்ப்பாண அரசியல் தலைமைக்கு எதிராக பேசி வந்தார். மறுபுறத்தில் இராசதுரை தோற்கடிக்கப்பட வேண்டும் என அமிர்தலிங்கம் தரப்பு மிகத்தீவிரமாக காசி ஆனந்தனுக்காக பிரசாரம் செய்தது. அப்போது தமிழ் இளைஞர் பேரவை காசி ஆனந்தனுக்கே தேர்தல் பிரசாரம் செய்தனர்.
ஆனால் தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி என காலம் காலமாக இருந்த சுகுணம் யோசப் (பரராசசிங்கம்) , கலா தம்பிமுத்து ( கலா மாணிக்கம்) உட்பட பலர் இராசதுரையின் பக்கமே நின்றனர்.  (தமிழரசுக்கட்சியின் செனட்டர் மாணிக்கத்தின் மகள் கலா அவரது கணவர் சாம். தம்பிமுத்து ஆகியோர் ஒரு காலகட்டத்தில் தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி தூண்களாக விளங்கியவர்கள். கலாவும், பாராளுமன்ற உறுப்பினர் சாம் தம்பிமுத்துவும் 1989ல் விடுதலைப்புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.)
இராசதுரையின் தேர்தல் பிரசார மேடைகளில் யாழ்ப்பாண அரசியல் தலைமைக்கு எதிராக மிக காரசாரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. யாழ்ப்பாண தலைமையின் கீழ் நாம் இருக்க கூடாது என்று கூட சிலர் பேசினர். மட்டக்களப்பில் இருந்த பெரும்பாலான யாழ்ப்பாணத்தவர்கள் காசி ஆனந்தனுக்கே வாக்களித்தனர்.
தேர்தலில் இராசதுரை வெற்றி பெற்ற போதிலும் இராதுரைக்கும் அமிர்தலிங்கத்திற்கும் இடையிலான முரண்பாடுகள் வளர்ந்து கொண்டே சென்றது.
இந்நிலையில்தான் 1978ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கிழக்கு மாகாணத்தை சூறாவளி முற்றாக அழித்திருந்தது. தமிழ் இளைஞர் பேரவையைச் சேர்ந்த யாழ்ப்பாண இளைஞர்கள் மட்டக்களப்பு அரசடி மகாவித்தியாலயத்தில் வந்து தங்கி நின்று மீட்பு பணிகளிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதிலும் ஈடுபட்டனர். அவர்கள் மீது கே.டபிள்யூ. தேவநாயகத்தின் ஆட்கள் தடிகள், இரும்பு கம்பிகள் கொண்டு தாக்குதல் நடத்தியதுடன் அரசடி மகாவித்தியாலயத்திலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. அப்போது தேவநாயகம் அமைச்சராக அதிகாரத்தில் இருந்தார். அரச கட்டிடம் எதிலும் அவர்களுக்கு இடம் வழங்க கூடாது என்ற கடுமையான உத்தரவும் போடப்பட்டிருந்தது.
அரசடி மகாவித்தியாலய கட்டிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் இளைஞர் பேரவை மற்றும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு முன்னாள் பாராளுமன்ற மன்ற உறுப்பினராக இருந்த ராசன் செல்வநாயகம் அடைக்கலம் கொடுத்தார். மட்டக்களப்பு திருமலை வீதியில் இருந்த செல்வநாயகம் ஞாபகார்த்த மண்டபத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.
இந்த விடயங்களில் இராசதுரை பாதிக்கப்பட்ட தமிழ் இளைஞர் பேரவையினருக்கு உதவவில்லை என்ற குற்றச்சாட்டும் விமர்சனங்களும் அப்போது எழுந்திருந்தது.
அக்காலப்பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் அரசாங்க அமைச்சர்கள், ஜனாதிபதி,  பிரதமர், ஆகியோர் கலந்து கொள்ளும் எந்த கூட்டத்திலும் கலந்து கொள்ளக் கூடாது என அக்கட்சியின் தலைமைப்பீடம் கட்டுப்பாடு விதித்திருந்தது. 
சூறாவளியால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பை பார்வையிடுவதற்கும், புனரமைப்பு பணிகள் பற்றி ஆராய்வதற்குமாக 1979ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அப்போது பிரதமராக இருந்த பிரேமதாஸ மட்டக்களப்புக்கு வருகை தந்தார். மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் விசேட ஹெலிகொப்பரில் வந்து இறங்கிய பிரேமதாஸாவை மட்டக்களப்பு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் செல்லையா இராசதுரை சென்று வரவேற்றார். மாவட்ட செயலகத்தில் பிரேமதாஸ தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலும் இராசதுரை கலந்து கொண்டார்.
இந்த விடயங்கள் அடுத்த நாள் தலைப்பு செய்தியாக வெளிவந்தன. கூடவே தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் அமிர்தலிங்கம் விளக்கம் கேட்டு இராசதுரைக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அச்செய்தியும் வெளியாகியிருந்தது.
அழிந்து போன மட்டக்களப்பை மீட்டெடுப்பதற்காக அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டியது மக்கள் பிரதிநிதி என்ற வகையில் எனது கடமை. அந்த கடமையை செய்த என் மீது கட்சி தலைமை கேள்வி கேட்க முடியாது. விளக்கம் கேட்க முடியாது என இராசதுரை பதிலளித்திருந்தார்.
இராசதுரை உரிய காலத்தில் சரியான பதிலை கட்சி தலைமைப்பீடத்திற்கு வழங்கவில்லை என்றால் அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என அமிர்தலிங்கம் தரப்பு கூறிக்கொண்டிருந்தது. அப்போது உயிருடன் இருந்த திருமதி செல்வநாயகம், திருமதி திருச்செல்வம், ஆகியோருக்கு இராசதுரை  உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். தந்தை செல்வநாயகம் உயிருடன் இருந்திருந்தால் தான் இவ்வாறு பழிவாங்கப்பட்டிருக்க மாட்டேன் என்றும் தன்னை திட்டமிட்டு ஒதுக்கி ஓரங்கட்ட வைப்பதும், கட்சியிலிருந்து நீக்க நினைப்பதும் மட்டக்களப்பு மக்களுக்கு செய்யும் துரோகம் என எழுதியிருந்தார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியில் உருவாகிய உள்கட்சி முரண்பாட்டை சிறிலங்கா சிங்கள தரப்பு தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டது. இதில் முக்கியமாக அப்போது பிரதமராக இருந்த பிரேமதாஸ இராசதுரையை ஆளும் கட்சிக்குள் இழுப்பதற்கு முன்நின்றார். ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு மாறும் பாராளுமன்ற உறுப்பினரின் பதவி பறிபோகாத வகையில் சட்டத்திலும் திருத்தத்தை கொண்டு வந்தனர்.  1979ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் இராசதுரை ஆளும் கட்சிக்கு மாறினார். அவருக்கு பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
இராசதுரை தமிழினத்திற்கு துரோகம் இழைத்து விட்டார் என ஒருதரப்பினர் கூறிவந்தனர். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா பிரிந்த போதும் இராதுரை முதல் கருணாவரை கிழக்கில் உள்ளவர்கள் துரோகிகள் என்று சிலர் பிரசாரம் செய்தனர்.
இராசதுரை செய்தது சரி என்றோ அல்லது தவறென்றோ நான் வாதிட வரவில்லை. இராசதுரை துரோகி என்றால் அவர் அரசின் பக்கத்திற்கு செல்வதற்கு காரணமான அமிர்தலிங்கம் போன்ற தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்களும் துரோகிகள்தான்.
இராசதுரை அரசின் பக்கம் சேர்ந்து அமைச்சர் பதவியை பெற்றது தவறுதான். அவர் வாக்களித்த மட்டக்களப்பு மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டார் என குற்றம் சாட்டுவதற்கு மட்டக்களப்பு மக்களுக்கு மட்டும் தான் உரிமை இருக்கிறது. தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமைக்கு உரிமை கிடையாது. ஏனெனில் இராசதுரை அமைச்சர் பதவி பெற்றதை விட மிகப்பெரிய துரோகத்தை தமிழ் இனத்திற்கு அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி செய்தது.
1978ல் அன்று ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுடன் உறவாடி பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு  ஆதரவாக வாக்களித்த அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் மக்களுக்கு செய்த அநீதியை விடவா இராசதுரை தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்து விட்டார்?
அமிர்தலிங்கம், சிவசிதம்பரம்,  சம்பந்தன், ஆனந்தசங்கரி போன்றோர் நாடாளுமன்றத்தில் ஆதரவாக வாக்களித்து நிறைவேற்றிய பயங்கரவாத தடைச்சட்டத்தால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டனர்.சிறையில் அடைக்கப்பட்டனர். கொல்லப்பட்டனர். இன்றும் அந்த பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழேயே வகை தொகை இன்றி தமிழர்கள் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். அமிர்தலிங்கம் போன்றவர்களின் இந்த மகா தவறை விடவா இராசதுரை அரசின் பக்கம் சேர்ந்து அமைச்சர் பதவி பெற்றது பெரிதாகிவிட்டது? 
பயங்கரவாத தடைச்சட்டத்தால் தமிழர்கள் பாதிக்கப்பட்டதை விடவா இராசதுரை அமைச்சர் பதவியை பெற்றதால் தமிழர்கள் பாதிக்கப்பட்டனர். இராசதுரை அமைச்சர் பதவியை பெற்றதால் ஒரு தமிழர் கூட சித்திரவதை செய்யப்பட்டதாகவோ அல்லது சிறையில் அடைக்கப்பட்டதாகவோ நான் அறியவில்லை.
விடுதலைப்போராட்டம் ஆரம்பமான கால கட்டத்தில் அரச பக்கம் சேர்ந்து அவர்களுக்கு முண்டு கொடுப்பது விடுதலைப்போராட்டத்தை பலவீனப்படுத்தி விடும் என்பது உண்மைதான். ஆனால் அரசின் பக்கம் சேர்ந்த இராசதுரை போன்றவர்களுக்கு துரோகி பட்டம் வழங்கும் அதிகாரம் பயங்கரவாத தடைச்சட்டத்தை கொண்டு வந்த அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களுக்கு நிட்சயம் கிடையாது. என்னைப்பொறுத்தவரை இராசதுரையின் பிளவு என்பது அமிர்தலிங்கம் போன்ற யாழ்ப்பாண தலைமைத்துவங்களின் தவறான போக்கினால் ஏற்பட்டதே ஆகும்.
அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களின் செயல்பாடுகளால்தான் மட்டக்களப்பு மக்களுக்கு யாழ்ப்பாண மக்கள் மீது வெறுப்பு ஏற்பட காரணம் எனலாம்.
எனவே கருணாவின வெளியேற்றத்தையும் இராசதுரையின் வெளியேற்றத்தையும் ஒன்றாக கணித்து விட முடியாது.
இராசதுரையின் வெளியேற்றத்திற்கு நியாயமான காரணங்கள் இருந்தன.   அதேவேளை அவர் தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து வெளியேறி அரசாங்கத்துடன் சேர்ந்தது தான் தமிழ் மக்கள் அவரை வெறுக்க காரணமாக அமைந்தது.
இராசதுரை தான் மட்டக்களப்பு தமிழ் மக்களுக்கு செய்தது தவறு என்று எண்ணிய காரணத்தாலோ என்னவோ 1989ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அவர் மட்டக்களப்பில் போட்டியிடவில்லை. கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.  அதேவேளை மட்டக்களப்பில் ஒருபோதும் தோல்வியடையாத மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினராக 33ஆண்டுகள் தொடர்ச்சியாக பதவி வகித்த பெருமை இராசதுரைக்கு தான் உண்டு.
அரசுடன் சேராது இன்றும் தனித்துவமாக செயற்பட்டிருந்தால் தமிழ் சமூகத்தில் இராசதுரைக்கு இன்றும் தனியான இடம் இருந்திருக்கும்.

நன்றி:இரா.துரைரத்தினம்

0 comments:

Post a Comment