மரணம் – ஆவி – மறுபிறவி – 3

இது டாக்டர் எடித் ஃபையர் தனது ஆய்வு நூலில் குறிப்பிட்டிருக்கும் மற்றொரு சம்பவம்.
 உயரப் பயம்உயிர்ப் பயம்

உயரமான இடங்களைக் கண்டால் பயம், அந்தப் பகுதிகளுக்குச் செல்வதென்றால் எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது என்று கூறி எடித் ஃபைடை அணுகினார் ஒரு தொழிலதிபர். அது ஒரு வகையான ஃபோபியா என்று மருத்துவர்களால் கூறப்பட்டு வந்தாலும், அதற்கும் முற்பிறவிக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கலாம் என ஆராய நினைத்தார் ஃபையர். சம்பந்தப்பட்ட தொழிலதிபரை ஹிப்னாடிச உறக்கத்திற்கு ஆழ்த்தினார். அப்போது அவருக்கு அந்த உண்மை தெரிய வந்தது.

இந்தப் பிறவியில் பெரிய தொழிலதிபராக இருக்கும் அந்த மனிதர் முற்பிறவியில் ஒரு பணியாளாக இருந்திருக்கிறார். ஒருமுறை மாதா கோயிலின் ஓடுகளைச் செப்பனிட்டுப் பழுது பார்த்துக் கொண்டிருக்கும் போது, ஓடுகள் உடைந்து கீழே விழுந்து அவர் இறந்து விட்டார். அந்த அதிர்ச்சி அவரது ஆன்மாவில் நிரந்தரமாகப் பதிந்து மறுபிறவியிலும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. – இதை அறிந்த டாக்டர் ஃபையர் அந்த மனிதருக்குத் தகுந்த மனோசிகிச்சை அளித்து அவரது எண்ணங்களில் பதிவாகி இருந்த தேவையற்ற பயத்தைப் போக்கினார்.

ஆக இது போன்று நெருப்பைக் கண்டால் பயம், நீரைக் கண்டால் பயம், உயரமான இடங்களைக் கண்டால் பயம், மலைகளைக் கண்டால் பயம் என்றெல்லாம் பல ஃபோபியாக்கள் ஒரு சிலருக்கு இருந்தாலும், அதற்கு அடிப்படையாக நிச்சயம் ஏதாவது காரணம் இருக்கும் என்கிறார் டாக்டர் எடித் ஃபையர்.

இந்தப் பிறவியில் அதற்கான வாய்ப்புகள் இல்லாத போது முற்பிறவியின் தாக்கங்களே அவர்களுக்கு இந்நினைவுகளாகத் தொடர்ந்து துன்புறுத்துகின்றன என்பது அவரது முடிவு.

தபால் அதிகாரியின் மகன் கூறிய முற்பிறவி

பஜித்பூர் என்ற ஊரில் வாழ்ந்து வந்த ஒரு தபால் அதிகாரியின் மூன்று வயது மகன் திடீரென ஒருநாள் தொடர்ந்து அழத்தொடங்கினான். தனது சொந்த ஊர் இதுவல்ல என்றும், தன் ஊர் சிட்டகாங்கில் உள்ள பஜில்பூர் என்றும், தனக்குத் திருமணமாகி மூன்று புதல்வர்களும், நான்கு புதல்விகளும் இருக்கின்றனர் என்றும் கூற ஆரம்பித்தான். தனது ஊருக்கு வக்ஸம் என்ற இரயில் நிலையத்தில் இறங்கிச் செல்ல வேண்டும் என்றும், தனது ஊருக்கு அருகே மேஹர் கலிபாரி என்ற இடம் உள்ளது. அங்கே தான் ஸ்ர்வானந்தர் என்ற மகான் முக்தியடைந்தார் என்றும் கூறினான்.

மேலும் அவன் அங்கே உள்ள ஓர் ஆலமரத்தின் அடியில் தான் பூஜை, பஜனை முதலியன நடைபெறும் என்றும், ஆனால் அங்கே வழிபடுவதற்காக தெய்வத்தின் சிலை ஏதும் இல்லை என்றும் தெரிவித்தான். அருகே உயரமான ஒரு பனைமரம் உள்ளது என்றும் கூறினான்.

தபால் அதிகாரி தன் ஊரை விட்டு வெளியே எங்கும் அதிகம் சென்றதில்லை. அதனால் மிகுந்த ஆச்சரியமுற்ற அவர், இதெல்லாம் உண்மைதானா என்று ஆராய்ந்து பார்த்த போதுதான்  குழந்தை சொல்வது அனைத்தும் உண்மை என்று தெரிய வந்தது. வெளியிடம் எங்கும் செல்லாத, எவ்வித உலக அனுபவமும் இல்லாத குழந்தை இவ்வளவு தெளிவாக உண்மையான விஷயங்களைக் கூறியதால், அக் குழந்தை பஜில்பூரில் வாழ்ந்து இறந்த மனிதரின் மறுபிறவியே என்று அவரும் மற்ற மக்களும் நம்பினர்.
(தொடரும்)

0 comments:

Post a Comment