"ஒருபால் திருமணம்" / பகுதி 01




[நீங்கள் வேறு கருத்துகள் / நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம். நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன். நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கையையும் திறனாய்வு செய்யவில்லை. இதில் கூறியுள்ள கருத்துக்களின் தவறுகளை ஆக்கபூர்வமாக அறிவியல் கண்ணோட்டத்துடன்  விமர்சியுங்கள், அத்துடன் இதில் காணப்படும்  கேள்விகளுக்கான, சந்தேகங்களுக்கான பதில்களை தரவுகளுடன் கூறுங்கள்]

திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும், ஒரு நிரந்தர மற்றும் பிரத்தியேக அர்ப்பணிப்புகளுடன் ஒன்றிணைவதுடன், இயற்கையாகவே (இயல்பாகவே அமையப்பெற்ற) குழந்தைகளை பெற்று ஒன்றாக வளர்ப்பதன் மூலம் நிறைவேற்றப்படுகிறது. அதாவது,  ஆண் பெண் பாலியல் நடத்தைக்கு ஒரு அங்கீகாரம் வழங்கி அவர்களை ஒன்றாக குடும்பமாக வாழ வைப்பது திருமணம் என்று பொதுவாக சொல்லப்படுகிறது. அது மட்டும் அல்ல குடும்பங்கள் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறை வரை ஒரு கலாச்சாரத்தின் மதிப்பைக் [culture's values] கடத்தும் ஒரு கட்டமைப்பாகவும் செயல்படுகிறது. எனவே, இதற்கு புறம்பாக, எதாவது ஒன்றை திருமணம் என்று அழைப்பது திருமணம் ஆகா. திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையிலான உடன்படிக்கை ஆகும். இது அதன் இயல்பாகவே, குழந்தைகளின் இனப்பெருக்கம் அவர்களின் கல்வி, வாழ்க்கைத் துணைகளின் ஒற்றுமை மற்றும் நல்வாழ்வு  நோக்கி தம்பதியர்களுக்கு அறிவுறுத்துகிறது அல்லது கட்டளையிடுகிறது. ஆனால் ஒருபால் திருமணத்தை ஆதரிப்பவர்கள் அல்லது அதை ஊக்கிவிப்பவர்கள், இதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒன்றையே  முன்மொழிகிறார்கள். அதாவது இரு ஆண்களுக்கு இடையில் அல்லது இரு பெண்களுக்கு இடையில் இதை முன்மொழிகிறார்கள். இது சுயமாக ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் காணப்படும் உயிரியல், உடலியல் மற்றும் உளவியல் வித்தியாசங்களையும், அதனால் திருமணத்தில் இணைந்து அவர்கள் காணும் வாழ்வின் முழுமையையும் மறுக்கிறது. அது மட்டும்  அல்ல, மனித இனத்தின் பெருக்கம் மற்றும் குழந்தைகளை அவர்களின் இயற்கையான இரு பெற்றோர்களுடன் வளர்வதையும் தடுக்கிறது. அதாவது, சிலவேளை அதில் ஒருவருக்கு வேறு யாராவதின் மூலம் ஒரு அல்லது பல குழந்தை இருந்து அவர்களுடன் வாழ நேரிட்டால், ஒரு பால் திருமணம் அந்த குழந்தைகளுக்கு தாய் அல்லது தந்தையின் முழுமையான பங்கை உணர முடியாமல் தடுத்து விடுகிறது.

டார்வின் தனது இயற்கைத் தேர்வு என்ற அத்தியாயத்தில், வெற்றிகரமான உயிரினங்கள், இறக்கும் தன் மூத்தவர்களை ஈடு செய்வதற்கு தேவையானதை விட,  அதிக சந்ததிகளை ஒவ்வொரு தலைமுறையிலும் உருவாக்குகின்றன என்கிறார். மேலும் பல்வேறு இயக்கங்களின் தாக்கங்களைச் சமாளிக்கவல்ல தனிப்பட்ட உயிர் மற்றும் உயிரினங்கள் செழித்துத் தமது நன்மைபயக்கும் உயிர்ப் பண்புகளைத் தமது அடுத்த தலைமுறைக்குச் செலுத்தி, உயிர்வாழ்வு மற்றும் இனப்பெருக்கத்தை தக்கவைக்கும் என்கிறார். உதாரணமாக ஒரு பால் உறவு, இயற்கையானது என்றால் அது ஏன் இனப்பெருக்கம் செய்யவில்லை ?.ஏனென்றால் அந்த இனம் தொடர்ந்து பிழைத்து வாழ அது மிக மிக முக்கியம். ஒருபால் மக்களுக்கு திருமணத்தை மறுப்பதால், அவர்களை மற்றொரு நபருடன் அன்பான அர்ப்பணிப்புக்கு மறுப்பதாக நீங்க ஒருவேளை நினைக்கலாம்?. உண்மையில் அது தவறு. மக்கள் எல்லா நேரமும் மற்றவர்களை நேசிப்பதுடன் அர்ப்பணிப்பும் செய்கிறார்கள். ஆனால் இவை எல்லாவற்றையும் திருமணம் என்று கூறுவதில்லை, ஏனென்றால் அந்த உறவிற்கு என தனிப்பட்ட இயல்புகள் உண்டு. வேண்டும் என்றால், குழப்பம் இல்லாமல் இந்த ஒருபால் உறவுகளுக்கு வேறு ஒரு பெயரை வைக்கலாம் ?. உதாரணமாக ஒருபால் கூட்டு (same sex union) அல்லது அப்படியான வேறு இன்னும் ஒரு சொல். அதன் வரைவிலக்கணமும் அதற்குத் தக்கதாக, ஒரே பால் இனத்தை சேர்ந்த இருவர், அன்பு அல்லது நட்பு, பாலுறவு, பொருளாதாரம் போன்ற பல காரணங்களுக்காக, இனப்பெருக்கம் ஆற்றல் அற்ற ஒரு கூட்டு இதுவாகும் என்று வரையறுக்கலாம். ஆனால் திருமணம் என்று இனப்பெருக்கம் ஆற்றல் அற்ற ஒரு உறவுக்கும், இனப்பெருக்கம் ஆற்றல் உள்ள ஒரு உறவுக்கும் ஒரே மாதிரி வைப்பது தான் பிழை என்கிறோம்? 

ஒரு பால் உறவு அல்லது தற்பால்சேர்க்கை என்பது, ஒருவர் தனது பாலை சேர்ந்த இன்னும் ஒருவருடன் பாலியல் தொடர்பு வைப்பது ஆகும். உதாரணமாக ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் ஆகும். உலக வரலாற்றில், வெவ்வேறு கால கட்டங்களில், ஒரு பால் உறவு பல்வேறு விதமாக அங்கீகரிக்கப்பட்டும் , பொறுத்துக்கொள்ளப்பட்டும், தண்டிக்கப்பட்டும் மற்றும் தடைசெய்யப்பட்டும் வந்துள்ளது. பண்டைய உலகில் ஒரு பால் உறவுகளுக்கான பல ஆதாரங்களை, அதிகமாக பண்டைய கிரீஸ், ரோம், பண்டைய மெசொப்பொத்தேமியா, சீனாவின் சில பகுதி, மற்றும் இந்தியாவின் இதிகாசங்களிலும் புராணங்களிலும் சில ஆலய சிற்பங்களிலும் காண்கிறோம். எனவே ஒரு பால் உறவு ஒன்றும் புதிது அல்ல. என்றாலும் எந்த சந்தர்ப்பத்திலும் முன்னைய காலத்தில் சந்ததிகளை உற்பத்தி செய்ய இயலாமை காரணமாக, இதை ஒரு திருமண பந்தத்தில் ஏற்கப் படவில்லை.  கிரேக்க தத்துவ ஞானி பிளாட்டோ தன்னுடைய நூலில் தற்பால் சேர்க்கை உள்ள ஆண்களே வீரம் நிறைந்தவர்களாக இருப்பர் என்று சொல்லுகிறார். கிரேக்க தொன்மவியலில் கிரேக்க கடவுளர்களிடையே தற்பால் சேர்க்கை இருந்தமையும், அது போலவே இந்து புராணமான, கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம் பாகம் 5, 2. அசுர காண்டம், 32. மகா சாத்தாப் படலம், 29 ஆவது பாடலில், திருமாலை பார்த்து, சிவபெருமான், உன்னைக் புணரும் வேட்கை எமக்கும் உண்டு; நீ கொண்ட வேடம் மிக இனிது என்கிறார். அதற்கு பாடல் 33 இல், திருமால், சிவபெருமானை நோக்கி, ஆடவர் ஆடவரோடு கூடும் வழக்கம் இல்லை. ஆதலால் எம்பெருமானே! நீர் அடியேனை புணர்தல் முறையோ? என்று கேட்பதை காண்கிறோம்.

 "அன்பில் ஆடவர் ஆடவ ரோடுசேர்ந்
தின்ப மெய்தி யிருந்தனர் இல்லையால்
முன்பு கேட்டது மன்று முதல்வநீ
வன்பொ டென்னைப் புணர்வது மாட்சியோ" [1463]

ஏன் ஒவ்வொரு சமுதாயமும், மனித குல வரலாற்றில், ஆதியில் இருந்து ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவை ஆதரித்தது அல்லது முதன்மை கொடுத்தார்கள்? ஏன் இந்த தனித்துவமான உறவு "திருமணம்" என்று அழைக்கப்படுகிறது? திருமணம் உண்மையில் தனித்துவமானதே, ஏனென்றால், இது உங்களுடன் தொடர்பில்லாத ஒருவருடன் உறவை உருவாக்கத் தேர்வு செய்வதுடன், அந்த தேர்வு பல பிணைப்புகளையும், உதாரணமாக, காதல் மற்றும் உடல் / பாலியல் கூறுகளையும் கொண்டுள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட குறுந்தொகை - 40, மிக ஆழமாக, சுருக்கமாக, அழகாக அந்த தனித்துவமான உறவை எடுத்து கூறுகிறது. என் தாயும் உன் தாயும் யார் யாரோ? என் தந்தையும் உன் தந்தையும் எந்த வகையில் உறவினர்? நான் உன்னையும், நீ என்னையும் எந்த வகையில் அறிவோம். அப்படி இருந்தும் நம் அன்பு உள்ளங்கள் ஒன்றோடொன்று கலந்துவிட்டன. செம்மையான நிலத்தில் (மணல் பாங்கோ, களர் பாங்கோ இல்லாத நிலத்தில்) பெய்த மழைநீர் போலக் கலந்து நிலைபெற்றுவிட்டன. (இனி நிலமும் நீரும் பயிரை வளர்க்கும்)

"யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ் வழி அறிதும்?
செம் புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே."

இப்பாடலில் செம்புலப்பெயல் நீர் போல என்ற உவமை நினைக்கும் போதெல்லாம் நயம் தருகிறது. செம்மண் நிலமும், எட்டாத உயரத்து வானமும் ஒன்றையொன்று நெருங்காத தூரத்தில் உள்ளவை. வானம் மழையைப் பொழிகிறது. நிலம் அதனை ஏற்கிறது. சிறிது நேரத்தில் ஒன்றின் பண்பு இன்னொன்றுடன் இணைந்து விடுகிறது. பிரிக்க முடியாத பிணைப்பு உருவாகிறது. செம்மண்ணின் நிறம், பெய்த மழை நீருக்கு வருகின்றது; நீரின் நெகிழ்ச்சித் தன்மை நிலத்துக்கு வருகிறது. அது நிலத்திற்கு செழிப்பைக் கொடுக்கிறது, அவ்வாறே இந்த தனித்துவ உறவும் மனித குலத்திற்கு செழிப்பு கொடுத்து அதன் தொடர் வளர்ச்சியையும் பாது காத்து ஊக்குவிக்கிறது. அது நடைபெறா விட்டால் இந்த விவாதமே தேவை வராது?
இது மனித உறவுகளுக்கு குறிப்பிடத்தக்க நிலைத்தன்மையையும் (stability), தனித்துவமான ஒரு கருத்தையும் (பொருளையும்) தருகிறது, இல்லையெனில் அது முழுமையடையாது. இது ஒருபோதும் தனிநபர்களுக்கோ அல்லது தம்பதிகளுக்கோ மட்டும் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். எம் மனித சமுதாயம் தொடரவும் வளரவும் இந்த தனித்துவமான உறவு ஒன்று மட்டுமே செயல்படுகிறது. இதைத்தான் திருமணம் என்கிறார்கள். ஆகவே அந்த இயல்பு இல்லாத எதையும் அதே சொற்களால் அழைக்கலாமா?, நீங்களே முடிவு எடுங்கள்? உங்களுக்கு அன்பும் துணையும் மற்றும் பாலியல் இன்பமும் தரக்கூடிய எந்த நபருடனும் நீங்க ஒன்றாக வாழலாம். அது உங்கள் விருப்பம், ஆனால் அதையும் திருமணம் என்று சொல்லலாமா என்பதே எம் வாதம். திருமணம் என்பது பொதுவாக சில முக்கிய தனித்துவ அடிப்படை இயல்புகளை கொண்டுள்ளது. எனவே அங்கு காணப்பட்ட முதன்மை இயல்பு முற்றாக இல்லாத ஒன்றிற்கும் அதே பெயரை குறிக்க முடியாது. அதனால் தான் அதை "ஒருபால் கூட்டு" (same sex union) என்று கூறலாம் என்கிறோம்?
ஆண் - பெண் திருமணம், கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தை, ஒரு தலை முறையில் இருந்து மற்ற தலை முறைக்கு மாற்றுவதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் தான் மனித இனம் செழிக்கிறது. இதன் காரணமாகவே இந்த திருமணம் என்ற ஆண் - பெண் சங்கமம், முழு சமுதாயத்திற்கு நன்மை பயக்கிறது. 

உதாரணமாக, தமிழருக்கிடையில், கி மு 700 இல் முதல் தோன்றிய ஆண் - பெண் கூட்டு களவு என் அழைக்கப்பட்டது. இது தனக்கு ஒரு துணையை தேடிக் கொள்ளும் முறையாகும். என்றாலும் இது பல காரணங்களால் இடையூறுகள் அல்லது ஒருவரை ஒருவர் கைவிடுதல் ஏற்பட்டதால், தொல்காப்பியர் கூறியது போல, "பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப" (கற்பியல்,4), பலர் அறியத் திருமணம் என்ற சடங்கு (கரணம்) நடத்தும் வழக்கம் சங்க காலத்தில் ஏற்பட்டது. எனவே, மனித குல வரலாறு எங்கும், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக, உலகின் ஒவ்வொரு நிலப்பரப்பிலும், திருமணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நடை பெரும் ஒரு சமூக நெறியாக இருந்து வந்து உள்ளது. இவை வெறுமனே விதிவிலக்குகள் இல்லை! ஒரு பால் கூட்டை ஆதரிப்பவர்கள், நிகழ் காலத்திலும், அதை தொடர்ந்து வரும் காலத்திலும் சோதிக்கப்படாத ஒரு சமூக நடைமுறையாக, ஈடுசெய்ய முடியாத ஆண் மற்றும் பெண்ணின் மதிப்புகள் முக்கிய காரணியாக அமையாத, பாலின மதிப்புக்கள் அற்ற, ஒரு பால் கூட்டை, குடும்பம் ஒன்றிற்கு உண்மையில் பரிந்து உறைகிறார்கள். இது தான் பிரச்சனையாகிறது. ஏன் என்றால் அந்த குடும்பம் அடுத்த தலை முறைக்கு தானாக போகும் வாய்ப்பை இழந்து விடுகிறது. சில தம்பதியர் பிள்ளைகள் இல்லாமல் இருப்பது, சில தம்பதியர் பிள்ளை வேண்டாம் என்று இருப்பது, சில தம்பதியர் வயது போய் இருப்பது போன்ற சந்தர்ப்பங்களில் அடுத்த தலைமுறை எப்படி வரும் என்று சிலர் வாதாடலாம், ஆனால் இவை எல்லாவற்றிலும் அதற்கான சந்தர்ப்பம் இருக்கிறது அல்லது அவர்களுக்கிடையில் அதற்கான நோக்கம் இருக்கிறது என்பதை சிந்திக்க தவறி விடுகிறார்கள். ஒன்றை கட்டாயம் நீங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும், ஒரு பால் கூட்டுக்கு, புது பெயர் தேடாமல், இருக்கும் திருமணம் என்ற பெயருக்குள்ளேயே அதை அடக்க முற்படும் பொழுது, நீங்கள் அதன் கருத்தை அல்லது வரையறை விரிவுபடுத்தப்பட்டு, அதை உள்வாங்க வேண்டி உள்ளது. இதனால் முன்னைய தனித்துவமான கருத்து தொலைக்கப் பட்டு, அவை மேலும் மேலும் விரிவாக்கக் கூடிய நெகிழ்வு தன்மையை பெறுகிறது. எனவே கட்டாயம் வரும் காலத்தில் அது மேலும் விரிவு படுத்தப்படலாம் ?. உதாரணமாக, இரு சகோதரர்களுக்கு அல்லது சகோதரிகளுக்கு இடையில் அல்லது தாய்க்கும் மகளுக்கும் இடையில் ... ஏன் சிலவேளை ஒருவருக்கும் அவரின் செல்லப் பிராணிக்கும் இடையில் .. இப்படி நீட்டப் படலாம் , அப்படி நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் உண்டு ?

உலக வரலாற்றை நோக்கும் பொழுது பல ஆட்சியாளர்கள் ஓரின சேர்க்கையாளர்கள் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். என்றாலும் அவர்கள் திருமணம் செய்யும் பொழுது, கட்டாயம், உதாரணமாக ஆட்சியாளர் ஆணாக இருக்கும் தருவாயில், மற்றவர் பெண்ணாகவே இருக்கிறார். எனவே திருமணம் என்பது தன்னிச்சையான கட்டுமானம் அல்ல; அது ஒரு “கெளரவமான அமைப்பு“. இது ஆண் பெண்களின் வேறுபட்ட மற்றும் இணக்கமான இயல்புகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. இதனால் தான் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன், தொல்காப்பியர் இயம்பியவாறு சடங்குகளால் வலுப்படுத்தப்பட்டு சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு நன்றாகவே தெரியும், இதயத்திற்கு இரத்தத்தை உந்தி தள்ளும் செயல்பாடு உள்ளது, அப்படியே கண்ணுக்கு பார்க்கும் செயல்பாடு உள்ளது, எனவே கட்டாயம் மனித நிறுவனங்களுக்கு (human institutions) மிகவும் வெளிப்படையாக ஒரு தேவை இருக்கும். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அப்படி தனித்துவமான ஒன்றும் இல்லை என்று நீங்கள் நம்பினால், திருமணம் கூட தேவை இருக்காது, அப்படி என்றால்  அதைப்பற்றி வாதாடுவதை கூட இத்துடன் நிறுத்தி விடலாம் ?

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி 02 தொடரும்

1 comments:

  1. MANUVENTHAN SELLATHURAIFriday, July 17, 2020

    அக்காலத்தில்தான் இயற்கையினை புரியாத காலம். தவறான சிந்தனைகள் வந்திருக்கலாம். உயிரினத்தின் விருத்திக்கான நோக்கமே ,ஆண் பெண் உறவு என்பது புரியாத காலம். தவறுகள் நடந்திருக்கலாம்.ஆனால் இன்று சில நாடுகளும் இதனை அங்கீகரித்து வைத்திருப்பது எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.போதைப் பொருட்களையே அங்கீகரிக்கும் விசித்திரமான உலகத்தில் இன்னும் என்னவென்ன நடக்குமோ என்று ஏக்கத்துடன் நோக்க வேண்டியுள்ளது.

    ReplyDelete