"தமிழர்களின் பண்டைய நான்கு கற்கள்" / பகுதி 08

 


 :நடுகல்:

பண்டைத் தமிழரின் வாழ்வியல் பதிவுகளை இவ்வுலகிற்கு உணர்த்திடும் சான்றுகளுள் நடுகற்களின் பங்கு குறிப்பிடத் தக்கது. நடுகல் என்பது வெறும் கல் அல்ல, அது பண்பாட்டின் வெளிப்பாடு, நம்பிக்கை, நன்றி பாராட்டல், வெகுமதி என்றுதான் அதனை அணுக வேண்டியுள்ளது. தமிழர்களின் அறக்கோட் பாட்டிற்குச் சான்று பகர்வதிலும் இது முக்கியப் பங்காற்றுகிறது. இது வீரன்கல், வீரக்கல்,  எனவும் ‘நினைவுத்தூண்’ என்றும் பொதுவாக அழைக்கப் படுகின்றன. உதாரணமாக,  போர்களில் விழுப்புண்பட்டு மடியும் வீரனுக்காக, அவனது வீரத்தைப் போற்றுகின்ற வகையிலும், அவனது தியாகத்தினை மதிக்கின்ற வகையிலும் கல் ஒன்றினை நட்டு, அதனை வழிபடுவது தமிழரின் மரபாக இருந்துள்ளதனை சங்க இலக்கியங்கள் எடுத்து காட்டுகின்றன.

 

இப்படியான நடு கல், தமிழ் நாட்டில் மட்டும் அல்ல,  வட இலங்கையிலும் வன்னி மன்னன் பண்டார வன்னியன் இறுதியாக உயிர் துறந்த இடமான கற்சிலைமடுவில் உள்ளது குறிப்பிடத் தக்கது.  உதாரணமாக, பதினொன்றாம் திருமுறையில், சேரமான் பெருமாள் நாயனாரின்

 

"பட்டோர் பெயரும் ஆற்றலும் எழுதி நட்ட கல்லும் மூதூர் நத்தமும் ..."

 

என்ற வரியில், போரில் இறந்து பட்டோரது பெயர்களையும், அவர் செய்த வீரச் செயல்களையும் எழுதி நடப்பட்ட கற்களும் என கூறப்பட்டுள்ளதை கவனிக்க

 

மேலும் சில உதாரணமாக, சங்க இலக்கியமான அகநானுறு 179, அகநானுறு 35. மற்றும் புறநானுறு 335 போன்றவற்றை குறிக்கலாம்.

 

இறந்து போன வீரர்களுக்கு ஈமக்கடன் ஈந்து கல் நட்டு வழிபடுவது பண்டைய தமிழ் மரபு ஆகும். இவ்வாறு நடப்பட்ட கற்களே நடுகல் என்று பொதுவான சொல்லால் வழங்கப்படுகிறது. வீரர்களுக்கு மட்டுமின்றி பொதுவாக இறந்தவர் நினைவாகவும் நடுகல் நடும் வழக்கம் உலகம் முழுவதும் நிலவிய தொன்மையான வழக்கம் ஆகும்.

 

நடுகல் நடும் முறைகள் பற்றி "காட்சி கால் கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு மரபில் பெரும்படை வாழ்த்தலென்று இரு மூன்று மரபிற் கல்லொடு புணர" எனத் தொல்காப்பியம் தெளிவாக எடுத்துரைக்கிறது. இங்கு  தொல்காப்பியர் நடுகல் நடுவதற்கான ஆறு அமைப்புகள் பற்றிச் சொல்கிறார். அவை : காட்சி, கால்கோல், நீர்ப்படை, நடுதல், பெரும்படை, வாழ்த்தல் என உயர்த்திக் கூறுகிறார்.

 

முதலில் ஊர் மக்கள் பொருத்தமான கல்லை தேர்ந்து எடுத்து  [காட்சி], அந்த கல்லை குளிப்பாட்டி தூய்மை படுத்துவார்கள். அதன் பின், அதற்கு பூக்களால் படைத்து, தூபம் காட்டி, போற்றுவார்கள் [கால்கோல்], ஏனென்றால் இந்த கல்லு தான் அந்த வீரனின் பெயரையும் தீரத்தையும் எடுத்து கூறப் போகிறது. மூன்றாவதாக அந்த கல்லை சுத்தமான தண்ணீரில் பல நாட்களுக்கு  ஊறவைப்பார்கள் [நீர்ப்படை]. அதன் பின் மாவீரனின் படம் பொறித்து, அவனின்  வீரச் செயலை  கல் மீது பொறித்து எழுதி, சடங்கு செய்து நடுவார்கள் [நடுதல்] என்கிறது.

 

நடுகல் மனிதர்களுக்கு மட்டும் அல்ல, விலங்கு, பறவைகளுக்கும் தமிழர்கள் எடுத்தார்கள் என்றால் கட்டாயம் உங்களுக்கு அது ஆச்சரியமாகத்தான் இருக்கும். உதாரணமாக, செஞ்சி, விழுப்புரம் சாலையில் அரசலாபுரம் என்ற ஊரில் கி.பி 5 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கோழி உருவம் பொறித்த நடுகல் உள்ளது. இந்த நடுகல்லில் ’மேற்சேரிடுயாடி கருகிய கோழி’ என்று கல்வெட்டு தொன்மைத் தமிழ் எழுத்தில் பொறிக்கப் பட்டுள்ளது. பண்டைய தமிழர்கள் கோழிகளைப் பழக்கி சாவக்கட்டு அல்லது சேவல் சண்டைகளை பொழுது போக்காக நடத்துவர். அதில் வீரமாக மற்றொரு கோழியுடன் கோழிச் சண்டை நடத்தி இறக்கின்ற கோழிக்கு நடுகல் எடுத்து தமிழர் வழிபடுவர். அதற்காக எடுக்கப் பட்ட நடுகல்லே இதுவாகும். இந்தியத் துணைக் கண்டத்திலேயே இறந்து போன சேவலுக்காகப் பெயர் வைத்து ஒரு நடுகல் எழுப்பிய ஒரே பண்பாடு தமிழ்ப் பண்பாடு மட்டும்தான்.

 

இக்கல்வெட்டில், நின்ற நிலையில் கம்பீரமான தோற்றத்தில், 62 செ.மீ., உயரம், 55 செ.மீ., அகலம் கொண்டதாக சேவல் செதுக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டு, கடந்த 1991ம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்டது. சேவலின் முதுகுபுறத்துக்கு மேல், தமிழ் மொழி வட்டெழுத்தில் இரண்டு வரிகளிலும், சேவல் கால்களுக்கு முன்பாக கடைசி வரியும் எழுதப்பட்டுள்ளது. இதில், முகையூரு மேற்சே, ரிகு யாடிக, ருகிய கோழி என பிரித்து குறிப்பிட்டுள்ளது. இதற்கு, முகையூர் என்ற ஊரின் மேற்சேரியில் நடந்த சேவல் சண்டையில், இறந்துபட்ட சேவல் என்பது பொருள்.

 

பெரும்பாலும் நடுகற்கள் ஊர்களின் புறத்தே காணப்படுகின்றன. நடுகற்களில் வீரனுடைய உருவம் சமர்புரியும் நிலையில் காண்பிக்கப்பட்டிருக்கும். கைகளில் வில்லும் அம்பும் ஏந்தியோ அல்லது வாளும் கேடயமும் ஏந்தியோ வீரன் காட்டப் பட்டிருப்பான். சில நடுகற்களில் வீரனின் ஒரு கையில் வில்லும் மற்றொரு கை இடையில் உள்ள வாளை உருவும் வகையிலும் காட்டப்பட்டிருக்கும். பல நடுகற்களில் வீரனின் உடலில் பல அம்புகள் துளைத்து நிற்பது போலும் காட்டப்பட்டிருக்கும். வீரன் எதிர்த்து நின்று வீழ்ந்தான் என்றும் வகையில் முன்புறத்திலிருந்து அம்பு பாய்வது போல் காட்டப் பட்டிருக்கும். பெரும்பாலும் வீரன் அரையாடை மட்டும் அணிந்து இருப்பான். இடுப்பில் நீண்ட துணியும் கட்டப் பட்டிருக்கும். உடலின் மேல் ஆடை கிடையாது. தலையில் ஒரு முடி காணப்படுகிறது. சில வீரர் நீண்ட பின்னலை உடையவர்களாகவும் காணப் படுகின்றனர். பல நடுகற்களில் வீரனின் காலடியில் ஒரு மூக்குக் கெண்டி, ஒரு சிமிழ், கைப்பிடி உடைய முகம் பார்க்கும் கண்ணாடி ஆகியவை காணப்படுகின்றன. சில நடுகற்களில் ஆநிரைகள் காட்டப்பட்டிருக்கும். சில நடுகற்களில் புலிகளிடமிருந்து ஊரைக் காத்தபோது உயிர் நீத்த வீரனுக்கும் நடுகற்கள் எடுத்துள்ளனர். இவ்வகை நடுகற்களில் வீரன் புலியோடு சண்டையிடுவது போல உருவப் பொறிப்புக் காணப்படும். நடுகற்களில் பெரும்பாலும் வட்டெழுத்துக்களே காணப்படுகின்றன. சில தமிழ் எழுத்திலும் உள்ளன.

 

திருக்குறளில், குறள் 771

"என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை

முன்நின்று கல்நின் றவர்."

பகைவரே! என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நிற்காதீர்கள், என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நின்று கல்வடிவாய் நின்றவர் பலர் என குறிப்பிடப்படுகின்றது. பொதுவாக போரில் இறந்தவருக்கு நினைவு கற்கள் எடுக்காவிட்டால். தன் வாரிசுகளுக்கு துன்பம் நேரிடும் என பயந்தனர். எனவே, நீர்நிலைகள், மரத்தடி, இறந்த இடத்தில் நினைவுக்கல் எழுப்பினர் என வரலாறு கூறுகிறது. இறந்தவர்களுக்கு தெய்வீக சக்தி இருப்பதாக மக்கள் நம்பினர். அதற்கேற்ப சடங்குகள் செய்யவும் வழிபடவும் முற்பட்டனர். இவைகளே சில இடங்களில் சிறு தெய்வங்களாக மாறின என்பது குறிப்பிடத் தக்கது

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]/-முற்றிற்று-

ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துங்கள்-

Theebam.com: "தமிழர்களின் பண்டைய நான்கு கற்கள்" / பகுதி 01:

படம் 01 - இலங்கை, முல்லைத்தீவு மாவட்டத்தில் கற்சிலை மடு எனும் ஒரு கிராமத்தில் நடுகல்லொன்று இருக்கிறது. வெள்ளையரின் படைத்தளபதி ஒருவரால் “பண்டார வன்னியன் இவ்விடத்தில் தோற்கடிக்கப்பட்டார்” எனும் தரவு அக்கல்லில் பொறிக்கப்பட்டிருக்கிறது.

படம் 02 - ஆகோள் பூசலில் உயிர் நீத்த வீரனுக்கு எடுக்கப்பட்ட நடுகல் (பொ.ஆ. 6ஆம் நூற்றாண்டு) திருவண்ணாமலை மாவட்டம்

படம் 03 - விழுப்புரம், பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உள்ள சேவல் கல்வெட்டு

படம் 04 - தம்பலகாமம் கள்ளிமேட்டு 'நடுகல்' , திருகோணமலை, இலங்கை

🥌🥌🥌🥌🥌🥌

0 comments:

Post a Comment